Friday, 29 November 2024

தொல்காப்பியர் கூறும் அறம்

 

தொல்காப்பியம் கூறும் அறம் பதிவு 21-11-24                                                               

          தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன்,                                                              

      தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்-பேரூராதீனம் 9788552993

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறவாழி நீந்தல் அரிது

வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்                                                                                                                            பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து                                                                                                              பொலிமின்!   (தொல்.பொருள்.செய்யுள்422) என்று  .                                                               

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தாமர்ந்து வரூஉம் மேவற் றாகும் என்பது தொல்காப்பியம்.

உலக உயிர்கள் யாவும். இம்மை  மறுமை என்னும் இருமையிலும் இன்பத்தையே விழைகின்றன. இப்பிறவியில் இன்பமாய் வாழப் பொருட் செல்வம் தேவை. மறுமையில் இன்பமாய் வாழ அறம் தேவை அவற்றுள் மனம் என்னும்              ஆறறிவு பெற்ற மக்களுக்கு  இன்பம் அறந்தால்தான்  வரவேண்டும் என்பதை அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்ற வாக்கால் வள்ளுவரும்  அந்த இன்பம் பழிதீர் செல்வத்தால்  பெற வேண்டும் என்பதைப்

      பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து                                                                                                                  

      பொலிமின்என்று தொல்காப்பியரும்  உரைக்கின்றனர்.

 

நன்னெறி, நெறிமுறை அல்லது அறமுறைமை என்பது மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவு மனித வாழ்க்கைக்கு அடிப்படையான கூறு அல்லது குறிக்கோள் உறுதிப் பொருள் எனப்படுகின்றது.  இது தமிழர் மெய்யியலில் இடம்பெறும் ஒரு முக்கியக் கருத்துரு

.    பழந்தமிழராகிய தொல்காப்பியரும் வள்ளுவரும் இன்பம், பொருள், அறம் என்ற மூன்றினையும் உறுதிப் பொருள்கள் ஆகக் கொண்டனர். பிற்காலத்தார் இன்பம், பொருள், அறம், வீடு என்ற நான்கினையும் உறுதிப் பொருள்களாகக் கொண்டனர். .சைவ சித்தாந்தக்  கருத்தாக்கவியலில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கும் உறுதிப் பொருள்கள் என்கின்றது. நாற்பொருள் என்னும் பாகுபாடு திருஞானசம்பந்தர் பாடலில்தான் தமிழிலக்கிய காலப்பாதையில் முதன்முதலாகக் காணப்படுகிறது

    அறம் பொருள் இன்பம் வீடு  அடைதல்  நூற்பயனே  என்பது இலக்கணம்.  சிலர் இன்பம், பொருள், அன்பு, அறம், வீடு ஆகிய ஐந்தினையும் உறுதிப் பொருள்களாகக் கொண்டனர். அறத்தால் பொருளீட்டி இன்பம் நுகர்ந்து இறுதியில் வீடாகிய  அறவாழி அந்தணன் தாள்சேர்வதே  ஆகும். அந்த நான்கு உறுதிப் பொருள்களுள் முதன்மையாய் இருப்பது அறம்.

.

    அறம் என்றால் என்ன? ஒவ்வொரு பொருளையும் குறிக்கத் தமிழில் பல சொற்கள் இருக்கின்றன. ஆனால் அறம் என்ற பொருளைக் குறிக்கத்  தமிழில் வேறுச் சொற்கள் இல்லை. இதுவே அறத்தின் சிறப்பினை உணர்த்தும்.ஆழ்ந்த சிந்தனையும் நிலைத்த தேடலும் அவசியம் என்பதை உணர்த்தும் சொல் அறம் என்பதாகும்.

    அறம் எனப்படுவது நாம் நமக்கும். நம்முடன் வாழும் மக்களுக்கும், இறைவனுக்கும். அவர்களுடன் கொண்டுள்ள உறவுகளுக்குத் தக்கபடி நம் கடமையைச் செய்வதாகும்  அறம் என்பது தனிமனித ஒழுக்கம்.  அறம்செய விரும்பு என்றால் தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடி என்பதாகும்.                                                                                                  

