Thursday, 1 December 2016

இன்றைய இலக்கணம்

             இன்றைய இலக்கணம் 2-12-16
            முல்லைக்குரிய தெய்வம்
       மாயோன் மேய காடுறை உலகமும்—தொல்
      திருமால் முல்லைக்குரிய தெய்வம்
     மால் என்றால் வெண்மை தூய்மை என்று பொருள். காத்தல் கடவுள்
    மக்கள் தம் தலைவனை-அரசனை திருமாலாகவே கருதினர்.
காத்தல் என்பது தம் ஆனிரைகளையும்,தம்மையும் மழை போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து காத்தல்.கண்ணனே முல்லை நிலத்தெய்வம் ஆகையால் அவனை
இடையன்  என்றனர்.காடும் காடுசார்ந்த நிலம் முல்லை எனப்படும் காடு என்பது  மலையிலிருந்து வயல்வெளிகள் வரை பரந்துள்ள நிலப்பரப்பு.ஆகவே இந்நிலத்தைக் குறிஞ்சி நிலமக்களும் ,மருதநில மக்களும் பயன் படுத்துவர்.உழவுத் தொழில் செய்ய முடியாத குறிஞ்சி நிலத்திற்கும், உழவுத்தொழிலே நிரம்பிய மருத்திற்கும் இடைப்பட்ட நிலத்தை முல்லை என்றனர். அங்கு வாழ்ந்த மக்களை இடையர் என்றனர்.
           மருத நிலத்திற்குரிய தெய்வம்
        வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வேந்தன்என்பது இந்திரனைக் குறிக்கும். வயலும் வயல்சார்ந்த இடமும் மருதம்ஆகும்.
குறிஞ்சியில்அருவியாய்த் தோன்றி முல்லையில் காட்டாறாய் ஓடிய ஓடை மருதத்தில் அகன்று விரிந்து பேராறாக ஓடிகிறது. குளம்,குட்டைகளை நிரப்புகிறது. மேலும் வீடுகள் தோறும் மனைக் கிணறுகளும் இருந்தன.அதனால் உழவுத்தொழில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.உணவுப் பஞ்சம் இன்றி மனநிறைவுடன் மக்களும் வாழ்ந்தனர். ஓய்வு நேரம் அதிகமாகக் கிடைத்ததால் விழாக்கள் நடைபெற்றன. எனவே இன்பம் நுகரும் இந்திரனே மருத நிலத்தெய்வம் ஆனான்.
                  நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம்
           வருணன் மேய பெருமணல் உலகமும்
வருணன் இடிமின்னலுக்கு உரிய தெய்வம். பெருமணல் என்பது இங்கு கடலும் கடல் சார்ந்த பகுதியைக் குறிக்கிறது.ஆனால் சிலர் மணலும் மணல்சார்ந்த நிலம் பாலை எனத் தவறாகக் குறித்துள்ளனர். பெருமணல் என்பது மணல் நிரம்பி கடற்கரையையே குறிக்கும்.தமிழ்நாட்டில் பாலை என்ற ஒருதனி நிலம் இல்லை.அதுபற்றி பிறகு பார்ப்போம். உயிரை ஒருபொருட்டாக நினையாது உள்நாட்டு மக்கள் உணவுப் பஞ்சத்தைப்போக்கப் பாடுபடும் மீனவனைப்போற்றுவோம். இடியுடன் கூடியமழை வரும் போது நடுக்கடலில் எங்கே செல்லுவான்.எனவே அவனது தெய்வம் இடிமழைக்கு முதல்வனான வருணன் நெய்தல் நிலத்தெய்வம் ஆனான்.
பாலை நிலத்திற்குரிய தெய்வம்
பாலை என்றவுடன் சகாரா,தார் போன்ற பாலை வனங்களை நினைத்துக்  கொண்டு,மணல் நிரம்பிய பகுதி என்றும் அங்கு ஒட்டகம் இருக்கும் என்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது.
 தமிழ் நாட்டில் பாலை என்பது முல்லை நிலமோ,குறிஞ்சி நிலமோ மழையின்றி வரண்டு போனால் மரம் மட்டைகள் வரண்டு,விலங்குகள் உணவின்றி வலிமையின்றித் திரியும்.  சிலப்பதிகாரமும்,பாலை உண்டாகும் முறையைக் கூறுகிறது.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்று கூறுகிறது.

