Thursday, 27 April 2017

கல்வி2

                                   

          வெள்ளையன் கல்வியை வெளியேற்றுவோம்
                விலங்கும் மனிதனும் வேறுபட்டு நிற்பது
                இலங்குநூல் கற்ற கல்வியால் தானே
                நடத்தையில் மாற்றம் நல்குவது கல்வியே
                கடமை கண்ணியம் கற்றுக் கொடுக்கும்
             தாய்மொழிக்கல்வியே தலையாய கல்வி                         
                 விழியாய் உயிராய் விளங்குவது தாய்மொழி
                 சுழியத்தில் தொடங்கி பிறையாய் வளைந்து
                 நின்றும் கிடந்தும் இருக்கும் அகரம்
                 உலக மொழிக்கே முதலெழுத் தானது
                 அறம்செய விரும்பென ஆரம்பித்த கல்வி
நீதியுரை வகுப்பால் நிறைவுபெற் றிட்டது
                 ஆங்கிலே யனுக்காய் ஊழியம் செய்யவே
ஆட்களைப் பிடித்தது மெக்கலே கல்வி
பள்ளியின் தேர்ச்சியும் பெற்றோர் ஆசையும்
பிள்ளையின் எண்ணத்தில் மண்ணைப் போட்டது
விரும்பியது படிக்க விடவேண்டும் குழந்தையை
மகிழ்ந்து செல்லும் மணவறை போல
நெகிழ வைக்கும் பள்ளிதான் இருக்கணும்
தாய்மொழிக் கல்வியோ தருவில் பழுத்தது
அடித்துப் பழுத்தது ஆங்கிலக் கல்வி
படித்துப் படித்தே பழக்கத்தில் வந்தது
அறம்செய விரும்பு ஆப்பிள் ஆனது
குருவே வணக்கம் குட்மார்னிங் ஆனது
பாதம் மறைக்கும் பாவாடை தாவணி
முட்டிக்கு மேல்வரை குட்டை ஆனது
கால்பொதி சூவும் கழுத்துப் பட்டையும்
வெப்ப நாட்டினில் வந்து புகுந்தது
காதைக்கை தொடுவதே கற்றிடும் வயதாம்
பித்தலாட்டக் கல்விதான் பெருகிப் போனதால்
பிஞ்சு வயதினில் நஞ்சினை ஊட்டினர்
தாய்ப்பாலை நிறுத்தித் தள்ளினர் பள்ளியில்
நாய்க்கால் சிறுவிரலாய் நெருக்கி அடைத்தனர்
பொதிமூட்டை ஆனதே புத்தகப் பைதான்
போகோவும் சுட்டியும் பொழுதுபோக் கானது
மைதானம் என்பது மறைந்தே போனது
விளையாட் டென்பது விரல்நுனிக்கு வந்தது
ஜல்லிக் கட்டும் சடுகுடு ஆட்டமும்
கிறங்க வைத்த கிரிக்கெட்டால் அழிந்தது

பள்ளி விளையாட்டு பழங்கதை ஆனது
புள்ளி விவரத்தை அள்ளிக் குவித்தனர்
உள்நாட்டில் வேலை ஒன்றுமே இல்லையென
வேலை தேடியே வெளிநாடு சென்றதால்
பாசம் என்பது நாசமாய்ப் போனது
அறநெறிப் பண்போ அற்றே போனது
புறப்பொருள் தன்னைப் போற்றி வாழ்ந்ததால்
மணவாழ்க்கை கூட பணவாழ்க்கை ஆனது
உணவு சமைப்பதும் மறந்தே போனது
மனைவியோ மலேசியா கணவனும் கனடாவில்
இன்றைய இல்வாழ்க்கை இப்படிப் போகுதே
                இன்றைய கல்வியின் இழிநிலை இதுவே

No comments:

Post a Comment