Sunday, 22 March 2020

தென்கயிலாயம் வெள்ளியங்கிரி மலை பூண்டி

                         

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடர் எம்மனோர்க்காவலன் எங்கும் நிறைந்த பரம் பொருள் எந்தை இறைவன்
 தென்னாடுடைய சிவன் "வெள்ளியங்கிரி ஆண்டவன்" 
                               அடி பணிகிறேன் 
                               முன்னுரை
     ஏழுமலை என்றாலே நம் நினைவிற்கு வருவது திருப்பதி ஆனால் சைவக் கடவுளான சிவபெருமானுக்கும் ஏழுமலை கொண்ட ஒரு திருத்தலம் இருக்கிறது. அது தான் கோவை மாவட்டத்தில் இருக்கும்வெள்ளியங்கிரி மலைக்கோவில் பொதுவாகவே மகிமை மிக்கவை. மலைகள் அதுவும் வெள்ளியங்கிரி மலை சித்தர்கள், யோகிகள் மற்றும் அருளாளர்கள் பன்னெடுங்காலம் தங்கியிருந்து தவம்புரிந்து தெய்வீகத்தை உணர்ந்த தலம், அவர்கள் தெய்வீகத்தை உணர்ந்ததோடு நில்லாமல், அதனை உணர்த்தும் விதமான அதிர்வுகளையும் நிரப்பியிருக்கிற மலை வெள்ளியங்கிரி. பாம்பாட்டி சித்தர், சாதுக்கள், யோகிகள் அர்ச்சுனன் முதலானோர் கடுந்தவம் மேற்கொண்டு வலிமை பெற்ற தவ பூமியாகும் வழக்கில் நாம் கைலாயம், மத்திய கைலாயம் மற்றும் தென் கைலாயம் என்றும் கொண்டுள்ளோம். இதில், "கைலாயம்" அனைவரும் அறிந்த இமய மலையில் இருக்கின்றது. மேலும், "மத்திய கைலாயம்" திபத்தில் உள்ளது. தென்கயிலாயம் என்பது இந்த வெள்ளியங்கிரி மலையே
    வசதி இருந்தால் யார் வேண்டுமானாலும் விமானம், ஜீப் மற்றும் குதிரைகளின் உதவியுடன் வட கைலாயம் சென்று தரிசனம் செய்து திரும்பி விடலாம். ஆனால் தென் கைலாயமான இம் மலைக்கு உடல் பலமும், மன உறுதியும் ஈசன் அருளும் இருந்தால் மட்டுமே ஈசன் தரிசனம் கிடைப்பது சாத்தியம். வட கைலாயதிற்கு இணையாகவும் அதைவிடப் பெருமையும் சக்தியும், அற்புத குணங்களை உடைய ஏராளமான மூலிகைகளைத் தன்னகத்தே கொண்ட ஒப்புயர்வற்ற மலை தென் கைலாயம் எனும் வெள்ளிங்கிரி மலையாகும். நில நூல் வல்லார் கூற்றுப்படி இமய மலைக்கு முன் தோன்றியவை மேற்குத் தொடர்ச்சி மலைகள் எனவே வட கைலாயதிற்கு முன் தோன்றியது."தென் கைலாயம்" என்று கொண்டாலும் தவறேதும் இல்லை. பரத கண்டத்திலே கொங்கு நாட்டு கோயம்புத்தூரிலிருந்து சுமார் 30கி.மீ தொலைவில் உள்ள  ஓர் அடர்ந்த மலை பிரதேசம். பிரம்மாண்டமான மூன்று பாறைகள் கூடி ஒரு லிங்கத்திற்கு ஆலயமாய் மாறி நிற்கிறது. மிகச் சக்திவாய்ந்த ஓரிடம் அது .இயற்கையே கோவில் கட்டி ஓரிடம் தென்கயிலாயமே. மண்ணுலகம் சிறக்கவும் அருள் நெறியில் ஈடுபட்டு மக்கள் தங்களை உணரவும் வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்குகிற அருட்களஞ்சியமாய், பேரருளின் பிரம்மாண்டமாய், தென் கயிலாயமாய் நிமிர்ந்து நிற்கும் வெள்ளியங்கிரி மலை தெய்வீகத்தின் உறைவிடம், ஞானத்தின் நிறைகுடம்!.
இந்த கோவிலைப்பற்றிய சில சிறப்பான தகவல்களைக் கல்வி கேள்விகளால் அறிந்த செய்திகளை அவன் அருளால் உரைக்க முயல்கின்றேன்.
