தமிழால் இயலும் வேளாண்மைக்கல்வி
உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட்டு
உழவன் அதனை யுழவொழிந் தானே 1619
வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் கலியாண சுந்தரம் ஐயா அவர்களே, அறைதனில் அடைந்து கிடக்கும் அகல் விளக்குகளை குன்றத்தில் ஏற்றிடும் வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் முத்தமிழ்ச் செல்வன் ஐயா அவர்களே அறிவியில் தமிழ் இயக்கத்தையின் சார்பாக நடத்தும் மாநாட்டில் கட்டுரையையும் கருத்துரையையும் வழங்கவுள்ள முனைவர்களே அறிஞர்களே வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியப் பெருமக்களே இந்நிகழ்ச்சிகளைச் சிறப்பான முறையில் வெற்றிப்பாதையில் செலுத்திக் கொண்டிருக்கும் தொழில் நுட்ப வல்லுனர் பெருமக்களே
வழிபடு தெய்வம் நிற்புறம் காக்க
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்ற தொல்காப்பியர் வாக்கால் வாழ்த்தி வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.
பல்தொழில் வித்தகராய் பல நாடுகளில் பணிஆற்றி பலரும் கொராணா கொல் உயிரியால் பணி இழந்தனர். இப்போது உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு என்பதை உணர்ந்த அவர்கள் நாட்டம் எல்லாம் விவசாயத்தின் மீது விழுந்துள்ளது. இந்தச்சமயத்தில் இந்த மாநாடு நடப்பது உழவுக்கு மிஞ்சிய உயர்தொழில் இல்லை என்பதைக்காட்டுகிறது. இச்சிறப்புறு மாநாட்டில் தமிழால் இயலும் வேளாண்மைக் கல்வி என்ற பொருண்மையை எடுத்துரைக்க நிற்கின்றேன்.
உள்னின்று உடற்றும் பசியால் உடம்பு அழியும் உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
உண்டி முதற்றே உணவின் பிண்டம். உடம்பை வளர்க்கும் உபாயம் உணவுண்ணல்.
உணவு கொடுப்போரே உயிர்கொடுத்தார் ஆவர். உணவை உலகிற்குக் கொடுப்போர் உழவர். உழவர்க்கு உறுதுணை ஏர்முனை ஏர்முனைக்கு நிகர் எதுவுமில்லை.
ஏருக்குப் பின்னால்தான் உலகமே சுற்றுகிறது எனவே உழவர்கள் உலகத்தாருக்கு அச்சாணி போல் விளங்கினர் அதனால் உழவையே தலையாய தொழில் என்றனர். உணவிட்டு உயிர் காத்தலால் . அதற்கு வேளாண்மை என்று பெயர். வைத்தனர். அதனால் தமிழில் வேளாண்மைப் பற்றி பேசாத இலக்கியங்களே இல்லை எனலாம்.
சீரைத்தேடின் ஏரைத்தேடு நெற்பயிர் விளை பூமி திருத்தி உண் தொழுதூண் சுவையின் உழுதூண்இனிது பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் மேழிச் செல்வம் கோழைபடாது
நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் உழவர்க் கழகிங்கு உழுதூண் விரும்பல்
வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்தங்கிருக்கும் ஏழையும் பதரே
வித்திட வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
கடவுள்
என்னும் முதலாளி
கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி”
என்று கவிஞர் மருதகாசி பாடுகிறார் . “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்” (1031) என்று வள்ளுவர்
கூறினார் . இந்த உண்மையை வெளிப்படுத்தும்
வகையில்,
“எங்க ஏரோட்டம் நின்னு போனாஉங்கக்
காரோட்டம் என்னவாகும்”
என்று கேள்வி எழுப்புகிறார் கவிஞர்
கண்ணதாசன்.
இவ்வுலகில்
வாழும் எவரும் உழவருக்கு அடுத்த நிலையில் வைத்தே எண்ணத்தக்கவர்கள் என்பதை, இதைத்தான் வள்ளுவர் “உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்” (1033) என்கிறார்.