    அறம் என்ற சொல்லிற்குக் கடமை நோன்பு, தருமம்,கற்பு, இல்லறம், துறவறம் நல்வினை எனப்  பல பொருள்கள் கொள்ளப்படுகின்றன அறம் என்பது கையேந்தி வருபவர்களுக்கு உணவளித்தல் ,நேர்மையாக இருத்தல்,பொய் பேசாமல் உண்மையை மட்டும் பேசல், மற்றவர்களுக்குக் கெடுதல் நினைக்காமல் நல்ல எண்ணங்களுடன் வாழ்வதாகும்,

அறம் என்பதற்குத் தமிழ் அகரமுதலி, “தருமம் புண்ணியம் அறச்சாலை, தருமதேவதை, யமன், தகுதியானது, சமயம், ஞானம், நோன்பு, இன்பம், தீப்பயன் உண்டாக்கும் சொல்  என்று பல பொருள் தருகின்றது. மேலும் முறை, வழக்கம், நீதி, கடமை, புண்ணியம்,  ஈகை, அறக்கடவுள், சமயம் என்ற பல்வேறு பொருள்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

 

   அறம் என்னும் சொல் பொதுவாக வாழ்க்கைநெறி,  நீதி,  விழுமியம்,  ஒழுக்கம், கொடை,  நோன்பு ஆகியவற்றையும் வாழ்க்கையை இயக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்ச ஒழுங்கையும் சுட்டுவதாகத்  தமிழில் கையாளப்படுகிறது  அதாவது அறுத்துச் சொல்லுதல், வரையறை செய்து சொல்லுதல், உறுதியாகச் சொல்லுதல் என்ற பொருளில் இச்சொல் பிறந்திருக்கலாம். அறு என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே அறம் என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு,உருவாக்கு துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன.

     அறம் என்பது ஆறு ஓடுவதுபோல் உலகமக்களை அரவணைத்துக் கொண்டு ஓடுவது அறம். ஆறு மண்ணின் தன்மையை வாங்கிக்கொண்டு மண்ணுக்கு உதவுவதுடன் உயிரினங்களுக்கு உணவளிக்கிறது. அதுபோல சமூகத்திற்கு உதவுவதுதான் அறம். அறம் உழைப்பையும் உடைமையையும் பங்கு போட்டு(அறுத்து) வழங்குகிறது. தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே முழு நிறைவடிவமே அறம் என்று கூறுவர்.

    பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்து எறிவதே அறம் என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு.'அறம்' என்பதே தமிழ் சொல் ஆகும். ஆனால், இன்றைய நிலையில் 'அறம்' என்ற சொல்லுக்கு மாற்றாகப் பிறமொழி சொல்லான 'நீதி' என்றச் சொல் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் கைப்பட்டு வருகிறது. மனிதர்களுக்கு அப்பாற்பட்ட இயற்கை அல்லது பிரபஞ்சநெறி என்னும் பொருளில் பிற்காலத்தில் அறம் வகுக்கப்பட்டது

   அறம்  அல்லது ஒழுக்கநெறி (Morality) என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளைக் குறிக்கிறது. இதை நல்லவை, தீயவை என்பன.   ஒரு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம்.

 

ஒழுக்கநெறிகள் எல்லாச் சமுதாயங்களிலுமே ஒன்றுபோல இருப்பதில்லை. காலம், நம்பிக்கைகள், பண்பாடு என்பவற்றைப் பொறுத்து இவை வேறுபடுகின்றன        

ஒழுக்கநெறிகள், சமூகம், மெய்யியல், சமயம், தனி மனிதரின்  மனசாட்சி  போன்றவற்றால் வரையறுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சூழ்நிலைகளில், ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய இலட்சிய  நடத்தைகளின் தொகுப்பைக் குறிக்கிறது.

  அறம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக் கொண்ட நடத்தைகள். செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை. அதுவே அறம்   

    மனிதன் தங்களுக்காக வரையறுத்துக்கொண்ட ஒழுக்க நெறியே அறம் எனப்படும் மனிதர்களாகிய நாம் இவ்வுலகில் நல்வாழ்வு பெற்று மறு உலகில் மேன்மை பெற்று வாழ்வதற்கு அறத்தைச் செய்தல் அறமாகும்