                    




                            பெயர்க்காரணம்
       வெள்ளியங்கிரி மலை என்பது மிகவும் புனிதமான ஒரு மலையாகக் கருதப்படுகிறது. மேகங்கள் சூழ்ந்திருப்பது போலவும், வெள்ளிவார்ப்படத்தால் மூடி இருப்பது போலவும் காட்சி தருவதால் இது வெள்ளியங்கிரி என்று பெயர் பெற்றது.
       கைலாயம் என்பது சிவனின் யோக உறைவிடமாக இருக்கின்றது என்பதை விட சிவனே கைலாயமாக காட்சி தருகிறார் என்பதே உண்மை. அது பல யோகிகளின் ஞானப் புதையலாகவும் சைவ சமய  புனித இடமாகவும், நோய்போக்கும் ஆதுர் சாலையாகவும்  இருக்கின்றது
    இதில் ஏழு மலைகள் உள்ளதாய்ச் சொல்வார்கள். மலையேற்றம் செய்யும்போது, ஏழு ஏற்ற - இறக்கங்கள் இருப்பதனால், மலையேற்றம் செய்பவருக்கு ஏழு மலைகள் ஏறியதைப் போன்ற அனுபவம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ஏழுமலை என்றார்கள். இம்மலை மிகப் புனிதமானதாய் இருக்கக் காரணம், இங்கு நிலவும் சூழல்தான்! அற்புதமான பல உயிர்கள், இங்கு வாழ்ந்தவர்கள், அத்தனை மாண்புடன் அருளுடன் இங்கு வாழ்ந்தவர்கள் இம்மலைகளில் தன் பாதங்களைப் பதித்திருக்கின்றனர். தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் இம்மலைகள் உள்வாங்கிக்கொள்ளும் வண்ணம் செயல் புரிந்திருக்கின்றனர் இயற்கையின் பேருருவில் இறைவனைக் காணுகிற மரபு நம்முடையது
                                   சிறப்பு 
   இம்மலையில் கைதட்டிச் சுனை, பாம்பாட்டி சுனை போன்ற பல சுனைகள் உள்ளன. அதற்கு பின் ஒரு வரலாறும் இருக்கிறது. வெள்ளியங்கிரி மலை பயணம் நமக்கு ஆன்மீக உணர்வை அதிகரிப்பதோடு உடலில் புத்துணர்வும் பெருக்குகிறது என்பதே உண்மை. இம்மலையை ஏறுவது கடினம் என்றாலும் ஆறு சிகரங்களை கடந்து ஏழாவது மலையில் சுயம்பு வடிவில் வீற்றிருக்கு சிவனைத் தரிசிக்கும் சமயத்தில் துயரங்கள் அனைத்தும் பறந்தோடும். வெள்ளியங்கிரி மலை மீது மற்றும் மலை அடிவாரத்தில் இருக்கும் சிவன் கோவில்கள் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்களாக கருதப்படுகின்றன இங்கிருக்கும் சிவபெருமான் என்றும் அம்பாள்மனோன்மணிஎன்றும் அழைக்கப்படுகிறார்கள். பன்னெடுங்காலமாக சித்தர்கள் விரும்பி வழிபடும் கோவிலாக இது இருந்திருக்கிறது வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக எழுந்த சுயம்புலிங்கம். ஞானிகளும் சித்தர்களும், ஸ்தூல வடிவிலும் சூட்சும வடிவிலும் நடமாடுகிற புனிதமிக்க மலை வெள்ளியங்கிரி. இதில் பயணம் செய்வது பரமனைப் படிப்படியாய் நெருங்குவதற்குச் சமம் இறைவனை நேசிப்பவர்களும் இயற்கையை நேசிப்பவர்களும் இதயம் கரைந்து ஈடுபடுகிற மலை, வெள்ளியங்கிரி
     ஏழு மலைகளைக் கடந்தாலே நம் இறைவனைத் தரிசிக்க இயலும். வெள்ளியங்கிரியின் நாம் பயணிக்க இருக்கும்  இந்த ஏழு மலைகளின் தத்துவம் என்னவென்றால், கீழே உள்ள முதல் மலை நம் உடலின்  மூலாதாரச் சக்ரமாகவும், இரண்டாவது மலை ச்வாதிஷ்ட்டானம், மூன்றாவது மலை மணிப்பூரகம், நான்காவது அனாகதம்,  ஐந்தாவது விஷுக்த்தி, ஆறாவது ஆக்ஞா மற்றும்  ஏழாவது  மலை சஹாஸ்ரானத்தையும் பறைசாற்றும்.இவ்வாறாக இந்தத் தத்துவம் நமது மோட்ச வாழ்விற்கு வழி காட்டும் தியான முறையையும் நமக்கு நினைவூட்டும் விதமாக அமையப் பெற்றது.