இவ்வாறு தொல்காப்பியம் தொட்டு தற்காலப் புதுகவிதைகள் வரை வேளாண்மையைப் பற்றிப் பேசாத இலக்கியங்கள் உண்டோ?
வேளாண்மைக்கு தொடர்பு இல்லாத தமிழ் இலக்கியங்களே கிடையாது. அவ்வளவு இறுக்கமாக வேளாண்மை தமிழர் வாழ்வியலோடு கலந்து இருக்கிறது உழவே உயர் தனித்தொழிலாக இருந்ததால் தானே இறைவனே உழவனாய் வந்து நாற்று நட்டதாகப் பேரூப்புராணம் பேசுகிறது.
நான் நாளும் போற்றும் தொல்காப்பியப் பெருந்தகை வேளாண் என்னும் சொல்லை மூன்று இடங்களில் கையாளுகிறார்..
வேள் என்றால் முதன்மையானவர் அரசன் என்று பொருள். வேள்பாரி செவ்வேள் நடிகவேள் என்பதை எல்லாம் நாம் அறிவோம். இப்படி முதன்மை என்னும் தரும் சொல்லையே உழவுத் தொழிலுக்குப் பெயராக் வேளாண்மை என வைத்தனர். உலகிலேயே முதன்மையான தொழிலாகிய வேளாண்மையைக் கற்பதே சிறந்த கல்வி ஆகும். அதனால் தான் கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாரெனின் என்றார் வள்ளுவர். வால் என்றால் கலப்பை என்ற ஒரு பொருளும் உண்டு. கலப்பை பிடித்து உழும் உழவனைத் தொழாத கல்வியும் ஒரு கல்வியா என்று வள்ளுவர் கேட்கிறார்.
அந்தக் கல்வியைக் கற்க நம் தமிழ் இலக்கியங்கள் பல வழிமுறைகளைக் கூறுகின்றன. அதற்கான இலக்கணங்களையும் வகுத்துள்ளன.
தமிழகத்தில் தொன்று தொட்டு நடை பெற்றுவரும் மரபுவழிப்பட்ட உழவுத் தொழிலின் நடைமுறைகளை 1. உழுதல் 2. சமன்செய்தல் 3. விதைத்தல் 4. நடுதல் 5. நீர்ப்பாசனம் 6. எருவிடுதல் 7.களையெடுத்தல் 8. பயிர்ப்பாதுகாப்பு 9.அறுவடை 10.தூய்மை செய்தல்என்னும் 10 கட்டளைகளாகப் கூறலாம் இப்பத்துக் கட்டளையைத்தான் பழந்தமிழ் நூல்கள் வேளாண்மைக் கல்வியாய் பேசுகின்றன. எனவே தமிழால் வேளாண்மைக் கல்வியைக் கற்பிக்க இயலும். கற்க இயலும். மேற்கூறிய பத்தனுள்
உழுதல், உரமிடுதல் களையெடுத்தல், நீர்ப்பாய்ச்சுதல், பயிர்பாதுகாப்பு என்ற ஐந்து கோணங்கள் மிக மிக இன்றியமையாதவை. இதனை, இரண்டே வரியில் வரிசைப்படுத்தி “ஏரினும்
நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன்காப்பு”. (1038) என்று கூறிவிட்டாரே வள்ளுவர். இந்த ஐந்தையும் முறையாகக் கற்பது தானே
வேளாண்மைகல்வி
உழவுத் தொழிலுக்கு முதன்மையானது நிலமும்,ஏற்ற பருவ காலமும் ஆகும். இதைத்தான் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஒல்காப்பெரும் புகழ் தொல்காப்பியரும் முந்து நூல் கண்டு முறையாக ஆய்ந்து நிலமும் பொழுதும் முதற்பொருளாகும் என்றார்
