Friday, 12 January 2018

கொங்குநாட்டுப்புலவர் ஆ.காளியப்பன்



அலைபேசி 9788552993

கொங்கு நாட்டுப் புலவர் ஆ.காளியப்பன்
சங்கத் தமிழ்பேசும் கோவை கிழக்காக
மங்காப் புகழ்மிகு மருதமலை வடக்காக
சிங்கம் வாழ்ந்திடும் ஐயாமலை தெற்காக              
கங்குபோல் ஒளிர்ந்திடும் வெள்ளிமலை மேற்காக           

எல்லையாய்   விளங்கிட இவற்றிற்கு இடைப்பட்ட
முல்லையும் குறிஞ்சியும் முக்கடாய் விளங்கிடும்            
நெல்லைப் பயிர்செய்யும் மருதத்து நடுவில்                   கல்லையே  புழுதியாக்கும் காராளர் நிறைந்தது

வில்லை ஓட்டுவீடுகள் விளங்கு பூலுவபட்டி
அல்லும் துன்பமும் அற்ற அவ்வூரில் 
இல்லார் துயர்களையும் ஆதி குலத்தில்
தில்லை ஈசனைச் சிந்தையுள் இருத்திய

வனக்காவலர் பழனிக் கவுண்டர் ஒடையாத்தாள்
மனதிற்கு உகந்த மகனாம் ஆறுக்குட்டி
தினக்கூலி செய்தாலும் தீங்கிலாக் காளையெனக்
குணமிகு முத்தம்மாள்  குலபெண்ணாக வந்தாரே

படையல் இட்டார் பத்திர காளிக்கு (குலதெய்வம்)
விடையேறி  சிவனை வேண்டிய வரத்தால்
துடைத்தெரிந்து துன்பத்தை தோன்றினார் காளியப்பன்
மடைதிறந்த வெள்ளமென மகிழ்ந்தனர் சுற்றத்தார்

ஆயிரத்து தொள்ளாயிரத்து  ஐம்பத்து நான்கில்(13-05-1954)
தேய்பிறைச் சித்திரை(8) விசாகம் செவ்வாயில்
ஆய்மயில் வாகனன் அவதரித்த நன்னாளில்
தாய்தந்தை மகிழ்வெய்த தரணியில் பிறந்தார்

நோஞ்சானாய் இருந்தாலும் நோய்நொடிகள் இல்லாது
காஞ்சிமா நதிதன்னில் மீன்பிடித்து விழுதினை
ஊஞ்சலாய் பற்றியே விளையாடும் ஒருமகனைத்
தீஞ்சுவைத் தமிழ்பயிலச் சேர்த்தார் பள்ளியிலே

விடுமுறை வந்துவிட்டால் வேலைக்குச் சென்றிடுவார்
கடும்வெயில் படுமழை பாராது உழைத்தார்
கொடுவாள் கையேந்தும் கருப்பராயன் கோவிலுக்குத்
தொடுத்த மாலையுடன் தொடர்ந்து சென்றாரே

பிணக்கேது மின்றியே பள்ளிக்கும் சென்றதனால்
கணக்காயர் நஞ்சுண்டன் ராமசாமி உதவியால்
உணவோடு உடைபெற்று உயர்ந்தார் கல்வியில்
தன்னுடைய திறமையால் தக்கவைத்தார் முதலிடத்தை                       1.
    
சாந்தலிங்கர் கல்லூரி வார்த்த தமிழ்ப்பாலும்
சாந்தலிங்க  ராமசாமி அடியார் அருளாலும்
சாந்தமிகு வையா புரியார்   இலக்கணமும்
ஏந்தலுக்கு ஈந்ததே புலவர் பட்டத்தை

புதுக்கோட்டைக் கல்லூரி புலவர் பட்டயத்தை
இதுவென்று எழுத்தால் ஈந்தது இவருக்கு
அதுமுதல் வேலை தேடியே  மும்பைமுதல்
மதுதேடும் வண்டாய் மாநிலத்தில் அலைந்தாரே

திருமகளைத் தேடியே பலதொழிலைச் செய்கையிலே
கருவில் வைத்தீன்ற தாயுந்தான் மறைந்தார்
தெருக்கடைச் சிக்கலால்  சிறைக்கும் சென்றார்
குருவாய்க் கல்விதந்தார் சேரிவாழ் இளைஞர்க்கு

