Friday, 11 December 2020

பொங்கலோ பொங்கல்

 

பொங்கிவரும் பொங்கல்

 

முன்னுரை:

மிழர்கள் கொண்டாடும் விழாக்களுள் மிகச்சிறந்தது பொங்கல் திருநாளாகும். இது உழவர் திருநாள் என்றும், அறுவடைத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. தைத் திங்களின் முதல் நாள் தமிழர்  திருநாளாக இலங்கை, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு, கனடா, ஐக்கிய இராச்சியம், ஆசுத்திரேலியா எனத் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனைத்துத் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல்  உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவே கொண்டாடப்படுகிறது

      சமூகப் பொருண்மை மிக்க விழாக்களின் வேர்கள், பாமரர்களை அதிகமாகக் கொண்ட ஊரக வாழ்க்கை முறைகளிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஊரும் உறவுமாய் நெருங்கி  வாழும் சிற்றூரோர்  சமூக ஒருமைப் பாட்டையும் ஒருமித்த இலக்குகளையும் கொண்டதாக விழாக்களை உருவாக்கினர். ஊருடன் கூடிவாழ் என்பதற்கேற்ப ஊரோடு கூடி உறவாடும் நோக்கோடு ஏற்பட்ட விழைவே விழாக்களானது. விழைவுற்று நிகழ்த்துவது விழா என வேர்ச்சொல் ஆய்வாளர் கூறுவர்.  

      தொல்தமிழகத்தில் தமிழ் மக்கள் கூடி வாழ்ந்து சுற்றமுடன் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து இன்பத்தில் திளைத்தச் செய்தியை அவர்களின் விழாமரபு உணர்த்தி நிற்கிறது. விழாக் காலங்களில் விருந்தினர்க்கு விருந்து  படைத்தும் மகிழ்ந்தனர். தொன்மைக் காலத்திலேயே இவ்வாறு பல்வேறு விழாக்களைக் கொண்டாடிய முறையைப் பார்க்கும் போது அவர்கள் அறிவிலும் நாகரிகத்திலும் மேம்பட்ட வாழ்வை வாழ்ந்து பேறு பெற்றமையை நன்கு உணரலாம்.

      யாதும் ஊரே யாவரும் கேளிர் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறி  வைத்தோர் தமிழர். பல்வேறு படி நிலைகளில் கூடிச் செயலாற்றும் பண்பு  பண்டைக்காலம் தொட்டே நிலவி வந்துள்ளது. தமிழர்கள் விருப்போடு மேற்கொண்ட விழாக்கள் அனைத்துமே கூட்டுணர்வின் வெளிப்பாடே     இவ்விழாக்களே மாந்தரைப்  பண்புடை உலகத்துக்கு  இட்டுச் சென்றது. அன்பெனும் ஊற்றை உள்ளமெங்கும்  நிறைத்து . அதன் வழியே பற்று, பக்தி, அருள், இரக்கம் என்ற நல்லுணர்வுகள் மனதிடையே விளைத்தன. குடும்ப வாழ்வையும் கூட்டு வாழ்வையும் அன்பென்ற அகவுணர்வே  கட்டமைத்தது. அன்பின் வழியது உயிர்நிலை எனும்படி கூடி வாழ்தலின் வழியே  விழாக்களும் உருவாகின.(ஊர் கூடித்தேர் இழுத்தலை அறிக) உள்ளத்தின் பெருக்கெடுத்த அன்பூற்றின் உயர்ந்த அடையாளமாகப் பொங்கலைக் கருதலாம். தொழில் மீதும் உதவியோர் மீதும் கூடி வாழ்வோர் மீதும் கொண்ட அன்பின் வெளிப்பாடே பொங்கல் விழா.  

      பொங்கல்விழா நடைபெறுகின்ற ஐந்து நாட்களும் குடும்பமாகவும் சுற்றாடலாகவும் ஊராகவும் கூடியே கொண்டாடுகின்றனர். கருத்து வேறுபாடுகள் கொண்டோரும் இந்த நாட்களிலே வேற்றுமைகளைத் துறந்து ஒற்றுமையாகி விடுகின்றனர். மாந்தர் நேயத்தின் அடித்தளம் இந்தக் கூட்டுணர்வே  
சமுதாயத்தின் கூட்டுணர்வை ஆண்டுதோறும் வலிமைப் படுத்துவதோடு, ஒருவரையொருவர்  புரிந்து இணைந்தும் செயற்படுவதற்குரிய களங்களையும் பொங்கல் விழா  உருவாக்கிக் கொடுக்கின்றது

      வேதகால வழிபாட்டு நெறிகளை அறிந்திராத பாமர மக்கள், குழுக்களாக வழிபடும் சிற்றூர்த் தெய்வ வழிபாடுகளை விடுத்து,  அனைவருக்கும் பொதுவான கதிரவனுக்கு நன்றி செலுத்துவதைப் பொதுப் பண்பாகக் கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு. அதுவே பொங்கல் விழாவாக உருப்பெற்றது. ஆரியப் பண்பாட்டின் தாக்கத்துக்கு உட்படாத தமிழர்களின் தனிப்பெரும் விழா பொங்கல் மட்டுமே. பிறப்பு இறப்பு போன்றவற்றால் உண்டாகும் தீட்டு பொங்கலுக்கு இல்லை. பொங்கல் விழா வெளிப்படுத்தும் உயர் கூறுகள் ஊரக வாழ்வியலுக்கே உரியவை.   

எளிய மக்களின் வழக்காற்று மொழிகளிலும் கூட பழைய வரலாற்று எச்சங்களைக் காணலாம். அந்த வகையில், “தை பிறந்தால் வழி பிறக்கும் , “தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகா ராசன் பொங்கல் வரவேண்டும்என்பன போன்ற சொல்லடைகளும் பொங்கல் முதன்மையினைக் காட்டுகின்றன. தமிழரின் தனித்துவங்களை மட்டுமே சுமந்த ஒரு விழாவாகப் பொங்கல் விழாவைச் சிறப்புடையதாக்கினர்.

     வழிபாடு என்றாலே  பொங்கல் வைப்பதே ஆயிற்று. இந்த அடிப்படையில் தோன்றியதே பொங்கல் விழா எனலாம். பழந்தமிழர் தாம் வழிபடும் குல தெய்வங்களுக்குப் பொங்கல் வைப்பதையே பெரும் வழிபாடாகக் கருதினர். பாம்புத் தொல்லைகளிலிருந்து விடுபட நாகருக்குப் பொங்கல் வைத்து வழிபடும். வழக்கமும் இருந்தது. எந்தவொரு வழிபாடாக இருந்தாலும் பொங்கல் வைப்பதே  முதற் செயலாக இருக்கும்.

