தொல்காப்பியர் கூறும் புறப்பொருள்
முன்னுரை:
இன்பத்தை அடையப் பொருள் தேவை அந்தப் பொருளை அறத்தின் வழியே ஈட்ட வேண்டும் அதை வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்! (தொல்.பொருள்.செய்யுள்422 )என்று தொல்காப்பியரும், அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் என்று திருவள்ளுவரும் குறிப்பிடுகின்றனர். முப்பாலில் அறத்தையும் பொருளையும் எடுத்துக் கூறுவதே புறப்பொருள் இதைப்புறம் என்றும் கூறுவர்.
புறம் என்பது காதல் தவிர்ந்த ஏனைய பொருள்களைப் பற்றியது புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடை முதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும். தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் “புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் செய்தலும் ஆகலான் அவற்றாலாய பயன் பிறருக்குப் புலனாதலின் புறம் “ என்றார் . இவ்வாறன்றி ஒருவருக்கு அறிவுரை சொல்லுவது போலவோ யாரையும் சுட்டிக் கூறாமலோ புறப்பொருள் பாடல் அமைவதும் உண்டு
தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் தொல்காப்பியம் அகமரபுகளை எடுத்துக் கூறியதோடு புறத்திணை மரபுகளையும் அடையாளப்படுத்துகிறது மக்களின் அகவாழ்வானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்று 7 பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. புறத்திணை என்பது பொதுவாழ்க்கை பாங்கைக் கூறுவது . போருக்கு ஆயத்தமாகும் செயல்களையும், போரின்போது நிகழும் நிகழ்வுகளையும், போருக்குப் பின்பு நடைபெறுவனவற்றையும் காட்சிப்படுத்துகிறது. வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு திணைகளும் அகத்திணைகளுக்குப் புறமாக அமைவதாகத் தொல்காப்பியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அகவாழ்வும், புறவாழ்வுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தே விளங்கியதைக் காணமுடிகின்றது.
தொல்காப்பியர் புறத்திணையியலின் முதல் நூற்பாவில்
அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்
வெட்சி தானே குறிஞ்சியது புறனே ;
உட்குவரத் தோன்றும் ஈர்ஏழ் துறைத்தே என்பதன் மூலம் அகத்திணை இலக்கணத்தை முழுமையாக உணர்ந்தோர் மட்டுமே புறத்திணை இலக்கணத்தைச் சிறப்பாக அறிய இயலும் என்ற கருத்தினைக் கூறுகிறார்.
. வீர உணர்விற்கு அளிக்கும் முக்கியத்துவம் குறைந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தமிழ் சமுதாயத்தில் நிலவிய போர் மரபுகளைக் காட்சிப்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு திணையிலும் எத்தனை துறைகள் காணப்படுகின்றன. அதில் எத்தகைய மரபுகள் பின்பற்றப்பட்டிருந்தன என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது
அறம் சார்ந்த வாழ்வு:
இலக்கியம் அறம் சார்ந்ததாக இருந்தாக வேண்டும் என வலியுறுத்துகிறார் தொல்காப்பியர். அறம் சாராத நடைமுறைகள் உலக வழக்கில் இருந்தாலும் அவற்றை மரபு எனக்கொண்டு இலக்கியம் படைப்பது பழிக்குறியதாகும் எனத் திட்டவட்டமாக தொல்காப்பியர் அறிவுறுத்துகிறார்..
அறக்கழிவு உடையன பொருட்பயன் வழக்கென
வழங்கலும் பழித்தது என்ப (பொருளியல் – 22).