“பஞ்சணைப் பள்ளிமீது பால்கொண்ட கையினோடு
கஞ்சர்கள் கன்னியோடு களிப்பினில் மூழ்கிநிற்க
நஞ்சினை உண்டவர்போல் நாமெல்லாம் வெந்த
கஞ்சிதனை குடிப்பது எதனால் ஐயா

உழைப்பினை விற்றுவிட்டு வாயற்று இருப்பதாலே
பிழைப்பினைப் பறிகொடுத்து பேசாது இருப்பதாலே”
இளைத்தோம் என்றுகவி புனைந்தார் அப்போதே
காளையாய் இருக்கையில் கவிஞர் ஆனாலும்

கன்னியையும் கடவுளையும் கவியால் புனையாது
பண்ணையாள் படியாள் பற்றியே சிந்தித்தார்
திண்ணமாய் ஒருநாள் தொழிலாளி ஆளுவான்
அன்றுதான் துன்பம் அடியோடு போகுமென்றார்

“பெரியார் கொள்கை     பெரிதாய் வளர்ந்தது  
அறியாத மக்கள் அதனையே நம்பினர்
அரிக்கும் கரையானாய் ஆட்சியர் மாறியதால்
தெரியாது போயிற்று தமிழன்னை சீர்மைகளே 

வள்ளுவர் கோட்டத்தால் வளரவில்லை வண்டமிழும்
பள்ளியிலும் கோவிலிலும் தண்டமிழைப் புறந்தள்ளி
மெல்லச் சாகடிக்க மேன்மேலும் முயலுவதை
நல்லதமிழ் கவியாலே நாளும் சாடியவர்

இந்தச் சிந்தனையால் எதிரியானார் பலருக்குச்
சொந்த பந்தமும் தூரத்தில் நிறுத்தியது
கந்துவட்டிக் காரனும் காசுதர மறுத்திட்டான்
முந்துவது காசென்று மூளையில் உதித்ததால்
                                                                                 நடத்துநர் பயணச்சீட்(டு) ஆய்வாளர் அஞ்சலகம்
நடத்தும் அதிகாரி நாளிதழ் முகவரென
இடம்காலம் எண்ணாமல் எப்பணியும் செய்தார்
தடத்தில் துணைவரத் தாரத்தைக் கைபிடித்தார்

இத்தனைக்கு இடையிலும் எம்ஏபி லிட்டும்
சித்தம் களிகூர இந்தியில் டிப்ளமோ
மெத்தப் படித்தே மேன்பட்டு விளங்கியதால்
உத்தமர் இவரென ஆசிரியர் ஆக்கினர்

இடைநிலை ஆசிரியர் பணியுதறி எந்நாளும்
இடையறா இன்பமீனும் இன்றமிழ் கற்பிக்க
கொடையாளி கோர்ட்டார் பள்ளியில் பணியேற்றார்
படைத்தார் சாதனையைப் பல்லோரும் போற்றிடவே

மாவட்ட முதலென்றும் மாநில முதலென்றும்
ஆவதற்கு மாணவரை ஆக்கி விட்டதனால்
ஏவாதே எப்பணியும் எந்நாளும் செய்ததனால்
தாவிலா (உதவி) தலைமை ஆசிரியர் ஆக்கினரே(தாவு=குற்றம்)

காந்திகலா நிலையம் கரங்கொடுத்(து) உதவியதால்
இந்துமதி உமாபதி இருமகவைப் படிக்கவைத்தார்
ஐந்துபாடமும் கற்பித்துச் சேர்த்தார் செல்வத்தை
நைந்தது இவர்வாழ்வு மாரடைப்பு வந்ததனால்

ஏழை மாணவர்க்கு எந்நாளும் உதவியதால்
தாழையாய் மணம்பரப்பி தரணியில் உயர்ந்தார்கள்
பாளையாய்  போனதில்லை இவரிடம் பயின்றவர்கள்
நாளைய தலைமுறை நன்றாகும் இவருழைப்பால்

அருந்துணை அம்சவேணி  அறிவுத் திறத்தால்
வருவாய் கூடியதால் வளமனை கட்டினார்
திருவளர் புதல்வியுடன் சேர்த்தார் ராசேசை(மருமகன்)
முருகுமிகு சேந்தனமுதன் முதற்பேரன் ஆனானே

ஓய்வூ தியங்கூட ஒருவகைச் சம்பளந்தான்
தாய்மொழித் தமிழுக்கும் சமுதாய நலனுக்கும்
ஓய்விலா(து) உழைத்தால்தான் உணவே ஒட்டுமென்பார்
பாயில் படுத்தவுடன் தூக்கம் வருமென்பார்.

