Wednesday, 2 November 2022

கல்வியின் நோக்கம் பண்பே

 

               கல்வியின் நோக்கம் பண்பே

முன்னுரை:

உலகின் உன்னத மொழிகளுள் முதன்மையானது தமிழ்மொழி. மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம்  மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து உள்ளது

மனித வாழ்வு என்பதே யாதும் ஊரே; யாவரும் கேளிர்:  (புறம்.192:1-2)  என  உலகத்தோடு ஒத்து நடத்தல் இதையே. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்கிறது குறள்.  குடும்பத்தாருடனும், உலகத்தாருடனும் பொருந்தி அன்புற்று வாழும் மனப்பக்குவம் உடையவராய் இருத்தல். பொறுமை, சால்பு, விட்டுக் கொடுத்தல், புறங்கூறாமை, தற்சார்பு, பெருமிதம் கொள்ளாமை என்ற உணர்வுடன் வாழும் அருங்குணங்களையே பண்பு என்கிறோம். இதைத்தான் பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்என்ற ஒற்றை வரியில் கலித்தொகை கூறுகிறது.இப்பண்பாட்டைப் பெறுவதே இன்றைய கல்வியின்  நோக்கம் என்று எடுத்துக்கூறவதே இக்கட்டுரை நோக்கம்.

பண்பு என்றால் என்ன?

மனதையும் மக்களையும் பண்படுத்துவது பண்பு. இச்சொல்லை  பண்பாடு  என்பர் பண்பாடு என்பதை பண்படுத்துவது, சீர்படுத்துவது திருத்தமாய் இருப்பது என்றும் கூறலாம்.. 

பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்க வழக்கங்களும் கூறியது மறாஅமை முதலியன  அடங்கிய முழுமைத் தொகுதியாகும் என்று பக்தவத்சல பாரதி கூறுகிறார்.

   பண்பாடு என்பது, பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது. பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் மதிப்பினை அளந்தறிய உதவும் கருவியாகத் திகழ்கிறது.

   .பிறரன்பு, ஈகை, தமக்கென வாழாப்  பிறர்க்குரியாளர் எனும் கோட்பாடுகள். என்கடன் பணி செய்து கிடப்பதே’. அகத்திணை புறத்திணை மரபு. மானமென்றால் உயிரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை. மனத்தூய்மை, விடாது முயலல் எனும் கொள்கை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமஎன்ற நிகரற்ற மனநிலை. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்என்னும் உயர்ந்த இலட்சியம் என்பன  பண்பாட்டின் அரிய சில கோட்பாடுகளென்று கூறலாம். இந்தப் பண்பு அறிவுக் கூர்மையைச் சார்ந்ததல்ல,மன உணர்வைச் சார்ந்ததாகும்.

     பண்பாடு என்பது மனிதனுக்குரிய ஒப்பற்ற சிறப்பாகும். மனிதன் பிறந்து அதன்பின் பண்பாட்டுச் சூழலுக்குக் கொண்டுவரப்படுகின்றான். பிற உயிரினங்கள் இயற்கைச் சூழலிலேயே வாழ்கின்றன. ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தில் பிறப்பதன் மூலம், அதன் பண்பாட்டில் வளர்கிறான்; வாழ்கின்றான். ஒவ்வொரு மனிதனும் பண்பாட்டிற்கான பிரதிநிதி. இப்பண்பே அவனை விலங்குகளிடமிருந்து வேறுபடச் செய்கிறது  மனிதன் சமூகத்தின் ஒரு அங்கம் எனவே மனிதன் பேசும் மொழி, அணியும் ஆடை, உண்ணும் உணவு, வாழும் முறை, செய்யும் பணி, எண்ணங்கள் ஆகியவை அவன் சார்ந்த சமூகத்தின் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக காணப்படுகின்றன.

வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான என தொல்காப்பியம் கூறுகிறது

.அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்தும் பொருந்தியவரே சான்றோர்! அவர்களே பண்பாட்டாளர் எனப்படுகின்றனர்.

நல்லது செய்தல் ஆற்றுநீராயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்

எல்லோரும் உவப்பது அன்றியும்

நல்லாற்றுப் படூம் நெறியுமார் அதுவே2 - (புறம்: 195: 6 - 9)

 

புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்17            

என்பதோடுதனக்கென உழைக்காது பிறர்க்கென உழைப்போரால் இவ்வுலகம் வாழ்கின்றது

பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மண்
(குறள்-996) என்ற குறளில் வள்ளுவர் கூறுகிறார். பண்பாடு இல்லாத வறிய அறிவினரை அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்
என்று மரம் என்று வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்

. திருக்குறளும் பண்புடையவரிடமே உலகம் தங்கியிருக்கிறது. அப்பண்பு இல்லையேல் உலகம் மண்ணுக்குள் புகுந்து அழிந்துவிடும்63 என அச்சுறுத்துகிறது

ஒருவனுக்கு அறிவுடமை தேவையானது தான் எனினும் பண்பாடு அமையவில்லை என்றால் அறிவினால் பயனில்லை. அறிவை விட பண்பாட்டிற்கு திருவள்ளுவர் முதன்மை தந்து உள்ளமையை இதன் மூலம் அறியலாம்.   