அங்குள்ள மக்கள் குறிஞ்சி மற்றும் முல்லை நிலமக்களே இருப்பர். அவர்களே வறுமை காரணமாக ஆறலைக் கள்ளவர்களாக மாறிடுவர். அம்பும், வில்லும் கைக்கொண்டு திரிவதால் எயினர் எனப்பட்டனர்.எயில் என்றால் அம்பு என்று பொருள்.
எனவே இவர்களது தெய்வம் கொற்றவையாக அதாவது காளியாகத் தானே இருக்க முடியும் .பதிவு புலவர்.ஆ.காளியப்பன்



உயிர்ப் பொருள்களின் பண்புகள்

                                               இன்றைய இலக்கணம்29-11-16
              உயிர்ப்பொருள்களின் குணப்பண்புகள்(நன்னூல் உரியியல்)
 அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை(சொன்னசொல்தவறாமை), பொறை, ஓர்ப்பு(எடுத்தசெயலைமுடிக்கும்துணிவு), கடைப்பிடி, (கொண்ட கொள்கையில் விடாப்பிடிப்பு)மையல், வினைவு(செயல்திறன்), வெறுப்பு, உவப்பு, இரக்கம்,நாணம், வெகுளி, துணிவு, அழுக்காறு (பொறாமை), அன்பு எளிமை, எய்தல், துன்பம் இன்பம்,இளமைஉவப்பு,இகல்,வெற்றி,பொச்சாப்பு(முக்கியமானதைமறந்துவிடுதல்) ,ஊக்கம்,மறம்,மதம்,மறவி(எதையும் மறந்துவிடுதல்-முதுமை ),
  இவையெல்லாம் உடம்போடு கூடிய உயிரின் தன்மைகள் 
            உயிர்ப்பொருள்களின் தொழிற்பண்புகள்
துய்த்தல் ,துஞ்சல், ஒழுகுதல்,அணிதல், உய்த்தல்,இவைபோல் பிற
                  உயிர் அற்ற பொருள்களின் தன்மைகள்
பலவகை விடிவங்கள்(வட்டம், முக்கோணம்,நீளம் குட்டை,கோடு புள்ளிபோன்றன )
இருவகை நாற்றம்(நல்லவாசனை கெட்டவாசனை)
வண்ணம் ஐந்து( வெண்மை,செம்மை,கருமை,பொன்மை,பசும்மை)
அறுசுவை(இனிப்பு புளிப்பு,கசப்பு,உவர்ப்பு,துவரப்பு,கார்ப்பு)
ஊறு எட்டு(தொட்டுணர்வு)(வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை(தூள்),   
சீர்மை(அழகாக,ஒழுங்காக),இழுமெனல்(கொழகொழஎன்றுஇருத்தல்)சருச்சரை(சொரசொரப்பு.-)
        இருபொருள்களுக்கும் உள்ள பொதுத் தன்மைகள்
தோன்றல்,மறைதல்,வளர்தல்,சுருங்கல்,நீங்கல்,அடைதல்,நடுங்கல்,இசைத்தல்,ஈதல் என்னும் ஒன்பதும் ஆகும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          