  அறம் என்றால் பொருள் மட்டுமல்ல.சொல்லாலும், செயலாலும், மனத்தாலும் உதவுவதும் அறம் தான். சமூகநெறி முறைகளை அறம் பொருள் இன்பம் என மூன்றாகப் பகுத்துக் கூறுவது பண்டைய தமிழ் மரபு. இதில் அறம் என்பது தலை சிறந்த ஒன்றாக விளங்கியது. எனவே தான் இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு –எனத் தொல்காப்பியர் கூறுகிறார். ஔவையர் அறம் செய்க என்று   சொல்லாமல். அறம் செய்ய விரும்பு என்று சொன்னதால் நாம் செய்யும் அறத்தை முழு விருப்பத்தோடு செய்யவேண்டும். அதுதான் அறமாகும். விருப்பம் இல்லாமல் செய்யும் அறமெல்லாம் அறமாகாது.                                                       

    நம் இலக்கியங்கள் அனைத்தும் அறத்தை உரைப்பதாகவே உள்ளன. திருக்குறள் அறத்தைப் பற்றியே பாடவந்த நூல். இந்நூல் அறத்தை வலியுறுத்தவே இயற்றப்பட்டது என்பதை உணர்த்தவே பாயிரத்தில் நூற்பயனாக அறன்வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தை வைத்தார், அறத்தின் பயனை உணர்த்தவே அறத்துப்பாலை வைத்தார் , அத்தோடு நில்லாமல் அறன்,அறம் என்ற சொற்களை 51 முறை தமது நூலில் பயன்படுத்தி உள்ளார். திருக்குறளுக்கே அறம் என்ற பெயரும் உண்டு                          ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.-என்ற குறளின் மூலம் எல்லாவிதமான செயல்களையும் அற வழியில் செய்வதே நல்லது என்று கூறுகிறது. இன்னொரு குறளில்..                                                                     அழுக்காறு அவாவெகுளி இன்னா சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்- என்கிறது. அதாவது..ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில்  கடும் சொற்கள், பொறாமை, தீய குணங்கள், போன்றவற்றை முழுமையாக நீக்கி விட்டு வாழ்வதே அறம் என்று சொல்கிறது!  மேலும்.. செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும். எண்ணம் எழுவதற்கு இருப்பிடமாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும். மனத்தின் மாசினைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும்                                                           மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
 என்பது குறள்.  

ஒரு நூலின்பயனே அறம்பொருள் பொருள் இன்பம் வீடு அடைதல் என்று உரைப்பர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டில் 11 நூல்கள் அறத்தையே பாடுகின்றன

 

 

அறம் எனப்படுவது யாது?" எனக் கேட்பின் 
மறவாது இது கேள் மன்-உயிர்க்கு எல்லாம்
 
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
 கண்டது இல் – என்று மணிமேகலையும்

இளங்கோவடிகள் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்என்று தன் நூல்முகத்தில் குறிப்பிடுகிறார்  செல்லுயிர் கொடுத்தேனும் செங்கோலை வளையாது நிமிர்த்துவது அறமாகும் என்கிறார்.

அறம்செய விரும்புஎன்னும் ஆத்திச்சூடி பாடலில் அறம் என்னும் சொல் ஈகை என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.இவ்வுலகம் இன்றளவும் நிலையாக அமைவதற்குக் காரணங்கள் எவை என்று வேண்டுவோர்க்கு அறம் செய்வோரும், அறச்சிந்தனை உடையோருமே என்பதனை, கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி கூறுகிறார்

    நெடுங்காலமாக அறம் மெய்யியல் நோக்கில், சமய நோக்கில் ஆயப்பட்டு வந்துள்ளது. அண்மைக்காலத்தில் அறம் அறிவியல் வழிமுறைகளைப் பின்பற்றியும் ஆயப்படுகிறது.இவ்வாறு பலவகையாலும் கூறப்படும் அறத்தையே போற்றும்        ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் செந்தமிழ்ப் புலமை மிக்கோர் பாராட்டும், நமக்கு முழுமையாய்க் கிடைத்த முதல்நூலாகும். மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் என்பதை நன்கு உணர்ந்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டியவர் தொல்காப்பியர். அவர் பழந்தமிழர்களின் இறை உணர்ச்சியையும், சமயக் கோட்பாடுகளையும் தத்துவ அறிவையும் தமது நூலில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் கூறியுள்ளார். இவற்றையே நாம் தொல்காப்பியர் கூறும் அறம் என்கிறோம்.                                                                             . இத்தகைய அறத்தை 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது. அத்தகு சிறப்பிற்கு உரிய தொல்காப்பியம்       