      ஒவ்வொரு ஆண்டும் தம் ஊரில் உள்ள மாரியம்மன் மாகாளியம்மன் என்னும் பெண்தெய்வக் கோயில்களில்  நோன்பின் போது பொங்கலிடுவர்.  இதைப் பொங்க விளக்கு என்றும், மாவிளக்கு என்றும் கூறுவர்.  நோம்பு என்பதற்குச் சிரவை ஆதீனக் கவிக்டல் கந்தசாமிசுவாமிகள் மாவிளக்கு எடுத்தல் என்று கூறுவார்

 

நோன்பு கொன்று உண்ணாமை என்கை விளங்கிடவே

      யாவர்களும் நோக்கும் வண்ணம்

தேன்புது மாவிளக்கு எடுத்துக் கன்னியர்கள்

      காட்டும் விழாச்சிறப்பில் கொண்டு

தான்புகும் உற்றோர்களைக் கூய் இட்டுஉன்

தரிசனம்செய் தகையோர்க்கெல்லாம்

வான்புது மெய்விருந்து அளிப்பக் கீரநத்தப்

 பதிவளர் மாரித்தாயே  என்கிறார் மகளிர் என்று நோன்பு பற்றி அன்னையர் அருட்பதிகங்கள் என்னும் நூலில் கூறி உள்ளார்.

 

 

.      பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் வீறுகொண்டு எழுதல், கிளர்தல் எனப்பல பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் என்பது கோவில்களில் தெய்வங்களுக்குப் பூசை செய்யும் போது வைக்கப்படும் அமுதினையே குறிக்கும். அதைத் தளிகை என்றும் கூறுவர். அமுது செய்ய உள்ள இடத்தை மடப்பள்ளி என்றும் தளிகை மடம் என்றும் கூறுவர். கோயில்களில் பூசை தொடங்குவதற்கு முன் அமுது(பொங்கல் செய்தல்) செய்வதையே முதல் வேலையாகப் பூசாரிகள் செய்வர். இவ்வாறு அமுது (பொங்கல்) வைத்துத் தம் தெய்வங்களை வழிபட்ட நோக்கமே தனி ஒருமனிதனுக்கு உணவிலை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதி வாக்கை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. பூசை முடிந்ததும் அந்தப் பொங்கற் சோற்றை உருண்டைகளாக்க ஏழை பணக்காரர்  என்று வேறு பாடின்றி. அனைவர்க்கும் தரப்படும். உயிரோடு உடம்பைச் சேர்த்து வைத்துக் காப்பதும் அன்னம்தான். அதனால்தான் இந்தப் பொங்கலே சிலருக்குக்

 குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

பூம்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பணி என்னும் பாவி  எனும் பசிப்பிணிக்கு மருந்தாயிற்று.

  இதைத்தான் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணிமேகலை92-95) என்று மணிமேகலையும்

 

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே,

உண்டி முதற்றே உணவின் பிண்டம்(புறம்18) என்று புறநானூறும் கூறுகின்றன. பாரதப் போரின்போது இருதரப்புப் படைகளுக்கும் சோறிட்டுப் பசிஆற்றியதால் ஒரு சேர மன்னன் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டான்.

இதே அன்னதானத்தை அநேக உகங்கள் முன்பே காஞ்சிபுரத்தில் அம்பாளும், செய்திருக்கிறாள். இதைஇரு நாழி நெல் கொண்டு எண் நான்கு அறம் இயற்றினார்." என்று சொல்லில் இருந்து அறியலாம்.

 

தானத்தை செய்வோர்தான் பெறுவோர் பேரனைத்தும்

தக்கபேறு தக்கநேரம் தான் வந்து காப்பளிக்கும்

தற்காப்பு இதுவன்றி தான் வேறு இல்லை சொல்ல "

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாத்திரம். அதனால்தான்

கண்ண பகவானும் கீதையில், “ எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடி உண்டு கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்” என்கிறார். எனவேதான் அந்தக் காலத்தில் அன்னதானச் சத்திரங்களையும் தண்ணீர்ப் பந்தல்களையும் கட்டி வைத்தனர். கோயில் திருவிழாக்களின் போதும் சிரவை ஆதீனம் போன்ற திருமடங்களிலும் அன்னம் பாலிப்புகள் நிகழந்தன. திருமூலரும் யாவர்க்குமாம் உண்ணும் போது ஒருகைப்பிடி என்றார்.இவ்வாறுப் பல்வகையானும் அறியும் போது உலகின் உறுபசி களைவதே பொங்கலின் முக்கியக் குறிக்கோள் ஆகும். தமிழர், உண்டி கொடுத்து உயிர்காக்கும் உழவுத் தொழிலைத் தெய்வத்துக்கு இணையாகப் போற்றியிருப்பர் என்பதில் ஐயமில்லை.அதனால்தான் தொல்காப்பியமும் வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி(தொல்.மரபு82)எனக் கூறுகிறது.திருவள்ளுவர்(சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” (குறள்1031) என்தொடங்கி உழவு என்னும் ஓர் அதிகாரமே எழுதி உள்ளார். ஔவைப் பிராட்டியோ “நெற்பயிர் விளை” “பூமி திருத்தி உண்”,”;சீரைத் தேடின் ஏரைத் தேடு”, “தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது” என்றும் எழுதி வைத்தார். இவ்வாறு பலரும் உணவளிக்கும் உழவைச் சிறப்பித்துப் போற்றி உள்ளனர்.
      பொங்கல் பண்டிகையைப் பொறுத்த வரையில் எக்காலத்திலும் உழவு சம்பந்தப் பட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.  ஆடிப்பட்டம் தேடி விதை விதைத்து, அதை முளையாக்கிப் பயிராக்கி, வளர்த்து, இடர்களில் இருந்து காத்து விளைவித்துப் பயனை வீட்டுக்குக் கொண்டு வருதற்கு சில மாதங்களாகும். நிறைவில் உழவின் பயனை வீட்டுக்கு எடுத்துவரும் வேளையில் மகிழ்ச்சி இயல்பாகவே ஏற்படும். அந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்கு வித்திடும். பொங்கல் என்ற அறுவடைத் திருநாளுக்கு இந்த மகிழ்வே வித்தாக இருந்திருக்க வேண்டும். உற்பத்திப் பொருட்களை வணிகம் செய்வதன் வாயிலாக பிற தேவைகளையும் நிறைவேற்றி மகிழும் காலமும் இதுவே என்பதால் இந்த அறுவடைக்காலம் கொண்டாட்ட காலமாகவே இருந்திருக்க வேண்டும். அந்த மகிழ்வைத் தமிழர் அறுவடை விழாவாகவே கொண்டாடியிருக்கின்றனர்.. அதனால் தை மாதமே பொங்கல் விழா அமைந்தது. அதனால்தான் தைபிறந்தால்  வழிபிறக்கும் என்ற பழமொழியும் தோன்றியது.