சங்க இலக்கியம் ஒருவரி வினாவிடை

             சங்க இலக்கியம் ஒருவரி வினாக்கள்
1.சங்கம் என்ற சொல் முதன்முதலில் களவியல் உரையில்  காணப்படுகிறது.
2. சங்க இலக்கியங்களை மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என 
  இருவகைப்படுத்துவர்.
3. பாட்டும் தொகையும் மேற்கணக்கு ஆகும்.
4. பாட்டு என்பது பத்துப்பாட்டு, தொகை என்பது எட்டுத் தொகையைக் குறிக்கும்.
5. எட்டுத்தொகை நூல்கள்
1.  நற்றிணை
2.  (நல்ல) குறுந்தொகை
3.  ஐங்குறுநூறு
4.  (ஒத்த)பதிற்றுப்பத்து
5.  (ஓங்கு)பரிபாடல்
6.  (கற்றறிந்தார்ஏத்தும்)கலித்தொகை
7.  அகம் எனப்படும் அகநானூறு
8.  புறம் எனப்படும் புறநானூறு
6.மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணத்தைக் கூறும் நூல் பன்னிருபாட்டியல்.
7.மேல் என்றால் பெரிய கணக்கு என்றால் நூல் என்று பொருள்
8.உறுதிப்பொருள்கள் அறம்,பொருள்,இன்பம், வீடு என்ற நான்கும்
9.பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட பாடல்களின்  தொகுப்பு    
  ஆகையால் தொகை எனப்பட்டது
10. இதை எண்பெருந்தொகை என்றும் கூறுவர்
11.இதில் அகம் பற்றிய நூல்கள்-5   புறம் பற்றியநூல்கள்-2 அகம்புறம் பற்றியன 1
12.எட்டுத்தொகையில் காணப்படும் பாடல்களின்  எண்ணிக்கை கிட்டத்தட்ட 2360 பாக்கள்
13.பாடியோர் எண்ணிக்கை 500புலவர்கள்.
14.பரிபாடல்,கலித்தொகை இரண்டு நீங்கலாக ஏனைய ஆறும்ஆசிரியப்பாக்களால்ஆனவை.
15.நற்றிணை என்பது நற்றிணை நானூறு என்றும் வழங்கப்படும்
16 குறைந்தது. 9 அடி அதிகம் 12 அடிகளைக்கொண்டது.
17.நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
18.நற்றிணையைத் தொகுத்தவர் பெயர் தெரியாது.
19.நற்றிணையை பாடிய புலவர்கள்175 பேர்
20. .நற்றிணையின் கடவுள் வாழ்த்துப்பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
21. .நற்றிணையின் கடவுள் வாழ்த்து திருமால் பற்றியது.
22.எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது நற்றிணை.
23. கண்ணகிகதை குறித்தபாடல் நற்றிணையில் வருகிறது.
24.முந்தையிருந்து நட்டோர் கொடுப்பினும் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் தொடர் இடம் பெற்ற நூல் 
   நற்றிணை
25.ஒருமுலை அறுத்த திருமா உண்ணி கண்ணகி குறிப்பு வந்த நூல் நற்றிணை.
26.குறுந்தொகை—குறுமை+ தொகை எனப்பிரியும்.
27. குறுந்தொகை நானூறும் என்றும் கூறுவர்.
28. .நற்றிணையின் கடவுள் வாழ்த்துப்பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் 4 அடிச்சிறுமையும்   
     8 அடிப்பெருமையும் கொண்டது.
29. குறுந்தொகையைத் தொகுப்பித்தவன் பூரிக்கோ
30. குறுந்தொகையைத் தொகுத்தவர் உப்பூரி குடிகிழார்.
31. குறுந்தொகையில் பாடிய புலவர் எண்ணிக்கை 205
32.குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார்
33. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து செவ்வேள்அல்லது முருகவேள் பற்றியது
34. குறுந்தொகை நல்ல என்னும் அடைமொழ் பெற்றநூல் ஆகும்.
35. இறைவன் தருமிக்கு எழுதிக் கொடுத்த கொங்குதேர் வாழ்க்கை என்றபாடல் இடம் பெற்றநூல்.
36.வினையே ஆடவர்க்கு உயிரே என்ற தொடர் இடம் பெற்றநூல் குறுந்தொகை.
37.ஊமன்கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல்போலஎன்றதொடர்இடம்பெற்றநூல் குறுந்தொகை
38.யாய்- என் தாய், ஞாய்—உன்தாய்,எந்தை- என்தந்தை,நுந்தை-உன்தந்தை.
39.ஒவ்வொரு திணைக்கும் தனித்தனியாக 100 பாடல்களைக்கொண்டது ஐங்குறுநூறு.
40. 3அடிச்சிறுமையும்  6 அடிப்பெருமையும் கொண்டது ஐங்குறுநூறு.
41.ஒவ்வொருநூறும் பத்துப் பத்துப் பாடலாகப் பிரிக்கப்பட்டது. ஐங்குறுநூறு
42..ஐங்குறுநூறு தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞசேரல் இரும்பொறை
43.ஐங்குறுநூறு தொகுத்தவர் புலத்துறைமுற்றிய கூடலூர்கிழார்..
44.ஐங்குறுநூறு பாடிய புலவர் எண்ணிக்கை  5 பேர்.
45.ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார்
46.ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து சிவன் பற்றியது  
47.ஐங்குறுநூறு குறிஞ்சி பற்றிப் பாடியவர்—கபிலர்
48. ஐங்குறுநூறு முல்லைபற்றிப் பாடியவர்—பேயனார்
49. ஐங்குறுநூறு  மருதம் பற்றிப்பாடியவர்—ஓரம்போகியார்.
50. ஐங்குறுநூறு நெய்தல் பற்றிப்பாடியவர்—அம்மூவன்
51. ஐங்குறுநூறு பாலைபற்றிப்பாடியவர்--ஓதலாந்தை