   உலகில் முழுமையாய்க் கிடைத்த முதல் நூல்; திருக்குறளின் முன்னோடி; ஆழிப் பேரலைக்கு அகப்படா நூல்; அனல், புனல் அத்தனையும் வென்ற நூல்;அதங்கோட்டாசான் தடைக்கு விடை கூறி வெளிவந்த நூல்; பனம்பாரனாரின் பாயிரம் கொண்ட நூல்; எல்லா இயங்களுக்கும் (இயம்=இசம்) வேராய் விளங்கும் நூல்;உயிருக்கு விளக்கம் உரைத்த உயிரியல் நூல்; வள்ளுவனையும் கம்பனையும் வளைத்துப் போட்ட நூல்; சிலம்பு தந்த இளங்கோவைச் சிந்திக்க வைத்த நூல்;அறிவியல் துறைகள் அத்துணையையும் அடக்கியநூல்; பண்டைத் தமிழர்களின் பண்பாட்டைப் பகரும்நூல்; நாகரிகச் சிறப்பை நவிலும் நூல்; இடைச்சங்கத்தாருக்கும்,கடைச் சங்கத்தாருக்கும் இதுவே இலக்கண நூல்; இன்றைக்கும் அந்நிலைதான்; இத்தனை பெருமைகளையும் இயல்பாய்க் கொண்டு முழுமையாய்க் கிடைத்த முதல்நூல்;அதுவே தொல்காப்பியம்.தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம்.காப்பு (காவல்) பழந்தமிழர் பண்பாட்டைத் தொன்மையைக் காக்கும் நூல்.

வளர் தமிழின் வரலாற்றுச் சுவடியாகவும் வருங்காலத் தமிழுக்கு வழிகாட்டியாகவும் உள்ளது. முந்தைய இலக்கண நூல்களை வென்று பின்வரும் நூல்களைத் தன் ஆணைக்கு இணங்கச் செய்கிறது. ஐந்திலக்கணத்தையும் முத்தமிழையும் பல்கலைகளையும் பற்றிப் பேசுகிறது. எல்லா இலக்கண நூல்களும் செய்யுள் வழக்கைக் கொண்டு எழுதப்பட்டன. தொல்காப்பியம் உலக  வழக்கையும் செய்யுள் நெறியையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தொல்காப்பியம் தோன்றிய புகழோடு இன்று வரை இயங்கி வருவதற்குக் காரணம் அது மேற்கொண்ட தழுவு நடை ஆகும்.

     பழமையும் புதுமையும் பூத்துக் குலுங்கும் பலவண்ண மலர்த் தோட்டமிது. பண்டை மக்களின் ஒழுகலாறுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் நன்குணர நற்றுணை புரியும் வரலாற்றேடாகவும் இந்நூல் விளங்குகிறது. செந்தமிழின் முதல் இலக்கண நூல் இது என்பதில் ஐயமில்லை. இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றி, காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம்மிடையே உலா வருகின்றது

தமிழ் மொழியின் தலைசிறந்த இலக்கணம் தொல்காப்பியம். தமிழ் மக்களது பேரறிவின் கருவூலமாகத் திகழ்கிறது.இவை எல்லாவற்றையும் விடத் தொன்மையினாலும் ஆழ்ந்த பொருளுடைமையினாலும் மேம்பாட்டுத் திகழ்வது.

இவ்வளவு சிறப்பிற்கு உரிய தொல்காப்பியம் அறம்பற்றி எடுத்துரைக்கிறது.                          அறம் என்ற சொல்லைத் தொல்காப்பியர் 12 இடங்களில் பயன்படுத்தி உள்ளார்

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்.. ’(தொல். களவியல்) இந்தத் தொல்காப்பிய சூத்திரம் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றும் வாழ்க்கை விழுமியங்கள் என்னும் பொருளில் அறம் என்னும் சொல்லை பயன் படுத்துகிறது. தொல்காப்பியம் தனி மனிதன் மட்டுமின்றி சமூகத்திற்கான அறத்தையும் வழியுறுத்தி உள்ளது. குறிப்பாக குடும்பத்தலைவன் , குடும்பத்தலைவி, மகன், மன்னன் போன்றவர்கள் பழங்காலத்தில் பின்பற்றிய வாழ்வியல் அறத்தைக்  குறிப்பிட்டு உள்ளது                                                                           .தலைவன் தலைவியின் வாழ்வியல் அறன் வழிப்பட்டதாய் அமைய வேண்டும் என்பதனை, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு பண்டைத் தமிழ் மக்களில் ஆடவரும், பெண்டிரும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டு தம் காட்சியும் கருத்தும் ஒன்றுபட்டுத் தமக்குள் ஒருவரையொருவர் உயிர்போல் காதலிக்கும் காதலன்பு  நிகழப்பெற்ற பின் தமக்குள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இஃதுஅன்பினைந்திணைக் காமக் கூட்டம்என வழங்கப்பட்டது.

