Sunday, 20 October 2019

குடும்பத்திற்கு ஆகாத கொள்கைகள்-தொல்காப்பியம்



   தொல்காப்பியம் உரைக்கும் குடும்பத்திற்காகாக் கொள்கைகள்
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை
என்றிவை யின்மை யென்மனார் புலவர்.(தொல்.பொருள்மெய்ப்பாடு 274)
     பிறப்பு முதலிய பத்துப்  பொருத்தங்களும் ஒத்துள்ள தலைவனும் தலைவியும் மனையறம் பேணி இருவரும் கூடி இன்பவாழ்வு வாழ்கின்ற போது தம்மிடையே வரக்கூடாப் பன்னிரண்டு தீய ஒழுக்கங்களாக  தொல்காப்பியர் இட்ட பட்டியியலே  இவை.
இதன் பொருள். ஒருவர் மீது ஒருவருக்குப் பொறாமை, ஒருவர் ஒருவருக்கெதிராகச் செய்யும் கொடிய சூழ்ச்சி, ஒருவரினும் ஒருவர் தம்மைப் பெரியராக வியத்தல், ஒருவர் ஒருவரைப் பற்றிப் புறங்கூறுதல், கடுஞ்சொல் கூறுதல், சோர்வு (பிழை செய்தல்), முயற்சியின்மை, இழிந்த குடி உயர்ந்த குடி என வேறுபாடு கருதுதல், ஒருவர் ஒருவரினும் இன்புறுவதாக நினைத்தல், பேதைமை, மறத்தல் (கற்றதை மறத்தல், நன்றி மறத்தல்), இன்னாரோடு இவர் ஒப்புமை யுடையரெனத் தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் ஒப்புமைப்படுத்திப் பார்த்தல் என இப்பன்னிரண்டு குற்றங்களின் நீங்கியவரே உயர்ந்த தலைவன் தலைவியர் ஆவர்
நிம்பிரி:  மனத்துக்குள் பொறாமையை வளர்த்துக் கொள்ளும் வஞ்சக எண்ணம்  உடைமை,  
          நச்சரித்தல் என்ற பொருளும்  உண்டு
கொடுமை: பிறர்க்கு கேடு செய்யும் தீவினை எண்ணம் கொண்டு மற்றவரைக்  கொடுமைப் படுத்துதல்
வியப்பு  : தன்னைப் பெரியவனாகப் பாவித்துக்கொண்டு அதன்படி நடத்தல்    
புறமொழி: அடுத்தவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும்பேசித் திரிதல் பிறரிடம், பிறரைப் பற்றிக்
          கோள் மூட்டல்
வன்சொல்: மனத்துக்குள் சூழ்ந்துள்ள வஞ்சத்தை வார்த்தைகளில் வரம்பு  மீறிப்பேசுதல் (திட்டுதல்)
பொச்சாப்பு: எந்தச்செயலிலும் தன்முனைப்பு இல்லாது முயற்சி இன்றி இருத்தல் சோர்வால் நேரும்
           மறதி
மடிமை :  சோம்பேறித்தனம்,
குடிமை : இவள்(ன்) தன்னைவிடத் தாழ்ந்த குடியைச் சார்ந்தவள்(ன்)என்று நினைத்தல்.
இன்புறல்: உன்னைவிட அதிக ஆனந்தத்தை அடைய வேண்டியவன் என்றிருத்தல்  
ஏழைமை: அறிவின்றிச் செயல்படுவதால் ஏழ்மையை நோக்கி குடும்பத்தை நகர்த்துபவன்.
மறப்பு :   எதுவும் நினைவில்லாமல் மறந்து விடுதல் மற்றவர் உதவியை மறத்தல்  
ஒப்புமை:  தன்னால் முன்பு காதலிக்கப்பட்ட பெண்ணுடன் ஒப்புமை காட்டிப்  பேசுதல் எந்த ஒரு
           சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.
இந்த பன்னிரண்டு குணங்களைக்கொண்டவர்கள் தம்இல்லறவாழ்வை எளிதில் இழந்து விடுவார்கள் இளம் வயதிலேயே இனங்கண்டு பெற்றோர்களும் சமூகமும் அவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தின் தொடர் சங்கிலிக்குள் இழுத்தக் கொள்ளவேண்டும்  கணவன், மனைவி இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருக்கவேண்டும். விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்..அப்போதுதான் மனைமாட்சி மங்கலம் ஆக இருக்கும்.