அதற்கான சான்றுகள் இலக்கியங்களில் நிறைவே உள்ளன. 'பொருபடை தரூஉம் கொற்றமும் உழவர் ஊன்றுகால் மருங்கின் ஈன்றதன் பயனே" எனப் புறநானூறு உழவைச் சிறப்பிக்கின்றது  அரசர்கள் வெற்றிக்கு மூலகாரணமே உழவுத் தொழிலால் விளையும் பயனே என்பது முன்னோர் கருத்து. இதை வெள்ளைக்குடி நாகனார்,

     “வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்து

      பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை

      ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே” என்கிறார்.

.      மானுடச் சிந்தையில் தோன்றும் ஒப்பற்ற பண்புணர்வுகளில் தலையாயது நன்றியுணர்வு. ஒருவருக்கு உதவுதல் பொதுவான மானுடப் பண்பு. ஏற்கனவே உதவிய ஒருவருக்கு உதவுதல் ஒருவகைக் கடன். அதனால்தான் ~நன்றிக்கடன்| என்பார்கள்.தொழிலில் உழவைச் சிறப்பித்த வள்ளுவர் பண்புகளில் நன்றியறிதலைச் சிறப்பிக்கின்றார் .'எந்நன்றி  கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
                   செய்நன்றி கொன்ற மகற்கு' என்ற குறள் வாயிலாக, நன்றி மறந்தவர்க்கு உய்வே இல்லை என்கின்றார்   வள்ளுவருக்கு முன்பாகவே சங்க இலக்கியங்களில் நன்றி தொடர்பான பண்புகள் கூறப்பட்டுள்ளன. தமிழர் நன்றியறிதல் என்ற பண்பொழுக்கத்தைக் கைக்கொண்டவர்களாக இருந்துள்ளனர். அவ்வொழுக்கத்தைப் பொங்கல் விழா வாயிலாகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்

      உலகுக்கு மழையும் வெயிலும் தந்து காப்பவன் கதிரோன். கதிரவனின் செயற்றிறத்தாலே உலகம் இயங்குகின்றது. வாழ்வு நடை பெறுகின்றது. தமிழர் இதை  நன்குணர்ந்திருந்தனர். தமது வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளுக்காகப் பல்வேறு தெய்வங்களை வழிபட்ட தமிழர், உழவுத்தொழில் தொடர்பில் கதிரவனையே  நன்றிக்குரிய முதற்பொருளாகக் கருதினர்.அதனால் நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆயிற்று. ஒளியும் சூடும் தந்து காத்த கதிரவன் மேல் இவர்கள் பேரன்பு கொண்டிருந்தனர். அந்த அன்பின் வழி நின்று கதிரவன் மீதான தமது நன்றிப் பெருக்கை வெளிப்படுத்தினர்.

இக்கதிரவனையே வள்ளுவர் ஆதிபகவன்(பகலவன்)என்கிறார்; இளங்கோவடிகளும் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் எனக்கூறி தம்காப்பியத்தைத் தொடங்குகிறார்.

      இந்த நன்றி வெளிப்பாடு தமிழ் மாந்தருக்குப் பெரும் நிறைவைத் தந்தது. அந்த நிறைவே உணர்வை வலுப்படுத்துவதாகவும் பொங்கல் விழா அமைந்தது. சங்க காலத்தில் அறுவடைச் சமயத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதம் இருப்பார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் முறைமையாகப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.                                   

      இந்நாளில் தமக்கு உதவியோருக்கு அன்பளிப்புகள் வழங்குவதையும் உழவர்கள் கொண்டுள்ளனர். உழவு சிறக்க உதவிய தொழிலாளர்களுக்கு நன்றியுணர்வுடன்  புத்தாடைகள், பரிசுப்பொருட்களையும் வழங்குவர். இன்று உழவர்கள் மட்டுமல்ல, வணிகர்களும் இவ்வாறு பல அன்பளிப்புகளைத் தமது பணியாளருக்கு வழங்குவதுண்டு இந்த நெறியிலேயே தமிழ்நாட்டரசும் அரசு ஊழியர்களுக்குப்  பொங்கல் பரிசு  கொடுக்கிறது.

       தைமுதல் நாள் தெற்கு நோக்கி நகர்ந்த பகலவன்  வடக்கு நோக்கி நகரத் தொடங்குவான். கணிகர் கணக்குப்படி மகர ராசியிலிருந்து மேச ராசியில் நுழைவான். தை மாதம் உத்தராயண புண்ணிய காலம் என்பர். அதாவது சூரியன் தை மாதம் முதல்  ஆனி மாதம் வரை வடதிசையில் சஞ்சரிக்கும் காலம்.  இதை மகர சங்கராந்தி என்பர்.   உத்தராயணத்தின் ஆரம்பம் என்கின்ற இந்த வேளையில் சூரியனுக்கு ஈகம் செய்து வணங்கும் மரபும் இணைந்திருப்பதனால் இத்தமிழர் பண்டிகை சைவ சமய சார்பிலும் முக்கியம் பெறுகின்றது

இப்பொங்கல் விழாவைத் தமிழர் மார்கழி முதல் நாள் முதல் தைத்திங்கள் இறுதி வரைப் பல்வேறு வகையிலும் கொண்டாடுகின்றனர்.தைப்பொங்கல் விழா  மார்கழி முதல் நாளே தொடங்கி விடுகிறது

   இவ்விழா வருவதற்கு ஒரு திங்களுக்கு முன்பே விழாவினை வரவேற்கத் தொடங்கி விடுவர். மார்கழி முதல் நாளே கன்னியர் எல்லாரும் ஒன்று கூடிச் சென்று பொய்கையிலும் ஆற்றிலும் புனலாடி வருவர், வரும்போதே நுணா, அரசாணி மலர்களைப் பறித்து வருவர். வாசலில் புள்ளிகள் வைத்துக் கோலம் இடுவர், இது சிறுமிகளின் கலைத்திறமை வளர ஏதுவாயிற்று. கோலத்தின் நடுவில்  இளங்கன்றுச் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பர்.பீர்க்கு, பூசணி, செம்பருத்தி போன்ற பூக்களைச் சாணப்பிள்ளையார் மீது பொதிந்து வைப்பர். அவை மாலையில் வாடிவிடும். தைமுதல் நாள் ஒரே ஒரு பிள்ளையாரை வைத்து வழிபடுவர் இப்படி ஒரு திங்கள் முழுவதும் வைத்த பிள்ளையார்களைப் பதனப்படுத்தி வைப்பர். இதனைப் பொங்கல் முடிந்து 8 அல்லது 15 நாட்களுக்குப் பிறகு(கிட்டத்தட்ட தைப்பூசம்அன்று) சிறுவீட்டுப்பொங்கல் கொண்டாடப்படும் போது ஆற்றில் அல்லது ஏதாவது ஒரு நீர்நிலையில் கரைத்து விடுவர்.