புறத்திணைப் பாகுபாடு ஐந்திணை எனப் பெறும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போலவே, இப்புறத்திணைகளும் பூக்களின் பெயரைக் கொண்டு பெயர் பெற்றிருப்பதைக் காணலாம். 'பாடாண்' மட்டுமே பூப்பெயரைக் கொள்ளவில்லை. . அகத்திணைக்குரிய குறிஞ்சி இங்கு வெட்சி என்னும் திணை ஒழுக்கத்தைத் தனக்குப் புறத்திணையாகக் கொள்ளும். முல்லைக்கு வஞ்சித் திணை புறத்திணையாகும். மருத ஒழுக்கத்திற்குப் புறத்திணையாவது உழிஞைத் திணையாகும். நெய்தலுக்குத் தும்பை என்பது புறத்திணையாகும். பாலை என்னும் நடுவுநிலைத் திணைக்குப் புறத்திணையாக வாகைத்திணை அமையும். பெருந்திணை என்னும் பொருந்தாக் காமப் பொருளுடைய அகப் புறத்திணைக்கு - நிலையாமைப் பொருள் குறித்த காஞ்சித் திணை புறத்திணையாகும். கைக்கிளை என்னும் ஒரு தலைக் காமத்திற்குப் புறத்திணையாகப் பாடாண் திணை அமையும். இவ்வகத்திணைகள் ஏழும், புறத்திணைகள் ஏழும் ஒன்றிற்கொன்று தொடர்புடையனவாகக் கூறப் பெறுதல், தொல்காப்பியரின் நுண்மாண் நுழை புலத்தைக் காட்டுகின்றன.
. அகப்பொருள் பாடல் போலவே புறப்பொருள் பாடல்களும் திணை, துறை அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்ற இலக்கணங்கள் புறப்பொருளுக்கு இல்லை. புறப்பொருள் திணைகள் போரை அடிப்படையாகக் கொண்டவை. போர் செய்யச் செல்லும் அரசனும் படைகளும் போரிடும் முறைக்கு ஏற்ப வெவ்வேறு பூக்களை அணிந்து சென்று போரிடுவர். அவர்கள்அணிந்து செல்லும் பூக்களின் பெயர்களே திணைகளுக்குப் பெயர்களாக அமைந்துள்ளன.
போர் நெறி: சங்க காலச் சமுதாயத்தில் புறவாழ்க்கை பெரும்பாலும் வீரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிந்து கொள்ளலாம்,
பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர்---- கையகலக்
கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி.
இப்பாடலில் எங்கும் தமிழர் என்ற சொல் வரவே இல்லை.குடிமக்களின் நிலையை உரைப்பதே இப்பாடலின் நோக்கம். குடிமக்கள் என்றால் ஆண்,பெண் என்னும் இருபாலரையும் குறிக்கும்.இந்தப்பாடலில் ஆண்மக்களின் வீரம் போற்றப்பட்டது. இன்னொரு பாடலில் பெண்மக்களின் வீரம் போற்றப்படுகிறது.அந்தப்பாடல் இதுதான்
யானை தாக்கினும் அரவுமேற் செலினும்
நீல்நீற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை உடையவளாக இருந்தாள்.
இதைத்தான் தொல்காப்பியம் குடிநிலை என்று கூறுகிறது.இப்பாடல் மூலம் ஆணும் பெண்ணும் நிகர் என்றே அறியலாம்.