Thursday, 10 October 2019

ஒருமை பன்மை பிழைநீக்கம்


ஒருமை  பன்மை இவற்றின் இலக்கணம்
நாம் முதலில் எண்கள் தோன்றிய வரலாற்றை அறிவோம். வேட்டை ஆடிய விலங்குகள், தேடிக்கிடைத்த காய்கனிகள் அவற்றைப் பங்குபோடும் போதுதான் அவனுக்கு எண் அறிவு தேவைப்பட்டிருக்கலாம். அக்காலத்தில் ஆடுகளைப் பட்டியில் அடைக்கும் போது அவற்றை எண்ணத் தெரியாத  இடையன் கற்களைப் பயன் படுத்தினான்.உள்ளே இருக்கும் ஆடுகளுக்கு தகுந்த கற்களைத் தனியாக வைத்தான் வெளியே வரும்போது  ஒவ்வொரு கல்லாக  தனியாக வைத்தான் கல் ஒன்று  மீதமானால் ஓராட்டைக் காணவில்லை என்பதை உணர்ந்தான். இப்பொழுது சிறைச் சாலைகளில் இந்தமுறையையே இன்னும் பின்பற்றி வருகின்றனர். இப்போது பயன்படும் TOKEN முறை இவ்வாறு  ஏற்பட்டதுதான் இயல்பாக அவன் கண்ட எண்கள் இயல் எண்கள் எனப்பட்டன  (NATURAL NUMBER, number என்றாலே ஆங்கிலத்தில் ஒருமை பன்மை என்ற பொருளும் உண்டு.) 1,2,3,4.... இயல் எண்களில்  சுழியம் இல்லை.
ஒன்றும் (வெற்று) இல்லை என்பதைக் குறிக்க 0 வைக்கண்டு பிடித்தான் 0,1,2,3,........ அதனால் எண்கள் முழுமை அடைந்தன.இந்த பூச்சியத்தை தமிழன் கண்டு பிடித்ததால்தான் எல்லை இல்லா எண்களை உருவாக்க முடிகிறது.அதனால் அவை முழு எண்கள் அல்லது முழுக்கள் (WHOLE NUMBER) எனப்பட்டன. 0,1,2,3,4,5,6,7,8,9 இந்தப்பத்து எண்களே  அடிப்படை எண்கள் அதாவது 10 அடிமான எண்கள் எனப்பட்டன. இவை யாவும் தமிழன் தன் கைவிரல்கள் எண்ணிக்கையைக் கொண்டு கண்டான் எனலாம். (அவன் எழுதிய இலக்கியங்களைக் கூட பத்தின் அடிப்படையில் எழுதி உள்ளான் திருக்குறளை நோக்குக) பத்துக்குப்பின் பதின்னொன்று என்ற பத்துடன் சேர்ந்தே வருகிறது. பிறமொழிகளில் 10க்கு மேல் பத்து சாராத பெயர்கள் உள்ளன. 11 ELEVEN, 12TWELVE 20 வரை பெயர்கள் உள்ளன. வடஇந்திய மொழிகளில் எல்லாம் அவ்வாறே உள்ளன.நிற்க
  இப்படி என்னும் போது ஒருபொருளை ஒருமை எனவும் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைப் பன்மை எனவும் குறித்தான். நாம் பேசும் போதும் எழுதும் போதும் ஒருமை, பன்மைப்  பிழையின்றிப் பேசவும் எழுதவும்  வேண்டும். அவற்றைப் பற்றிப் பேசுவதே  இக்கட்டுரை. ஒருமை, பன்மை மட்டுமின்றி திணை ,பால் இடம் ஆகியவைப் பற்றியும் பேச வேண்டி உள்ளது.  
பால் ஐந்து அவை ஆண்பால்,பெண்பால் பலர்பால் இவை உயர்திணைக்கு உரியன
                   ஒன்றன்பால் பலவின்பால் இவைஅஃறிணைக்கு உரியன
ஆறறிவுடைய மக்களை மட்டும் உயர்திணை என்றான்  தமிழன்
மக்கள் அன்றி மற்ற உயிருள்ளன ,உயிரற்றன அனைத்தையும் உயர் ஒழுக்கம் அற்ற அஃறிணை என்றான் இந்த அமைப்பு உலகில் எந்த மொழியிலும் கிடையாது. மக்களாயினும் மாடுகளாயினும் ஆங்கிலத்தில் THEY  தான்
 இந்தியில் அதைவிட வேடிக்கை மேஜ்(மேசை) ஆண்பால் குரிசி (நாற்காலி) பெண்பால் என்கின்றனர். ஆனால் தமிழில் உயிருள்ள பொருள்களில்  ஆண்,பெண் இனம் இருந்தாலும் அவற்றை ஒன்றன்பால் பலவின்பால் என்றனர்
இடம்(person)மூன்று வகைப்படும் அவை தன்மை முன்னிலை படர்க்கை எனப்படும்.
தன்மை முன்னிலையில் ஆண்பால் பெண்பால் கிடையா. ஆனால் ஒருமை பன்மை உண்டு
     