.      இதைப்பாவை நோம்பு என்றும் கூறுவர் அப்போது   ஆண்டாள் திருப்பாவையையும்   மாணிக்கவாசகர் திருவெண்பாவையையும் பாடி வழிபடுவர். எல்லாக் கோயில்களிலும் வைகறையிலேயே பூசை நடக்கும். பாவை நோன்புக்கும்  பொங்கலுக்கும் தொடர்புண்டு. சிறுமியரால் கொண்டாடப்படும் இதுவே தைநீராடல் என்று ஆண்டாள் நாச்சியாரால் குறிக்கப்படுகின்றது. ஆனால் ஆண்டாள் காலத்தில் பாவை நோம்பு மார்கழித் திங்களில் தொடங்குவதாகவே மாற்றம் பெற்றுள்ளது. அவர் இயற்றிய திருப்பாவையும் “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்” என்று தொடங்குகிறது. அதாவது பாவை நோம்பு விழா மார்கழி முழு மதியில் தொடங்கி தைத்திங்கள் முழு  மதியில் முடிவடைகிறது. தைத் திங்களில் பொங்கல் விழாவின் ஒருபகுதியாகக் கொண்டாடப்பட்ட பாவை நோம்பு பிற்காலத்தில் சமயத்தாக்கம் பெற்று மார்கழித் திங்களுக்கு மாற்றப்பட்டிருக்கலாம்.

      தைத் திங்களில் பாவை செய்து நீராடி வழிபடுவதே தை நீராடல் விழா. இதில் வழிபடப்படும் பாவை மண்ணால் செய்யப்படுவது. மண் என்பது  நிலத்திற்கான குறியீடு. உற்பத்திக்குக்  களனாகி வாழ்வளிக்கும் நிலத்தை வழிபடுவதே இவ்விழாவின் நோக்கம். இவ்விழாவில் பறை இசைத்து ஆடப்படும்  குரவைக் கூத்து, வள்ளைக்கூத்து, உலக்கை இடித்து ஆடும் ஆட்டம் போன்றவை இடம் பெற்றன.இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும்  காணக் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் பொங்கல் விழாவிற்கு புதியீடு என்று பெயர் இருந்தது.   தை- என்னும் சொல் சங்க நூல்களில் பல இடங்களிலும் வருகிறது.   , தைத்திங்கள் தண்கயம் படியும்” (நற்றிணை 80) ,

 

தைஇத் திங்கள் தண்ணிய  தரினும்” (குறுந்தொகை 196)  

 

தைஇத் திங்கள் தண்கயம் போல்’ (புறநானூறு)  

 

தைஇத் திங்கள் தண்கயம் போது’ (ஐங்குறுநூறு)  

 

தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ (கலித்தொகை)  

 

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,  

வையை! நினக்கு மடை வாய்த்தன்று.  

மையாடல் ஆடல் மழபுலவர்மாறு எழுந்து,  

பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர்                                             தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,  

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?  

நீ உரைத்தி, வையை நதி! - (பரிபாடல் 11)   என

மார்கழி முடிந்து வரும் தை தெள்ளிய நீர் ஓடும் காலம். அன்ன நடை, அழகு நடையுடன் வரும் ஆற்றுக் கன்னி,மக்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்கிறாள்.   எனப்பலவாறாக தைத்திருநாளின் சிறப்பியல்புகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன.                                                                 சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றி குறிப்பிடும் போது,
மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்
என கூறுவதன் வாயிலாக பொங்கல் என்ற சொல்லை முதல் தடவையாக இலக்கியத்தில் பதிவு செய்கின்றது.

 

தைம்மதி பிறக்கும் நாள் தமிழர் தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்கிறார் பாரதிதாசன்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாரதியாரும் பாடியுள்ளார்.

சோழர்காலத்தில் புதியீடுப் பண்டிகை என்ற   பெயரில் புதிய அரிசியிட்டுப் பொங்கும் விழா நடைபெற்றதாகத் திருவொற்றியூர்ச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. முதல் ராசேந்திரனின், காளகசுத்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலைத் தொல்லியல் அறிஞர் கிருட்டிணமூர்த்தி, வெளியிட்டுள்ளார். தை முதல் நாளான கதிரவனின் வட செலவு தொடங்கும் நாளை மகர சங்கராந்தி என்றே வட இந்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு படைக்கப்பட்ட  திருவமுதை நாம் பொங்கலாகக் கொள்ளலாம் 

மணிமேகலைக் காப்பியத்தின்   ஆரம்பமான விழாவரை காதையில்  இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது..   அந்தக் காலத்தில் இவ்விழா இருபத்தி எட்டு நாட்கள் கொண்டாடப்பட்டது .  இதைச் சிலம்பும் வலியுறுத்துகிறது. இதுவே நாளடைவில் ஐந்து நாட்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.

      மார்கழித்  திங்கள்  தொடங்கி வீடுகளையும் கோயில்களையும் பொது மன்றங்களையும் ஒட்டடை அடித்துத் தூய்மை செய்து சுண்ணாம்பும் காவியும் கோபியும் பூசுவர். வீதிகளில் உள்ள புல்பூண்டுகளை அகற்றி சுத்தம்  செய்து, புதுமணல் பரப்புவர். ஆடிப்பட்டம் தேடி விதைத்தது மார்கழிப் பனியால் பால்பிடித்து அறுவடைக்கு முற்றி நிற்கும் பயிர்கள். அந்தத் திங்கள்தான் பூசணி அரசாணி (பரங்கி) தட்டைக்காய், பச்சைபயறு, அவரை, வள்ளிக்கிழங்கு போன்ற கொடியில் காய்த்த காய்களும் நிறைந்திருக்கும். அறுவடை செய்த தவசங்கள்(தானியம்) களத்து மேட்டில் நிறைந்து இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். இதைத்தான் அடி காட்டிலும் நடு மேட்டிலும் முடி வீட்டிலும் என்பர். நிலம், மாடு, மக்கள் மூவரும் மகிழ்வர்   புதிய வருவாயும் வரும். புத்தாடை வாங்குவர், சிலர் புதுப்பானைகளை வாங்குவர்

 

