Wednesday, 12 April 2017

முதலையும் மூடரும்

                                                 இரட்டுற மொழிதல்


        1.  இரட்டுற மொழிதல்  12-03-17
         திருடனும் தியாகியும்
கருதியது எய்திடக் காவலர்க்(கு)  அஞ்சார்
தருமடி தாங்கிடுவார் நாளும்--- மருவினிய
முத்தமிழைச் செப்பும் அரங்குள கோவையில்
அத்தொண்டன் கள்வனுக்கு நேர்.

காவலர்—போலிஸ்,அரசர்
தருமடி- தர்ம அடி, தரும்+அடி-தருகின்ற அடி           
திருடனுக்குப் பொருத்துதல்: திருடன் தான் பெற நினைத்ததை அடையும் வரைஅதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பான் காவல் துறைக் காவலர் அடிப்பார்களே என்று பயப்படமாட்டான். அகப்பட்டு விட்டால் பொதுமக்கள் அடிக்கும் தர்ம அடிகளைத் தாங்கிக் கொள்ளுவான்.
சுதந்திரப் போராட்ட வீரருக்கு பொருத்துதல்:தாம் கருத்தில் கொண்ட சுதந்திரத்தை அடையப் போராடுவர். அரசனுக்குப் (அரசாங்கம் தரும் தண்டனை) பயப்படமாட்டார்கள். காவலர் தரும் அடிகளையும்  உதைகளையும் பொறுமையாகத் தாங்கிக்கொள்வார்கள்.

                    2. கள்ளும் கன்னித் தமிழும் ஒன்று
கவிஞர் விரும்பக் களிப்பைத் தருமே
புவியில் சிலரே நுகரச் --- செவிக்கு
விருந்து தரும்முத் தமிழரங்கில் என்றும்
அருந்தமிழும் கள்ளும் நிகர்.
  அருஞ்சொற்பொருள்: கவிஞர்—கண்ணதாசன், கவிதை பாடுவோர்
                     களிப்பு--- போதை, மகிழ்ச்சி
புவியில்-பூமியில்
நுகர----அனுபவிக்க
விருந்து- புதுமை,பலவகை உணவு
நிகர்---சமம்

கள்ளுக்குப் பொருத்துதல்: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு  என்ற சிறப்பித்துப் பாடிய கவியரசர் கண்ணதான் விரும்பி அருந்தியது மது. அந்த மதுவானது தன்னைக் குடிப்பவர்களுக்குப் போதையாகிய மயக்கத்தைத் தரும். இந்த உலகத்தில் எல்லாரும் மதுக் குடிப்பதில்லை.அந்த மதுவைச் சிலர் மட்டுமே விடமுடியாமல் விரும்பிச் சுவைத்துக்  குடிக்கின்றனர்.
தமிழுக்குப் பொருத்துதல்: கவிதை எழுதும் கவிஞர்களால் தமிழ் மிகவும் விரும்பிப் போற்றப் படுகிறது. தமிழின் இனிமை கற்கின்ற அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது அதன் சுவையில் பல புலவர்களும் கவிஞர்களும் மயங்கிக் கிடக்கின்றனர்.இந்த உலகத்தில் உள்ள அனைவராலும் தமிழில் உள்ள இலக்கண இலக்கிய நூல்களைக் கற்றுப் புரிந்து கொள்ள முடியாது. சிலர் மட்டும் தமிழின் திட்ப நுட்பங்களை உணர்ந்து சுவைத்து மகிழ்வர்.
ஆகவே,
      தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் என்ற பாரதி வாக்கை நிறைவேற்றிக் கொண்டிருக்கும், வாரந்தோறும் நாவிற்குப் படைக்கும் அறுசுவை விருந்தைப்போல செவிச்சுவையாம் ஒன்பான் சுவைகளைப் புதுமையாய்  வழங்கிக் கொண்டிருக்கும் சாலையோரம் தமிழ்ச்சோலை வளர்க்கும் முத்தமிழ் அரங்கத்தில் கள்ளும் கன்னித்தமிழும் ஒன்றாகும். 

