Sunday, 20 October 2019

குடும்பத்திற்கு ஆகாத கொள்கைகள்-தொல்காப்பியம்



   தொல்காப்பியம் உரைக்கும் குடும்பத்திற்காகாக் கொள்கைகள்
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை
என்றிவை யின்மை யென்மனார் புலவர்.(தொல்.பொருள்மெய்ப்பாடு 274)
     பிறப்பு முதலிய பத்துப்  பொருத்தங்களும் ஒத்துள்ள தலைவனும் தலைவியும் மனையறம் பேணி இருவரும் கூடி இன்பவாழ்வு வாழ்கின்ற போது தம்மிடையே வரக்கூடாப் பன்னிரண்டு தீய ஒழுக்கங்களாக  தொல்காப்பியர் இட்ட பட்டியியலே  இவை.
இதன் பொருள். ஒருவர் மீது ஒருவருக்குப் பொறாமை, ஒருவர் ஒருவருக்கெதிராகச் செய்யும் கொடிய சூழ்ச்சி, ஒருவரினும் ஒருவர் தம்மைப் பெரியராக வியத்தல், ஒருவர் ஒருவரைப் பற்றிப் புறங்கூறுதல், கடுஞ்சொல் கூறுதல், சோர்வு (பிழை செய்தல்), முயற்சியின்மை, இழிந்த குடி உயர்ந்த குடி என வேறுபாடு கருதுதல், ஒருவர் ஒருவரினும் இன்புறுவதாக நினைத்தல், பேதைமை, மறத்தல் (கற்றதை மறத்தல், நன்றி மறத்தல்), இன்னாரோடு இவர் ஒப்புமை யுடையரெனத் தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் ஒப்புமைப்படுத்திப் பார்த்தல் என இப்பன்னிரண்டு குற்றங்களின் நீங்கியவரே உயர்ந்த தலைவன் தலைவியர் ஆவர்
நிம்பிரி:  மனத்துக்குள் பொறாமையை வளர்த்துக் கொள்ளும் வஞ்சக எண்ணம்  உடைமை,  
          நச்சரித்தல் என்ற பொருளும்  உண்டு
கொடுமை: பிறர்க்கு கேடு செய்யும் தீவினை எண்ணம் கொண்டு மற்றவரைக்  கொடுமைப் படுத்துதல்
வியப்பு  : தன்னைப் பெரியவனாகப் பாவித்துக்கொண்டு அதன்படி நடத்தல்    
புறமொழி: அடுத்தவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும்பேசித் திரிதல் பிறரிடம், பிறரைப் பற்றிக்
          கோள் மூட்டல்
வன்சொல்: மனத்துக்குள் சூழ்ந்துள்ள வஞ்சத்தை வார்த்தைகளில் வரம்பு  மீறிப்பேசுதல் (திட்டுதல்)
பொச்சாப்பு: எந்தச்செயலிலும் தன்முனைப்பு இல்லாது முயற்சி இன்றி இருத்தல் சோர்வால் நேரும்
           மறதி
மடிமை :  சோம்பேறித்தனம்,
குடிமை : இவள்(ன்) தன்னைவிடத் தாழ்ந்த குடியைச் சார்ந்தவள்(ன்)என்று நினைத்தல்.
இன்புறல்: உன்னைவிட அதிக ஆனந்தத்தை அடைய வேண்டியவன் என்றிருத்தல்  
ஏழைமை: அறிவின்றிச் செயல்படுவதால் ஏழ்மையை நோக்கி குடும்பத்தை நகர்த்துபவன்.
மறப்பு :   எதுவும் நினைவில்லாமல் மறந்து விடுதல் மற்றவர் உதவியை மறத்தல்  
ஒப்புமை:  தன்னால் முன்பு காதலிக்கப்பட்ட பெண்ணுடன் ஒப்புமை காட்டிப்  பேசுதல் எந்த ஒரு
           சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.
இந்த பன்னிரண்டு குணங்களைக்கொண்டவர்கள் தம்இல்லறவாழ்வை எளிதில் இழந்து விடுவார்கள் இளம் வயதிலேயே இனங்கண்டு பெற்றோர்களும் சமூகமும் அவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தின் தொடர் சங்கிலிக்குள் இழுத்தக் கொள்ளவேண்டும்  கணவன், மனைவி இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருக்கவேண்டும். விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்..அப்போதுதான் மனைமாட்சி மங்கலம் ஆக இருக்கும்.

No comments:

Post a Comment