     பூண்டியை அடிவாரமாகக் கொண்ட வெள்ளியங்கிரியின் ஏழு மலைகளிலும் மனி்த உடலில் உள்ள மேற்கண்ட ஏழு சக்கரங்களின் அம்சங்கள், ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு ஆதாரத்தின் அம்சமா௧ அடங்கியுள்ளதாக் ஆன்மீகச் சான்றோர்கள சொல்வதுண்டு். நிலம், நீர், காற்று நெருப்பு ஆகாயம் என்ற ஐம்பூதங்களுக்கு உரிய திருத்தலங்கள் வெவ்வேறாக உள்ளன.

     ஆனால் வெள்ளியங்கிரி திருத்தலம் ஒன்றே பஞ்ச பூதத் தலமாகவும், பஞ்சமுகக் கிரிகளைத் தன்னுள் அடக்கியதாகவும் காட்சி யளிக்கிறது. இந்த மலையில் இருக்கும் ஆண்டி சுனை தென்கயிலாயத்தின்மானசரோவர்என்றழைக்கப்படுகிறது. கோவை நகருக்கு நீரை அளிக்கும் நொய்யல் ஆறு இந்த மலை தொடரிலேயே உற்பத்தியாகிறது.காஞ்சிமாநதி என்றும் போற்றப்படுகிறது. அதன் தென்கரையில் பேரூர் தவத்திரு சாந்தலிங்கர் திருமடம் சைவப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றி வருவது வரலாற்றுச் செய்தியே.
                             அமைவு இடம்
         கொங்கு நாட்டின் மேற்கு எல்லையாக விளங்கும்: மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் கோயம்புத்தூரிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,1524 மீட்டர்)  இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும்மலை. மிகவும் பிரசித்தி பெற்ற இம்மலையில் மூன்று பாறைகள் ஒன்று கூடி சிவனுக்கு ஆலயமாக உள்ளது அடிவாரத்தில் . கோவில் நடை திறந்திருக்கும் நேரம் : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை. மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை. கோவில் முகவரி வெள்ளியங்கிரி மலைக்கோவில், பூண்டி,செம்மேடு அஞ்சல் கோவை 641114. மலைஏறும் போது பனிப்புயல், மழை ஏற்பட்டால் தொடர்ந்து மலை ஏறாமல் உடனே அடிவாரம் திரும்ப பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்   கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊர் வரை பேருந்து வசதி இருக்கிறது.
           இங்கு பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் 4 1/2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் திருவுருவ சிலை மற்றும் 63 நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.
கோயிலைச் சுற்றி பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் சத்திரங்கள் உள்ளன. கோயிலின் வடக்குப் பகுதியில் ஐந்து விநாயகர் சிலைகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது. அடுத்து கல்லினால் ஆன இராசி தூண். வேறு எந்த கோயிலிலும் காணப்படாத ஒன்று. விரிந்த தாமரை மலரின் நடுவில் உள்ள தண்டில் 9 தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கி உள்ளனர். மேல் பகுதியில் ஒரு குடையும் அதன்மேல் ஓர் அழகிய அன்னப்பட்சியின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் 12 ராசிகளை சிற்பமாக நேர்த்தியாக செதுக்கி உள்ளனர் மலைப்பாதை படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் நாகத்துடன் கூடிய சிவலிங்கம், நந்தியம் பெருமான் மற்றும் மனோன்மணி அம்மனின் திருவுருவ சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். மலை ஏறும் முன்பு ஈசன், அன்னை மற்றும் நாகரை வணங்கி அவர்களின் அருட்துணையோடு பத்திரமாகச் சென்று திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இச் சிலைகளை மலைப்பாதை தொடக்கத்தில் நிறுவி உள்ளனர்.