போகி

போகிப் பண்டிகை என்பது மார்கழித் திங்கள் முடிந்து தைத் திங்கள் தொடங்கும் நேரம் வருகிறது.  பழைய குப்பை கூளங்களைப் போக்குவர்.பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.  மார்கழி இறுதிநாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படும்.  பொங்கல் திருநாளுக்கு முதல் நாளைப் போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) அன்று வீடுகளுக்கும் கோவில்களுக்கும் காப்புக் கட்டுவர். போகியன்று  வீட்டின் கூரையில்   பூளைப்பூ, ஆவிரம்பூ, வேப்பிலை மாவிலை இவற்றைச் சேர்த்துச்  செருகி வைப்பர் இதைக் காப்புக் கட்டுதல் என்பர், வீட்டினுள் எந்த நோய்க்கிருமிகளும் வரத்தடை செய்யப் பட்டது எனக் கருதினர். அன்றும் பொங்கல் வைத்து சங்ராந்திக்குப் படைப்பர். அந்த உணவைக் காலையில் காளைக் கன்றுகளுக்கு உண்ணக் கொடுப்பர். இதை மகர சங்கிராந்தி என்பர்

 

தைப்பொங்கல்

தைமுதல்நாள் நாளைத் தமிழர்கள் தைப்பொங்கல் நாளாகக் கொண்டாடி வருகின்றனர் அன்று தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என ஆரவாரம் செய்தல், பொங்கலைப் பரிமாறி உண்ணல், புத்தாடை அணிதல், முன்னோர்க்குப் படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்குதல் போன்ற  செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந் தொட்டு இருந்து வருகின்றன.  

அன்றைய நாளைப் பெரிய பொங்கல் என்பர். அன்று ஒரு பொது இடத்திலோ, நீர் நிலைகளின் கரையிலோ, அல்லது அவரவர் வீடுகளிலோ மக்கள் திரண்டு பொங்கல் வைப்பர், மூன்று கல்லை வைத்து அடுப்புக் கூட்டி அதன் மீது புதுப்பானையை வைப்பர். அதில் தாம் வழிபடும் தெய்வத்தை வேண்டி நிறைகுடம் தண்ணீரை ஊற்றிப் புத்தரிசியை இடுவர். பொங்கல் பொங்கி வரும். முதலில் பொங்கல் எந்தத் திக்கில் விழுகிறது என்று பார்த்து அந்த ஆண்டின் பலாபலன்களை  அறியும் வழக்கமும் உண்டு. பொங்கல் பொங்கி வரும்போது எல்லாரும் கூடி நின்று பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்புவர்.இவ்வாறு பொங்கிய பொங்கற் பானையை இறக்கி நடுவீட்டிலோ வாசலிலோ வைப்பர் அந்தப் பானையில் புது மஞ்சள் செடி அல்லது இஞ்சிச் செடியைக் கட்டுவர். இருபுறமும் செங்கரும்புச் சல்லையை நிறுத்தி வைப்பர். பானைக்குச் சந்தனம் குங்குமம் இட்டுப் பூசை செய்வர். சிலர் சிறிது பொங்கலை ஓர் ஏனத்தில் எடுத்துச் சென்று தம்மூர் பிள்ளையாருக்கு வைத்து வழிபடுவதும் உண்டு. பொங்கலில் வெல்லத்தைப் போட்டு இனிப்பாகத் தருவர். அவ்வாறு அல்லாமல் அரசாணிக்காய், அவரைக் கொட்டை, கத்திரிக்காய் போட்ட குழம்பை ஊற்றியும் உண்பர். அன்று ஆடியும் பாடியும் ஆண்டவன் கோவிலுக்குச் சென்றும் மகிழ்வர்,

      உலகில் பேசப்படும் பல மொழிகளுக்கும் அரிசி என்ற சொல்லைத் தமிழே வழங்கியிருக்கின்றதுஎன்பதிலிருந்து தமிழருக்கும் அரிசிக்கும் உள்ள நெருக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். பின்னாட்களில் நிறைகுடத்தின் கீழ் நெல் அல்லது அரிசி வைக்கும் வழக்கமும், வைதீக ஆகம முறைப்படி நடக்கும் சடங்குகளில் மஞ்சள் அரிசி தூவி வாழ்த்துவதும் அரிசியைத் தமிழர் போற்றியiமைக்குச் சான்றாகின்றன. தமிழருடைய உணவுகளில் அரசியாகத் திகழும் அரிசியை முதன்மையாகக் கொண்ட பொங்கல் விழா தமிழரின் உணவுப் பண்பாட்டின் உயரிய அடையாளமாகத் திகழ்கின்றது தமிழர்களின் முதன்மை உணவு அரிசியே. 'வரப்புயர நெல் உயரும்" என்ற ஒளவையின் கூற்றே இதற்குச் சான்றாகும். உணவே உயிரிருப்பின் தளம். அத்தளத்தின் களம் நெல் விளையும் வயல். வயல் வழியே விளைந்து வருகின்ற அரிசியோடு வெல்லம், பால் சேர்த்து பொங்கும் மரபு தென்னிந்தியர்களிடம் மட்டுமே காணப்படுவதாகும்

'உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே..." எனப் புறநானுறு கூறுகின்றது.
~
இந்திரருக்குரிய அமிழ்தம் தமக்கு வந்து கூடுவதாயினும் அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டவர் இல்லை| என்கிறது இப்பாடல்.
    

 

பொங்கல்விழாவின் உயர்வானதொரு அங்கம் விருந்தோம்பல். பொங்கல்விழா ஒரு  குடும்பத்துக்குள் நிகழ்த்தப்பட்டாலும் அச்சுற்றாடலின் வாழும் தனித்தோர், துறவியர், வறியோர், பிறவினத்தோர் எல்லோரையும் தேடிச் சென்று பொங்கலைக்  கொடுத்து மகிழ்வர். அப்படிப்பட்ட வீட்டுக்கு அழைத்து வந்தும் பொங்கல் கொடுப்பர்.
பிறருக்குக் கொடுத்துத் தாமும் உண்ணும் பண்பை வளர்க்கும் பண்பறி களமாகவும் பொங்கல் திகழ்கின்றது.

