Thursday, 11 February 2021

ஆய்தம் தமிழுக்கு ஆயுதம்

 

             

               ஆய்தம் தமிழுக்கு ஆயுதம் 

 

உலகில் பேச்சுமொழிக்குப் பின்னரே   எழுத்துமொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்துத் தோன்றியது.   வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன

 (ஃ) அடைப்புக்குறிக்குள் உள்ள இந்த எழுத்தை ஆய்தம் என்னும் பெயரால் குறிப்பிடுவது வழக்கம்  இது என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும்.  தமிழ் எழுத்துக்களை ஆனா(அ), ஆவன்னா(ஆ) எனப் படிக்கும் முறைமை ஒன்று இருந்து வந்தது. இந்த முறையில் படிப்போர் ஆய்த எழுத்தை அஃகன்னா எனப் படிப்பர்.

 

      ஆய்தம் என்பது பெயர்ச்சொல். ஆய்தல் என்பது வினைச்சொல். ஆய்வுரை நுணுகிப் பார்ப்பது. ஆய்தல் என்னும் உரிச்சொல் இருப்பதை நுட்பமாக்கிக் காட்டும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்என்பது தொல்காப்பியம் (உரியியல்)  இதனால் ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவது என்னும் பொருள்பட நிற்பதைக் காணமுடிகிறது

 

   ஆய்தல் என்னும் சொல் நுணுக்கமாக நோக்கும் ஆராய்ச்சியைக் குறிக்க இன்றும் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். வலிமையான கற்களை நுணுக்கி மென்மையாக்கிக் கொள்வது போல ஆய்த எழுத்துக்களை ஊர்ந்து வரும் வல்லின எழுத்துக்களை நுண்மையாக்கிக் காட்ட இந்தஆய்தஎழுத்துப்  பயன்படுவதை நாம் காண்கிறோம்

    சைகையில்  கொஞ்சம் என்பதை காட்டும்போது மூன்று விரல்கள் (பெருவிரல்,சுட்டுவிரல் நடுவிரல்) முன்னால் நீட்டி இருப்பதைப்போல ஃ என்னும் எழுத்தின் வடிவம் இருக்கும்.இதன்பொருள் கொஞ்சம் குறைவாக, நுணுக்கமாக என்பதையும் இந்தச்சைகையால் தான் காட்டுவோம். அந்த மூன்றுவிரல்கள் வடிவிலேயே ஆய்த எழுத்து உள்ளது.  இரண்டு புள்ளிகள் கண்ணாகவும் மூன்றாவது புள்ளி நெற்றிக் கண்ணாகவும் உள்ளதென ஆசிவக  மதத்தார் கூறுவர். புள்ளி அண்டத்தைக் குறிக்கிறது என்றும் முட்டையைக் குறிக்கிறது என்றும் கூறுவர்.எழுத்தெனப் படுப அகரமுதல னகர இறுவாய் என எழுத்துகளுக்கெல்லாம் அகரத்தை முதலாகக் கூறுவர். அந்த அகரத்திற்கும் முதலாக இருப்பதே ஆய்தப் புள்ளியே.அதனால் முதலில் எழுதிப் பழகும் குழந்தைகளை முட்டை முட்டையாக எழுதச் சொல்லுகின்றனர். எல்லாக் குழந்தைகளும் இயல்பாக முதலில் முட்டையையே வரைகின்றன. எனவே ஆதியாய் உள்ளதும் ஆதியில் உள்ளதும் ஆய்த எழுத்தே. மூன்று புள்ளிகளையும் சூலத்தின் மூன்று முனைகளாகக்கருதலாம். இதுவே நாளடைவில் வேலாகவும் உருமாறியதாகக் கொள்ளலாம். சுழியத்தைச் சுழுமுனைக்கும் ஒப்பிட்டுக் கூறுவர்.

தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது

அஃகேனம் ஆய்தம் தனிநிலை புள்ளி

ஒற்றிப் பால ஐந்தும் இதற்கே என்று ஆய்த எழுத்தின் பெயர்கள் உள்ளதை அறியலாம்.

    ஓசையின் அடிப்படையில் அஃகேனம் எனப் பெயர் பெற்றுள்ளது.  அஃகான் என்றே தொல்காப்பியரும் கூறுவதோடு .எல்லா எழுத்துகளையும் விட ஆய்த எழுத்துப் பற்றியே அதிக நூற்பாக்களை எழுதி உள்ளார்

உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று,  தனியொரு எழுத்தாக இருப்பதால் "தனிநிலை" எனப்படுகிறது

    தமிழ் நெடுங்கணக்கு வரிசையில்  அ,ஆ----- ஔ என்று உயிர் எழுத்துகளைப் படுக்கை வரிசையாக வைத்து ஔ வின்முடிவில் ஃ என்ற ஆய்த எழுத்தை வைத்தனர். உயிர் எழுத்துகளை படுக்கை வரிசையாக வைத்தவர். க் ,ங்,-------ன் மெய் எழுத்துகளை நெடுங்கிடையாக வைத்தனர். உயிர் எழுத்துகளை படுக்கை  வரிசையாக வைத்து ஆய்த எழுத்தை  நெடுங்கிடையாக உள்ள மெய் எழுத்துகளுக்கு இடையில் வைத்தனர். எனவே ஆய்த எழுத்தை படுக்கை வரிசையாக உள்ள உயிரெழுத்தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.அதேசமயம் நெடுங்கிடையாக உள்ள மெய் எழுத்தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.  இதன்பொருள் ஆய்த எழுத்து உயிர் எழுத்தும் அன்று மெய்யெழுத்தும் அன்று எனினும் அவற்றின் வேறுமாகாது. என்பதை உணர்த்த அவற்றிற்குத் தனியாக வைத்துத் தனிநிலை என்ற பெயரும் வைத்தனர். ‘அ’ வையும் ‘க்’ ஐயும் சேர்த்து ஒலிப்பது போல்                  அஃக்கன்னா என்ற ஒலிப்பையும் தந்தனர்

.தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே
 அளபெடை அல்லாக் காலை யான.                                                         உயிருறுப் புயிர்மெய் தனிநிலை எனாஅக்
       --  ----- ----------- -------                                                            அசைசீர் தளைதொடைக் காகும் உறுப்பென
     வசையறு புலவர் வகுத்துரைத் தனரே.

     தனிநிலை ஒற்றிவை தாமலகு பெறூஉம்
     
அளபெடை ஆகிய காலை யான.                                                       என்பது  . காக்கைபாடினியாரும்

இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து , முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது

ஆய்த எழுத்தைப் பெரும்பாலும் மெய்யெழுத்தாகவே எண்ணப்படுதலால் மெய்யெழுத்தின் பெயராகிய ஒற்று புள்ளி என்ற பெயர்களாலும் ஆய்தமும் அழைக்கப்படும்.ஆய்தம் ஒற்று எழுத்தாகவே கருதப்படுவதை கீழ்வரும் நூற்பாக்களால் அறியலாம்.

.உயிரள பெடையும் ஒற்றள பெடையுமென்
 றாயிரண் டென்ப அளபெடை தானே.

ங ஞ ண ந ம ன வயலள வாய்தம்

அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை

மிகலே யவற்றின் குறியாம் வேறே (நன்னூல்92) நன்னூலும்

ஙஞண நமன வயலள ஆய்தம்
  
ஈரிடத் தளபெழும் ஒரோவழி யான.என்னும்யாப்பருங்கலமும்  ஆய்த எழுத்தை ஒற்று எனக்குறித்ததை அறியலாம்.

ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி

வேறல கெய்தும் வியின வாகும் என்கிறார் காக்கைப்பாடினியார்

ஆய்தம் ஒற்றெனப் பெற்றசை யாக்குமென்
  
றோதி னாருள ராகவும் ஒண்டமிழ்
  
நாத ராயவர் நாநலி போசையிற்
  
கேது வென்றெடுத் தோதினர் என்பவே.என்ற பாடலும் இதே கருத்தை உணர்த்துகிறது                                                                            

   , போர்க் கருவிகளை ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது. போர்வீரனின் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது                                     

   போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம்.                              

   உணவு சமைத்தலுக்கு முக்கிய கருவியாகிய அடுப்புக்கல் முக்கூட்டுப் போல் உள்ளது.அந்த வடிவில் இருப்பதாலும் ஆய்த எழுத்து என்றனர். வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர்."ஆயுத" எழுத்து எனக்கூறுவது தவறு. ஆயுதம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் இல்லை. இந்த வரிசையில் ஆயு, ஆயுங்கால, ஆயும், ஆயுள் என்னும் 4 சொற்கள் மட்டுமே உள்ளன.(சங்கநூல் சொல்லடைவு1967) சங்ககாலத்தில் இல்லாத ஆயுதம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு ஆய்தம் என்னும் தொல்பழஞ் சொல்லுக்குக் கற்பனைப் பொருள் கற்பிப்பது பொருந்தாது.

  வரிவடிவையும் ஒலிவடிவையும் குறிக்க ஆய்த எழுத்து அரிதாகத் தோன்றும். ஒலிக்குறிப்பை எழுத்தால் எழுதிக்காட்ட இயலாது அந்தமாதிரி இடங்களில் ஆய்தம் எழுத்தைப் போட்டு எழுதுவோம்

கன்னங்கரேல் என்பதைக் கஃறு  என ஆய்த எழுத்தைப் போட்டு எழுதிக் காட்டுவர். இக்காலத்தில் பிறமொழி (திசை)ச் சொற்களை எழுதும்போது ஃபாதர், ஃபேன், செல்ஃப், புரூஃப் என்றெல்லாம் எழுதிவருகிறோம்.

  ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும் (தொல் எழுத் 39)

 

   உருவினும் இசையினும் அருகித் தோன்றும்

   மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா                                                     

   ஆய்தம் அஃகாக் காலை யான (தொல் எழுத்40)    இதன்பொருள்                                                

    ஒரு பொருளினது உருவத்தின் கண்ணும், ஓசையின் கண்ணும்,   சிறுபான்மையாய்த் தோன்றும் குறிப்பு மொழிகளெல்லாம்  ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டும்.                                                              எ - டு: `கஃறென்றது' என்பது உருவு, `சுஃறென்றது' என்பது இசை.

சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்துவெளிப் படுத்த ஏனை மூன்றும்
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம்மியல் பியலும்

இஃது, சார்பிற்றோற்றத் தெழுத்திற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.

சார்ந்துவரின் அல்லது தமக்கு இயல்பு இல என தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்-சிலவற்றைச் சார்ந்துவரின் அல்லது தமக்குத் தாமே வரும் இயல்பு இலவென்று ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட ஒழிந்த மூன்றும், தம்தம் சார்பின் பிறப்போடு சிவணி ஒத்த காட்சியில் தம் இயல்பு இயலும்- தத்தமக்குச் சார்பாகிய எழுத்துக்களது பிறப்பிடத்தே பிறத்தலொடு பொருந்தி அவ்விடத்தே தமக்குரிய இயல்பில் நடக்கும். 'ஒத்தகாட்சி' என்றதனான், ஆய்தத்திற்குக் குற்றெழுத்துச் சார்பேயெனினும் தலை வளியாற் பிறத்தலின், உயிரொடு புணர்ந்த வல்லெழுத்துச் சார்பாகவே பிறக்குமென்பது கொள்க. `தம்மியல்பியலும்' என்றதனான், அளபெடையும் உயிர்மெய்யும் தமக்கு அடியாகிய எழுத்துக்களது பிறப்பிடமே இடமாக வருமென்பது கொள்க