                   பதிற்றுப்பத்து.
89. பதிற்றுப்பத்து புறப்பொருள் பற்றி எடுத்துக் கூறும் நூல்
90 பதிற்றுப்பத்து சேர மன்னர் பத்துப் பேர் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடியது.
91 பதிற்றுப்பத்தில முதற்பத்தும் கடைசிப்பத்தும் கிடைக்கவில்லை
91. 2.ஆம் பத்து நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர் கண்ணனார் பாடியது
.92. 3 ஆம் பத்துஅவன் இளவல் பல்யானைச் செல்கெழுகுட்டுவனை பாலைக்கௌதமனார்        
    பாடியது
94. 4ஆம்பத்து களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலை காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது
95. 5ஆம் பத்து கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் பாடியதுய
96. 6ஆம் பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை காக்கைப்பாடினியார் நற்செள்ளையார் 
    பாடியது
97. 7ஆம்பத்து செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.
98. 8ஆம் பத்து பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழார் பாடியது.
99. 9ஆம் பத்துகுடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்க் கிழார்பாடியது.
100.முதற்பத்துஉதியஞ்சேரல் பற்றியதாகவும்  இறுதிப்பத்து யானைக்கட்சேய் பற்றியதாகவும் இருக்கலாம்.
101 பதிற்றுப்பத்து பாடல்களின் தலைப்புகள் அப்பாடல்களில் பயின்றுவரும் பொருட்
    செறிவுடைய சொற்றொடர்களால் வைக்கப்பட்டது.
102.ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வண்ணமும் தூக்கும் துறையும் குறிக்கப்பட்டுள்ளன.
103.இதநால் இது இசையோடு பாடும் நூல் என்று அறியலாம்
104.பகைவர்களின் பெண்டிரது கூந்தலை அரிந்து கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி
 இழுத்து வரும் பழக்கம் இருந்த்தை அறியலாம்-5ஆம் பத்தில்.
105.பதிற்றுப்பத்து சேரர் வரலாற்றைச் செப்பும் களஞ்சியம்.
                     புறநானூறு
108. புறப்பொருள் பற்றிய 400 பாடல்கள் கொண்டது.
109.எட்டுத் தொகை நூல்களில் பதிற்றுப்பத்தும் ,புறநூனூறும் மட்டுமே புறப்பொருள் 
    பற்றிக் கூறிகின்றன்.
110. புறம் ,புறப்பாட்டு,புறம்பு 400 என்ற வேறுபெயர்களாலும் வழங்கப் படுகிறது.
111.இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
112. .இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் சிவபெருமான் பற்றியது
113 புறநானூறு பாடிய புலவர்கள்160 பேர். அதில் 10 க்கும் மேற்பட்ட பெண்பாற்
    புலவர்கள் உள்ளனர்
114. புறநானூறு 4 அடிமுதல் 40 அடிகளைக் கொண்டநூல்.
115. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே என்ற தொடர் இந்நூலில் தான் உள்ளது.
116. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன்பாடல் உள்ளநூல்.
117.போப்பையர் இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
118.எவ்வழிநல்லவர் ஆடவர் அவ்வழி வாழியநிலனே என்ற கருத்து இந்நூலில் வருகிறது.
119இலக்கியங்கள் காலம் காட்டும் கண்ணாடி என்பதற்கு இந்நூலே எடுத்துக்காட்டு.
120.பாரதப்போரில் பெருஞ்சோறு இட்டதாக உதியஞ்சேரலாதன் குறிக்கப்படுகின்றான்