மறத்திலும் அறம்: தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்வில் மறக்குடியில் பிறந்தவர்கள். எனினும்
அறம்போற்ற மறந்திலர் என்ற கருத்தினை, நெட்டிமையார், பாடியுள்ளார்
போர்
செய்வதிலும் அறம்போற்றி வாழ்ந்த அறச்சிந்தனைகளை தொல்காப்பியத்தின்மூலம் அறியலாம்
ஓர் அரசன் மற்றொரு நாட்டின்மீது போர்தொடுக்க எண்ணுகிறான். அதற்காக
எல்லையில் படைகளைக் குவிப்பான்.போர் தொடங்குவதற்கு முன் பகைநாட்டின் எல்லைப்புற
ஊரினுள் சென்று நாங்கள் உங்கள் நாட்டின்
மீது படையெடுத்து வந்துள்ளோம். ஆகவே மாடுகளும் பசுபோல் சாதுவான மக்களுக்கு அறத்தை
உரைக்கும் ஆன்றோர்களும், பெண்களும், நோயாளிகளும், முன்னோர்களுக்கு ஈமக்கடன்
ஆற்றுவதற்கு உரிய பொன்னான மக்களைப் பெற்றெடுக்காதவர்களும், நாங்கள் விரைவாக விடும்
அம்புகள் தாக்காதவாறு பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விடுங்கள் என்று முரசறைந்து
அறிவிப்பர். இவற்றுள் சொல்லுவதை அறிந்து கொள்ளா முடியாத மாடுகளைத் தவிர மற்றவர்கள்
மனிதர்கள்.எனவே அந்த மாட்டுக் கூட்டங்களைப் பகைவர்க்குத் தெரியாமல் கவர்ந்து வந்து
பாதுகாப்புச்செய்வர். இக்கருத்து புறநானூறு 9 ஆம்பாடலை அடிப்படையாகக் கொண்டு
எழுதப்பட்டது அப்பாடல்
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் . .
எம்.அம்பு கடிவிடுதும், நும்அரண சேர்மின் என,
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் என்பது புறம்
வெட்சித் திணை
வெட்சி தானே குறிஞ்சியது புறனே
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே
-(புறத்திணையியல்),
இந்நூற்பாவால் வெட்சித்திணைக்குரிய இடத்தையும், துறையையும் வரையறுத்துக் கூறியுள்ளார். பழைய காலத்தில் பகை அரசனிடம் போர்செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித்திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.
வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந்(து) ஓம்பல் மேவற்றாகும். (தொல்.பொருள் புறத் 1003).
அரசனால் ஏவப்பட்டு, போர்முனையில் காத்திருந்த வீரர்கள், போர் தொடுப்பதற்கு முன்னாலேயே அரசனின் கட்டளைக்கு ஏற்ப வீரர்கள் பகைவர் நாட்டில் சென்று பிறர் அறியாமல் ஆநிரைகளைக் கவர்ந்து கொண்டு வருதல் ஆகும். அவ்வாறு கவர்ந்து வந்த ஆநிரைகளுக்குப் போதிய தீவனம் அளித்து காப்பதும் கடமையாகக் கருதப்பட்டது. ஆநிரை கவர்வோர் வெட்சிப் பூமாலை சூடியிருப்பர். ஆநிரை மீட்போர் கரந்தைப் பூ மாலை சூடியிருப்பர். ஆநிரை கவர்தலைப் போர் தொடங்கு முன் தன் கருத்தைப் பகைவர்க்கு அறிவிப்பது போலவும் கொள்ளலாம். தொல்காப்பியர் வெட்சித்திணைக்கு 14 துறைகள் கூறியுள்ளார். நிரை கவர்தலுக்கும் (வெட்சி) மீட்டலுக்கும் (கரந்தை) இத்துறைகள் பொதுவானவை. வீரர்கள் பகைவர் நாட்டில் ஆநிரை கவரச் செல்லும்போது படையில் ஓசை எழுகின்றது. வீரர்களால் நற்சொல், நல் நிமித்தங்கள் பார்க்கப்பட்டது. ஒற்றர்களின் துணையினால் பகைவரின் நாட்டுச் சூழல் அறியப்பட்டது. வீரர்கள் ஆநிரைகளை எந்த வருத்தமும் ஏற்படாமல் ஊர்ப்புறத்தே கொண்டு சேர்த்தனர். வீரர்கள் வெற்றிக் கூத்தாடி மகிழ்ச்சியுடன் உணவு உண்டனர். போரில் உதவிய அனைவருக்கும் ஆநிரைகளை கொடையாகக் கொடுத்தனர். இது போன்ற பல செயல்களும் வெட்சிப் போரில் போது நடைபெற்றது. போர் செய்வதற்கு முன்பாக பல ஆயத்த செயல்களும், போரின் போது பல நிகழ்வுகளும் போர் நடைபெற்ற பின்விளைவுகளாக பல செயல்களும் மேற்கொண்டதை அறிய முடிகின்றது
வெட்சியில் கரந்தை வெட்சித் திணையில் கரந்தை என்ற பகுதியையும் தொல்காப்பியர் கூறுவார். கரந்தையை ஒரு தனித் திணையாகக் கொள்ளவில்லை. வெட்சி வீரர்களின் குடிப்பெருமை கூறப்பட்டது வெற்றித் தெய்வமாகக் கருதப்படும் கொற்றவை குறித்தும் குறிப்பிடப்படுகின்றது. இதனை,’வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ‘ திருமுருகு.258-259
என்ற பாடல் வரி குறிப்பிடுவதன் மூலம் உறுதியாகின்றது.