.வடமொழியில் நுட்பமான ஒலி ஹ என்று கூறப்படுகிறது. அதைக் காட்டிலும் மிக நுட்பமான ஒலியைத் தமிழில் தரவல்லது ஆய்தம் என்று  டாக்டர் மு.வரதராசனார்   குறிப்பிடுகிறார். (மொழி நூல், ப. 55).  தொல்காப்பியர் ஆய்தத்தைத் தனிமொழி, புணர்மொழி என்ற இருவகை மொழிகளில் வைத்து விளக்குகிறார். (தனிமொழி - ஒருசொல்; புணர்மொழி - இருசொல்.)

தனிமொழி ஆய்தம் ஆய்தம் ஒரு தனிக்குறிலுக்கும் வல்லின உயிர்மெய்க்கும் நடுவே வரும். (எ.டு) எஃகு, கஃசு, பஃது, அஃகு(எஃகு - ஒரு வகை உலோகம் ; கஃசு - கால் பலம் கொண்ட எடையளவு ; பஃது - பத்து, அஃகு - சுருங்கு)

    இச்சொற்களில் தனிக்குறிலின் முன்னர் வரும் ஆய்தம், தனது நுண்ணிய ஒலியால் தன்னை அடுத்து வரும் வன்மையான ஓசையுடைய வல்லின எழுத்துகளை உரசொலிகளாக (Fricatives) மாற்றி விடுகின்றது என்று மொழிநூலார் கூறுகின்றனர். உரசொலி என்றால் என்ன என்பதைக் காண்போம்.

கீழ்க்காணும் எடுத்துக் காட்டுகளில் ககரம் எவ்வாறு ஒலிக்கிறது எனப் பாருங்கள்.கடல் ---Kஒலி தங்கம்-g, அகம்-h

இம்மூன்றில் இரு உயிர் ஒலிகளுக்கு நடுவே (அ+க்+அ+ம்) வரும் ககரம் நுண்மையாகி h ஒலியைப் பெறுகிறது. இதுவே உரசொலி எனப்படும். ஆய்தமும் இவ்வாறே தன்னை அடுத்து வரும் வல்லின மெய்யின் வன்மையை மாற்றி மென்மையாக்கி (உரசொலியாக்கி) விடுகிறது. ஆய்தம் இடம்பெறும் சொற்களை உச்சரித்துப் பார்த்து இந்த உண்மையை நீங்களே உணரலாம்.

 

புணர்மொழி ஆய்தம் தொல்காப்பியர் புணர்மொழி ஆய்தம் பற்றி இரு விதிகளைத் தந்துள்ளார்.                                                                   1) வகர மெய்யில் முடியும் அவ், இவ், உவ் என்ற மூன்று சுட்டுச் சொற்களின் முன்னர் வல்லினம் வரும் பொழுது, வகரமெய் ஆய்தமாகத் திரியும். (தொல். எழுத்து. 379)                                                         (எ.டு) அவ் + கடிய = அஃகடிய

2) தனிக்குறிலை அடுத்து ல், ள் என்று முடியும் சொற்களுக்கு முன்னர் வல்லின மெய்களை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால், ல் என்பது ற் என்றும், ள் என்பது ட் என்றும் திரியும். இவ்வாறு திரிவதோடன்றி, ல், ள் ஆகிய இரண்டும் ஆய்தமாகவும் திரியும் (தொல். எழுத்து. 369, 399) புணரியல் ஆய்தம் - கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது)

1.      மொழியிடை ஆய்தம் - எஃகு, கஃசு (தொடி எடையில் நான்கில்   

   ஒருபங்கு - நிறுத்தலளவைப் பெயர்)

2.  புணரியல் ஆய்தம் - கஃறீது (கல்+தீது), மஃடீது (மண்+தீது)

3.  உருநோக்கு ஆய்தம் - மண் கஃறென்றது (மண் கல் போல் கெட்டியாயிற்று)

