ஆள்வினையுடைமை
இசைபெற வேண்டின் ஈதல் வேண்டும்
ஈதலைச் செய்யப் இரும்பொருள் வேண்டும்
திசையெட்டும் சென்று நசைபல கூடியே
திரைகடல் ஓடியே தேடியே வந்தால்
அசையும் அசையா சொத்தும் சேரும்
அயரா முயற்சியால் ஆகுமே செல்வம்!
வசையிலா வாழ்வும் வந்து சேர்ந்திடும்
வறுமையும் வழிதேடி ஓடிப் போகுமே!
விதியும் தெய்வமும் சதிசெய்த போதும்
விடாது முயன்றால் விரும்பியது நடக்கும்
அதிகத் தூக்கமும் ஆகா மறதியும்
அடுத்து வந்து கெடுத்த போதும்
நதிபோல் ஓடினால் நம்மிடம் தேடியே
நங்கையாம் திருமகள் நாடியே வருவாள்
முதியவள் அணைப்பாள் முயலாமை கொண்டானை
முயற்சியும் பயிற்சியும் உயர்ச்சியைத் தருமே!
விதைத்தவன் உறங்கினும் விதையுறங் கிடுமா?
விளைச்சல் பெருகிடும் வேளாளன் முயற்சியால்
சதைவருத்தி உழைத்தால் சம்பளம் உறுதியே
சந்திரனும் காலடியில் சரணென வருமே
கதைபேசித் திரிவான் கஞ்சிக்கு வழியின்றி
கால்கழுவி விடுவான் கசடருக் கெல்லாம்
எதையும் முடியும் என்று செய்பவன்
எல்லா உலகிற்கும் எசமான் ஆவானே!
பயந்தவன் கையில் படையிருந்தாற் போலவே
பாட்டாளி அல்லானும் பாரியாக முடியுமா?
கயவராய்ப் போவதும் கலக்கத்தில் ஆழ்வதும்
காலத்தை எண்ணாது தூங்கிக் கழிப்பதும்
முயலாமைக் கதையை முழுதும் உணராது (முயல்,ஆமை)
முயலாது என்றும் முடங்கிப் போனதால்
அயலானை அண்டியை அன்றாடும் வாழனும்
அருந்தமிழ் வள்ளுவன் அறைந்து சொன்னதே!
ஆக்கம் தொல்காப்பியச் செம்மல்
புலவர் ஆ.காளியப்பன்
தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் பேரூர் ஆதீனம் 9788552993
No comments:
Post a Comment