வஞ்சித்திணை: அரசன் தன்னுடைய நாட்டின் எல்லையை விரிவு படுத்துவதற்காகவும் தன்னை மதியாதான் நாட்டைக் கைப்பற்றக் கருதியும் மண் மீதுள்ள விருப்பத்தின் காரணமாக வேற்று நாட்டின் மீது படை எடுத்துச் செல்வது வஞ்சித்திணை ஆகும். இதற்குத் தொல்காப்பியர் 13 துறைகளை வகுத்துள்ளார் வஞ்சியாகிய புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறமாகும்.
“வஞ்சி தானே முல்லையது புறனை
எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தன்றே”
(தொல். பொருள்.64) என்ற நூற்பா குறிப்பிடப்படுகின்றது.
வஞ்சித் திணையில் பகைவர் நாடு தீயிட்டு அழிக்கப்படுகிறது. வீரர்களுக்குப் படைக் கருவிகளை வழங்குதல். பகைவர்களை எதிர்த்து நின்று போர் செய்தல். வீரனின் பெருமையை எடுத்துக் கூறப்படுகின்றது. வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளிக்கப்படுகிறது. திறைப் பொருட்களைத் தோற்றவனிடம் இருந்து பெறுதல் போன்ற 13 துறைகள் குறிப்பிடப்படுகின்றன. படையெடுத்துச் செல்லும்போது படை இளைப்பாறவும் நீர் அருந்தி, உணவு சமைத்து உண்ணவும், நிழல் சூழ்ந்த இடம் தேவைப்படும். நிழல் சூழ்ந்த காடும், கார் காலத்தில் வேண்டுமளவு நீரும் தேவைப்படுவதால் முல்லைக்கு வஞ்சி புறத்திணையாயிற்று. .
உழிஞைத்திணை: உழிஞைத் திணையானது மருதத்திணைக்குப் புறமாக அமைகின்றது. கோட்டைகளின் மதிலை உள்ளிருப்பவர்கள் காவல் காப்பதும் மதிலுக்கு வெளியில் இருப்பவர்கள் மதிலைத் தாக்க முற்படுவதும் உழிஞைத் திணை ஆகும்.
உழிஞை தானே மருதத்துப் புறனே
முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற்று ஆகும் என்ப
(புறத்திணையில்,8)
என்று தொல்காப்பியர் அரண் என்பது இயற்கையான, மற்றும் செயற்கையான அரண்களாகும்.
உழிஞைத் திணை மருதத்திற்குப் புறமாதற்குரிய காரணம் வருமாறு வஞ்சியில் போரிட்டுத் தோற்ற வேந்தன், தன் நாடு சென்று அரண்மனைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டிருப்பான். போரிட்டு வென்ற வேந்தன் அவன் நாட்டில் புகுந்து இரவில் முற்றுகையிடுவான். போரிடும் காலம் விடியற்காலமாகும் . தொல்காப்பியர் படையெடுத்து முற்றுகையிடுதல் (உழிஞை), உள்ளேயிருப்பவன் அதைத் தடுத்துக் காத்தல் (நொச்சி) இரண்டையுமே உழிஞையாகக் கொண்டு 12 துறைகள் வகுத்தார். வீரர்கள் மதிலின் புறத்தே தறுகியிருத்தல் பகை அரசனின் வருந்திய நிலையை எடுத்துக் கூறுதல் உழிஞை வீரர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் நொச்சி வீரர்கள் மதிலைக் காத்தல் இவை போன்ற செயல்கள் குறிப்பிடப்படுகின்றன.