   அறத்தொடு நிற்றல் என்னும் துறை சங்க இலக்கியத்தில் உள்ளது. அது தலைவனோ தலைவியோ களவுறவுக்கு முற்படுகையில் அவர்களை நல்வழிப்படுத்தி முறையான திருமண வாழ்க்கைக்குப்  பிறர் அறிவுறுத்தும் உள்ளடக்கம் கொண்டது. அங்கே அறம் என்பது முன்னோர் மரபுசார்ந்த நெறி எனப்  பொருள்படுகிறது. இறையனார் களவியல் உரையிலும் அறக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இதில்,பெண்டிற்கு அறமென்பது கற்பு
     கற்பின் தலைநிற்றல்
     அறத்தொடு நிற்றலாகும்  என்ற அடிகளால் அறியலாம்                        

அறத்தொடு நிற்குரிய கருத்துகள்                                                                        எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல்

கூறுதலு சாஅதல் ஏதீடு தலைப்பாடு

உண்மை செப்புமங் கிளவியொடு  தொகைஇ

அவ்வெழு வகைய என்மனார் புலவர்

  களவு வாழ்க்கை வாழ்ந்தோர் இல்லறமாம் கற்பில் நின்றே ஆகவேண்டும் என்று தொல்காப்பியம் உரைக்கிறது  .                                                                                கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதோ, கொடுப்போர் இன்றியும் உடன்போக்கு நிகழ்த்தியோ உறுதியாக திருமணம் நிகழ்த்தி ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழ்வதே தமிழர்அறம் . பெண்ணின் பெற்றோர் பெண்ணைக் கொடுக்காத நிலையில் மடல் ஏறியாவது ஆண் திருமணம் செய்வதே தமிழர் மரபு. எக்காலத்தும் காதலித்த இருவரும் திருமணம் செய்யாமல் போனதில்லை என்பதே தமிழர்மரபு. அதன் பின்னர் அவர்தம் பெற்றோரும் சுற்றத்தாரும் திருமணம் செய்து வைப்பார்கள்.                                                           கற்பெனப் படுவது காரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர்க் கொடுப்பக்கொள் வதுவே
(தொல்.பொரு.நூ.17)
என்ற தொல்காப்பிய நூற்பாவால் அறிந்து கொள்ளலாம்                                     மகளிர்க்குரியார் தம் மகளால் விரும்பப்பட்ட காதலர்க்குத் தம் மகளை மணம் செய்து கொடுத்தனர். பெற்றோரால் ஏற்றுக் கொள்ளப்படாத இருவரும் தம் பெற்றோர் உற்றார் அறியாமல் வேற்றிடஞ் சென்று மணஞ்செய்து கொள்வர். இதனை                                   கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான
” (தொல்.கற்பி. -நூற்பா2)
என்ற தொல்காப்பிய நூற்பா எடுத்துரைக்கின்றது                                               

     அறத்தைத் திருவள்ளுவர் இல்லறம்,துறவறம் என இருவகையாகக் கூறுவார்.                                   அவற்றுள் இல்லறமாவது இல்வாழ்க்கை நிலைக்குச் செல்லுகின்ற நெறிக்கண் நின்று அதற்குத் துணைவியாகி மனைவியோடும் செய்யப்படுவது.

அறனெப்பட்டதே இல்வாழ்க்கை என்று வள்ளுவம் உரைக்கிறது. அதைத்தான் தொல்காப்பியம் கற்பு எனக்குறிப்பிடுகிறது.
    குடும்பம் செயல்படுவதற்குச் சாதகமாக இருப்பவை எல்லாமே கற்புதான் என்றே நம்முடைய முன்னோர் கண்டிருக்கிறார்கள். தொல்காப்பியத்தில் கற்புஎன்று வரும் இடங்களை யெல்லாம் ஆராயின் அது இல்லறம்" என்ற பொருளையே குறிக்கிறது.   அவர் களவியல் வகுத்தது போலவே கற்பியல் என்பதையும் வகுத்துள்ளார்