மாட்டுப் பொங்கல்

  அடுத்த நாள் பட்டிப் (மாட்டு) பொங்கல் என்பர் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே மாட்டுப் பொங்கல் நாளாகும். . மாடு வளர்ப்பவர்கள் அனைவரும் இதைக் கொண்டாடுவார்கள்.அன்று மாட்டின் பாலைக் கறக்க மாட்டார்கள். கன்றுகள் குடிக்க விட்டு விடுவார்கள். மாடு என்றால் செல்வம் என்பதே தமிழ் கூறும் பொருள். தமிழர்களின் மிக நீண்ட வாழ்வியலில் மாடுகள் ஓர் அங்கமாகவே திகழ்ந்து வந்துள்ளன.மாடுகளுக்காகவே  பெரும் போர்களும் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. தொல்காப்பியம் கூறும் புறத்திணையில் காணப்படும் வெட்சி, கரந்தை எனும் போர் மரபுகள் ஆநிரை கவர்தலையும் காத்தலையும் அடிப்படையாகக் கொண்டன.
      மாடு என்ற விலங்கினம் உடலளவில் பலமானது என்ற போதிலும் மென்னியல்பு கொண்ட விலங்கான, மாந்தரோடு இயைந்து இணைந்து வாழும் உயிரினமாகவே இருந்தது. தாம் வளர்க்கும் மாடுகளை உழவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவே கருதினர்.அவற்றிற்கு மனிதர்களைப் போலவே பெயரும்வைத்து அழைப்பர் பெண் மாடான பசு மாந்தரின் உணவுத் தேவைகளைக் கணிசமாக நிறைவேற்றியது. ஆண் மாடான காளை உழவு, பயணம் போன்ற தேவைகளில் பெரும்பங்கு வகித்தது. ஆனைந்து என்னும் வேள்விப் பொருளைத் தருவதும் மாடுகளே. பண்டைய வாழ்வியல் மக்களின் செல்வத்தின் அளவு மாடுகளை வைத்தே  கணக்கிடப்பட்டது. செல்வத்தைக் கணக்கிட எத்தனை ஏர்ப்பண்ணயம் என்று கேட்கும் வழக்கமும் உள்ளது.  மாடுகளைத் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றிய தமிழர், மாட்டிறைச்சி உண்பதை முற்காலம் முதலே தவிர்த்து வந்துள்ளனர். இறந்த எருதுகளைக்குச் சமாதி கட்டி வழிபடும் வழக்கமும் இருந்தது

  உழவுத்தொழில் சிறக்க உதவியோர் வரிசையில் கதிரவனுக்கு அடுத்த இடத்தை மாடுகள்  பிடித்துக் கொள்கின்றன. இவை இரண்டுமே பயனை எதிர் பாராமல் மாந்தருக்கு உதவி வருகின்றவை. அதனால் தமிழரின் உயர்ந்த நன்றிக்கு உரியவையாகி விடுகின்றன. அந்த நன்றியறிதலைப் பெருங் கொண்டாட்டமாகவே நிகழ்த்தி வருகின்றனர் தமிழர். கதிரவப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இதைப் பட்டிப் பொங்கல், கன்றுப் பொங்கல் என்றும் அழைப்பர். பொங்கல் நாளான்று காலை, மாடுகள் கட்டும் தொழுவத்தைத் தூய்மை செய்வர். மாடுகளை நன்றாகக் கழுவி அவற்றையும் தூய்மை செய்வர். அவற்றின் கொம்புகளைச் சீவி கூராக்கி, பளபளக்கும் வண்ணங்கள் தீட்டுவர். கொம்புகளில் குஞ்சங்களும் சலங்கைகளும் கட்டி அழகு படுத்துவர். கழுத்தில் தோல்பட்டடைகள் அணிவித்து மணிகளும் கட்டிவிடுவர். மாடுகளின் நெற்றியில் பொட்டும் வைப்பர். காளைகளுக்குப் புதிய மூக்கணாங் கயிறும், தாம்புக் கயிறும் அணிவிப்பர்.
ஏர், கலப்பை போன்ற உழவுக் கருவிகளையும் தூய்மை செய்வர். எல்லாவற்றையும் ஓரிடத்தில் வைத்து பொட்டு  இடுவர்.  பச்சைப்பந்தல் இட்டு,தென்னம் பாளை கமுகின் கூந்தலையும் காட்டுப் பூக்களையும் புங்கமரத் தழைகளையும் தொங்கவிடுவர் பின்னர் மாலைப் பொழுதில் தொழுவத்துக்குள் அல்லது அருகே பொங்கல் செய்யத் தொடங்குவர். முதல்நாள் பொங்கலைப் போலவே பல்வகைப் பழங்களும் தானியங்களும்  பொங்கலின் போது படைக்கப்பட்டிருக்கும். மாடுகளுக்குப் பிடிக்கும்  என்பதற்காக வெண்பொங்கல் செய்யும் வழக்கமும் உண்டு. பொங்கிய பின், விளக்கேற்றி, ஒளியேந்தி மாடுகளை வழிபடுவர். எல்லா மாடுகளுக்கும் பொங்கிய பொங்கலையும் பழங்களையும் காய்கறிகளையும் ஊட்டுவர்.  நிறைவில் 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல், பட்டி பெருகுக, பால் பானை பொங்குக, நோவும் பிணியும் தெருவோடு போக" என்று கூறிப்பாடுவர் மாடுகள்  பொங்கல் உண்டபின்  அருந்திய மிகுதி நீரைத் தொழுவம் எங்கும் தெளிப்பர்.
     இவ்விழாவிற்கு மாடில்லா மற்றவர்களையும் மக்கள் மருமக்களையும் அழைப்பர். எல்லா மாடுகளுக்கும் பொங்கல் ,பழம், கரும்பு கொடுப்பர், அதன் கால்களைத் தொட்டு வணங்குவர். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும்.இறுதியில் அனைவருக்கும் பரிமாறுவர்.

      ஐந்தறிவு கொண்ட விலங்குதானே, நன்றி சொன்னால் அதற்குப் புரியவா போகின்றது? என்றெண்ணி விட்டுவிடாமல் மாடுகளையும் மாந்த நேயத்தோடு போற்றும் பண்பு  மானுடத்தின் உயர்ந்த இயல்பாகும்.  தமிழரின் நன்றியறிதலின்   சிறப்பு மாடுகளுக்கு நன்றி கூறும் பண்பு. இந்தப் பண்பொழுக்கத்தின் அகவுணரவைப் புரியாமல் வெளியே நின்று நோக்குவோருக்கு, மாடுகளுக்கு நன்றி சொல்வது மூட நம்பிக்கையாகத் தோன்றக் கூடும். ஆனால் அதுவே நன்றி கூறும் மானுடப் பண்பின் உச்சநிலை என்பதை உணர வேண்டும். ஐந்தறிவு கொண்டதும் வாய் பேசாததுமான மாடுகள் உழவருக்கு ஆற்றிய உறுதுணையை மனதில் இருத்தி, அவற்றைத் தமது உறவுகளாகவே போற்றினர் தமிழர். பிறவுயிர்களையும் தம்முயிர் போல் போற்றும் மாந்த நேயத்தை மாட்டுப் பொங்கல் விழா வெளிப்படுத்துகின்றது.   மாடுகளை மந்தைகளாக மேய்க்கச் செல்லுமிடங்களில் மாடுகளைக் கவர்ந்து செல்லப் பகைவர்கள் வருவர். அவர்களை எதிர்த்து நின்று மாடுகளைக் காக்க வேண்டிய வீரமும் மேய்ப்போருக்கு இருக்கவேண்டும். மேய்ப்போரின் வீரத்தை அடையாளம் காணவும் வலிமையை அறியவும் ஏறுதழுவுதல் பயன்பட்டது.

