களவியல் 1-12-2019
காதல் காதல் காதல்
காதல் போமாயின்
சாதல் சாதல் சாதல்
’’காதல் ஒருவனைக் கைப்பிடித்தே... அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தே’ன்னு பாரதி சொல்லியிருக்கிறார்
இந்த உலகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் வியப்பான ஒருநிகழ்வு தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் அந்தக் காதல் வாழ்வுதான்
. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது. அகத்திணை என்பது காதல் வாழ்க்கை. இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. நம்மைப் பெற்று, வளர்த்துவிடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும். அதற்குமேல் நமக்கு நம்பகத் தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை. ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஓர் ஆண். பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல. இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், அவை வேறுவேறு தான். 1.
ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும், குடிநீரும் போல ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இந்த வேறுபாட்டைத் தான் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசி வரை ஓர் உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை. இப்படி கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையோடு வாழவேண்டுமெனில், அந்தக் காதல் அவ்வளவு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.ஒருவர்மீது ஒருவர் குறையாத அன்பு உடையவர்களாக இருத்தல் வேண்டும்
காதல் இன்பத்தைத் துய்ப்பதில், களவு, கற்பு என்ற இரு வேறு நிலைகள் உள்ளன. காதலனும் காதலியும் தொல்காப்பியர் கூறும் பால் வரைத் தெய்வம்’(விதி) என்ற ஊழின் துணையால், முன்பின் அறியாதவர்களாக இருந்தாலும் ஒரிடத்தில் சந்தித்துக் காதல் கொள்ளுகின்றனர் .கலந்து இன்பம் துய்க்கின்றனர். இதனைக் களவு என்று. அகப்பொருள் இலக்கணம் கூறும். பிறர் பொருளைக் கவர்வது இரண்டு வகை ஒன்று களவு மற்றொன்று சூது.களவு என்பது பிறர் பொருளை அவர் அறியாது கவர்தல். சூது என்பது சூழ்ச்சியால் பிறர் பொருளைக் கவர்வது இவை இரண்டும் அறத்திற்குப் புறம்பானவை. ஆனால் தொல்காப்பியர் கூறும் களவு அறத்திற்கு மாறில்லாதது. அறமாகவே கொள்ளப்படுவது 2.
ஏனென்றால் பிணி மூப்புகளின்றி, எப்பொழுதும் ஒரு தன்மையராய், உருவும் திருவும் பருவமும் குணமும் குலமும் அன்பும் முதலியவற்றால் ஒப்புமையுடையவராய் தலைமகனும் தலைமகளும், பிறர் கொடுப்பவும் பெறவுமின்றி, ஊழ் வகையால் தாமே எதிர்ப்பட்டுக் கூடுவது." தமது மகள் பிறர்க்கு உரியவள் என்று பெற்றோரால் கொடுக்கப்பட பெறுவதற்குரிய தலைவியை, அவர் கொடுப்பக் கொள்ளாது, இருவரும் கலந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் பிறர் அறியாது புணர்தலின் களவு எனப் பெயர் பெற்றது களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை. நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது 'களவு' எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும் தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் 'களவு' என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது"
இவ்வாறு களவு முறையில் காதல் புரிபவர்கள் பிறகு, பல்லோரறிய மணந்துகொள்வர். இதனைக் கற்பு என்று கூறுவர், இதனையே களவும் கற்று மற என்றனர் அறநிலைவழாமல் நிற்றலால் இஃது அறமெனப்பட்டது. 3.
களவெனப் படுவது யாதென வினவின் வளைகெழு முன்கை வளங்கெழு கூந்தல்
முளையெயிற் றமர்நகை மடநல் லோளொடு
தளையவிழ் தண்டார்க் காமன் அன்னோன்
விளையாட் டிடமென வேறுமலைச் சாரல்
மானினங் குருவியொடு கடிந்து விளையாடும்
ஆயமும் தோழியும் மருவி நன்கறியா
மாயப் புணர்ச்சி என்மனார் புலவர்.
