Wednesday, 21 June 2017

பொழப்புக் கதையெ கேட்டயா சிறுகதை



                 பொழப்புக் கதையைக் கேட்டயா!
 “அக்கா அக்கா ரக்கிரி பொறிக்கலாமுனு கொண்டைம்மா காட்டுக்குப் போனே. சீமை முள்ளு ஏறி முறுஞ்சிடுச்சு.கெலஞ்சு எடுக்கலாமுனா பின்னூசி வேறே இல்லே.என்றாள் செம்பாத்தாள்
 “செருப்பு என்னாச்சு?” என்றாள் வள்ளியம்மாள்.
“அது பிஞ்சு போய் ரண்டுமூனு நாளாச்சு. கட்டரதுக்குக் கருப்பன் கிட்டக் குடுத்திருக்கேன் அதை ஊட்டுக்குள் வெச்சுப் பூட்டிட்டு மக ஊருக்குப் போயிட்டான்”. என்ன செய்யறது”  என்றாள் செம்பாத்தாள்
 “செரிசெரி போயிக் கருவேலாமுள்ளைப் புடுங்கிட்டு வா கெழஞ்சு உடறேன் ”  என்றாள் வள்ளியம்மாள்
செம்பாத்தாள் கருவேல முள்ளைப் பிடிங்கிக் கொண்டுவந்தாள்.
“அடி யாத்தி என்ன இவ்வளவு ஆழம் போயிருக்கு சீமெண்ணையைக் .கொஞ்சம்கொண்டுவா அதை ஊத்துனா கால் மறத்துப் போகும் அப்பரம் கெழஞ்சா வலி இருக்காது” என்றாள் வள்ளியம்மாள்.
செம்பாத்தாள் சீமை எண்ணைச் சீசாவைக் கொண்டுவந்து கொடுத்தாள்.அதை வாங்கி முள்பட்ட காயத்தின் மீது வள்ளியம்மாள் கொஞ்சம் ஊற்றினாள்.பிறகு முள்ளைக் கருவேலான் முள்ளால் களைந்தாள்.
“இப்பக் கெழைய முடியாது ஆழமாப் போயிடுச்சு எருக்கலை எலைலைப் பாலோடு புடுங்கிட்டுவா எருக்கம் பாலெ வச்சு மேலெ அந்தப் பொங்கெப் போட்டா பழுத்துச் சீப்புடிக்கும் அப்பக் கெழஞ்சா அளுங்காமெ வந்திரும். வலிதெரியாம இருக்க ராத்திரிக்கு உப்பெண்ணெய் காச்சி ஒத்தனம் குடுவலி தெரியாது. ஆமா நேத்து எதுக்குப் மொளகு செலவு அரைச்சே?” என்றாள் வள்ளியம்மாள்.
    “அந்தக் கூத்தெ ஏங்கேட்கரே. தேங்காபோட சின்னப்பண்ணன் தோட்டத்திற்குப் போச்சு உங்கண்ணன். அப்போ ஆத்துலே அஞ்சாறு நண்டே புடுச்சிட்டு வந்திருச்சு அதுக்க வேண்டித்தே மொளகாக் கூட்டு அரச்சே.நண்டுச் சாத்தெ குடுச்சிட்டு உங்கண்ணன் பசடுத்தன பாடு இருக்கே! வெளியெ சொன்னா வெட்கம் உள்ள போட்டா துக்கம் உங்கண்ணன் பக்கத்தாலெ வந்தாலே ஒரே பீடி நாத்தம் ஒரே இருமலு” என்றாள் செம்பாத்தாள்.
“பீடி குடிக்கிற ஆம்பளைகளுக்கு அடிக்கடி அகத்திக்கீரை வேவுச்சுக் குடுக்கோனும் தெரிமா?   எங்கூட்டுலே சின்னப் பையன் ராத்திரி முச்சூடு ஒரே வாந்தி வயித்திலிம் போச்சு. மத்தியானம் பள்ளிக்கொடத்திலே என்னவாங்கித் தின்னானோ தெரியிலே குத்திக்குத்தி வாந்தி எடுத்தான்”. என்றாள் வள்ளியம்மாள்