4.   இசைநோக்கு ஆய்தம் - அருவி கஃறென்றது (அருவி 'கல்' என ஒலித்தது)                                                                        அஃகல் - இது முற்றாய்தம் மேலும் தொல்காப்பியர் காலத் தமிழில், குறில் எழுத்தை அடுத்துக் கான் என்னும் எழுத்துச் சாரியை வரும்போது இடையே ஆய்தம் தோன்றி வழங்கியுள்ளது. இவ்வழக்கைத் தொல்காப்பியத்திலேயே காணலாம். ம + கான் = மஃகான். (தொல். எழுத்து. 28) ஆய்த எழுத்தை முற்றாய்தம். ஆய்தக் குறுக்கம் என இருவகையாகக் கூறுவர் 

முற்றாய்தம்                                                             எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்னும் சொற்களில் ஆய்த எழுத்து அடுத்துள்ள வல்லின எழுத்தை மென்மையாக்கிக் காட்டுவதை இவற்றை ஒலித்துப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம். இவற்றில் ஆய்த எழுத்துக்கு இயல்பான அரை மாத்திரை. எனவே இதனை முற்றாய்தம் எனக் குறிப்பிடலாயினர். ஆய்தம் தன் மாத்திரையில் குறுகும் ஆய்தக் குறுக்கம் இருப்பதை வேறுபடுத்திக் காட்ட முற்றாய்தம் என்னும் சொல் தோன்றியது. சார்பெழுத்து என்பதிலிருந்து தெளிவு படுத்திக்கொள்ள முதலெழுத்து என்னும் சொல்லை நன்னூல் வழக்குக்குக் கொண்டுவந்தது போன்றது இது.   

     .                                    

(எஃகு = வேல், கஃசு = தொடி, கஃசு என்பன நிறுத்தலளவைக் குறியீடுகள்,  கஃடு = கள், பஃது = பத்து பஃறி = கட்டுமரம்) வல்லின வகையாய் வரும் ஆய்தம் ஆறு                                                                       உயிரோடு புணரும்போது ஆய்த எழுத்து தோன்றுதல் உண்டு அவ்+கடிய= அஃகடிய. வ் ஆய்தமாறியது திரிதல் விகாரம்அ+கான்=அஃகான் ஆய்த எழுத்துத் தோன்றியது விரித்தல் விகாரம் ஆக முற்றாய்தம் எட்டு வகைப்படும்.

ஆய்தக்குறுக்கம்  

இயல்பாக அரை மாத்திரை ஒலியளவு பெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும் பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது. கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆய்தக் குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும்.                                     கல்+தீது, முள்+தீது என்று நிலைமொழி ஈற்றில் லகர,ளகரங்கள் நிற்க வருமொழி முதலில் தகரம்(த்) வந்தால் நிலைமொழி ஈற்றில் உள்ள லகர,ளகரங்கள் ஆய்த(ஃ) எழுத்தாக மாறும் வருமொழியில் லகரத்தின் முன்வந்த தகரம் றகரமாகவும் ளகரத்தின் முன்வந்த தகரம் டகரமாகவும் மாறும் இவ்வாறு புணர்ச்சியால் வந்த ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும். இதற்கு ஆய்தக்குறுக்கம் என்று பெயர்.

ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும் (நன்னூல்எழுத்97)

குறில்வழி லளத்தவ் வணையின் ஆய்தம்                                   ஆகவும் பெறூஉ மல்வழி யானே (நன்னூல்எழுத்228)                                  

திருக்குறள் காட்டும் ஆய்த-எழுத்து இலக்கணம்.                                       திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரை மாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக் கொள்ளுமாறு கையாளப்பட்டுள்ளது. இப்படி அலகிட்டுக் கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை.எனவே அதனைத் தனியே குறிப்பிட்டு,தெய்வப் புலவர் திருவள்ளுவர் எடுத்துக்காட்டுத் தந்துள்ளார் இதை உணர்த்த வள்ளுவர் திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு  இரண்டு முறைகளிலும் திருக்குறளைப் படைத்துள்ளார் என்பதை எண்ணி பெருமகிழ்வு கொள்ளலாம்

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49)

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும் (476)

இந்த இரண்டு குறட்பாக்களில் ஆய்த எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டு அரைமாத்திரையால் அலகிட்டுக் கொள்கிறோம்.

