Thursday, 4 January 2018

நூலின்நயமும்பயனும் முருகாத்தாள்



                  நூலின் நயனும் பயனும்
     தொல்காப்பியச் செம்மல் புலவர்.ஆ.காளியப்பன் MA.,MEd
           தொல்காப்பியப் பயிலரங்கம்- நெறியாளர்
           பூலுவபட்டி (அஞ்) கோவை-641101
           அன்பினைப் பகிர 978855293
   மணமிகு மலர்களை நாடி சுவைமிகு தேனினைத் துளிதுளியாய்த் திரட்டி வந்து ஒரு தேனீ தேன் அடையை உருவாக்குகிறது. அதுபோல கற்றுத் துறைபோகிய
கவிஞர் பலரின் கவிதைகளைத் தேடித்தேடிச் சேகரித்து உருவாக்கிய தொகுப்பிற்குத் தேன்துளிகள் எனப் பெயர் இட்டது சாலப் பொருத்தம் ஆகும்.
     ஒரு நூலுக்கு அணிந்துரை என்பது தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன் அமைவது போன்றதாகும்.அந்த முறையிலே இந்நூலுக்கு 
அணிந்துரை வழங்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தமைக்கு ஔவை தெரசாவாம் முருகாத்தம்மாள் அவர்களுக்கு நன்றி.
     ஆல மரத்திற்கு அருகம்புல்  வாழ்த்து
     ஆகாய ஞாயிற்றுக்கு விண்மீன் வாழ்த்து
     அளவிறந்த கடலுக்குச் சிறுகுட்டை வாழ்த்து
     இமய மலைக்கு மண்மேடு வாழ்த்து
     மணம்மிகு மல்லிகைக்குக் கள்ளிப்பூ வாழ்த்து என்றே நினைக்கிறேன்.
தொகுப்பு நூல் வெளியிடல் பெருமலை ஏறல்போல,பெருங்கடலைக் கடத்தல் போல ஓர் அரிய செயல் ஆகும். அவ்வரிய செயலைச் செய்தவர் நம் அம்மையார்.
  இந்நூலுள் காய்தல் உவத்தல் அகற்றி பாமரன் கவிதையையும் பண்டிதர் கவிதையைும் ஒருங்கே திரட்டியதால் வேண்டுதல் வேண்டாமை இலான் ஆகிறார்  அம்மையார்.
     இத்தொகுப்பு நூல் ஆசிரியரின் உழைப்பைப் புகழ்வேனா?உறுதியைப் புகழ்வேனா? அறிவைப் புகழ்வேனா? ஆற்றலைப் புகழ்வேனா? ஆயிரம் பிறைகண்ட
ஒருவரின் அதுவும் ஒரு மாதரசியின் இச்சாதனையை எவ்வாறு போற்றுவது?
இந்நூலுள் உள்ள ஒவ்வொரு கவிதையும்
தொட்டிடும் கவிதை தோறும் சுவைநறுந் தமிழின் சாறு
சொட்டிடும் நெஞ்சம் எல்லாம் சொக்கிடும் மனுசோதி
கிட்டிடும் அறிவு பொங்கிக் கிளர்ந்தெழும் உவகைக் குன்றம்
எட்டிடச் செய்யும் இத்தேன்துளி தொகுப்பு நூலே.

மலைபடு மணியும் மண்ணில் மறைபடு வளச்செம் பொன்னும்
அலைபடு முத்தும்  கூட்டி அணிபட அமைத்தல் போல
நிலைபடும் கவிதை எல்லாம் நிரள்படத் திரட்டி ஆய்ந்து
உலைப்படப் புடம்போட்டு இங்கோர் அணியாய்ப் பூட்டி விட்டார்  

கலைபயில் தெளிவினோடு கட்டுரை வன்மையோடு
மலைநிலப் பெருமையோடு மலர்தரும் மணத்தினோடு
தொலைவிலா இன்பத்தோடு தோன்றிடும் புகழினோடு
தலைமையே ஏற்றிடுவாய் தண்டமிழ் கவிஞருக்கே.

No comments:

Post a Comment