                        புராணச்செய்திகள்  
இந்தியத்துணைக் கண்டத்தின் தென்கோடி முனையிலே சிவனையே மணப்பேன்என விடாப்பிடியாய் நின்ற ஒரு பெண், தன்னை ஈசனுக்கே உரியவளாய் ஆக்கிக்கொள்ள ஆயத்தப்படுத்திக் கொண்ட பெண், ஈசன் இந்நாளுக்குள் தன்னை அடைய வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்ட பெண், “ஈசன் வராது போனால், நான் உயிர் துறப்பேன்எனச் சூளுரைத்திருந்தாள். இதனை அறிந்த சிவன் அவளைத் தேடி தென்னிந்தியா நோக்கி வர, இடையில்  அவளை அடைய முடியாமல் போனார். அந்தப் பெண்ணும் நின்றபடியே உயிர் துறந்தாள். இன்றுகூட அவள் கன்னியாகுமரியாய் நின்ற கோலத்தில் இருக்கிறாள்.

    இதுவே, இந்தியாவின் தென்கோடியில் கன்னிகோவிலாய் உயர்ந்து நிற்கிறது.   தன்னால் குறித்த நேரத்தில் சென்றடைய இயலவில்லையே என மனஞ்சோர்ந்த சிவனுக்கு, தன் கவலையைக் கரைக்க ஓர் இடம் தேவைப்பட்டது. வெள்ளியங்கிரி மலை மீது ஏறியவன், அதன் உச்சியிலே வந்தமர்ந்தான். இங்கு அவன் ஆனந்தத்தில் அமரவில்லை, தியானத்தில் அமரவில்லை, ஒருவித கோபத்திலும் மனச்சோர்விலும் வந்தமர்ந்தான். இங்கு கணிசமான நேரத்தை அவன் செலவிட்டான். எங்கெல்லாம் சிவன் அமர்ந்தானோ அவ்விடத்தை எல்லாம் மக்கள் கைலாயம் என அழைத்தனர். அதனாலேயே, வெள்ளியங்கிரியை மக்கள் தென் கைலாயம் என அழைக்கத் தொடங்கினர்.  
இரத்தினகிரி, தக்ஷின கைலாசம், பூலோக கயிலாயம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த மலையில் தான் தனது உமையாள் பார்வதி தேவியின் கோரிக்கைக்கு இணங்க பிரணவ தாண்டவத்தைச் சிவபெருமான் ஆடியதாக்க் கூறப்படுகிறது உமையவள் இறைவன் திரு நடனத்தைக் கண்டு களிக்கும் முதன்மை பேறு தனக்கே உரியதென்றும், தம் பொருட்டு ஒரு திருநடனம் ஆடிக் காட்டி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அகமகிழ்ந்து உமையவள் கண்டு மகிழ மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள வெள்ளியம்பலத்தில் திருநடனம் புரிந்தார். அப்படி திரு நடனம் புரிந்த மேடை பல்கலை மேடை என அழைக்கலாயினர். அப்பெயர் நாளடைவில் திரிந்து பலகாரமேடை என தற்சமயம் வழங்கி வருகிறது. தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், நாரத மகாமுனிவர் மற்றும் ஆதிசேடன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையினைப் பெற்றது.
சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நி்லையி்ல் அமைந்துள்ளது.சப்தரிஷிகளில்ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்தியர் பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது.
   சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய்த் தவம்புரிந்தும், வாழ்ந்தும், சூட்சுமத்தில் இயங்கியும் வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது. மகாயோகி பழனி சுவாமிகள், சிவயோகியார் , அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி,வெள்ளியங்கிரி சாமிகள் ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும்.
இங்குப் பெருமான் பஞ்சலிங்கேஸ்வரராகவும்,  இறைவி மனோன்மணி என்ற பார்வதியாகவும் பக்தர்களுக்குத் தரிசனம் தந்தருளின்றார்கள்.கிரிமலையில் உள்ள குகை ஆண்டான் குகை சிவ ரூபமான கிரியின் குகை எனப்ப்டுகிறது. இக்குகையின் முன்புறம் பிருதிவி, அப்பு லிங்கங்களும், குகைகளும், தேயு, வாயு, ஆகாய லிங்கங்களும் உள்ளன. சிவபெருமான், உமையவளின் விருப்பதற்கிணங்க, வெள்ளியங்கிரி மூலஸ்தானத்தில் உள்ள வெள்ளியம்பலத்தில் நடனமாடி அருள் புரிந்தார் என்பர்.