             

உயிர் உள்ள பொருளின் தன்மைகள்

           இன்றைய இலக்கணம்30-11-16
                 கருப்பொருள்
கருஎன்றால் மூலம்,முதல்,இன்றியமையாதது ,தோற்றத்திற்கு காரணம் எனப்பல பொருள் உண்டு. இங்கு அகபொருளில் கருப்பொருள் பற்றிப்பார்ப்போம்.
திணை இருவகைப்படும். அவை அகத்திணை, புறத்திணை எனப்படும்.எவற்றுள் அகத்திணைக்குரிய பொருள்கள் மூன்று எவை முதல், கரு, உரி என்பன.
அவற்றுள் முதற் பொருள்பற்றி முன்னர் சிறப்பாக விளக்கப்பட்டது. இன்று கருப்பொருள் பற்றிக் காண்போம்.
 கருப்பொருள் அந்தந்த நிலத்திற்கே உரியபொருள் வேறு நிலங்களில் காணமுடியாது.
ஒருநிலத்தில் தோன்றி அந்த நிலத்திலேயே மறைவன. நிலத்தோடு ஒன்றி நிற்பன. அவை
      தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
      செய்தி யாழின் பகுதியொடு
      அவ்வகை பிறவும் கருவென மொழிப (தொல்)
எந்நில மருங்கிற் பூவும்புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும். (தொல்)
சிலர் நூற்பாக்களைக் கேட்டதால் நூற்பாக்களை கொடுத்துள்ளேன். மற்றவர்கள் அதைக்கண்டு கொள்ள வேண்டாம்.
 நிலம் ஐந்து வகைப்படும் யாவரும் அறிவீர்.
முதலில் தெய்வம் (அனைவரையும் தெய்வம் என்றவுடன் மதத்துடன் சேர்த்துப் பார்த்தால் குழப்பம் உண்டாகும் இலக்கணத்தில் தெய்வம் பற்றி மட்டும் பார்ப்போம்).இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பண்டைய இலக்கண இலக்கிய நூலோர் உலகிற்கு முதல்வனாக இருப்பவனைப் பிறவா யாக்கைப் பெரியோன் என்றே குறிக்கின்றன.ஆனால் ஒவ்வொரு நிலமக்களும் பிறவா யாக்கைப் பெரியோன் உடன், அந்தஅந்த நிலங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவர்
அந்த அடிப்படையில் குறிஞ்சி நிலத்திற்கு உரிய தெய்வத்தைக் காண்போம்
சேயோன் மேய மைவரை உலகம் என்கிறது தொல்காப்பியம்
மைவரை உலகம் கருமையான மலை.உலகம் என்பது இங்கு இடம் என்ற பொருளில் வந்துள்ளது.
சேயோன் செம்மை நிறமுடையவன். முருகன் மலையும் மலைசார்ந்த பகுதி குறிஞ்சி
குறிஞ்சி என்றாலே செழிப்பான நிலம் பார்க்க அழகாக இருக்கும்.அந்த அழகையே தெய்வமாகக் கொண்டனர்.அழகை முருகு என்று கூறுவர்.எனவே முருகன் குறிஞ்சி நிலத்தெய்வம் ஆயிற்று.இந்த அடிப்படையிலேயே குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று குவலயத்தோர் வழிபடட்டும் என்று ஔவையார் படத்தில் வசனம் வருகிறது.இந்த அடிப்பைடையில்தான் திருப்பதி மலையில் உள்ள வேங்கடவனை முருகன் என்று வாதிடுகின்றனர்.ஆகவே குறிஞ்சி நிலத்தெய்வம் முருகன்.