இப்படிச் சிந்தித்து எடுத்தார் ஒருமுடிவை
தப்பாது தமிழர் வாழ்வு சிறந்திடவே
முப்பாலும் முனைவன் மொழிதொல் காப்பியமும்
எப்பாலும் பரவிட ஏற்றமுறை கண்டாரே                                          3.

இலக்கியத்தின் வேரான இன்றமிழின் இலக்கணத்தைத்
துலக்கமுறச் செய்யவே தொல்காப்பியர் பேரவையைப்
பலசான்றோர் உடனிணைந்து சாந்தலிங்க அடிகள்
நலமிகு கல்லூரியில் நன்னாளில் தொடங்கினரே

மெய்கண்டார் வழிவழி மேன்மைகொள் அடியாராம்
கயிலைக் குருமணி இராமசாமி அடிகளாரும்
உய்யவே உலகமது உள்ளதில் அருள்கூர்ந்து
மெய்யன்பால் தொடங்கினார் தொல்காப்பியர் பேரவையை
                                              ஆ.காளியப்பனின் அருந்தொண்டு
          பெருமைமிகு பேரவை மூலம் திங்கள் தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை திங்கள் அமர்வினை நடத்துகிறார். பல்வேறு அறிஞர்களைத் தொல்காப்பியம் பற்றிப் பேச அழைக்கிறார்.அத்தோடு தொல்காப்பிய வகுப்பும் நடத்துகிறார். அதன்மூலம் தொல்காப்பியர் கருத்துக்களை அனைவருக்கும் புரியும்படி விளக்குகிறார். பேரவை மூலம் திருவள்ளுவர் நாள், தொல்காப்பியர் நாள், தாய்மொழி வளர்ச்சிநாள் ஆகிய மூன்று விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்பேரவை அருந்தமிழை வளர்ப்பதோடு,அறச்செயலும் ஆற்றி வருகிறது.
      ‘அரசுப்பணி கையில்’ என்னும் புலனத்தின்(whatsapp) குழுமூலம் தமிழ்நாட்டரசு பணித் தேர்வுகளில் பங்கு பெற வழிகாட்டி வகுப்புகளை நடத்தி வருகிறார். அக்குழுவில் எல்லா மாவட்ட இளைஞர்களும் இருப்பது பெருமைக்குரிய விடயம். இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சியும் அளித்துவருகிறார்.   
                        படைப்பும் ஆக்கமும்
புகழொடு பல்லாண்டு வாழ என்று இவர் எழுதிய நூலில் ஆத்தி சூட்டியாய் அகர வரிசைப்படி முப்பத்தோர் (உயிர்12, மெய்18 ஆய்தம்1=31) கருத்துகளை மணியாகக் கோத்துள்ளார். இதில் ‘ஓதியவன் என்பதை விட ஒழுக்கமானவன் என்பதே சிறந்தது’ என்பது    
         மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
         பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்ற குறளை நினைவூட்டும்.’இறப்பது உடலாக இருந்தாலும் நிலைப்பது புகழாக இருக்கட்டும்’,’ஔடதம் குறைந்தால் ஆயுள் கூடும்’ என்ற மணிமொழிகளைக் கற்றார் மறவார். திருவள்ளுவர் உரைத்த உடைமைகள் பத்தையும் ஆசிரியப்பாவால் அழகாக எழுதியுள்ளார்.
   குழந்தையின் கல்வி என்ற தலைப்பில் வரும் கவிதையில்
      “அண்டத்தை ஆயும் அறிவியல் தன்னையே
      தண்டமிழ் மொழியில் தேடித் தருவோம் என்றும்
      தொல்காப்பியம் உரைத்த இல்வாழ்க்கை முறையும்
வள்ளுவன் காட்டும் வாழ்வியல் நெறியும்
பள்ளிப் பருவத்தில் பாடமாய் தருவோம்”என்றும் பாடியுள்ளார்.
தமிழ் எழுத்தைக் கூறும்போது
      :சுழியத்தில் தொடங்கி பிறையாய் வளைந்து
      நின்றும் கிடந்தும் நிற்கும் அகரம்
      உலக மொழிக்கே முதலெழுத் தானது” என்பதை அனைவரும் பாராட்டுவார்
      ‘விலைமகளை விரும்பி விற்றாய் அன்னையை