    புராணங்களின் படி பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இப்பகுதிக்கு வந்த போது சிவபெருமான் வேடன் ரூபத்தில் தோன்றி, அர்ஜுனனுடன் விளையாட்டாக போர் புரிந்தார். இறுதியில் தனது உண்மை வடிவத்தில் தோன்றிய சிவபெருமானை வணங்கிய அர்ஜுனனுக்கு, தனது பாசுபத ஆயுதத்தை சிவபெருமான் அளித்து ஆசிர்வதித்தார்.. இமய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு யாத்திரை போக முடியாதவர்கள், “தென்கயிலாயம்என போற்றப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையாத்திரை செய்வதால் கயிலாய மலைக்கு சென்ற பலனை அடைவார்கள் என சித்தர்கள் கூறியிருக்கின்றனர். தன் பக்தையை காப்பாற்ற முடியாததால் மனமுடைந்த சிவன் தன் கவலைகளை குறைக்க ஓர் இடத்தை தேடுகிறார். அப்படி அவர் கண்டறிந்த இடம் தான் வெள்ளியங்கிரி மலை. கவலையோடு  வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சிவன் அதன் உச்சியை அடைந்த பிறகு அங்கு அமர்கிறார். சிவன் வந்து அமர்ந்ததாலேயே அம்மலை தென் கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. அவ்விடமே தென் கைலயமானது. அதுவே நமது வெள்ளியங்கிரி ஆண்டவன் சுயம்புவாக குடிகொண்டுள்ள வெள்ளியங்கிரி மலையாகப்பெற்றது. பரம்பொருளே மனஷாந்தி அடைத்த அவ்விடத்தில் பின்பு பல யுகங்களாக பற்பல யோகிகள், முனிவர்கள், ரிஷிமார்கள் என பலரும் தவிமிருந்து மனோ அமைதியை மட்டுமின்றி எண்ணற்ற சக்திகளையும் அடையப்பெற்றனர். நம் வாழ்வின் முக்திக்கு அருள் செய்து கைலை இறைவனின் பதம் அடைய வழி சொல்லும் இந்த புண்ணிய மலையை நோக்கி இன்றும் பலகோடி மக்கள் யாத்திரை வந்த வண்ணமே உள்ளனர். எனினும் இந்த யாத்திரையின் அனுமதியும் வெற்றியும் சிவனின் கையில் மட்டுமே உள்ளது.

   சித்தர்களும், யோகிகளும், முனிவர்களும் வாழ்ந்த ஒரு அற்புத மலை இது. இன்றும் இங்கு பல சித்தர்கள் சூட்சும வடிவில் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. இந்த பயணத்தின் போது மூலிகை செடிகளின் வாசம் நிறைந்த காற்றை சுவாசிப்பதாலும், அம்மூலிகைகளின் சாறுகள் ஊறிய சுனைகளின் நீரை அருந்துவதாலும் நம் உடலில் பல குறைபாடுகள் நீங்குகிறது இந்த வெள்ளியங்கிரியில் ஒருவருக்கு அன்னதானம் அளிப்பது ஓராயிரம் நபர்களுக்கு அன்னதானம் செய்த பலனை கொடுக்கும்  எனும் நம்புகின்றனர்  மலை ஏறும்போதும் இறங்கும் போதும் நமக்கு உயிர்த்துணையாக விளங்குவது ஊன்று கோலாய் பயன்படும் மூங்கில் தடி ஆகும். இத்தடிகள் அடிவாரத்தில் விற்பனைக்கு உள்ளன. தற்போது இத் தடி வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று வந்ததற்கான அடையாளச் சின்னமாக விளங்குவதுடன் அதைப் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கின்றனர். மாடு கன்றுகளுக்குப் பிணி ஏற்படும் போது அத்தடியால்  நீவி விடுவர். ஆண்கள்மட்டும் செல்லும் மலையாதால் பெண்கள் மலை ஏறி வந்த ஆண்களின் காலைக் கழுவி விடுவார்.ஆண்களும் தாங்கள் மலையிலிருந்து பறித்த வந்த இலைதழை வேர்களை அவர்களுக்குத்தருவர். அவர்கள் அதைச்சிறந்த மூலிகையாக நினைத்துத் தன் குழந்தைகளுக்கு துவளையாக அரைத்துப் பூசுவர். பலபிணிகள் போய்விடுவது கண்கூடு.
மலைக்குச் சென்று வருவோர்க்கு  ஓராண்டிற்கு எந்தப்பிணியும் வருவதில்லை என்றும் கூறுகின்றனர்.இனி ஒவ்வொரு மலையின் சிறப்புகளைக் காண்போம்.