“ஆமா குகிக்கிரியோ கிக்கிரியோ ன்னு சொல்ராங்களே அந்த எளவத் தின்னிருப்பான்” என்றாள் செம்பாத்தாள்
 “அந்த நேரத்தலெ என்ன பண்ணறது ஐயாத்தம்மாவெ போயி எழுப்பிட்டு வந்தேன். அந்த ஆத்தா வந்து மாங்கொட்டையெக் கருக்கி அந்தக் கரியை கொழச்சு குடுத்தாங்கோ..அப்பரந்தே வாந்தி நின்னுச்சு. காத்தாலே எந்திருச்சு அவரத் தழெச் சாத்தே நாலுசொட்டுத் தயிருலே கலக்கிக் குடுத்த பொறகுதெ வயித்திலெ போறது நின்னுது. நாம இந்த ரெண்டெ வெச்சிட்டே இந்தப்பாடுபடறோமே ஆனா
அந்தக்காலத்திலே எப்படிதே ஏழெட்டெப் பெத்துக் காப்பாத்துனாங்களோ” என்றாள் வள்ளியம்மாள்.
“என் பெரிமக மாரிக்கு நெஞ்சுச்சளி வேரெ இரும்பிட்டே இருக்கிறா என்ன செய்யரதுனே தெரியிலே” என்றாள் செம்பாத்தாள்
“சுத்துக் கொழுப்பு எடுத்து மஞ்சவெங்காத் தண்ணிவெச்சுக் குடுக்கிறதுதானே .இல்லாட்டி ஒருகோழிக்குஞ்செ கழுத்தெத் திருகவேண்டியது தானே” என்றாள் வள்ளியம்மாள்
“இந்தமாசம் பெரட்டாசியாப் போச்சே என்ன பண்ணறது அதுக்குத்தே தூதுவளை சாறு வெச்சுக் குடுத்தேன்” என்றாள் செம்பாத்தாள்.
“நண்டுச்சாறு குடிக்கீலே பெரட்டாசி தெரிலே செரி செரி போயி கொள்ளுப்போட்டு வேக வைக்கோனு நான் போறே பொளப்புக் கதையெ கேட்டயா புள்ளெயெ திப்புனு போட்டையா ங்குற மாதிரி வெறு வாய் பேசி கடவா கிழிஞ்சுதுதான் மிச்சம் நடப் போலா” என்றாள் வள்ளியம்மாள்.
“எப்பப் பாத்தாலு கொள்ளுப் பருப்பே கடையிரியெ உங்க ஊட்டுக்காருக்கு அவ்வளவு கொழுப்பா?.நான்போயி இருவாட்சி சாறுதே வெய்க்கபோரே எங்க மாமனாருக்குக் கைகால் கொடச்சலாமா அதெச் சொல்லிட்டே கெடக்கது அதுக்கு வேண்டித்தே. அப்பரோ மாரியே வரச்சொல்ரே வெள்ள வெங்காயம் நாலு பல்லுக் குடுத்துடு ” என்றாள் செம்பாத்தாள்
”செரி செரி நட போலா பொழப்பைப் பாக்கலாம்” என்றாள் வள்ளியம்மாள்.
சொற்பொருள்: ரக்கிரி—கீரை,  சீமெண்ணை –மண்ணெண்ணை, சுத்துக் கொழுப்பு –ஆட்டுக்கொழுப்பு, பெரட்டாசி—புரட்டாசி மாதம்
     ஆக்கம் புலவர்.ஆ.காளியப்பன்
               முத்தம்மாள் நிலையம்
                79(1)பூலுவபட்டி(அஞ்)
                  கோயமுத்தூர் 641101
                   அலைபேசி 9788552993


No comments:

Post a Comment