Wednesday, 14 June 2017

இல் வாழ்க்கை (சிறுகதை )



                           இல் -- வாழ்க்கை  (சிறுகதை )   
             விற்பனை ஆகாத மனைகள் விரிந்து கிடந்ததன .அதில் பூலுவபட்டி சச்சினும்   தோனியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.எல்லாரும் 23 –38 வயதுக்குள். கல்யாணக் கனவாளிகள். கல்யாணத் தரகர்களுக்குக்  கப்பம் கட்டி ஓய்ந்தவர்கள். அவர்களால் ஜோதிடர் குடும்பங்கள்  சுகமாய் வாழ்ந்தன.தோஷம் கழிக்க ஜோதிடர் வழி காட்டினர்.நாகேஸ்வரர் கோவிலுக்கு ஞாயிறுதோறும் சென்றனர்.பன்னிரண்டு வாரங்கள் பாலபிசேகம்.கோயில் பூசாரி குருநாதன் பத்து ஏக்கர் பாக்குத் தோப்பு வாங்கினார்.இருந்தும் பிரம்மசாரிகள் பெருகிக் கொண்டே இருந்தனர்.
         ஆசிரியர் அங்கமுத்துக்கு அஷ்டமத்தில் சனி.ராஜேஷ்குமாருக்கு ராகுகேது தோஷம். செழியனுக்கு செவ்வாய் தோஷம்.குப்புசாமிக்கு கூட்டுதிசை.  ஜெயகுமாருக்கு சுத்த ஜாதகம். கடை இருப்பவனுக்குக்  காடு இல்லை காடு இருப்பவனுக்குக்  கடை இல்லை.காடும் கடையும் இருக்கும் கந்தசாமிக்குக்  கவர்மென்ட் வேலை இல்லை .ஐம்பது ஏக்கர் தோப்பு அய்யாசாமி மகனுக்கு படிப்பு இல்லை.எப்படி பெண் கொடுப்பது. இது பெண் பெற்றோர் பேச்சு  அதே ஊரில் அன்பழகன்.அமெரிக்காவில் வேலை. ஆண்டுக்கு அறுபது லட்சம் சம்பளம். தோப்புத்துரவு ஏராளம். பொள்ளாச்சியில்  பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர். அதை அப்பா இன்பராஜ் கவனித்து வருகிறார்.
          அவர்  மகனுக்குப் பெண் தேடத் தொடங்கினார்.பகீரத முயற்சிக்குப் பின் ஒரு பெண் ஜாதகம் வந்தது. இன்பராஜுக்கு ஏகப்பட்ட குஷி.கல்யாணச் செலவு அத்தனையும் மாப்பிள்ளை  வீட்டாரே செய்வதாக ஒப்பந்தம். பெண்ணின் போட்டோ ஸ்கைப் மூலம் அமெரிக்காவிற்கு  அனுப்பப்பட்டது.போட்டோவைப் பார்த்த அன்பழகனுக்கு ஒரே அதிர்ச்சி முடியும் முகமும் ஒரே நிறம்.தெத்துப் பல்லு மாறுகண். களையற்ற முகம். உனக்கோ வயிசு முப்பத்திரண்டு.இதை விட்ட வேறு பெண் கிடைப்பது கஷ்டம் தாயின் அறிவுரை. விதியே என்று ஒத்துக்கொண்டான்
       .   இருவீட்டாரும் ராமசாமி ஜோதிடரிடம் சென்று பொருத்தம் பார்த்தனர்.ஆண் மிருகசீரிடம்  நட்சத்திரம் பெண் அசுவினி எனவே கனப்பொருத்தம் தினப்பொருத்தம் இல்லை.ஆகவே பின்னால் பெரும் சிக்கல் என்றார் ஜோதிடர். .இன்பராஜுக்கு ஒரே அதிர்ச்சி. பெண்வீட்டார் உடனே எழுந்து விட்டனர்.குலதெய்வக் கோவிலில் பூக் கேட்டுப் பார்க்கலாம் என்று கெஞ்சினார் இன்பராஜ் .பெண்ணின் அம்மா ஒத்துக்கொள்ளவில்லை.                                                
.        மனம் ஒடிந்து வீட்டிற்கு வந்த இன்பராஜுக்கு ஒரு மகிழ்ச்சியான சேதி. மகள் மாசமாக இருக்கிறாள்.உடனே குடும்ப நண்பர் குமாரசாமி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்.இந்த மருத்துவ மனையில் கருவிலுள்ள குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவிக்கப்பட மாட்டாது.என்ற பலகை தொங்கியது. ஸ்கேன் பார்த்தார்கள். பெண் குழந்தை என்று தெரிந்தது .காதோடு காது வைத்தாற்போல் கரு கலைக்கப் பட்டது  மகிழ்ச்சி யோடு வீட்டிற்கு வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தார் இன்பராஜ்.       அப்போது தொலைக்காட்சியில் பிரதமர்  பேசிக் கொண்டிருந்தார் .இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு         தொள்ளாயிரத்து ஐம்பது பெண்கள் வீதம்தான் உள்ளனர். எனவே பெண்ணினத்தைக் காக்க சூளுரை ஏற்போம் என்கிறார்.

No comments:

Post a Comment