தன்மை ஒருமை நான்    யான்                                
தன்மை பன்மை   நாம்  நாங்கள் யாம் யாங்கள்
இதிலும் நுட்பம் உள்ளது நாம் என்றால் கேட்பவனையும் சேர்க்கும். நாங்கள் எனும் போது கேட்பவனைச் சேர்க்காது. we இப்படிக்குறிக்குமா?
முன்னிலை ஒருமை நீ
முன்னிலை பன்மை நீங்கள் மதிப்பு அதிகமானால் தாங்கள்
முன்னிலையில்   நீர் என்ற ஒன்றும் உள்ளது நீ என்றும் சொல்லமுடியாது நீங்கள் என்றும் சொல்ல முடியாது. அந்நிலையில் நீர் பயன்படும் நம்முடைய வேலைக்காரன் மகன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகிவிட்டால் நீ என்று சொல்ல முடியாது நீங்கள் என்று சொல்ல மனம் வராது இந்நிலையில் நீர் வரும்(இலக்கண நூல்கள் நும் என்னும் முன்னிலைச்சொல் நீர் என வந்ததாகக் கூறுகின்றன.
இவையன்றி மூன்று இடங்களுக்கும் பொதுவான பெயர்களும் உள்ளன. அவை
ஒருமையில் ‘தான்’ பன்மையில் ‘தாம்’ என்பன.

படர்க்கையில் பால் (gender) பிரிவுகள் உண்டு
                  ஆண்பால்  ஒருமையாக இருப்பினும் ஆண்பால் என்றே கூறவும்
உயர்திணை        பெண்பால்  ஒருமையாக இருப்பினும் பெண்பால் என்றே கூறவும்
                  பலர்பால் ஆண் பெண் கலந்து பலர் இருப்பினும் ஆண்கள்பலர்   
                பெண்கள் பலர்கூடி இருப்பினும் பலர்பால் என்றே கூறவும்
                 
              ஒன்றன் பால்  ஒரு உயிருள்ள ஆடு மாடோ உயிரற்ற குண்டா
அஃறிணை                   அண்டா வாக  இருப்பினும் ஒன்றன் பால்தான் 
              பலவின்பால்   இரண்டும் இரண்டிற்கும் மேற்பட்ட உயிருள்ள,                                
                       உயிரற்ற பொருள்களைப்பலவிண்பால் என்றே கூறுவோம்.
இவற்றில் வரும் ஒருமை பன்மை பிழைகளைப்பற்றிக் காண்போம்

பெயர்ச்சொல்லில் மட்டுமல்லாது வினைச்  சொல்லிலும் காண வேண்டும்
பெயர்ச்சொல் ஒருமை பன்மைக்கு ஏற்றாற்போல் வினைச் சொல்லிலும் மாற்றம் உண்டாகும்.
முதலில் தன்மை இடத்தில் ஒருமை பன்மை பார்ப்போம்
ஒருமை                                   பன்மை

நான் வந்தேன்                       நாம் வந்தோம்,நாங்கள் வந்தோம்
யான் வந்தேன்                       யாம் வந்தோம்
                 

