அறிவுடைமை
புல்லுக்கும் புனிதனுக்கும் நல்லறிவு உண்டென்று
பூமிதனில் யாவரும் அறிந்ததை அன்றே
தொல்காப் பியனும் தொடுத்தார் நூற்பாவால்
தண்டமிழ் வள்ளுவனும் தந்தார் குறள்வடிவாய்
கல்லார்க்கும் கற்றார்க்கும் கழுகிற்கும் குருவிக்கும்
கல்லினுள் தேரைக்கும் அறிவென்றும் உண்டாம்
அல்லல் நேராது தன்னைத்தான் காப்பதற்கு
அறிவினைப் பெற்றிருக்கும் அனைத்து உயிர்களுமே!
வள்ளுவன் தானும் அறிவின் ஆற்றலை
வகையாய் விரித்து வழங்கினான் குறளாய்
உள்ளம் உடையார் எய்தும் மேன்மையை
உயர்ந்த அறிவால் பெறலாம் என்றனன்
கள்ளும் கவறும் கணிகையர் தொடர்பும்
கவனத்தில் இருந்து நீக்குவது அறிவே!
எள்ளளவு தீமையும் எண்ணத்தில் கொள்ளாது
ஏற்றமுற வாழச் செய்வது அறிவே!
உயிர்க்கு வருகின்ற ஊறினைத் தடுக்கும்
உயர்மதில் அரணாய் இருப்பது அறிவே!
துயருறு வாழ்வில் ஆவதை உணர்த்தி
தூயநல் நெறியில் செலுத்துவது அறிவே!
துயில்கொண்ட போதில் தொடைதட்டி எழுப்பி
தொடர்ந்து பணிசெயத் தூண்டுவது அறிவே!
குயிலும் காக்கையும் கூவிய ஒலியில்
மெய்ப்பொருள் யாதென காண்பது அறிவே!
உலகத் தோடென்றும் ஒத்து வாழ்ந்திட
உண்மையை உரைப்பது என்றும் அறிவே!
பலப்பல பேசி பகைப்பதை விடுத்து
பண்பாய்ப் பேசிடப் பழக்குவது அறிவே!
கலங்கி நிற்கையில் தெளிவான பாதையைக்
கைவிளக்கு போலவே காட்டுவதும் அறிவே! புலன்கள் ஐந்தின் போக்கினைத் தடுத்து
பெட்டிப் பாம்பாய் அடக்குவது அறிவே!
வள்ளுவன் உரைத்த உடைமைகள் பத்தில்
வகையாய்க் கவிபாட வாய்ப்பினைப் பெற்றேன்
உள்ளத்தில் வள்ளுவனை ஒருதனித் தெய்வமாய்
ஒவ்வொரு நாளும் வழிபட்டு வருபவன்
அள்ளக் குறையா அருந்தமிழ் அமுதை
அருந்தி மகிழத் தந்தேன் கவியாய்
உள்ளம் மகிழ உவந்து ஏற்பீர்
வள்ளுவன் வழியை வையம் தழைக்கவே
ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993
No comments:
Post a Comment