வேளாண்மை செய்யும் நிலத்தை வன்புலம், மென்புலம் புன்புலம் களர்புலம் என்று நான்காகப் பகுத்தனர். அதைத்தான் தொல்காப்பியர் உழவு செய்ய முடியா வன்புலமாகி மலையைச்சார்ந்த பகுதியைக் குறிஞ்சி என்றும், வானம் பார்த்த புன்செய் நிலமாகிய காட்டை முல்லை என்றும், தீம்புனல் பாயும் வயல் சார்ந்த மென்நிலத்தை மருதம் என்றும், உப்பங்கழிகள் மிகுந்த களர்நிலத்தை நெய்தல் என்றும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று முறைமைப் படுத்திச் சொன்னார். களர்நிலத்தினை . புறநானூறு புறங்காடு என்றும் குறிப்பிடுகிறது
பாலை நிலத்தைத் தொல்காப்பியர் தனியாகப் பகுத்துக் கூறவில்லை. காரணம் பாலை என்பது ஒருநிலையான நிலம் அல்ல. இயற்கை மாறுபாட்டாலும் மனிதனின் மன மாற்றத்தாலும் உண்டாவது. இதைத்தான் சிலப்பதிகாரம் முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து நல்லியல்பு அழிந்து நடுங்கு துயர் உறுத்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்கிறது. எனவே நடுங்கு குளிர் உடைய அண்டார்டிக்காவும் கடும்வெப்பம் உடைய சகாராவும் பாலையே. இவை இரண்டும் பயிர்கள் விளைய ஏற்ற நிலம் ஆகா என்பதால் தொல்காப்பியர் பாலையைப்பற்றி பேசவில்லை. இருந்தாலும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை இயல்புகளைக் கூறுகிறார் அங்குள்ள விலங்குகள் யாவும் குறிஞ்சியுலும் முல்லையிலும இருந்தவையே அவை வலிமை இழந்து இருக்கும் குறிஞ்சிக்குறவனும் முல்லை இடையனும் ஆறலைக் கள்வராய் மாறி அலைவார்கள்
வேளாண்மை செய்ய முடியா நிலைமையால் உணவுக்கு வழிதேடி வழிப்பறியும் உயிர்க்கொலையும் செய்து பிழைப்பர் .அங்குள்ள விலங்குகள் யாவும் குறிஞ்சியிலும் முல்லையிலும இருந்தவையே அவை வலிமை இழந்து இருக்கும் இந்த நிலங்களே மாறி மீண்டும் குறிஞ்சியாகவோ முல்லையாகவோ மாற வாய்ப்பு உள்ளது எனவேதான் பாலை நிலத்தை நிலமாகக் கூறாமல் விட்டார் என்றாலும் அந்நிலமக்களின் ஒழுக்கத்திற்கு இலக்கணம் கூறியுள்ளார் நிலத்தை நான்கு நால்வகை நிலத்தில் ஐவகைத்திணையைக்கூறுகிறார்
அந்தந்த நிலத்திற்கு ஏற்ற காலத்தை ஆறு என்றும் அந்தக்காலத்தில் விளையும் மரங்களையும் பூக்களையும் வாழும் மக்களையும் மாக்களையும் வகைப்படுத்தி உள்ளார் கூறி உள்ளார். வேளாண் தொழிலில் ஈடுபட்ட ஆடவர்களை உழவர்கள்; என்றும் பெண்டிர்களை உழத்தியர் என்றும் குறிக்கின்றார் அவர்கள் தொழில் நெல்லரிதல் களைபரித்தல் கடாவிடுதல் என்கிறார்.