கல்வி என்றால் என்ன? : கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும்.  கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது.

கல்வி என்ற சொல் கல் (ஆய்வு செய்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருகின்றது. இந்தச் சொல்லிற்கு ஒத்த சொல் வெளிக்கொணரல், உயர்த்திவிடல், முன்னேற்றிவிடல் போன்ற பொருளைத் தரும். கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள். குழந்தையின் உள்ளத்தில் உள்ளதைத் தோண்டிக்கொணர்தல் என்றே பொருள் கொள்ளவேண்டும்.அதனால் தான் இளமையில் கல் என்றனர்

எனவே கல்வி என்பது தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களை உள்ளார்ந்த தகுதிகளை வெளியில் கொண்டு வருவது ஆகும். "இயற்கையாக மனிதனுக்குள் புதைந்திருக்கும் தெய்வீகமான பரிபூரணத்தை வெளிக்கொணர்வது கல்வி. உள்ளத்தின் விருப்பங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து பயனுள்ளதாக ஆக்குவதே கல்விஎன்கிறார் விவேகானந்தர் அவரே   ஒருவனிடம் ஏற்கனவே பொதிந்திருக்கும் முழுமை பெற்ற நிலையினை மலரச் செய்வது கல்வி என்றும் அன்பு, அறநெறி, பண்பு, பணிவு, ஒழுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தி மக்களை வாழ வைக்குமானால் அதுவே சிறந்த கல்வி என்றும் கூறுகிறார்*, நம்முடைய மரபு, நம்பிக்கை போன்றவற்றை குறிப்பிடுகின்றது. இவைகள் மனிதனை தன் வாழும் சமுதாயச் சூழலோடு இசைந்து வாழ வகைச் செய்வதே கல்வி. கல்வி ஒவ்வொருவரையும், தன் பண்பாட்டின் அறிவைப் பெறச் செய்வதோடு, மட்டும் நின்றுவிடாமல் பிறரின் பண்பாடுகளையும் உணர்ந்து அவற்றின் முக்கியக் கூறுகளை அறிந்து புரிந்துக் கொள்ளவும், அவற்றைப் பாராட்டவும் உதவும். கல்வி சமுதாயம்   அடிப்படை வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தது; சமூக நிலையை மேம்படுத்த உதவும் ஒரு கருவி.

 "வாழ்வின் இறுதிப் பேறாகிய வீடு பேற்றை அடைய உதவக் கூடியதே கல்வி”-உபநிடதம் நாட்டிற்காகப் பயிற்சி, தேசத்தின் மீது பற்று கொள்ளக் கற்றுத் தருவதே கல்வி”- கெளடில்யர்."தன்னை உணர்தல் கல்வி" - ஆதிசங்கரர்"குழந்தையின் உடல், மனம், ஆன்மா இம் மூன்றையும் ஒரு சேர வளர்ப்பது கல்வி”- காந்தி.

"மனிதனுக்குள் இருக்கும் அனைத்தையும் வளர்ச்சி அடையச் செய்து, அதன் வழியாக அவன் தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், தன்னைப் பொருத்திக் கொள்ளவும் வகை செய்வது கல்வி " - ஜான் டூயி

  ஒரு உறுதியான நோக்கத்தைக் கொண்ட செயலாக உருவாகிக், குழந்தைகளின் ஆர்வம், உணர்வு மற்றும் எண்ணங்களை விழித்தெழுமாறு செய்கிறது கல்வி.

கல்வி பயனுள்ள உற்பத்திச் செயலாகக் கருதப்படுகிறது. அதன் மூலம் நாட்டின் பலதுறைகள் செழிப்படைகின்றன. தன்னுடைய பணியால் மனிதனை மிகவும் அறிவுள்ளவனாகவும், நம்பிக்கையுள்ளவனாகவும் விரைவாகச் செயல்படக் கூடியவனாகவும், கல்வி மாற்றுகிறது. அவனுடைய வாழ்வை உயர்த்தி வளப்படுத்த கல்வி வழிவகை செய்கிறது - ஆல்பிரட் மார்ஷல் கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று, ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும் என்கிறார் ரஸ்கின்.

 கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்கிறது. மனிதனை முழுமையாக்குதல் பண்பாடு

 கல்வி   என்பது   சமூக மதிப்புகள், குறிக்கோள்கள், நம்பிக்கை, விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் பண்பாடு போன்றவற்றை விதைக்க வேண்டும். ஆகவே

கல்வி  கேடில் விழுச்செல்வம் கல்வி

எண்ணும் எழுத்தும் கண்ணெத் தகும் ஔவை

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு 393

ஒருமைக்கண் தான் கற்றகல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து 398

கல்வியின் நோக்கங்கள்: சமுதாயத் தேவைகளோடு தொடர்புடையதாக இருக்கின்றன. குழந்தைகளின் இயல்பான தேவைகள் மற்றும் நடவடிக்கைகள் சமுதாயத் தேவைகளோடு சார்ந்து நிற்பவை

கல்வியில் ஒழுக்க நோக்கங்கள் மிக முக்கியமானதொன்றாகும்.ஒழுக்கம் இல்லையேல் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியாது. ஒழுக்கத்தையும் கல்வியையும் மிகவும் பெறுமதியான ஒன்றாக அன்று முதல் இன்று வரை பாதுகாக்கின்றனர் கல்விக்குப் பண்பாட்டு நெறிகளைத் தேர்ந்து மேற்கொள்ளும் பணி உண்டு  எனத் தேசிய கல்விக் கொள்கை (1986) கூறுகிறது வட்டாரப் பண்பாடுகளை உள்ளடக்கிய பல மண்டலப் பண்பாடுகளைக் கொண்ட பன்முகப் பண்பாடுடைய நாடாக இந்தியா இருக்கிறது.

பண்பாடு, நம்முடைய மரபு, நம்பிக்கை போன்றவற்றை குறிப்பிடுகின்றது. இவைகள் மனிதனை தன் வாழும் சமுதாயச் சூழலோடு இசைந்து வாழ வகைச் செய்யும். சமுதாயச் சூழலுக்கு ஏற்ப இவைகளும் மாறும் தன்மை கொண்டவை. மனம், சமுதாயச் சூழல் மற்றும் பண்பாட்டுச் சூழலுடன் குழந்தைத் தன்னைத் தக அமைத்துக் கொள்ள கல்வி அவசியமாகும்

கற்றதனால் ஆய பயன்கொல் வாலறிவன்   

நற்றாள் தொழாஅ ரெனின். என்று குறளும் கட்டறுத்து வீடுபெறுதல் என்று இலக்கண நூலும் கல்வியின் நோக்கம் என்று கூறினாலும். இவ்வுலக வாழ்விற்கு அறம் பொருள் இன்பம் என்ற மூன்றே உறுதிப்பொருளாகும். இம்மூன்றையும் அடைய வழி கூறுவதே இக்காலக் கல்வின்  நோக்கமாகும். இம்மூன்றும் பண்பாட்டோடு  அமைவதே சாலச்சிறந்த்தாகும். நமது பண்பாட்டுப் பாரம்பரியத்தையும், தேசிய அடையாளத்தையும் வலுப்படுத்தும் வகையில் மாறிவரும் சமூகச் சூழலில் இன்றைய முன்னுரிமைகளைச் செயற்படுத்த கடந்த காலத்தை மறு மதிப்பீடு செய்து, மறு பொருள்படும் வகையில் இளம் தலைமுறையினரை உருவாக்கக்கூடியதாய் நமது கல்வித் திட்டம் அமைய வேண்டும்.

     குழந்தைகள் சமுதாயத்தின் இளம் அங்கத்தினர் ஆவர். ஆகவே கல்வியின் நோக்கங்கள் அக் குழந்தைகளின் சமுதாய மேம்பாட்டிற்கு உதவக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும். உலகைப் புரிந்து கொள்ளவும், பிறர் நலன், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், அறிவை உருவாக்கவும், புதிய சூழலைப்  படைப்பாற்றல் தன்மையோடும், நெகிழ்வோடும், எதிர்கொள்ளக் கற்றுக் கொடுக்கவும், ஜனநாயக வழிமுறைகளில் பங்கேற்க, ஒத்துழைப்பு உணர்வோடு, மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற ஊக்குவிக்கவும், சமூக, பொருளாதார நிலைகளைப் பற்றிய புரிதலை உருவாக்கவும், வேலையோடு தொடர்புடைய அனுபவங்கள் பெறவும், கலை, இலக்கியம், கலாச்சாரம் போன்றவற்றைப் பாராட்டவும், வளர்க்கவும் வகை செய்யும் பண்பே எனக் கல்வியின் நோக்கமாக இருத்தல்வேண்டும்