Sunday, 20 November 2016

இன்றைய இலக்கணம்21-11-2016 வெளிப்படை குறிப்பு

            குறிப்பு வெளிப்படை21-11-16 இன்றைய இலக்கணம்
   ஒருசொல் வெளிப்படையாக  எல்லாருக்கும் பொருள் புரியும் வண்ணம் பொருள் உணர்த்துவது வெளிப்படை எனப்படும்.எ-டு மரம் வளர்ந்ததுஎல்லாருக்கும் எளிதில் புரியும்.
   ஒருசொல் வெளிப்படையாக  எல்லாருக்கும் பொருள் புரியும்வண்ணம் பொருள் உணர்த்தாமல் ஏதேனும் ஒருகுறிப்பால் பொருளை உணர்த்துவது குறிப்பு எனப்படும் .எ-டு இரண்டுக்குப் போகிறேன் .மலம்கழிக்கச் செல்கிறேன் என்று பொது இடத்தில் கூறமுடியாது. ஆகவே இரண்டிற்கு என்னும் குறிப்பால் உணர்த்துகிறோம்
குறிப்பால் பொருள் உணர்த்தவன
1.ஒன்றொழி பொதுச்சொல்
2.செய்யுள் விகாரங்கள்
3.தகுதி வழக்கு
4.ஆகுபெயர்
5.அன்மொழ்த்தொகை
6.வினைக்குறிப்பு
7.முதல்குறிப்பு
8.தொகைக்குறிப்பு
 இவையும்இவைபோல்பிறவும்குறிப்புமொழிஎனப்படும்.இனி ஒவ்வொன்றாகக்காண்போம்.                                                                                              
                  1. ஒன்றொழி பொதுச்சொல்
பொதுச்சொல் என்பது ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான சொல்
எ-டு குழந்தை (ஆண்குழந்தைக்கும் பெண்குழந்தைக்கும் பொதுவான சொல்)
     மக்கள் (ஆண்மக்களுக்கும் பெண்மக்களுக்கும் பொவான பெயர்)  
     மாடு(பசுமாட்டிற்கும் காளை மாட்டிற்கும் பொதுவான பெயர்)
மீசை துடிதுடிக்க மக்கள் நால்வர் எழுந்தனர்  இதில் மீசை என்னும் குறிப்பால் மக்கள் என்னும் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான பெயர் பெண்மக்களை விலக்கி ஆண்மக்களை மட்டும் குறிக்கிறது.
இரண்டு மக்களை (பேரை) மக்கள் பேற்றிற்காக மருத்துவ மனையில் சேர்த்தனர் இதில் மக்கள் பேற்றிற்காக என்னும் குறிப்பால் மக்கள் என்னும் பொதுப்பெயர் பெண்மக்களாக்குறிக்கிறது .நான்கு மாடுகள் பால் கறக்கின்றன எனும் போது கறக்கின்றன என்னும் குறிப்பால் மாடு என்னும் பசுமாட்டிற்கும் காளைமாட்டிற்கும் பொதுவானமாடு கறக்கின்றன என்னும் குறிப்பால் பசுமாட்டைக் குறிக்கிறது.
     இவ்வாறு ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான பெயர் ஏதேனும் குறிப்பால் ஒருபாலை ஒருபாலை ஒழித்து மற்றொரு பாலை குறிப்பதுக் குறிப்பது ஒன்றொவி பொதுச்சொல் எனப்படும். (பிறபின்) அன்புடன் புலவர் ஆ.காளியப்பன்               