காலம் அறிந்து காலத்திற் கேற்ற பயிர்களைப் பயிர்செய்ய வேண்டும் ஆடிப்பட்டம் தேடி விதை என்கிறார் ஔவையார்.இங்கு பட்டம் என்பது படித்து வாங்கும் பட்டத்தைக் குறிக்காமல் பயிர்செய்ய ஏற்ற காலத்தைக் குறிப்பதைக் கவனிக்க வேண்டும். பட்டம் என்பது வயலின் வரப்பையும் குறிக்கும். எனவே நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற பயிர்களையே வேளாண்மை செய்ய வேண்டும் என்று கற்பிக்கிறது தொல்காப்பியம்
.சிலசமயம் ஒருநிலத்திற்கு உரிய தாவரம் வேறொரு நிலத்தில் விளைவதுண்டு அது தவறில்லை என்பதை
எந்நில மருங்கினும் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாராவாயினும்
வந்த நிலத்தின் பயத்தவாகும் என்று கூறுவதால் ஒருசில பயிரிகள் எல்லா நிலங்களிலும் பயிரிடுவது உண்டு என்கிறார் இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உரைத்த தொல்காப்பியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் பண்டிதரும் படிக்கத் தயங்கும் தொல்காகப்பியத்தை பாமர்ருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் என் உடல் பொருள் ஆவி அனைத்தயும் ஈந்து தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமத்தை நிறுவி செயல் பட்டு வருகிறேன் என்பதை பெருமையோடு இந்நேரத்தில் கூறிக்கொள்ள விழைகிறேன், உலகத்தொல்காப்பியர் மன்றத்தின் நெறியாளராகவும் உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
இனி வேளாண்மையின் முதல் நடைமுறை
எனக்கு பிழைக்க வழி எதுவும் இல்லையே என்று சோம்பல் பட்டுக் கிடப்பவனைப் பார்த்து நிலமகள் சிரிப்பாளாம் என்று வள்ளுவர் இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் என்கிறார். ஆகவே சோம்பல் இன்றி உழைத்தல் வேண்டும். சங்கை ஊதும் திருமால் கூட சங்கினை ஊத மறக்கலாம் ஆனால் உழவன் வான் பொய்ப்பினும் உழவை நிறுத்தாமல் செய்தான் ன்ர ஒருகதையும் உண்டு கிழக்கு வெளுத்து கீழ்வான் சிவக்குமுன் கலப்பையைத் தோழில் வைத்து கழனிக்குச் செல்பவன் உழவன் அதனால்தான் அந்த வைகறையும் விடியலும் வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின் சிறுபொழுதாக தொல்காப்பியம் கூறுகிறது
உழுதலைப் பார்ப்போம் அகலஉழுவதை விட ஆழ உழுவதே மேல் என்பது பழமொழி .மண்ணைப் புரட்டிப் புரட்டி மென்மையாக்க வேண்டும் ஒரு கிலோ எடை உள்ள மண்ணைக் கால் கிலோ எடை உள்ளதாக மாறும் அளவிற்கு உழவேண்டும் அப்போதுதான் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும்; விதையும் வேர் பிடிக்கும் நீரும் உள்பாயும். சிறுசிறுகளையும் மடியும் இப்படிச் செய்தால் எருக்கூட போட வேண்டியதில்லை இதைத்தான் தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும். என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இவ்வாறு உழவு செய்வோரைப் பலமுறை உழவு செய்வோர் என்ற பொருள்பட “செஞ்சால் உழவர்” (196) என்று பெரும்பாணாற்றுப்படைச் சுட்டுகிறது’’
முந்தித் தரிசடித்து முச்சாரியாய் மறித்து நைந்திடவே சேறுகலக்கி நயமாக நாலுழவு’’ செய்தல் என்று செங்கோட்டுக் பள்ளு வலியுறுத்துகிறது..
சேற்று உழவு புழுதி உழவு என உழவு இரு வகைப்படும்
உழவர்கள்,
நன்செய் நிலங்களில் சேற்று உழவும்
புன்செய் நிலங்களில் புழுதி உழவும் செய்வர். சேற்று உழவு செய்வதற்கு மரத்தினால் ஆன
கொழு கலப்பைகளையும், புழுதி
உழவு செய்வதற்குக் கூரிய இரும்புத்
தண்டினால் ஆன கொழுவுடன் கூடிய கலப்பைகளையும் தமிழர்கள் தொன்றுதொட்டுப்
பயன்படுத்தி வருவதைச் சங்க இலக்கியங்கள் வழி உணரமுடிகிறது.
“ஊன்கிழித்தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதைபல நாறி” (194:4-5) என்று அகநானூறும்
புழுதி உழவு குறித்து இயம்புகிறது.
விதைத்தல்:.
விதைக்க தனியே கூடை வைத்திருந்தனர்.