நொச்சித் திணையைத் தொல்காப்பியர் தனித்திணையாகக் கொள்ளவில்லை. உழிஞையில் இணைத்தே கூறுகிறார். கோட்டையின் உள்ளே இருந்து கொண்டு தன் மதில் அழிவுபடாமல் காத்தல் நொச்சித் திணையாகும். மதில் காப்போர் நொச்சிப் பூவைச் சூடியிருப்பர்
தும்பைத்திணை: தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறமாகும். இருபெரும் வேந்தரும் ஒரு களத்தில் போரிடுவர். அதற்குக், களரும் மணலும் பரந்த நிலமே போரிடும் களமாக அமையும். அவ்வாறு போரிடுவதற்குப் போதிய இடம் கடலைச் சார்ந்த மணல் பகுதியாக இருப்பது சிறப்புடையது கதிரவன் மறையும் காலம் போர் முடியும் நேரமாகும். எனவே நெய்தலுக்கு உரிய எற்பாடு நேரமே தும்பைக்கும் உரியதாயிற்று.
இதனைத் தொல்காப்பியரும்
தும்பை தானே நெய்தலது புறனே ;
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப
(புறத்திணையில், 12)என்று உரைப்பர். இத்திணை 12 துறைகளை உடையது. போர் புரிவதையே தன் வலிமையாகக் கருதிய பகை அரசனின் வலிமையை அடக்குவதாகும். இரு அரசர்களும் ஒரு போர்க்களத்தில் போர் புரிகின்றனர். இது 12 துறைகளை உடையது.
வாகைத்திணை: போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்துபாடுதல் வாகைத்திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.
வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப (புறத்திணையில், 15) கூறும். வாகை என்பது வெற்றியைக் குறிக்கும். வாகைத் திணை பாலை என்னும் அகத்திணையினது புறமாகும்.
தன் பகை அரசனை வென்று வெற்றி பெறுதல் வாகைத்திணையாகும். வென்ற மன்னன் வாகைப்பூச் சூடி வருவான். வெற்றி பெற்றதும், அதைச் சிறப்பாகக் கொண்டாடுவதும் வாகைத் திணையின் பாற்படும். வாகையின் துறைகள் 18 ஆகும். அரசர்கள் மட்டுமன்றி மற்றவர்களும் அவரவர் துறையில் வெற்றி பெறுதலும் வாகையுள் அடங்கும் நான்கு வருணத்தாராகிய மக்கள் (வலியும் வருத்தமும் இல்லாமல் இயல்பாக ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள்), அறிவர் (சான்றோர்கள்), தாபதர் (துறவிகள்) ஆகியவர்கள் தம்முடைய செயல்களில் சிறந்து விளங்குவதையே வாழ்க்கைக் குறிக்கோளாகக் கடைப்பிடித்தார்கள்.. அத்தகையவர்கருக்கு ஏற்படும் சிறப்பும் வெற்றியும் வாகை என்று குறிப்பிடப்படுகின்றது. இத்திணை 18 துறைகளை உடையது. வீரர்ககள் கூதிர், வேனில் என்ற இரு பாசறைகளில் தங்கியிருத்தல். தேரின் பின்னால் மகளிர் குரவைக் கூத்தாடினர். வீரர்கள் வெற்றி பெறுவதற்காக வஞ்சினம் கூறிக் கொண்டனர். துறவு குறித்தும் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக அமையக்கூடிய காம ஆசையை நீக்கி பக்குவப்பட்ட மனப்பான்மையைக் குறிப்பிடுகின்றது. இவை போன்ற பல ஒழுக்கங்களும் விளக்கப்படுகின்றன.