காணும்பொங்கல்  

பொங்கல் கொண்டாட்டங்களில் இது நான்காம் நாள் கொண்டாடமாகும். முதல் மூன்று  நாட்களும் தமது குடும்பச் சூழலுக்குள் பொங்கலைக் கொண்டாடிய தமிழர், இந்த நான்காம் நாளைச் சமூகக் கொண்டாட்டமாக்கினர். ஊர் மக்களோடு ஒன்றிணைந்து அன்பும் பண்பும் சிறக்க இந்நாளைச் சமூகப் பெருவிழாவாகக் கொண்டாடுவர்.இந்நாளிலே குடும்பமாகச் சென்று, பெரியோர்களை நாடி வாழ்த்துகள் பெறுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நாளிலே கிடைக்கப் பெறும் பெரியோரின் ஆசி ஆண்டு முழுமைக்கும் நன்மை தரும் என்று நம்பினர். இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்துத் தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இதைப் பூப்பறிக்கும் நோம்பு என்றும் கூறுவர். இன்று கன்னிப் பெண்கள் வட்டமாய் ஒன்றுகூடி வளைகரங்கள் கொட்டிக் கும்மி அடிப்பர். பின்னர் தாம் கொண்டு வந்த வீட்டில் சுட்ட முறுக்கு,கடலைபொரி,அவல் செங்கரும்பு முதலிய தின்பண்டங்களைப் பகிர்ந்து உண்டு மகிழ்வர். பலர் ஒன்று கூடிப் பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்குச் சென்று மகிழ்வர். குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். பெரியவர்களிடம் ஆசியும் காசும் பெறுவர். ஒருவரையொருவர் கண்டு, அன்பு நெகிழப்  பேசிக் களிப்பர்.

பெண்கள் மார்கழித் திங்களில் பதனப்படுத்த  வைத்த  சாணப் பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைத்து விடுவர். அதற்குச் செல்லும் போது வீதி வழியாக பாட்டுப் பாடிக் கொண்டு செல்லுவர். அந்தப்பாடல்கள் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.

அன்று பல்வகைக் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருப்பர். நான்காம் நாளான காணும் பொங்கல், கலைநிகழ்ச்சிகளும் விளையாட்டுகளும் நிறைந்த விழாவாக, சமூக ஒருமைப்பாட்டை மீள வலியுறுத்தும் பொதுமைக்களமாக இன்றும்  திகழ்ந்து வருகின்றது. சில ஊர்களில் வழுக்குமரம் ஏறுதல், உறி அடித்தல் ஏறு தழுவுவுதல்(சல்லிக்கட்டு) போன்ற பல விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெறும்

 தற்போதைய தகவல் தொழில் நுட்பக் காலத்தைப் போலன்றி தொலை தொடர்பு வசதிகள் இல்லாத அந்நாட்களில் சிலர் தங்களுக்குத் தெரிந்த தங்களின் பாரம்பரியக்கலைகளை இளைய தலைமுறையினருக்குக் கற்றுத் தந்தனர்.அதனால் தவில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதசுரம், இன்னிசை வாய்ப்பாட்டு, சிலேடையுடன் கூடிய பேச்சுக்கலை போன்ற கலைகள் வளர இவ்விழாக்கள் உதவின.

பெரும்பாலும் கிராமியக்கலைகள் யாவும் இங்கு வெளிப்படும்.      கிளித்தட்டு, கபடி, சடுகுடு தலையணைச் சண்டை போன்ற விளையாட்டுகளுடன் பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் இந்நாளில் நடைபெறும்.
இந்நாளிலேதான் ஏறு தழுவுதல் என்ற பழந்தமிழர் விளையாட்டான சல்லிக்கட்டும் இடம் பெறுகின்றது. காளை மாடுகளை எப்போதும் பலம் மிக்கதாகவே தமிழர் வளர்ப்பர். உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் வலுவான காளைகள் வேண்டும். இந்தக் காளைகள் சில பொழுதுகளில் கட்டுக்கடங்காமல் திமிறிப் பாய வல்லவை. அவ்வேளை இக்காளைகளை அடக்கும் வல்லமைகளையும் நெறிமுறைகளையும் ஆண்கள் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறான காளைகளை அடக்க வல்ல ஆண்கள் ஊர் நடுவே வீரர்களாகவே கணிக்கப்பட்டனர். இவ்வாறு காளைகளை அடக்கும் இளைஞர்களுக்கே தமது மகளைத் திருமணம் செய்து வைப்போம் எனப் பல பெற்றோர் கருதி வந்துள்ளனர். போர்க்களத்தில் வீரர்களை அடையாளம் காணமுன்,  கிராமத்து மக்கள் ஏறுதழுவுதல் வீரவிளையாட்டின் வழியே வீரர்களை அடையாளம் கண்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏறுதழுவுதல் பற்றிய பல செய்திகள் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

பிற்காலத்தில் மாடுகளின் கழுத்தில் பரிசுப் பொருட்களைக் கட்டிவிட்டு ஓடவிடுவர். அந்தக் காளையை அடக்குவோர் அந்தப் பரிசை எடுத்துச் செல்வர். அதில் உலோகக் காசுகளைக் கட்டிவிடும் வழக்கமும் ஏற்பட்டது. கலகலக்கும் உலோகக்  காசுகளைச் சல்லிக்காசு என்றழைக்கும் வழக்கம் கிராமங்களில் உள்ளது. இதுவே  சல்லிக்கட்டு என்றழைக்கப் பட்டு இன்று ஜல்லிக் கட்டாக மருவி நிற்கின்றது. இதனை ஒரு சாரார் மஞ்சு விரட்டு என்றும் அழைத்து வருகின்றனர் ஆனால் இதை இலக்கிங்களில் ஏறுதழுவுதல் என்றே குறித்தன.. பொங்கல் விழாவின் போது இவை பெரும்போட்டிகளாக நடத்தப்படும். இளைஞர்கள் ஆர்வத்தோடு இதில் கலந்து கொள்வர். சிலர் இசைக்குத் தகுந்தாற் போல் ஆடுமாறு எருதுகளைப் பழக்கி இருப்பர் அன்று அந்த ஆடல்களை அனைவர் முன்னும் நிகழ்த்திக் காட்டுவர். இந்த எருதுகளை சலகை எருதுகள் என்பர். மாட்டு வண்டிப் பந்தயம் (ரேக்ளா) என்பது மாடு பிடிப்பது போன்றே மாட்டை விரட்டுவதில் உள்ள வல்லமையை அளவிடும் ஒரு விளையாட்டு. விவசாய உற்பத்தி முறையில் மாட்டை நிர்வகிக்கும் திறனை அளவிட இப்போட்டி பயன்பட்டுள்ளது

    இவ்வாறான பாரம்பரிய விளையாட்டுகளை உயிர்ப்போடு காத்துச் செல்வதிலும் பொங்கல்விழா கணிசமாகப் பங்காற்றி வருகின்றது.