                       3.இரட்டுற மொழிதல்  26-03-2017
     அரசனும் ஆண்டியும் சிலேடை
கோல்கை பிடிப்பர் குரைத்தலை எண்ணிலர்
கேளிரெனக் கேடுநலம் செப்பினும் --- கேளார் 
தாளால் பொருள்தேடும் கோவைத் தமிழரங்கில்
ஆள்வேந்து ஆண்டிக்கு நேர்.
    அருஞ்சொற்பொருள்:
                கோலகைபிடிப்பர்—செங்கோல், ஒருகுச்சி
                குரைத்தல்- எதிரிகள் ஏசும் இழிசொற்கள், நாய்கள் குரைத்தல்
                கேளிர்—உறவினர்,
கேடுநலம் செப்பினும்—நல்லது இது கெட்டது இது என்றுசொன்னாலும்
கேளார் –கேட்க மாட்டார்கள்
தாளால்- பெருமுயற்சியால், காலால் நடந்து
வேந்து—அரசன், ஆண்டி-ஏழைப்பிச்சைக்காரன்

     அரசனுக்குப் பொருத்துதல்: அரசன் செங்கோல் ஏந்திடுவான்.எதிரிகள் தூற்றம் பழிமொழிகளைப் பொருட்படுத்த மாட்டான்.தம்உறவினர் என்று முறையில்
பிறரைக் கெடுக்கச் சொன்னாலும்,நன்மை செய்யச் சொன்னாலும் கேட்டுக்கொள்ள மாட்டான்.நாட்டு மக்களின் நலத்திட்டங்களுக்காக கப்பம் மூலமாகவும், சுங்கப்பொருள் மூலமாகவும், பெருமுயற்சி செய்து பொருள் தேடுவான்.இவை ஒருநாட்டை ஆளும் அரசனது தன்மையாகும்.   
ஆண்டிக்குப் பொருத்துதல்: பிச்சைக்காரன் எப்போதும் ஒருகுச்சியைக் கையில் வைத்திருப்பான்.பிச்சை எடுக்கச் செல்லும் போது நாய்கள் குரைப்பதைப் பொருட்படுத்தமாட்டான்.உறவினர் சொல்லும் நல்லதையும் கெட்டதையும் கேட்கமாட்டார்கள். எங்கும் காலால் நடந்தே பிச்சை எடுக்கச் செல்வர்.
ஆகவே,
சிறப்பாகத் தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருக்கும் முத்தமிழ் அரங்கம் உள்ள கோவைமாநகரில் அரசனும் ஆண்டியும் ஒன்றாவார்கள்






  தமிழ் நெஞ்சன் அந்தமான் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு,
           பாராட்டுக்கள்.இரட்டுற மொழிதலை எழுத முயன்று கவிதை வரைந்த
மூர்த்திக்கு கீர்த்திகள் பல கூடட்டும் என்று வாழ்த்தும் புலவர் ஆ.காளியப்பன்.
நானும் தாங்கள் கருப்பொருளாக எடுத்துக் கொண்ட சிலேட்டையும் செய்யுளையும் தொடர்பு படுத்தி எனக்குத் தெரிந்த அளவில் ஒருகவிதை கிறுக்கி உள்ளேன்.
       4.கற்பலகையும் (சிலேட்டும்) செய்யுளும் ஒன்று சிலேடை
கருமையால் ஆனது கல்லார் தனக்குப்
பெருஞ்சுமையாய்த் தோன்றுமே என்றும்—அருள்மிகு
வெற்றி மலைமுருகன் கோவிலில் ஆனதே
கற்பலகை செய்யுளுக்கு நேர்
              இதன் பொருள்
கற்பலகைக்குப் பொருத்துதல்:சிலேட்டு கறுப்பு நிறமாக இருக்கும்.படிப்புதற்குச் சோம்பல் பட்டுப் படியாதவற்குப் பெருஞ்சுமையாகத் தோன்றும்.
செய்யுளுக்குப் பொருத்துதல்: செய்யுள் கறுப்பு மையால் எழுதப்படும். படிப்பறிவு இல்லாதவர்க்குக் கவிதையானது புரியாததலால் பெரும் பாரமாகத்தோன்றும்.
        