      கலைத்தமிழ் அன்னையைக் காக்கப் புறப்படு’ என்பதால் இவரது மொழிப்பற்றை அறியலாம்.கைம்பெண் பற்றி எழுதிய இவரே கழுதையைப் பற்றியும் எழுதியுள்ளர்.                     புலவருக்கு புலி என்னும் வெண்பாவில் பத்து இரட்டுற மொழிதல் கவிதைகள் எழுதியுள்ளார்.அப்துல் கலாம் முதல் அப்துல் ரகுமான் ஈறாக ஏராளமான இரங்கற் பாக்களும்,சாதுசுவாமி உட்பட எண்ணற்றோர்க்கு  நாண்மங்கல விழாக் கவிகளும் எழுதியஉள்ளார்.அத்தனையும் ஆசிரிய விருத்தங்கள் .நண்பர்களுக்குக் கடிதம் எழுதினால்கூட கவிதையாகவே எழுதிடுவார். அப்படி1978 யில் உயிர்த் தோழர் மாரப்பனுக்கு எழுதும்போது அதில் ‘கங்கைக் காதலியைக் காவேரி மணமுடிக்க காலமெல்லாம் நல்லவார்த்தை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள்’ என்று குறிப்பிடுவது கங்கை காவிரி இணைப்பு ஒருபோதும் நடக்காது என்று குத்திக் காட்டுவது போல் உள்ளது.
இத்தனை கவிதைகளை ஏன் நூலாக வெளியிடக்கூடாது என்றால்,படம் பார்க்கச் செலவு செய்யும் அளவிற்கு புத்தக வாங்க யாரும் விரும்புவதில்லை என்கிறார். வரண்ட கிணற்றை வெட்டும் வீண்செலவு கூடாது என்கிறார். பொருளாதாரக் குறைபாடும் ஒருகாரணம்.
சிறப்பான சீர்த்திகள்
      அந்தமான் தமிழ் மன்றம், கொச்சி தமிழ்ஐக்கியச் சங்கம் கேரள இலக்கிய வட்டம், பத்ராவதித் தமிழ்ச் சங்கம், ஒரிசா தமிழ்ச்சங்கம் எனப் பல்வேறு மாநிலப் பட்டி மன்றங்களிலும் கவியரங்குகளிலும் பங்கேற்ற பெருமை உடையவர்.
      கேரளாவில் 60 நாட்கள் தங்கி 23 மலையாளிகளுக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்ததைப் பாராட்டி, கொச்சி தமிழ் ஐக்கியச் சங்கம் கேரள உயர்நீதி மன்ற நீதிபதி பி.எஸ் கோபிநாதன் அவர்கள் திருக்கரத்தால் இவருக்குத் தொல்காப்பியச் செம்மல் என்ற விருதை வழங்கியது. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய அண்ணா108 விருது
மற்றும் தமிழமுது, தமிழ்ச்சுடர்மணி, தமிழ்நம்பி என இவர் பெற்ற விருதுகளும் ஏராளம். அஞ்சலக அதிகாரியாக இருந்தபோது திறன்மிகு அஞ்சலகர்  என்னும் பாராட்டுப் பத்திரத்தை மண்டல அஞ்சல் கண்காணிப்பாளரிடம் பெற்றவர். மாநில அளவில் மாணாக்கர்களைத் தேர்ச்சி பெறச் செய்ததால் மாவட்டக் கல்வி அதிகாரி பாராட்டுப் பத்திரம் வழங்கியுள்ளார்,
நிறைவு.
இவரைக் கொச்சித் தமிழ் ஐக்கியச் சங்கம் வாழ்த்திய வாழ்த்தோடு நிறைவுசெய்யலாம்.
முப்பொருள் தன்னை மூவிலக் கணமாய்ச்
செப்பிய காப்பிய இலக்கணம் தன்னை
இப்புவி உள்ளோர் எளிதில் புரிய
செப்புகின்ற திறன்மிகு காளியப்பன்
தனக்குத் தண்டமிழ் ஐக்கியச் சங்கம்
மனமுவந்து தந்தது மாசறு விருதாம்
தொல்காப்பியச் செம்மல் தொடரட்டும் அவர்பணி
நல்லுலகு தன்னில் நலமுடன் வாழ்க
தொல்காப்பியமே  துணை! தொல்காப்பியரே வழிகாட்டி!

               ஆக்கம்  
         புலவர்.ப.வேலவன் 72, 
          சிறுவாணி முதன்மைச்சாலை                                               பேரூர் (அஞ்சல்)
        கோயமுத்தூர் 641010
        அலைபேசி6380259784
                                                                                                          
                                 

                                         5.

No comments:

Post a Comment