Tuesday, 15 November 2016

இதுஎன்ன தமிழ்மொழியா? எவன்மொழிக்கோ அடிமைதானா?
சுழியத்தில் தொடங்கிப் பிறையாய் வளைந்து
நின்றும் கிடந்தும் இருக்கும் அகரம்
உலக மொழிக்கே முதலெழுத் தானது
எல்லா ஒலிக்கும் எழுத்து வேண்டுமெனக்
சமக்கிரு தத்தைத் தந்தவர் தமிழர்
அரபியர் வந்தே அருந்தமிழ் கற்றனர்
வளர்தமிழ் எண்ணை வையத்தில் பரப்பினர்
உலக மொழியெலாம் உயிரும் மெய்யுமாய்
ஊடுருவி நிற்பது ஒண்டமிழ் மொழியே
தமிழை அழிக்கத் தரணியில் யாருளர்?                                  
தமிழ்நாட்டுத் தமிழனே தடியெடுத்து நிற்கின்றான்
இந்திப் பேயை ஒழிக்க நினைத்து
ஆங்கில  அரக்கிக்கு அடிமைப் பட்டனர்
அமுதத் தமிழானது ஆங்கில நஞ்சாய்!
சித்தி மகளைத்தான் அத்தைமகள் ஆக்கினர்  (சித்தியும்,அத்தையும்Aunty)
பரங்கியர் ஆட்சி பாரதத்தில் போனாலும்
நம்தமிழ் நாட்டில் நல்லாட்சி செய்கிறான்
தமிழா? தங்கிலீசா? தலைகுனி தமிழா!
விலைமகளை விரும்பி விற்றாய் அன்னையை
கலைத்தமிழ் அன்னையைக் காக்கப் புறப்படு!
                  
புலவர்.ஆ.காளியப்பன்MA;MEd                                                  முத்தம்மாள்நிலையம்                                                      பூலுவபட்டி(அஞ்)                                      ஆலாந்துறைவழி                                           கோவை-641101                                                     அலைபேசி 9788552993
      மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் சிறப்புக் கவிஅரங்கிற்கு 19-10-16 அன்று அனுப்பப் பட்டது.  நடக்கும் நாள் 27-11-16                                   
              முகவரி:  கவிமாமணி சி.வீரபாண்டியத்தென்னவன்
                     10ஆம்குறுக்குத்தெரு,திருவள்ளுவர் நகர்
                      பழங்காநத்தம். மதுரை 625003.

