Wednesday, 14 June 2017

திருவாரூர்



சிவமயம்
                         திருச்சிற்றம்பலம்
பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
   பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி யொண்ணா
   எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
   ஆரூ ரானை மறக்கலு மாமே.
        திருச்சிற்றம்பலம்

சிவணிய நேசர்களுக்குக் கோவில் என்றால் தில்லைச் சிதம்பரமே.அத்திருக் கோவில் தோன்றுவதற்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தோன்றியது திருவாரூர் தியாகேசுவரர் திருக்கோவில்.ஆகவே அது பெருங்கோவில் என்று போற்றப்படுகிறது காலம் 1000-2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.  இங்கு ஈசன் சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார்.
கோவில் ஐந்துவேலி குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய தலம். பஞ்ச பூதத்தலங்களில் இது(பிருத்வி) நிலத்திற்கு உரியது. திருவாரூரில் பிறந்தாலே முக்தி கிட்டும் என்ற பெருமைக்கு உரியது இவ்வூருக்குக் கமலாயபுரம், சக்திபுரம் எனப் 14 பெயர்கள் உள்ளன.    
     சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வரும் பாடிய பெருமைக்குரியது. தேவாரப் பாடல்பெற்ற 274 திருத்தலங்களில் 150ஆவது திருத்தலமாகும்.திருப்பாற் கடலில் திருமால் இத்தல இறைவனைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவரது மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவன் நடனமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார் அதன் பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது. சப்த விடங்கர் மூர்த்தங்களுள் இங்குள்ளது வீதிவிடங்கர் மூர்த்தமாகும். இத்தலத்தின் சாயரட்சை வழிபாட்டின் போது இந்திரனே வந்து வழிபடுவதாக ஐதீகம்.
இங்குள்ள மூலவர் தியாகராசர், வன்மீகநாதர் என்றும் புற்றிடங்கொண்டார் உற்சவ மூர்த்தி என்றும் கூறுவர்.
அம்மனை கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள் என்ற பெயர்களால் அழைப்பர்.
தலவிருட்சம் பாதிரி மரம்
                 இவ்வூரின் சிறப்புகளுள் சில.
·      கமலை என்னும் பராசக்தி தவம் செய்த ஊர்
·      51 சக்தி பீடங்களில் இது கமலை சக்தி பீடமாகும்.
·      இத்தலத்தில் நமிநந்த அடிகள் இலட்சம்தீபத்தை குளத்து நீரால் எரியச்  செய்தார்.
·      இறைவன் சுந்தரருக்காகப் பரவையார்பால் தூது சென்ற தலம். சுந்தரர் குருடான இடக்கண்ணைப் பெற்றதும் இத்திருத்தலத்தில் தான் .
·      காவிரித் தென்கரையில் எழுந்தருளியிருக்கும் இடமாகத் தாமே விரும்பி ஏற்றுக் கொண்ட வன்மீகநாதர் கருவரையில் குடிகொண்டிருக்கும் தலம்.






·      கமலாலயம்தீர்த்தம்,சங்குதீர்த்தம்,கயாதீர்த்தம்,வாணிதீர்த்தம்,செங்கழுநீர் ஓடை என்னும் ஐந்து தீர்த்தங்களைப்  பெற்ற ஒரே தலம்.
·      முசுகுந்தன்,மனுநீதிச்சோழன் போன்ற சக்கரவர்த்திகளால் ஆட்சி செய்யப்பட்ட நகரம்.
·      விறன்மிண்ட நாயனார்,நமிநந்திஅடிகள்,செருத்துணை நாயனார்,தண்டி அடிகள் கழற்சிங்கர் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தி அடைந்த தலம்.
·      தியாகராசர் பெருஞ்சிறப்படன் அஜபா நடன மூர்த்தியாக விளங்கும் தலம்
·      இத்தியாகேசப் பெருமானே சோமாசி நாயனாரின் வேள்விக்காக அம்பர் மாகாளம் தலத்தில் எழுந்தருளி அவிர் பாகம் ஏற்றார் என்னும் சிறப்பை உடையது இத்திருத்தலம்
·      திருமுதுகுன்றம் மணிமுத்தாறு நதியில் தாம் இட்ட பொன்னை இத்திருத் தலத்தில் உள்ள கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ளுமாறு சுந்தர்ருக்கு அருளிய தலம்
·      திருவாரூர் சித்தர்கள் கோட்டம் இங்கு வாழ்ந்த சித்தர் பலருள் .ஸ்ரீகுருதட்சினாமூர்த்திச் சித்தரும் ஒருவர்.
        தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று.இத்திருக் கோவில் நான்கு புறமும் பெரிய மதில்களால் சூழப்பட்டது. உயர்ந்த ஏழு கோபுரங்களைக் கொண்டது. கிழக்கு கோபுரம் 118 அடி உயரம் உடையது. இதன் முன்புறம் அமைந்துள்ள கமலாலயக்குளம் பூந்தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் ஐந்து வேலிப் பரப்பில் அமைந்துள்ளது           80 விமானங்கள், 13மண்டபங்கள், 12பெரியமதில்கள், 15தீர்த்தக்கிணறுகள்            3பெரியநந்தவனங்கள் 24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள், ஆண்டின் 365 நாட்களைக் குறிக்கும் வகையில் 365 லிங்கங்கள்உள்ளன. முன் மண்டபத்தில் விழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக 1000 கற்றூண்கள் உள்ளன. இக்கோவில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டாலும் பிற்காலச் சோழ மன்னர்களில் ஒருவரான கண்டராதித்தன் மனைவி செம்பியன் மாதேவியால் கற்றளியாக மாற்றப்பட்டது. பின் குலோத்துங்கன் காலத்தில் விரிவுபடுத்தப் பட்ட  மிகப் பெரிகோவில். இறுதியாக சரபோஜிமன்னர் குடமுழுக்குச் செய்தார்.