பாடாண் திணை
பாடாண் திணையானது கைக்கிளைக்குப் புறத்திணையாகும். கைக்கிளையாவது ஒரு நிலத்திற்கோ, ஒரு பொழுதுக்கோ உரியதாகாமல் எல்லா நிலத்திற்கும், எல்லாப் பொழுதுக்கும் உரிய ஒருதலைக் காமமாகும். அதுபோல இதுவும் ஒரு பாலுக்கு உரியது அன்று. ஒருவனை ஒருவன் ஏதேனும் காரணம் பற்றிப் பாராட்டி நிற்பது பாடாண் திணையாகும். வெட்சி முதல் வாகை ஈறாக உள்ள திணைகள் போர் தொடுப்போரும் எதிர்ப்போருமாகிய இருவருக்கும் உரியது; காஞ்சியாவருக்கும் உரியது ஆண்மகனின் அருஞ்செயல்களையும், ஒழுக்கலாறுகளையும் எடுத்துரைக்கின்றது.
;அவ்வாறு இல்லாமல் பாடாண் திணை பாடப்படுபவர், பாடுபவர் என்னும் இருவருள் பாடுவோர் விருப்பம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருத்தலின் கைக்கிளை போல இதுவும் ஒருவர் விருப்பமாயிற்று. இதனைத் தொல்காப்பியர்,
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண்டுடைத்தே
(புறத்திணையில், 20)எனக் கூறுவார்.
வெற்றி பெற்ற அரசனின் வீரம், புகழ், கொடை முதலிய பண்புகளைப் புகழ்ந்து பாடுதல் பாடாண் திணையாகும். இது 8 வகையாகக் குறிப்பிடப்படுகின்றன. அரசனின் இயல்பு குறித்து எடுத்துக் கூறப்படுகின்றது. மற்றவர்களுக்குப் பொருட்களைக் கொடுத்தவனைப் புகழ்ந்தும் கொடுக்காதவனை இகழ்ந்தும் கூறப்படுகின்றது. அரசன் அந்தணர்களுக்குப் பசுவைத் தானமாகக் கொடுத்ததை விளக்குகின்றது. அரசனை காக்கும்படி வழிபாடு தெய்வத்தை வேண்டினர். இவை போன்ற பல செயல்களும் விளக்கப்படுகின்றன.
காஞ்சித்திணை:
காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். காஞ்சித் திணை அகத்திணையாகிய பெருந்திணைக்குப் புறத்திணையாகும். அது நன்று அல்லாத சிறப்பினை உடையது; மேலும் நிலைபேறில்லாத இவ்வுலகத்தைப் பற்றிய வழியினைக் கூறுவது ஆகும். நன்றல்லாத சிறப்பாவது செயலால் நன்றல்லாதது போல் தோன்றி, கொள்கையால் சிறந்திருத்தல். அன்பின் ஐந்திணைகளில் பெருந்திணையாகிய மடல் ஏறுதல் போல்வனவரின் அவற்றிற்குப் புறமாக ஒதுக்கப்படுதல் போல, வெட்சி முதலிய புறத்திணைகளில் நிலையாமை உணர்வு வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுதலின், காஞ்சி பெருந்திணைப் புறமாயிற்று. இதனைத் தொல்காப்பியர்,
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே.
(புறத்திணையில், 18) எனக் கூறுகிறார்.
பல்வேறு நிலையாமைகள் பற்றிக் கூறும் பகுதிக்குத் தொல்காப்பியர் காஞ்சித் திணை எனப் பெயரிட்டிருக்க ஒருவன் வீடுபேறு அடைவதற்காக மூன்று நிலைகளிலும் அறம், பொருள், இன்பம் என்றும் உயிரும், உடலும், செல்வமும், இளமையும் ஆகியவற்றின் நிலையில்லாத தன்மையைச் சான்றோர்கள் குறிப்பிடுவது காஞ்சித் திணை ஆகும்.