                      கைபேசி 98421-81562            

தொல்காப்பிய இலக்கணம்

              இன்றைய இலக்கணம்15-11-16
ஒரு ஊர் என்பது சரியா?  ஓர் ஊர் என்பது சரியா?
பெருமை+ அறம்=பேரறம் எப்படி ஆயிற்று என்பது பற்றிப் பார்ப்போம்
ஒரு சொல்லுடன் ஒருசொல்சேருவதைப் புணர்ச்சி என்பர்.
ஒரு சொல் உயிர் எழுத்திலோ அல்லது மெய் எழுத்திலோதான் முடியும்.அதாவது அ முதல் ஔ வரை உள்ள எழுத்துகளில் ஒன்றோ அல்லது க் முதல் ன் வரை உள்ள எழுத்துகளில் ஒன்றோ தான் வரும். எடுத்துக்காட்டு காகம் இது ம் என முடிந்து உள்ளது. காக்கா இது கா எனமுடிந்துள்ளது. கா என்பதை க்+ஆ பிரித்து ஆவில் முடிந்தது எனக்கொள்ள வேண்டும். காகம் என்பதன் முதல் எழுத்து கா அல்ல க்+அ எனப்பிரித்து க் எனும் மெய் எழுத்து வந்ததாகக் கொள்ள வேண்டும்.
முதலில் நிற்கும் சொல்லை நிலைமொழி என்றும்  அத்துடன் சேரவருகின்ற சொல்லை வருமொழி என்றும் கூறுவர்.
வருமொழி முதலில் உயிர் எழுத்துகள் வரும்போது கவனித்தே சொற்களைச் சேர்க்க வேண்டும்.
ஒரு ஓர் பற்றி முதலில் பார்ப்போம்.
 மெய் எழுத்துகளில் வருமொழி தொடங்கினால் ஒரு போட்டு எழுத வேண்டும்.
எ-டு ஒரு மாடு ஒருகதை
 வருமொழி உயிர் எழுத்துகளில் தொடங்கினால் ஓர் போடவேண்டும்.
எ-டு   ஓர் ஊர், ஓர்ஆடு, ஓர் ஐயம்   
அதே போல் அது மற்றும் அஃது போடும் இடங்களைப் பார்ப்போம்
மெய் எழுத்துகளில் வருமொழி தொடங்கினால் அது போட்டு எழுத வேண்டும்.
எ-டு அது மாடு, அது கதை
உயிர் எழுத்துகளில் தொடங்கினால் அஃது போடவேண்டும்.
எ-டு  அஃது ஊர், அஃது ஆடு,  அஃதுஓர் ஐயம் 
அதேபோல் பண்புப் பெயர்கள் சேரும் முறையைப் பற்றிப் பார்ப்போம்
செம்மை.பெருமை, சிறுமை போன்று மை என முடியும் சொற்களை நாம் பண்புச் சொற்கள் என்போம்.
மெய் எழுத்துகளில் வருமொழி தொடங்கினால் இயல்பாய்ச் சேரும்.
எ-டுசெம்மை+கோழி= செங்கோழி
     பெருமை+பனை= பெரும் பனை
வருமொழி உயிர் எழுத்துகளில் தொடங்கினால் முதல் எழுத்து நீளும்
 எ-டு செம்மை+அடி= சேவடி
      பெருமை+அறம்= பேரறம்
பண்புப் பெயர்ப் புணர்ச்சியில் விதிவிலக்குகள் உண்டு அவை பற்றி நாளை பார்ப்போம்
 இதை ஆங்கிலத்தில் Article என்பர்
எங்கு  a, an,the (some) போடவேண்டும் என்பதையும்  அறிந்து கொள்வோம்
தமிழ் மொழி போலவே ஆங்கிலத்திலும் உயிர் ஒலி(vowelsound)மெய்யொலி(Consonant sound) உண்டு.
இதைத் தமிழ்முறைப்படிப் பார்ப்போம்
A E I O U என்பன ஆங்கில  (vowels) உயிர் எழுத்துகள் எனப்படும்
பிற ஆங்கில எழுத்துகள் (Consonants)மெய் ஒலிகள் எனப்படும்.
வருமொழி முதலில்(vowels) உயிர்ஒலிகள் வரும் போது AN போடவேண்டும் அதற்கு எளிய வழி வருமொழியில் வரும் ஆங்கிலச் சொல்லைச் சொல்லிப் பார்க்கவேண்டும். அது தமிழில் உள்ள அ,ஆ----- ஔ என்ற ஒலிவந்தால் AN போடவேண்டும். An ass, An enemy, an inkstand,an orange,an umbrella
 அ.ஆ ஒலி இல்லாமல் இருந்தால்  (A E I O U என வந்தாலும்.) A போடவேண்டும்.
எ-டு a university(இதைத்தமிழிலில் யுனிவர்சிட்டி என்று சொல்வதால் தமிழ் அ,ஆ ஒலி அல்ல யு என ய் முதலில் வருகிறது )a union, a european(யூரோப்பியன்), a ewe  a unicorn a useful(யூஸ்புல்) man
உலகில் உள்ள ஒரே பொருள் மற்றும் superlatives முன் The போடவேண்டும்.
 The Red sea
 The Hindus
 The best

ஆங்கிலம் அறிந்தோர் ஆங்கில இலக்கணத்தை எளிய முறையில் அரசுப் பணி கையில் குழுவில் பகிரவும்