     இத்திருத்தலத்தில் எட்டு துர்க்கைகள் பிரதிஸ்டை செய்யப் பட்டுள்ளது.எல்லாக் கோவில்களிலும் நவகிரகங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையைப் பார்த்து நிற்பர். ஆனால் சதயகுப்தனுக்கு அஞ்சி நவகிரகங்கள் இத்திருத்தலத்தில் வழிபட்டதால்  நவகிரகங்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் நிற்கின்றனர். வேறு எங்கும் இல்லாத காட்சியாகும்  .
     அம்பாளும் சுவாமியும் தனித்தனி சன்னிதிகளாக கிழக்கு நோக்கி உள்ளனர்.
பிரகாரத்தில் விநாயகர், முருகன் வள்ளிதெய்வானை, கலைமகள் மற்றும் வன்மீகநாதர் சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள சரஸ்வதி வீணையின்றி தவக்கோலத்தில் உள்ளார்.
     சிவன் சன்னிதில் முதல் பிரகாரத்தில் உள்ள கணபதி சுருண்டு படுத்த ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூ மீது நர்த்தனம் புரிகிறார்.யோகம் பழகுபவர்கள் இவரைவணங்குதல் சிறப்பு.
       





 சுவாமின் முதல்சந்நிதில் உள்ளவர் வாதாபி கணபதி இந்த வினாயகர்முன் நின்றுதான் திருவாரூர் முத்துசாமி தேசிகர் வல்லகணபதி என்னும் பாடலைப் பாடத்தொடங்கினார் என்பர்.

                    திருவாரூர்த்தேர்
திருவாரூர்த் தேர் உலகப்புகழ் வாய்ந்தது. காரமடைத்தேர் கால்தேர் அவினாசித்தேர் அரைத்தேர் திருவாரூர்த் தேர் முழுத்தேர் என்ற முதுமொழி உண்டு. தேர் அழகு என்ற சிறப்புப் பெற்றது. இதற்கு ஆழித்தேர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு  மனுநீதிச் சோழன் புகழ்பாடுவது இத்தேரே. .
மாசி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் கொடி ஏற்றப் பட்டு பங்குனி மாதம் ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெறும். பத்து நாட்கள் தேரோட்டம் நடைபெறும். ஆடிப்பூரம், மாசி மகம் மற்றும் மாதாந்திரப் பிரதோஷம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படும். திருவாரூர் கோவிலுக்குள் சென்று விட்டால் குவித்த கரங்களை விரிப்பதற்கு வழியே இல்லை என்ற அளவிற்கு ஏராளமான சந்நிதிகள்  உள்ளன.எந்த சிவத்தலத்திற்கும் இல்லாத பெருமை இச்சிவன் கோவிலுக்கு உண்டு .கோவில், குளம்,வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் பெற்ற  ஒரே தலம்
     இங்குள்ள மனோன்மணிக்கு ஆடிப்பூரத்தில் விழா நடைபெறும்     .அம்மன் மூலஸ்தானம் அருகில் வலப்புரம் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது
     சிவன் திருக்கோவில்களில் தேவாரம் ஓதிமுடித்தவுடன் திருச்சிற்றம்பலம் என்று கூறிமுடிப்பர். இது சிதம்பரத்திற்கும் முந்திய கோவில் ஆகையால் அவ்வாறு கூறி முடிப்பதில்லை.
  திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால் எமனுக்கு வேலை இல்லாமல்  போயிற்று. எனவே எமன் சண்டிகேசுவராக இருந்து இறைவனை வேண்டித் தன் வேலையைக் காப்பாற்றிக் கொண்டதாக்க் கூறுவர்.
   திருநள்ளாறு சென்று சனிபகவானை வழிபட்டவர்கள் இத்திருகோவிலுக்குச் சென்று திரும்புதல் நல்லது. திருவாரூர் தியாகேசுவரரை வழிபட்டால் கைலாயம் சென்று கைலாயநாதரையும், காசி விசுவநாதரையும், இராமேசுவரம் இராமநாத சுவாமியையும் வழிபட்ட பலன் அனைத்தையும் ஒருங்கே பெறுவர்.திருவாரூர் சென்றிடுவோம்.தியாகேசர் அருள்பெறுவோம்.
                            சிவாயநம.

No comments:

Post a Comment