20 துறைகளை உடையது. சான்றோர்கள் கூற்றுவனின் செயலை அறிவுறுத்திக் கூறியதைக் குறிப்பிடுகின்றது. வாழ்க்கை நிலையில்லாததால் வீரன் விழுப்புண்ணைக் கிழித்துக் கொண்டு இறக்கும் செயலைக் குறிப்பிடுகின்றது. வீரனைப் பேய்கள், காவல் காக்கும் செயலை எடுத்துக் கூறுதல் இறந்தவர்களின் நல்லியல்புகள் குறித்துச் சுட்டப்படுகின்றது. இவை போன்ற பல செயல்கள் விளக்கமளிப்பதை அறிய முடிகின்றது
புறத்திணைகள் கூறும் சமூகச் செய்திகள்
புறத்திணைகள் போர்ப் பிரிவுகளை விளக்குகின்றன. ஆநிரைகளைக் கவர்தல் தான் போருக்குத் தொடக்கமாக அமைகின்றது. ஆநிரை கவர்வோர் செயலை ஆநிரையை மீட்போர் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிடுவர். பகைவன் நாட்டைக் கைப்பற்றவோ, அவ்வரசனின் மகளைப் பெண் கேட்டு, அவன் தர மறுக்கும்போதோ, போர் நடத்தப்பெறுதல் பெரும்பான்மை நிகழ்வாக இருக்கும். சில நேரங்களில் இகழ்ந்து பேசியதாலும் இகழ்ச்சிக்கு ஆட்பட்டவன் போர்தொடுத்தலும் நடைபெற்றுள்ளது. புறத்திணைகள் போர்ப் பிரிவுகளைக் கூறினாலும் அவற்றிற்குரிய துறைகள் போரின் சிறு சிறு நிகழ்வுகளைக் கூறுவன ஆகும் போருக்கு அடிப்படைக் காரணம் உலகப் பொருள்கள் மேல் ஆசையும், பெண்ணாசையுமே ஆகும். புறத்திணைகளில் ஒன்றான காஞ்சித் திணை உலக நிலையாமையை எடுத்துரைக்கிறது. வாழ்வில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும் இது எடுத்துக்கூறுகின்றது. ஆசைகளால் பயன் இல்லை என்கிறது இது. போர் தொடங்குவதில் இருந்து போர் முடிந்து வெற்றி பெற்றோ, தோல்வியுற்றோ வரும்வரை ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் தான் போர் நிகழ்விற்கும் ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
தொல்காப்பியர் ஆநிரை கவர்தல், மண் கவர்தல், கோட்டையைக் கவர்தல் ஆகிய போர்ச் செயல்களில் கவர்பவர், அதனை எதிர்ப்பவர் ஆகியோரின் செயல்களை முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை ஆகிய திணைகளில் விளக்குகிறார்
முடிவுரை தமிழ்ச் சமூகமானது காதலையும், வீரத்தையும் முக்கியமாகக் கருதியது. வீர உணர்வுடன் வாழ்வதே பெருமையாக எண்ணப்பட்டது. வீரர்கள் தம் வீரத்தை நிலைநாட்டி தங்களை பெருமைப் படுத்திக் கொள்வதற்காகப் பாடுபட்டனர். அத்தகைய தன்மைகளின் தொல்காப்பியம் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு திணைகளை அடிப்படையாகக் கொண்டு புறத்திணை மரபுகளை எடுத்துக் கூறி தமிழர்கள் வீரத்திற்கு அளித்த சிறப்பினை நினைவூட்டுவதாக அமைகின்றது
தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
முத்தம்மாள் நிலையம்,
பூலுவபட்டி(அஞ்சல்),
கோயமுத்தூர் 641101.
அலைபேசி 9788552993 / 8610684232 Email amuthankaliappan@gmail.com
www tholkappiyam.org
pulavarkaliappan.blogspot.in
No comments:
Post a Comment