முன்னிலை ஒருமை                 பன்மை
             நீவந்தாய்               நீங்கள் வந்தீர்(கள்)        தாங்கள் வந்தீர்(கள்)
                  கள் என்பதைத் தற்காலத்தில் சேர்த்துக்கொள்கிறோம்                         
                 நீர்  வந்தீர்
படர்க்கை     அவன் வந்தான் அவள் வந்தாள்(ஒருமை)
              அவர் வந்தார்(அவர் என்பது பலரைக் குறிக்கவில்லை ஒருவனை  
               மதிப்பாகக் குறிப்பிடும் போது) ஆசிரியர் வந்தார்

இதுவே பல ஆசிரியர்களைக் குறிக்கும் போது  ஆசிரியர் வந்தனர் என்று குறிக்க வேண்டும். ஆசிரியர் வந்தார் ஒரு ஆசிரியர் வந்ததாகக் குறிக்கும் இதை உயர்வுப்பன்மை என்பர்
ஆசிரியர் வந்தனர் என்றால்  பல ஆசிரியர் வந்ததாகக்குறிக்கும் பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
உயர்திணையில் ஒருமையை  பன்மை ஆக்கும் முறைகளைப் பார்ப்போம்
      ஒருமை                          பன்மை
     அண்ணன்                      அண்ணன்மார்  அண்ணன்மார்கள் பெரும்பாலும் உறவுப்பெயர்கள் இவ்வாறு வரும்.
     
    
     தாய்                        தாயர்,தாய்மார்    தாய்மார்கள்
      தந்தை                      தந்தையர்    தந்தைமார் தந்தைமார்கள்
      அவன்                      அவர்
      அவள்                        அவர்
      அது                        அவை
      எவன்                         எவர் 
      எது                           எவை
பெரும்பாலும் ஒருமைப்பெயர்களை பன்மைப் பெயர்களாக மாற்றக் கள் விகுதி சேர்ப்போம்
    அணி            அணிகள்
       தீ              தீக்கள்
      சூது             சூதுகள்
      பட்டை          பட்டைகள்
      கண்            கண்கள்
      காய்            காய்கள்
      தேர்            தேர்கள்
      கால்            கால்கள்
      தேள்              தேள்கள்
      மான்              மான்கள்
  ம் என்னும் எழுத்தில் முடியும் சொற்கள் மட்டும் சிறிய மாற்றம் அடையும்
    மரம் ஒருமை மரங்கள் ம் நீங்கி ங் வந்து கள் சேரும் இரண்டு சொற்கள் சேரும்போது ‘ம்’ இல் முடியும் சொல்லில் ‘ம்’ நீங்கிவிடும் இது விதி
 இதுவரை என் நினைவிற்கு வந்தவற்றை எழுதி உள்ளேன் படிப்பவர்கள் ஐயம் கேட்பினும் நினைவூட்டினும் விளக்கப்படும் பெரிதும் நன்றி உடையவன் ஆவேன்.
   
  வினைச் சொல்லுடன் கூடிய சான்றுகள்
 நான்(யான்) வந்தேன்  நாம் வந்தோம்  நாங்கள் வந்தோம் யாம் வந்தேம்
 நீ வந்தாய் நீங்கள்  வந்தீர்(கள்) நீர் வந்தீர்
 அவன் வந்தான்  அவர் வந்தார்(ஒருவன் உயர்வுகருதி அவன் அவர் ஆயிற்று)
 அவள் வந்தாள்  அவர் வந்தார்(ஒருத்திஉயர்வுகருதி அவள் அவர் ஆயிற்று
 அவர் என்பது பலரைக் குறிக்கும்போது அவர் வந்தனர்
        அவர்கள்     வந்தார்கள்
 மாடு வந்தது      மாடுகள் வந்தன
அது வந்தது             அவை வந்தன
அவைகள் என்பது தேவையில்லை அவை போதும்
சாதி ஒருமை என்ற ஒன்றும்  உள்ளது ஒன்றன்பெயர் அதன் இனத்தை முழுவதும் சுட்டுவது மாடு பால் கறக்கும் இங்கு மாடு என்ற ஒருமை அதன் இனம்  முழுவதையும் குறிக்கிறது. இது சாதி ஒருமை எனப்படும்.
கள்-விகுதி பெறாமல் வினைமுற்றால் பல-பொருளை உணர்த்தும் பன்மைகளும் உண்டு. இதனைப் பால்பகா அஃறிணைப் பெயர் என்பர்.                                             பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அழைக்க 9788552993