                   முதல் மலை
முன்பெல்லாம் கைகால்களால் தவழ்ந்து ஏறி வந்த இந்த மலையில் இப்போது படிக்கட்டுகள் வந்துவிட்டன. முதல் மலை செங்குத்தான பாதை கொண்டது. ஏறுவதற்குச் சிரமப்பட வேண்டிவரும். இந்த மலைப் பாதையின் ஆரம்பத்தை ஆன்மிகப் பாதையின் ஆரம்பத்துக்கு நாம் ஒப்பிடலாம். ஆன்மிகப் பயிற்சிகளைப் பின்பற்றுவது எப்படி ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்குமோ, அது போல ஏறுவது சற்றே சிரமமாக இருக்கும். முதல் மலையைத் தாண்டி வருபவர்களை வரவேற்க, விநாயகப்பெருமான் காத்திருக்கிறார்.
 . முதல் மலையில் அமைந்துள்ள பாதை முழுவதும் சீரான படிகள் என்றாலும் படியின் உயரம் 3/4 அடிமுதல் 1 அடி வரை செங்குத்தானவை. இரவில் நிலா வெளிச்சம் இருந்தாலும் அடர்ந்த சோலைகளின் நடுவே பயணிக்கும் போது இருட்டாகத்தான் இருக்கும்.. இம்மலையில் காட்டுக் கொசுக்கள் அதிகம். உடல் பாகங்கள் வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக மாலைநேரத்தில் கொசுக்கள் அதிகம் இருக்கும். இம்மலையில் மூங்கில், தேக்கு வேங்கை மற்றும் மூலிகைச் செடிகள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. மலை ஏறத் தொடங்கும் போது லேசாக வியர்க்கத் தொடங்கி பாதி மலைக்கு மேல் பயணிக்கும் போது அந்த இரவு நேரத்திலும் வியர்வை கொட்டும். மலைஏறும் போது மிகக் கடினமான சூழலில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைத் சொல்லிக் கொண்டு சென்றால் எந்த விதச் சலிப்பும் தெரிவதில்லை. மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், சோலைகளின் நடுவே பயணிக்கும் இதமான சூழல், பறவை மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலி என உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படும் இனிய அனுபவத்தை உணரத்தான் முடியுமே தவிர எழுத்துக்களால் விவரிக்க இயலாது. மூலிகை தாவரங்களின் மணம், பூக்களின் நறுமண வாசனை, மாசற்ற தூய காற்றைச் சுவாசிப்பதால் உடலுக்கு நலம் கிடைக்கிறது. ஏழு மலைகளில் முதல் மலை மட்டும் அதிக உயரம். சுமார் 1.5 கி.மீ. இருக்கும் முதல் மலை முழுவதும் படி சித்தரால் படிக்கட்டு அமைக்கப்பட்டது என்பது வழக்கு. நமது பழனி மலை போன்ற தோற்றம் கொண்டது.முதன்மலையின் உச்சியில் ஒரு வெள்ளி விநாயகர் ஆலயம் அமைந்திருக்கிறது
              

                இரண்டாவது மலை:
பயணம் பழகிவிட, சுனையில் நீர் குடித்து இரண்டாவது மலையில் உற்சாகமாக நடையிடும்போது, அதன் எல்லையாக நிமிர்ந்து நிற்கிறது வழுக்குப் பாறை ஒன்று. இந்தப் பாறையில் ஏறும்போது புதுமையாய் இருக்கிறது. வழுக்குப் பாறை வந்தவுடனேயே இரண்டாவது மலை முடிந்துவிட்டதை பக்தர்கள் புரிந்துகொள்கிறார்கள். முதல் மலை முடிந்து இரண்டாவது மலை தொடக்கத்தில் வெள்ளை விநாயகர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் அருகே இளைப்பாற ஒரு சிறிய கூடமும் பிஸ்கட், சோடா, சுக்கு காபி போன்றவற்றை விற்பனை செய்யும் கடையும் உள்ளது.  இரண்டாவது மலை சிற்சில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. அடர்ந்த மரங்கள் நிறைந்திருப்பதால் நிலவு ஒளியிலும் பாதையில் வெளிச்சம் தெரிவதில்லை.  கருந்தேள்கள் அதிகம் இருக்கும் ஏனெனில் அவை வாழும் இடத்திற்கு நாம் வந்துள்ளோம். அவற்றுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்வது நியாயமில்லை. இரவு நேரத்தில் மின்மினி பூச்சிகளை அதிக அளவில் காணமுடியும். இம்மலையில் மிளகு திப்பிலி மூங்கில் வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.