 ஆகவே,
அந்தமான் போர்ட்பிலேயர் அருள்மிகு வெற்றிமலை முருகன் கோவிலில்
கற்பலகையாகிய சிலேட்டும் கவிதையாகிய செய்யுளும் ஒன்றாகும்.


 5.புடைவையும் புத்தகமும்  9-4-17
பாவினால் ஆனது பேரவைக்கு அஞ்சாது
நாவினால் மெச்சி நலமுரைப்பர் —தாவில்
முன்றானை யோடு வரிவண்ணம் மிக்குள
தன்புடைவை ஏட்டுக்கு நேர்  

             இதன் பொருள்
புடைவைக்குப் பொருத்துதல்:புடைவை செய்யும் போது நூலுக்குப் பாவு இடுவர்.
  நல்ல புடைவை அணிந்தவர் பணக்காரர் கூடியுள்ள சபைக்குள் அஞ்சாமல் செல்லலாம். நல்ல புடைவையைப் பார்த்தால் அதை எல்லோரும் நல்லா இருக்கிறது என்று பாராட்டுவார். புடைவையில் குற்றமில்லாத முன்தானை இருக்கும். புடைவை வரி கோடுகளுடன் நல்ல நிறத்தைப் பெற்றிருக்கும்.


புத்தகத்திற்குப் பொருத்துதல்: நூலானது நால்வகைப் பாக்களால் ஆக்கப்பட்டது.
  கற்றவர் அவைக்குள்அஞ்சாமல் சென்று அவர்களுடன் கலந்து உரையாடலாம்.நூலின் பொருளை உணர்ந்தோர் அதனை மெச்சிப் புகழ்வர்.நூலின் முகப்பில் அணிந்துரை எழுதப்பட்டிருக்கும்.பல வரிகளால் எழுதப்பட்டிருக்கும்.
வண்ணம் என்னும் பா வகையால் ஆக்கப்பட்டிருக்கும்.
இப்படிப்பட்ட பெண்கள் உடுத்தும் புடைவையும் கற்கும் புத்தகமும் ஒன்றாகும்.
            


       முதலையும் மூடனும் 16-04-17
பிடித்ததைப்  பின்விடா நாவும் இலைதான்
கடித்து எறியும் இனத்தைப்—படியில்
இருவாழ்வு வாழும் முதலையொடு மூடர்
பெருநகர்க் கோவையில் நேர்.
அருஞ்சொற்பொருள்:படி –உலகு
முதலைக்குப் பொருத்துதல்:முதலையானது தான்கௌவிய பின் அப்பொருளை விடவே விடாது. அதற்கு நாக்கு இல்லை.தன்இனம் என்றும் பாராது அவற்றுடன் சண்டையிட்டுக் குதறி எறியும்.முதலை நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய இரண்டு தன்மைகளைப் பெற்றுள்ளது.

 மூடனுக்குப் பொருத்துதல்: மூடன் தான் பிடித்த தவறான கொள்கையைச் சரியென்றே வாதிடுவான்.விட்டுக் கொடுக்க மாட்டான்.வல்லவர்களைப் பாராட்டும் நாக்கு இல்லாதவர்கள். தன் சுற்றத்தார் ,நண்பர் என்றுபாராமல் வன்மொழி கூறித் தூக்கி எறிந்து பேசிவிடுவார்கள். சொல்வதொன்று செய்வது வேறாக இருக்கும் இருவித வாழ்க்கை வாழும் வேடதாரிகள்.
     
  எனவே இந்த உலகத்தில் கோவை மாநகரில் முதலையும் மூடரும் ஒன்றாகக் கருதப்படுவர்.

No comments:

Post a Comment