அடக்கி வைப்போம் அலைபேசியை
அறிவியல் குழந்தைகள் ஆயிரம் உண்டு
அலைபேசி என்பது அதன்கடைக் குட்டி
பிறந்த போதோ பேச்சுமட்டும் இருந்தது
வளர்ந்த பின்பு வையத்தை வளைத்தது
சொந்தக் குழந்தையோ சோகம் கொள்ள
இந்தக் குழந்தையை ஏந்தினர் கையில்
பைத்தியம் ஆகியே செய்தொழில் மறந்தனர்
தொட்டில் குழந்தையும் கட்டில் கிழவனும்
கட்டுண்டு கிடப்பது கையளவு பெட்டியில்
அரசனும் ஆண்டியும் அதனிடம் மயங்கினர்
கரவிரல் கொண்டே கண்டனர் உலகை
சுயசிந்தனை என்பதைச்
சுத்தமாய்த் துடைத்து
மூளையின் ஆற்றலை முடக்கிப் போட்டது
ஊணும் உறக்கமும் மறக்கச் செய்து
உறவையும் நட்பையும் ஒதுங்கச் செய்தது
உரையாடல் விளையாடல் ஒழிந்து போனது
மாதும் சூதும் மயக்குவது போலவே
காதுக்குள் பேசியே காலத்தைக் கொல்வது
கணவன் மனைவி உறைவைக் கெடுத்ததால்
குழந்தைப் பிறப்பும் குறைந்து போனது
களவையும் கற்பையும் கற்றுக் கொடுக்குது
கலியுகம் அழிக்கக் கங்கணம் கட்டுது
அமிழ்தையும் நஞ்சையும் கலந்து கொடுக்கும்
அலைபேசி அதனை அடக்கி வைப்போம்!
No comments:
Post a Comment