ஒருப்பட்ட வழிப் பெற்றோரே.சடங்குமூலம் மணம் நடத்தி வைப்பர். காதலர்களிடையே வஞ்சித் தொழுகுதலும் பொய்யும் தலைகாட்டின காலத்தில் தான் பண்டைத் தமிழ் சான்றோர் திருமணச் சடங்கை வகுத்தனர் என்பதனை
பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல்.கற்பி - நூற்பா4)

இத்தகைய குடும்ப விளக்காகவும், இல்லத்தை ஆள்பவளாகவும் மனைவி இருப்பதால்இல்லாள்என்றும் போற்றப்பட்டாள்.கற்பொழுக்கத்தில் வாழும்பெண்ணின் பொறுப்பினை,
கற்பும் காமமும், நற்பால் ஒழுக்கமும்,
மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்” (கற்பி - நூற்பா 11)
என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது
. இல்லறத்தான் இறுதி அறம்                            

   காமஞ் சான்ற கடைக் கோட் காலை
     ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
     அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
     சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே  என்றும்,

அன்பே அறனே இன்பம் நாணொடு  என்றும் மற்றும் பிற அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

அறத்தொடு நிற்கும் காலத்தன்றி

அறத்தியல் மரபிலள் தோழி என்ப

தொல்காப்பியத்தில் தோழிக்குரிய அறத்தைக் குறிப்பிடுகின்றார் 

வாழ்க்கை யில் நான்கு வருணத்தார் உள்ளனர். அவர்கள் அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் எனப்படுவர் அவரவருக்கான அறத்தை அதாவது ஒழுக்கத்தைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்

அந்தணர் அறம் அறநெறியில் வாழ்வோர் அந்தணர். அரசர்களை அறநெறிப்படுத்தல், நாட்டு மக்கட்கு நல்லுரை வழங்கல், மக்கள் நல்வாழ்விற்காக இறைவனை வேண்டித் தவங்கிடத்தல் இவை அந்தணரது கடமைகளாகும். அந்தணர் வடிவத்தை,
நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய” (மரபியல் - நூற்பா 71என்றும்                             அந்தணர் அரசர் ஆக முடியாது என்றும் தொல்காப்பியம் உரைக்கிறது

அரசருக்கு உரிய அறம்

படையும் கொடியும் குடையும் முரசும்

நடைநவில் புரவியும் களிறும் தேரும்

தாரும் முடியும் நேர்வன பிறவும்

தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய அறம் ஆகும்.

வாணிகர் அறம்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி பிறவும் தமபோற் செயின் என்ற குறளின் அடிப்படையில் நடுவு நிலைமை திரியாது வாணிகம்செய்து பண்பாட்டில் சிறந்தவர் தமிழர்.இதை “வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை”(தொல்மரபு77)என்கிறது. பழந்தமிழ் வணிகர்கள் கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறைகொடாதுநேர்மையுடன் வாணிகம் செய்யும் பண்புடையவர்கள்.இவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரு வாணிகமும் கூல வாணிகமும் செய்து வந்துள்ளனர்    

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது

இல்லென மொழிப அவர்பெறும் பொருளே 1581

வேளாண் மக்கள் உழுது உலகிற்கு உணவு படைப்பதே அவர்கள் அறம்

 அறம் என்பது அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் நான்கு வருணத்தாரும் தமத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரியம் கிரசுத்தன்,வானபிரசுதன் சந்நியாசி ஆகிய நான்கு நிலைகளிலும் நின்று அவரவர்களுக்கு எடுத்தோதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல்

    பிரமச்சரியம் என்பது ஆசிரியனிடத்தில் நின்று ஓதுதலும் விரதம் காத்தலும் ஆகும்.

கிரகசுதன் இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கம் நின்று தமக்குத் துணையாகிய  மனைவியோடும் செய்யப்படுவது

    வானபிரசுதன் என்பது இல்லை விட்டு வனத்தின் கண் தீயொடு சென்று மனையாள் வழிபட தவம் செய்வது                                                                                                                             சந்நியாசி என்பது முற்றும் துறந்து யோகநெறி நிற்றலாம்

    வேற்று நாட்டு அரசர் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வரும்போது அவற்றிற்குத் தீவனம் தந்து நீர்தந்து பாதுகாப்பர் என்பதை ஆரமரர் ஓட்டலும் ஆ பெயர்த்து தருதலும் என்ற வரிகளால் மறத்திலும் அறத்தைப் போற்றினர் என்பதை தொல்காப்பியர் அறத்தைக் கூறுகிறார்.