     அந்த வகையில் பாம்பாட்டி சித்தருக்கு முருகப்பெருமான் இங்குள்ள இரண்டாவது சிகரத்தில் காட்சி கொடுத்துள்ளார். அதற்கு ஆதாரமாக இன்றும் இங்கு பாம்பாட்டி சித்தர் தவம் செய்த குகை மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட சுனை போன்ற பல விடயங்கள் உள்ளன.  இரண்டாவது மலையின் அடிவாரத்தில் பயணத்தை தொடங்கினால்.
                        அனைவற்றுக்கும் வியர்த்துக்கொட்டும்.   இந்த இடத்தில் இருந்து முழுவதுமான பாறைகள், புதர்கள் அடங்கிய அடர்ந்த காட்டுப்பகுதியாக இருக்கும்.சிறிது தூரம் செல்ல செல்ல கால்கள் வெகுவாக சோர்வடையும், தானாக அமருவதட்க்கு இடத்தை தேடும். மனதில் பயமும் சோர்வும் மாறி மாறி வந்த சமயத்திலெல்லாம்  ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர" மந்திர கோஷம் போடுவர் அது உற்சாக படுத்தியதை நன்கு உணர முடியும்..இந்த மலையில் உள்ள வழுக்குப்பாறையை கடந்து சிறிது நேரத்தில் மூன்றாவது மலையை அடைவோம். 
                    மூன்றாவது மலை
மூன்றாவது மலை முடிவடைவது இன்னொரு சுனையில். இதற்கு பாம்பாட்டிச்சுனைஎன்று பெயர். பாம்பாட்டிச் சித்தர் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருவதென்னவோ, மருதமலைதான். அந்தப் பாம்பாட்டிச் சித்தர் இந்த இடத்திலேயும் வசித்திருக்கக்கூடும். குண்டலினி சக்தியின் குறியீடாக பாம்பு இருப்பதையும் நாம் நினைவுகொள்ள வேண்டும். மனிதர்களின் குண்டலினி ஆற்றலை ஆட்டுவிக்கிற வல்லமை சித்தர்களுக்கு இருப்பதாலேயே பாம்பாட்டிச் சித்தர் என்பது ஒரு முக்கியமான சொல்லாக விளங்குகிறது. மூன்றாவது மலையில் சில சரிவான பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். ஏறும் போது வழுக்கி விழுவதால் இதற்கு வழுக்குப்பாறை என பெயர் பெற்றது. அப்பாறைகளில் இலகுவாக ஏறிச்செல்ல படி வடிவத்தில் செதுக்கி அமைத்துள்ளனர். மரத்தின் வேர்களுக்கு இடையே பாதை அமைந்துள்ளது. நடக்கும் போது மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். மழை காலங்கள் இப்படிகள் வழியே தான் மழை நீர் வருகின்றது. மழைநீரின் வேகத்துக்கேற்ப படிகள் இடம் பெயர்ந்து விடுகின்றன. சில இடங்களில் படிகள் அடித்துச் செல்லப்படுகிறது. மண் வழிப் பாதையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்   இப்பாறைகளைச் சீரமைத்து வருகின்றனர். இம் மலையிலும் இரண்டாவது மலையில் உள்ள தாவரங்களே காணப்படுகின்றன. வேங்கை மரத்தில் வடியும் பாலை சிறிய தேங்காய் ஓடுகளில் சேகரித்துக் கடைகளில் விற்பனை செய்கின்றனர். வேங்கைப் பாலால் கைக்குழந்தைகளுக்குத் திலகம் இட்டால் வசீகரமாகும் என்பதுடன் கண் திருஷ்டி பாதிக்காது என இன்றும் கிராமங்களில் நம்புகின்றனர். திருப்பூர் அருகே உள்ள புகழ் பெற்ற அலகு மலை முருகனுக்கு அலங்காரத்தில் இந்த வேங்கைப் பாலால் தான் திலகம் இடப்படுகிறது என்பது கூடுதல் செய்தியாகும். இம் மலையில் கைதட்டிச் சுனை என்ற தீர்த்தம் உள்ளது. ஒவ்வொரு மலை முடியும் இடம் தொடங்கும் இடம் என எந்தவிதமான அரிதியும் குறியீடும் இல்லை. மூன்றாவது மலையும் ஒரு சுனையோடு துவங்குகிறது. இதற்கு கைதட்டிச்சுனைஎன்று பெயர். இந்தச் சுனை