உழவர்கள் காலையில் விதைப்பதற்காகச்
சிறிய கூடைகளில் விதைகளை எடுத்துச்
சென்ற செய்தியை,….உழவர்விதைக்குறு
வட்டி போதொடு பொதுளப்” (155: 1-2)
என்று குறுந்தொகையும் குறிப்பிடுகிறது.
விதைப்பதற்கு உரிய வித்துகளைப் பழந்தமிழர்கள் நன்கு உலர (காய) வைத்ததற்கான சான்றும் கிடைக்கிறது. “வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்” (211:6) என்று அகநானூறு குறிப்பிடுகிறது.
இருவகை
விதைத்தல்:
இக்காலத்தார் புழுதி விதை, சேற்று விதை என்று இருவகை விதைப்பு
முறைகளைச் செய்கின்றனர்.
இவ்விருவகை செயல்பாடுகளையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
“…………….. கான்உழு
குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து” (209: 2-3)
என்று குறவர் கொல்லையாகிய காட்டினை
உழுது பரவலாக விதைத்த விதைகள் பலவாக விளைந்தமையை நற்றிணை காட்டுகிறது
விதையை தேர்வு செய்தல்:வேளாண்மையில் விதைகளை தேர்வு செய்வதும் அவற்றை பூச்சி தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என “குறித்து மாறு எதிர்ப்பை பெறா அமையின் குரல் உணங்கு விதைத்திணை“ என்று புறநூனூறு கூறுகிறது
நீர் பாய்ச்சல அணைகளை ஏற்படுத்தி நீர்ப் பாய்ச்சுகின்றப் போக்கை வல்வாய்க் கொடுஞ்சிறை மீதுஅழி கடுநீர் நோக்கி………அகநானூறு அழகாகச் சித்திரிக்கிறது. ,”நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி” என்ற ஔவையாரின் வாக்குப் புலப்படுத்துகிறது வருசிறைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை யானும் என்று தொல்காப்பியம் கூறுவதால் அணைகட்டி நீரைத் தேக்குவதும் வேணாண்மைக் கல்வியிந் ஒருபகுதியே அறியலாம் பயிர்களுக்கு நீரும் உயிர்களுக்குத் தாய்பாலும் மிகவும் அவசியம் இவ்விரண்டு செய்திகளையும் இணைத்து வேளாண்மை அறிவியல் நுட்பம் ஒன்றை கம்பர் தம்காப்பியத்தில் சுட்டியுள்ளார்
எருவிடுதல்
உழவுத் தொழிலின் அடிப்படைச் செயல்களுள் ஒன்று எருவிடுதல் ஆகும்.
“ஏரினும் நன்றால் எருவிடுதல்” (1038) என்று
வள்ளுவர் எரு இடுதலின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகிறார். .
குப்பைக் கூளங்கள் உரமாகப் பயன்படுத்தப்
பட்டமையைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண முடிகிறது.
தாது எரு மறுகின் என நற்றிணையிலும்
தாது எரு மறுகின் மூதூர் அகநானூற்றிலும்
வருவதை அறிவோம்
உழுந்தின்
வேர் முடிச்சுகள் நைட்ரஜன் சத்தைச் சேமித்து வைப்பதாக அறிவியலார் கூறுவர்.
இதைச் சங்க காலத்தில் பயிரிட்டுள்ளனர். உழுந்து பயிரிடப்பட்ட செய்தி
சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன.சான்றாக,
“………….உழுந்தின்
அகல இலை அகல வீசி” (நற்றிணை 89: 5-6) .
உழுந்து மட்டுமின்றி பயிறும் விளைவித்தமையைப் “பைம்பயறு உதிர்த்த கோதின்”
(297: 3)
என்று புறநானூறு குறிப்பிடுகிறது.
எனவே வேளாண் தொழிலுக்குத் தேவையானவை இயற்கை உரங்களே என்று உணரவேண்டும் உழுத நிலங்களில் கால்நடைகளின் சாணத்தையும் இலைதழைகளையும் எருவாக பயன்படுத்தினர் இதைக் “காஞ்சித் தாது உக்கன்ன தாது எருமன்றத்துத்“ (கலித்தொகை,108-60)
7. களையெடுத்தல்:
கொலையிற்
கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர் என்று வள்ளுவரும் கூறி உள்ளார்
இக்களைகளை நீக்குவது மிகவும் அவசியமானதாகும். இல்லையெனில்
விளைச்சல் குறையும். பழந்தமிழர்கள் களைகளை நீக்கியமைக்குச் சான்றுகள்
கிடைக்கின்றன.