அறுவகைப்பட்ட பார்ப்பனர் பக்கமும்

ஐவகை மரபின் அரசர்  பக்கமும்

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்

பாலறி மரபின் பொருநர்க் கண்ணும்

அனைநிலை வகையொடு  ஆங்கெழுவகையிற்

தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்1021 என்ற புறத்திணை நூற்பாவில்

     அந்தணர்,அரசர்,வணிகர்,வேளாளர் ஆகியோருக்குரிய அறங்களையும் முக்காலத்தை உரைக்கும் அறிவர்கள் மற்றும் துறவிகளுக்கு உரிய அறங்கள் போரில் ஈடுபடும் வீரர்கள் ஆகியோருக்குரிய அறங்களையும் எடுத்துக் கூறுகிறார்.அந்தத்தொல்காப்பியத்தில். அற_கழிவு உடையன பொருள் பயம் பட வரின் தொல்_பொருள் இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு/அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி  

அறத்து இயல்பு மரபு இலள் தோழி என்ப     

அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி    :

அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின்  
அறம் புரி உள்ளமொடு தன் வரவு அறியாமை  

அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்   
தெய்வம் அஞ்சல் புரை அறம் தெளிதல்  
அந்நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய  

முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகை  
அறன் அளித்து உரைத்தல் ஆங்கு நெஞ்சு அழிதல்  

இன்பமும் பொருளும் அறனும் என்று-ஆங்கு  இடங்களில் அறம் என்ற சொல்லைக்கூறி அறத்தைப்பின்பற்றி அகிலத்தில் வழிவழி சிறந்து பொலிவோம் என்று தொல்காப்பியம் உரைகிறது.

எனவே   நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரியாவிட்டாலும், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி. அறம் இதுவென்று அறியாமலும், விரும்பியதைச் செய்ய முடியாமலும் இருந்தாலும், அறத்தில் ஆசை கொள்வதால் தீமையை எதிர்க்கும் தெய்வீக சக்தியில் நாமும் ஓர் அம்சமாவோம்.

அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அதனால் அறத்தை விட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு யாதுமில்லை

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
.  

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
 மறத்தலின் ஊங்கில்லை கேடு அறத்தைக் காட்டிலும் சிறந்த செல்வம் இல்லை என்பதால் .

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில், கடும் சொற்கள், பொறாமை, தீய குணங்கள், போன்றவற்றை முழுமையாக நீக்கி விட்டு வாழ்வதே அறம் என்று அறிவோம்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செய்வோம்               எனவே அன்றறிவாம் என்னாது அறஞ்செய்வோம்   

  இறுதியாக தொல்காப்பியர் கூறும் அறம்

அன்பாய் இருப்பது அறம்.

இனிமையாய் பேசுவது அறம்.

கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது அறம்.

நல்லதையே நாடுவது அறம்.

தூய துறவியரைப் பேணுவது அறம்.

மானத்துடன் வாழ்வது அறம்.

உயிருக்கு ஊக்கம் தருவது அறம்.

அருள் வழியில் ஆண்டவனை உணர்த்துவது அறம்.

மனதில் குற்றம் அற்று இருப்பது அறம்.

பொய்யைத்  தவிர்ப்பது அறம்.

சினத்தைத் தவிர்ப்பது அறம்.

பொறாமை உணர்ச்சியைத் தவிர்ப்பது அறம்.

பிறருக்குக் கெடுதல் செய்யாமை அறம்.

பிற உயிர்களைக் கொல்லாமை அறம்.

தீமை இல்லாத வழியில் பொருள் ஈட்டுவது அறம்.

இல்லற வாழ்வில் ஈடுபடுவது அறம்.

அற நூல்களைக் கற்று அடக்கமுடன் இருப்பது அறம்

இப்படி.. நல்ல வண்ணம் வாழ்வதற்காக மனிதன்_அறம் என்பதைப் பற்றி; வாழ வேண்டும்    

        அறம் நனி சிறக்க!  

 

தொல்காப்பியச் செம்மல் புலவர்  ஆ.காளியப்பன்

தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் பேரூராதீனம்

பூலுவபட்டி (அஞ்) கோயம்புத்தூர் 641101

அலைபேசி 9788552993

Email: amuthankaliappan@gmail.com

 

 

 

 

.

No comments:

Post a Comment