ஒழுக்கம் உடைமை 17-08-2015
அவரவர் பணியை அவரவர் நாளும்
அலுப்பின்றிச் செய்தல் ஒழுக்கம்
தவறுகள் இன்றித் தகுமுறைப் படியே
தவறா தொழுகல் ஒழுக்கம்
புவனத் தோடு ஒட்ட ஒழுகி
புரிவது தானே ஒழுக்கம்
கவனத் தோடு கருத்தினைச் செலுத்தி
காரியம் செய்திடல் ஒழுக்கம்
விழுப்பம் தருவதை விரும்பி நாளும்
வேண்டிப் புரிதல் ஒழுக்கம்
அழும்பு செய்வோர் அழிதல் உண்மை
அதனை உணர்தல் ஒழுக்கம்
நழுவல் இன்றி நன்மை புரிதல்
நமது கடமை ஒழுக்கம்
கழுவாய் இல்லை ஒழுக்கம் தவறின்
கவனம் இருக்கனும் உலகீர்
கற்ற கல்வி மறந்து போனால்
கவலை யில்லை கண்டீர்
பெற்ற பிள்ளை ஒழுக்கம் தவறின்
பெரும்பிழை ஆகும் உணர்வீர்
உற்றார் உறவினர் சுற்றம் தழுவி
ஒழுகுதல் வேண்டும் உலகீர்
அற்றவர் பெற்றவர் அனைவர் நாளும்
அவர்நிலை நிற்றல் ஒழுக்கம்
சான்றோர் சொல்லைச் சட்டமாய் நினைத்து
சலிப்பின்றி நடத்தல் ஒழுக்கம்
ஆன்ற குலத்தில் பிறந்து விடுதல்
அதுவன்று உயர்வு அறிவீர்
சான்றோர் உரைக்கும் சலமது நீக்கிச்
சகத்தில் வாழ்தல் ஒழுக்கம்
ஊன்று கோலாய் உறுதுணை ஆகும்
உண்மை வழுவா ஒழுக்கம்
தானமும் தவமும் செய்வதைக் காட்டிலும்
தவறின்றி நடத்தல் ஒழுக்கம்
ஊனம் என்பது பெருங்குறை இல்லை
உண்மை போற்றல் ஒழுக்கம்
ஈனச் செயல்கள் இழுக்கினைத் தருமே
என்று உணர்தல் ஒழுக்கம்
ஏனம் ஏந்தி பிச்சை எடுப்பினும் இழிசெயல் நீக்கல் ஒழுக்கம்
அறனெனப் படுவது ஆன்றோர் உரைத்தது
அதன்படி நடத்தல் அதுவே ஒழுக்கம்
மறவழி கொண்டு ஒழுக்கம் பிழைத்தோர்
மனித னாயினும் மரக்கட்டை தானே
உறவினர் ஊரார் ஒழுகிய படியே
ஒத்து நடத்தலே ஒழுக்கம் ஆகும்
குறவ ராயினும் குலக்குரு வாயினும்
குலவழக்கம் தவறின் குப்பைக்கு நிகரே.
மழுவைக் காட்டினும் மறலியே வரினும்
மானமே பெரிதென ஒழுக்கம் தவறார்
அழுது புரளினும் அழிந்த ஒழுக்கம்
அடைதல் என்பது ஆற்றில் கரைபுளி
அழுக்காறு கொண்டான் அழிதல் போலவே
ஒழுக்க மில்லான் ஒழிதல் உறுதியே
விழுப்பம் வேண்டுவோர் விழைவுடன் மகிழ்ந்து
ஒழுக்கக் கொடியை உயர்த்திப் பிடிப்பரே
படிப்பதை மறத்தல் பாவம் இல்லை
பண்பினில் வழுவல் படுநரக உய்க்கும்
குடிப்பிறப்பு என்பது ஒழுக்கம் உடைமையே
குன்றத்தில் வைத்துக் குவலயம் போற்றிடும
அடித்து நொருக்கினும் அணுவாய் நூறினும்
அவரவர் நிலையில் நிற்றலே ஒழுக்கம்
நடிப்பால் வருவது ஒழுக்கம் அன்று
நாணமும் அடக்கமும் நல்கிடும் ஒழுக்கமே
ஒழுக்கம் உயர்வினைத் தருததால் தானே
உயிரினும் மேலாய் உயர்த்தப் பட்டது
கழுமரம் ஏற்றினும் கைவிடார் ஒழுக்கத்தைக்
கற்புநெறி தவறாக் காரிகை போல
ஒழுக்க உள்ளோர் நற்செயல் புரிவர்
ஒற்றுமை வளரவும் உறுதுணை ஆவார்
வழுக்கியும் வாயாற் வசையும் பாடார்
வாழ்க வளத்துடன் வாழ்க என்பார்.
ஆக்கம் தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்
தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
பேரூர் ஆதீனம் 9788552993
No comments:
Post a Comment