தொல்காப்பியமும் மருத நிலமக்களின்
தொழிலாக களை பறித்தலைக் கூறுகிறது களைபறித்தலை பெரியபுராண்ம் பாசப்பழிமுதல்
பறிப்பார் போல வேரோடு களையைப் பறிக்க வேண்டும் என்கிறார்.
காத்தல் தினைப் புனம் காத்தல் போன்ற செயல்களைப் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கொள்ளலாம். “ “சிறுதினைப் படுகிளி கடீஇயர் (32: 5) என்றும் அகநானூறு குறிப்பிடுகிறது. ‘’ மாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பாக்காமல் கெட்டது’’ என்கிறது பழமொழி.
‘’செல்லான் கிழவ இருப்பின் நிலபுலந்து
இல்லாளின் ஊடி விடும்’’ (குறள் 1039)
குறமகளிர் தினை கவரவரும் கிளிகளை மூங்கிலால் செய்த தட்டை, கவண், குளிர்
போன்ற கருவிகளைக் கொண்டு விரட்டியதை, குறிஞ்சிப்பாட்டு குறிக்கிறது 4
தழலும் தட்டையும் குளிறும் பிறவும்
கிளிகடி மரபின ஊழ்ஊழ் வாங்கி” ()
எனக் குறிப்பிடுகின்றது. குறமகளிர் தினை காத்தது போல் இரவில் சேம்பு, மஞ்சள்
ஆகியவற்றைப் பன்றி அகழாமல் இருக்க குறவர் பறையோசை எழுப்பியதை மலைபடுகடாமும்( ஊதுகொம்பு
ஊதி காத்ததை அகநானூறும்( ) செப்புகின்றன.
தூய்மை செய்தல்: தினை முற்றியதும் அதனைக் கொய்து பாறையின் மேல்
போட்டு யானையைக் கொண்டு காலில் மிதிக்கச் செய்து
தினையைப் பிரித்தெடுத்த செய்தியை நற்றிணை மென்தினை
நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும்”; (என்று
கூறுகிறது
நெல்லரிந்து, கடா விட்டு நெல்லை
வைக்கோலினின்றும் உழவர்கள்
பிரித்தெடுத்தனர். அங்ஙனம்
பிரித்தெடுத்த நெல்லைக் காற்றில் தூற்றித் தூசு துரும்புகளை அகற்றித்
தூய்மை செய்தனர். அவ்வாறு தூற்றும் பொழுது எழும்பிய தூசு துரும்புகள்
இருண்ட மேகம் போல தோன்றியது என “பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்
மங்குல்வானின் மாதிரம் மறைப்ப” (37: 3-4)
அகநானூற்றுக் காட்சி ஒன்று விளக்குகிறது. இந்த பாளையை அதாவது பதரை பதடி என்கிறார்
வள்ளுவர்
இதுகாறும் செம்மொழி இலக்கியங்கள் மூலம் உழவுத் தொழிலின் நடைமுறைகள் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளதை அறிந்தோம் எனவே முறைப்படி வேளாண்மைக் கல்வியைத் தமிழால் கற்பிக்கவும் கற்கவும் இயலும் என்று உறுதியாக் கூறுவேன்
நெல்விளையும் இடங்களில் எல்லாம் கல்நட்டி மனைகள் ஆக்குவது நியாயமா
சோற்றுக்கு எங்கே போவோம் சொல்லுங்கள் ஆன்றோரே. பாரதப்போரில் பாண்டவர் கௌரவர் ஆகிய இருவருக்கும் சோறிட்ட நாம் நம்தமிழால் வேளாண்மைக்
கல்வி இயலும் இயலும் என்று கூறி என்உரையை நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்
பதிவு புலவர்ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993
No comments:
Post a Comment