 

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி (226)

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

யாண்டும் அஃதொப்ப தில் (363)                                                      

 

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு)

ஒற்கத்தின் ஊற்றாம் துணை (414)

 

இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்துக்கு ஒருமாத்திரை தந்து உயிரெழுத்தைப் போல் அலகிட்டுக்கொள்கிறோம்.

இதனால்தான் தமிழ் நெடுங்கணக்குக் கட்ட-வரிசையில் உயிரெழுத்துக் கிடைவரிசையின் இறுதியிலும், மெய்யெழுத்துக் குத்து வரிசைத் தொடக்கத்தின் மேலும் ஆய்த எழுத்தை வைத்துள்ளனர்.

மாற்றுக் கருத்து முனைவர் தமிழப்பன் எழுதிய "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்" என்ற நூலில் ஆய்த எழுத்து குறித்து கீழ்காணும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                        ஆய்தத்தின் வடிவமாக முப்பாற்புள்ளியைத் தொல்காப்பியர் குறித்துள்ளார். இன்று எழுதப்படுவது போன்று ஆய்தம் அன்றும் எழுதப்பட்டது என்று கூறுவது ஐயத்திற்கிடமாக உள்ளது. அசோகர் காலத்தில் இன்றைய ஆய்தப் புள்ளிகள் இகரமாகப் படிக்கப்பட்டதாக கோபிநாத் ராவ் கூறுகிறார்.  ஆய்தத்தின் வடிவம் பிற்காலத்து வழக்கென்றும், நச்சினார்க்கினியர் காலத்தில் நடுவு வாங்கி எழுதும் வழக்கம் இருந்ததென்றும் மு.இராகவையங்கார் கருதுகிறார்

எனவே, தொல்காப்பியர் காலத்து ஆய்தப் புள்ளிகள் எவ்வாறு அமைந்து அதை மக்கள் எழுதினர் என்று அறிய முடியவில்லை, அவை படுக்கை நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து ஆய்தத்தை அறிவுறுத்தியிருக்கலாம்.                                                 எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் காலத்ததாக அமைந்த காச குடிப் பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வருமிடத்து மேலும் கீழும் புள்ளிகளும், இவற்றிடையே வளைந்த கோடுமுடைய ஆய்த வடிவம் கிடைக்கிறது.

    ஒலிப்புக் குறைவை உணர்த்த எகர ஒகரங்கள் புள்ளி பெற்றது போல வைப்பு முறையில் ஆய்தத்திற்கு முன்னாக வரும் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒரு புள்ளியும், இரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்று கொள்ளவும் இடமிருக்கிறது.                                                      

     ஒலிப்பு நிலையமைப்பில் ஏறுமுகமாகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் அமைந்து ஒன்று, இரண்டு, மூன்று புள்ளிகளைப் பெற்றன என்று கொள்வதும் தவறாகாது அல்லது ஒலிப்புக் குறைவின் அடிப்படையில் ஆய்தம் மூன்று புள்ளியும் குற்றியலிகரம் இரு புள்ளியும், குற்றியலுகரம் ஒரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்றும் கொள்ளலாம் குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும் மற்றவை தாமே புள்ளி பெறுமே" என்பதும் இங்கு சுட்டத்தக்கது.

எனவே ஆய்தம் தமிழுக்குக் கிடைத்த ஆயுதம் எனலாம்.

 பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993


No comments:

Post a Comment