சூழ்நிலையோடு மனிதனை பொருத்தப்பாடு அடையச் செய்தல். சமுதாயத்தோடு ஒத்துப்போதல்  என்னும்  பண்பினைத் தருவதாகவே கல்வியின் நோக்கமாக இருத்தல் வேண்டும்.  கரடு முரடான வாழ்க்கையிலிருந்து பண்பாடு பெருகி வளர்ந்து விரிந்து சிறப்பான ஆளுமை கொண்டவராகவும், சிறப்பான வாழ்க்கை  வாழ்பவராகவும் இருப்பவர் பண்பாடு உள்ளவர் என்று கருதப்படுகிறார். இவர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். இந்த மண்ணின் பண்பாட்டுப் பன்முகத் தன்மை போற்றிப் பாதுகாக்கப்படக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையைப் போற்றுவதாக அமைதல் வேண்டும்.

மனப்பாங்கு, தொழில் நுட்ப அறிவு மற்றும் திறன்களில் ஏற்படும் அடிப்படையான மாற்றங்களின் அடிப்படையில் பொருளாதாரம் விரைவாக முன்னேறும். உணர்வூட்டப்பட்ட மனம், உண்மையான அறிவு, உயரிய திறன் மற்றும் விரும்பத்தக்க மனமாற்றம் ஆகியவை பொருளாதார முன்னேற்றத்திற்கான காரணிகள் ஆகும். ஆகவே கல்வி இத்திறமையையும், பண்புகளையும் வளர்க்க உதவ வேண்டும்.

பண்பு உருவாக்கம், சூழ்நிலையோடு பொருத்தப்பாடு, வாழ்வதற்கான பொருளை ஈட்ட தொழில் செய்தல், அறிவு பெறுதல், நல்ல குடிமகனை உருவாக்குதல் போன்ற பலவகையான நோக்கங்களை அடைவதற்கான செயல்களைக் கல்வி மேற்கொள்ள வேண்டும்

கற்றவர்கள் வாழ்கின்ற சமூகம் பிரச்சினைகளற்ற, புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் பண்புடைய சமூகமாகக் காணப்படும் சமூக நீதி காத்தல், சூழலுக்கு நட்புடைமையோடு நடத்தல், உலகச் சகோதரத்துவம் பேணல், சமுதாய மேன்மை, கண்ணியம், சகிப்புத் தன்மை, இணங்கிப்போதல், பண்பாடு சார்ந்த அறநெறிகளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைத் தருவதாக இருக்கவேண்டும்

முடிவுரை

மனிதன் குறிப்பிட்ட இயற்கைச் சூழலில் வாழ்வதால், அதனோடு தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இப்பொருத்தப்பாட்டு வழியில், அவன் மேற்கொள்ளும் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும், பண்பாட்டின் முக்கிய அங்கமாகும்.

பல்வேறு வகைப்பட்ட சூழலிலுள்ள பலவிதமான சமுதாயத்தின் காரணமாகப் பல்வகைப் பண்பாட்டுச் சூழல் உருவாகிறது. இவை அனைத்தையும் புதிய தலைமுறைக்கு மாற்றம் செய்வதே  கல்வியின் நோக்கம். எனவே கல்வியின் நோக்கம் பண்பே

இளம் மனதில் விதைக்கப்படும் நல்வித்துதான் கனி கொடுக்கும் மரமாய் விளைந்து நல்ல தலைமுறையை இம்மண்ணுக்குப் பரிசளிக்கும். மாணவர்களிடம் நுண்ணறிவு, மிகச்சிறு வயதிலேயே மிக விரைவாக வளரத் தொடங்குகிறது. இலக்கியங்களில் அடிச்சுவடியாய் விளங்கும் அறநெறிக் கருத்துக்கள் மாணவர்களின் எண்ணங்களில் ஆளுமையினைச் செலுத்தி அவர்களைச் செதுக்குகிறது. எந்தத் துறையிலிருந்தாலும் அத்துறையின் அறநெறி வழி நடத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்கும் வகையில் மாணவர்களிடம் தனிமனித ஆளுமை, குடும்ப ஆளுமை, சமூக ஆளுமைக்கூறுகளை வளர்த்தெடுக்கும் வகையிலான கல்வியே சமூக மேன்மைக்கு வழிவகுக்கும். எனவே கல்வியின் இலக்கு பண்பே

பதிவு தொல்காப்பியச் செம்மல்

புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,

தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்

முத்தம்மாள் நிலையம்,

பூலுவபட்டி(அஞ்சல்),

கோயமுத்தூர் 641101.

அலைபேசி  9788552993 / 8610684232                                                             Email amuthankaliappan@gmail.com

www tholkappiyam.org

pulavarkaliappan.blogspot.in                                             

No comments:

Post a Comment