     இந்நாளைக் கணுப்பொங்கல் என அழைக்கும் ஒரு வழக்கமும் இருக்கின்றது. இந்நாளில் கணுப்பிடி என்னும் ஒருவகை நோன்பைப் பெண்கள் கடைப்பிடிப்பர் என்றும், தமது உடன் பிறந்த ஆண்மக்கள் நலமாக இருக்க வேண்டும் என வேண்டி இந்த நோன்பு கடைப்பிடிக்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நாளில் சல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடப்போகும் ஆண்கள், புண்படாது நலமாகத் திரும்ப வேண்டும் என்று பெண்கள் வேண்டுவதே இயல்பானதே. இப்போது இந்த நோன்பு பெரிதும் வழக்கத்தில் இல்லை

சிற்றில் பொங்கல்:                                                                                 

      சிற்றில் பொங்கல் இப்போது பெருவழக்கில் இல்லை யென்றே கூறலாம். தொடர்ந்து  நான்கு நாள் கொண்டாட்டத்தின் பின் வீட்டுப் பெண்கள் பலரும் சோர்வடைந்து இருப்பர். இந்நிலையில் இந்த ஐந்தாம் நாளில் வீட்டிலுள்ள சிறு பெண்களே சமையல் செய்யப் பணிக்கப்படுவர். அதாவது விடலைப் பருவத்தினரான சிறு பெண்கள் பெரியோருடைய துணையுடன் தாமாகவே சமையல் செய்து பெரியோருக்குப்  பரிமாறுவர். இப் பெண்கள் சமையலைக் கற்றுக் கொண்டு, ஏனையோருக்குப் பரிமாறும் முறைகளைத் தெரிந்து கொள்ளும் நாளாகவும் இது அமைகின்றது. இந்நாளில் இவர்களின் சமையல் திறனை ஊக்குவித்துப் போற்றுவர்  
      இவ்வாறாக பல்வேறு சிறப்புகளுடன் இந்த ஐந்து நாட்களும் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டன. இதுபோன்று தொடர்ச்சியாகக் கொண்டாடும் இனஞ்சார்ந்த விழாக்கள் வேறில்லை

         இதற்கு அடுத்த நாள் முதல் பெண்கள் முன்னிரவில் நிலவொளியில் ஒருபொது இடத்தில் கூடிக் கும்மி அடிப்பர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான சிற்றன்னங்களைச் செய்து வருவர், அதை எப்படிச் செய்தோம் என்றெல்லாம் பகிர்ந்து கொள்வர். இதை ஒரு சமையற் கலை போட்டி என்றே கூறலாம். விழா முழுமதி நாளன்று நிறைவுறும். இவ்விழாவை நிலாப்பிள்ளைக்குச் சோறுமாற்றுதல் என்று கொங்கு நாட்டில் கூறுவர். 

முடிவுரை

      ஊரில் வாழும் பெரியோர்கள் பலரும் இந்தப் பொங்கல் விழாக்களை ஊர் விழாவாக முன்னின்று நடத்துவர். அவரிலும் மூத்தோர் கூடவே நின்று நல்ல அறிவுரைகளை வழங்குவர். அவ்வாறான பெரியோரை இளையோர் தேடிச் சென்று ஆசிகள் பெறுவர். அப்பெரியோரை மனத்திருத்தி உயர்வாகப் போற்றுவர். பொங்கல் விழா வாயிலாகப் பெரியோரைப் மதிக்கும் பண்பு சிறப்பாகவே போற்றப்பட்டு வருகின்றது. அவர்களையே தமது வழிகாட்டியாக்கி அவர்களைப் போலவே  செயற்படவே முனைவர்.  இந்தப் பொங்கல் விழா சிறியோருக்குப் பண்பறிவிக்கும் ஒருவகைப் பள்ளியே. தமிழரின் மிக நீண்ட வரலாற்றோடு இணைந்து வலுவான தளத்தில் உயர்ந்த பண்பாட்டின் குறியீடாக இயங்கி வருகின்றது பொங்கல்விழா

     நெடிய வாழ்வியலைக் கொண்ட இனத்தின் அனைத்து அசைவுகளிலும்  கலையின் இயக்கம் இரண்டறக் கலந்திருக்கும். அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நடத்தையிலும் அது  இழையோடிக் கொண்டிருக்கும். கலை வெளிப்பாடுளுக்கான சிறந்தவொரு களமாகவும் பொங்கல் விழா த் திகழ்கின்றது. பரதம், கர்நாடக இசை போன்ற வைதீக நெறிகளோடு கலந்துவிட்ட தமிழர் கலைகளை விடவும் நாட்டுப்புற மக்கள் போற்றிவரும் கலைகளிலேயே தமிழரின் பாரம்பரிய மரபுகளையும் தனித்துவங்களையும் அடையாளம் காணலாம். இதற்கு பொங்கல் விழா விரிவான களங்களை அமைத்துக் கொடுக்கின்றது.
    உலகளாவிய நிலையில் தனித்துவமான இனங்கள் பலவும் உலகமயமாதல் என்ற பேராயுதத்தால் தாக்குண்டு, மெல்ல மெல்லத் தமது தனித்துவங்களை இழந்துவரும் அபாயம் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் இவ்வாறான இனங்கள் தமது தனித்துவ  நடத்தைகளின் வேர்களைக் கண்டறிந்து, அவற்றைத்                    தலைமுறைதோறும் புகட்டுதல் அவசியமாகும். தமிழரைப் பொருத்தளவில் தைப்பொங்கல் விழாவை முழுமையாகப் புரிந்து கொண்டாலே போதுமானது. தமிழினத்தின் தனித்துவ வாழ்வியல் சிறப்பியல்புகளை எளிதில் அடையாளங்காணப் அது வழிவகுத்து விடும். தாயகங்களில்  மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் நிரந்தரமாக வாழத் தலைப்பட்டு விட்ட தமிழர், தமது வாழ்தளங்களில் இனஞ்சார் பண்பாட்டு விழுமியங்களையும் மரபுகளையும் பேணிச் செல்லவல்ல களமாகவும் பொங்கல்விழாவே திகழ்கின்றது. எனவே நாமும் மரபு நிலைதிரியின் பிறிது பிறிதாகும் என்று தொல்காப்பியர் கூறிய விதியைப் போற்றிச்  சிறந்த மரபுரிமையான விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்து அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்ப்போமாக!.
           பொங்கலைப் போற்றி எமதெழில் காப்போம்.

No comments:

Post a Comment