அருளுடைமை 17-04-2017
அருளெனப் பட்டது அனைத்துயிர் மாட்டும்
அன்பொடு இரக்கம் அளாவி நிற்பது
பொருளெனப் பட்டது பதடிகள் கரத்திலும்
பொருந்தி நின்று பொல்லாங்கு செய்வது
ஒருவழி இல்லையே அருளது போல
உற்ற துணையாய் எற்றைக்கும் வருவது
திருவருள் கூடும் தேவர் உலகில்
தி்டமுடன் சேர்க்கும் அருளது தானே.
தன்னுயிர் அஞ்சும் தீவினை இல்லையே
மன்னுயிர் மீதினில் கருணை உள்ளோர்க்கு
இன்மை மறுமை இரண்டு உலகிலும்
இன்னல் அகற்றி இன்பம் தருவது
அன்னம் அளித்து அரும்பசி களைந்தது
அருளால் வந்த அமுத சுரபியே
மன்னன் மனுநீதி மாட்டிடம் கொண்டதும்
மருளது நீங்கிய அருளது தானே
பொருளெனும் செவிலி போற்றி வளர்க்கும்
அருளெனும் குழந்தையைப் பெற்றது அன்பே
பொருளைப் பெரிதாய் நினைக்கும் புல்லரே
பொல்லாங் கெல்லாம் புவியில் செய்வார்
பொருளை இழந்தான் மீள்வான் ஒருநாள்
அருளை இழந்தான் ஆழ்ந்தே போவான்
அருளின் ஆற்றல் அளத்தற்கு அரியது
அகில இயக்கமே அதனால் தானே
அருளெனப் படுவது அற்றார் தனக்கு
ஈட்டிய பொருளை ஈவது தானே.
அருட்பிர காசர் அருளால் தானே
அரும்பசி களையும் சாலை அமைத்தார்
பொருள்தனைப் பெற்றோர் அருளொடு இருந்தால்
பூமியில் இன்பம் பொங்கி வருமே
பொருள்தனை ஈட்டி அருள்தனை செய்து
பொற்புடன் வாழ்வோம்
புகழ்தனைப் பெற்றே.
தொல்காப்பியச்செம்மல்
புலவர்.ஆ.காளியப்பன்MA;MEd
முத்தம்மாள்நிலையம் பூலுவபட்டி(அஞ்) கோவை-641101 அலைபேசி 9788552993
No comments:
Post a Comment