அடக்கமுடைமை
பண்பான மனிதன் பாரினில் யாரெனில்
பணிவோ டடக்கம்
பனிமொழி உடையான்
திண்ணிய மனமும் திடமான மெய்யும்
திக்காத நாவும்
திசைமாறிச் செல்லாது
நண்ணிய வழியில் நாடியே உய்ப்பது
நற்றமிழ் வள்ளுவன்
நாட்டிய அறத்துள்
விண்ணினும் உயர்ந்து விளங்கு நல்லடக்கம்
வேண்டிய பொழுது
விரும்பிய நல்குமே
தருநிழல் தன்னில் தங்க வைப்பது
அருநர கிடையே
ஆழ்த்தா திருப்பது
வருபொருள் தன்னைக் காப்பது
போல
வருந்தியே காக்க
ஆக்கமாம் அடக்கத்தை
பொருப்பினைக் காட்டிலும் உயர்ந்து நிற்பது
பொறுமையும்
அடக்கமும் பொருந்தி நிற்பது
பொருள்தனைப் பெற்றவன் பணிதல் என்பது
பொன்மேல் மெருகு
பூசுவ தாமே
உறுப்பைந்தும் உள்வாங்கும் ஆமைபோல் இப்பிறப்பில்
ஐம்பொறி தன்னை
அடக்கி வாழ்பவன்
மறுபிறவி ஏழிலும் மகிழ்வோ டிருப்பான்
மணமிகு சுவையோடு
சொல்லினை அடக்கான்
செறுநர் பலராகிச்
சீரழிந்து போவான்
சினம்நீங்கி
கற்றுணர்ந்து அடங்கியான் பிறவி
அறுத்து பேரின்பம் பெறுவதோ
டிப்புவியில்
அல்லலின்றி
அளவிலாப் புகழ்பெறு வானே.
புலவர்.ஆ.காளியப்பன்
எம்.ஏ;எம் எட்
முத்தம்மாள்நிலையம்
பூலுவபட்டி
(அஞ்) கோவை 6411௦1 அலைபேசி 9788552993