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே. எனவே காதல் காலத்தில்
ஆசை மிகுதல், ஒருவர் மட்டும் நினைத்தல், நினைவால் உடலும் உள்ளமும் மெலிதல், இன்னது செய்தால் இன்னது நேருமோ என எண்ணுதல், நாணம் வரம்பைக் கடத்தல், பார்க்கும் பொருள்களிலெல்லாம் காதலர் நினைவே வருதல், தன்னையே மறந்து பித்தாதல், எண்ணச் சோர்வால் மயங்கி விழுதல், காதல் நிறைவேறாதபோது சாகத் துணிதல் முதலான நினைவலைகள் களவுக் காலத்திலில் காதலர் உள்ளத்தில் மோதிக்கொண்டே இருக்கும். 4
ஊழ்வினையால் காதல் காட்சி நிகழும். காதலர் ஒப்புமையால் ஒன்றியிருந்தால் சிறப்பு. காதலன் காதலியை விடச் சிறந்திருந்தாலும் குறையில்லை. [2] காதலி சிறந்தவளாய் இருந்தால், கிடைப்பாளோ எனக் காதலனுக்கு ஐயம் தோன்றும். [3] தெய்வமோ என அவன் ஐயுறும்போது சில குறிப்புகளால் இவள் பெண்மகள் என உணர்ந்துகொள்வான். [4] அவர்கள் பார்வையில் இசைவு புலப்படும். [5] ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனி இயல்புகள் உண்டு.
களவியல் செய்திகளைக் 'காதலர் செய்திகள்' எனப் புரிந்துகொள்ள வேண்டும். காதலன் காதலியிடம் பேச்சுக் கொடுத்தல், தன் சொல்லுக்கு அவளைக் கட்டுப்படுமாறு செய்தல், கட்டுப்பட்டால் இன்ன நன்மை என விளக்குதல், அவளது புன்னகையின் பொருளை உணர்ந்துகொள்ளுதல், அவளை நினைத்துத் தான் மெலிவதை உரைத்தல், அவள் இல்லாவிட்டால் தனக்கு நிகழப்போகும் தீங்கை எடுத்துரைத்தல், தன் கைவிடாத் தன்மையை அவளுக்குத் தெளிவுபடுத்துதல் முதலான பேச்சுக்களால் காதலன் காதலியை வயப்படுவான் காதலியைத் தொடுதல். அவள் அழகைப் பொய்யாகப் பாராட்டுதல். அவள் ஒப்புதலுடன் அணைத்துக்கொள்ளல். அவளிடம் வருவதற்குத் தனக்கு நேர்ந்த இடையூறுகளை எடுத்துரைத்தல். அவள் உறவு கிடைக்கவில்லையே எனப் பெருமூச்சு விடுதல். உடலுறவு கொள்ள முயல்தல், காதலியைத் துய்த்தல், ஆசை அடங்காமை என்னும் இவை எட்டும் ஒரு வகை. மேலும் 5
பெற்றவழி மகிழ்தல், அவள் பிரிந்து செல்லும்போது கலங்குதல், நிகழவேண்டியதை எடுத்துரைத்தல், தன்னைக் குறை கூறும் பாங்கனுக்கு எடுத்துரைத்தல், பாங்கன் உதவியை வலியுறுத்தல், தன் ஊர், பேர், அவள் இல்லாவிட்டால் தனக்கு நேரும் கெடுதி முதலானவற்றைக் கூறித் தோழியின் உதவியை நாடல், தோழி தன் தலைவியை இணங்கச்செய்தல், தலைவி இணங்காவிட்டால் மீண்டும் மீண்டும் கெஞ்சுதல், இணங்கியபின் அரவணைத்தல், அவள் தயங்கும்போது தனக்கு நேரும் கெடுதியையும், தன் பெருமைகளை எடுத்துரைத்தல், மடலேறிப் பெறுதல் பற்றி நினைவூட்டுதல் முதலானவை அப்போது பேசப்படும். செல்லும் வழியில் நிகழும் சிலவும் உண்டு களவு என்பது இன்ப உணர்வின் அடிப்படையில் நிகழக் கூடியது. தலைவியிடம் தோன்றும் ஏழு வகையான வேறுபாடுகள் தலைவிக்கும் தலைவனுக்கும் உள்ள உறவைக் காட்டிக் கொடுத்துவிடும். அவை (1) உடலில் தோன்றும் மணம், (2) தோற்றத்தில் பொலிவு, (3) உணவு செல்லாமை, (4) மறைவாகச் செயல்படுதல், (5) தோழியை விட்டு விலகிச் செல்லுதல், (6) தோழியிடம் புதுமையாகப் பழகுதல், (7) புணர்ச்சியை எதிர்பார்க்கும் உணர்ச்சி வெளிப்படுதல் ஆகியவை அந்த ஏழு.மெய்யாகவும் பொய்யாகவும் பார்க்கும் பார்வை.அவனை அறியாதவள் போல நடித்தல்பொதுப்பட உலகியல் பேசுதல்விலக்க முடியாமல் அவனை விலக்கல்அவனைப் பின்னர் வா என்று கூறுதல்அவனை ஏமாற்றிப் பித்தனாக்கல்முன்பே உள்ள உறவைக் கூறி அச்சுறுத்தல். இக் களவு ஒழுக்கம் நான்கு வகையாகப் பகுத்துக் கூறப்படும் 6
பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993
No comments:
Post a Comment