இருக்கும் பகுதிகளில் சித்தர்கள் நடமாட்டம் மிகுதி என்பதால், இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வரும் என்ற ஒரு நம்பிக்கை. இதனாலேயே கை தட்டிச் சுனை என்ற பெயர் 60 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் வந்தது. இறங்கும்போது        கீழே இறங்கும் போது 3வது மலையினுள் நுழைந்து நடக்க ஆரம்பித்தால் ஏசி அறையினுள் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வு வந்து விடுகிறது. அடர்ந்த மரங்களினிடையே பயணிக்கும் போது நமக்குக் கிடைக்கும் அனுபவம் மறக்க முடியாதது ஆகும். இரவு நேரத்தில் மலை ஏறும் போது மூலிகைக் காற்றின் வாடையையும், குளிர்ச்சியையும் உணர்ந்த நமக்கு கீழே இறங்கும் போது வண்டுகள் எழுப்பும் ரீங்காரம், பறவைகள் கத்துகின்ற மெல்லிய ஓசை, இயற்கை எழில் காட்சிகளை ரசித்து, தூய காற்றை சுவாசித்துக் கொண்டு பயணிக்கும் சுகமே அலாதி தான். இரண்டாம் மலையிலும் முதல் மலையிலும் பறக்கும் அணில்கள் மரங்களில் தாவிச் செல்வதைக் காணலாம். பாதை ஓரத்தில் உள்ள செடிகளில் சிவப்பு எறும்புகள் (செவ்வெறும்பு) அதிக அளவில் காணப்படுகின்றன. கடித்தால் உடல் முழுவதும் தடித்துக் கொள்வதுடன் அரிப்பும் உண்டாகி விடும். எனவே மிகுந்த கவனம் தேவை
                   நான்காவது மலை:
நான்காவது மலை, சமதளத்தில் இருக்கிறது. நடந்து போக எளிதாகவும் பக்தர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாகவும் இந்த மலை விளங்குகிறது. இது மண் மலையாக இருக்கிறது. ஒருபுறம் அடர்ந்த வனமாகவும், மறுபுறம் பாதாளமாகவும் அமைந்திருக்கிறது. இந்த நான்காம் மலையில்தான் ஒட்டர் என்கிற சித்தர் சமாதி உள்ளது எனவே, ‘ஒட்டர் சமாதிஎன்கிற பெயர் வெள்ளியங்கிரி பக்தர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர். ஒருவிதமான கோரைப் புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால் அது நான்காம் மலையின் தொடக்கம் என அறியலாம். இம்மலையை ஒட்டன் சமாதி மலை, திருநீர் மலை எனவும் கூறுவர். மலையின் மேற் பரப்பு வெண்மையான திருநீரை ஒத்த தரைப் பகுதியைக் கொண்டவை. பெரும்பாலும் மண்படிகள் தான் அமைந்துள்ளது. சுமார் 25% சதவீதம் பகுதி கற்படிகளால் ஆனவை. இம் மலையில் வசு வாசி என்ற மதுரக் களி பாக்கு அதிக அளவில் விளைகின்றது. சீதை மஞ்சள் என்ற  வாடாத மஞ்சள் இம் மலையில் உள்ளது.
                  ஐந்தாவது மலை
ஐந்தாவது மலை பீமன் களியுருண்டை மலை என அழைப்பர். ஒரு பெரிய பாறை களியுருண்டை வடிவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின்போது இங்கும் வந்துள்ளனர் என்று கூறுகின்றனர். பஞ்ச பாண்டவர்கள் தாராபுரத்தில் தங்கி இருந்ததாகவும் அப்போது வெள்ளியங்கிரிக்கு வந்ததாகவும் நம்பப்படுகிறது. எனவே, பீமன் களியுருண்டை மலை, அர்ச்சுனன் தவம் செய்த இடமாகக் கருதப்படும் அர்ச்சுனன் தலைப் பாறைபோன்ற இடங்களெல்லாம் இங்கே உண்டு.
இம்மலையில் செண்பக மரங்கள், குறிஞ்சிப் பூ செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமவெளி போன்ற பகுதியே இம்மலையில் அதிகம். இப்பகுதியில் பயணிக்கும் போது, கோடை காலத்திலும் கடுங்குளிருடன் அதி வேகத்துடன் காற்று வீசுவதை உணர முடியும். இக்குளிரிலிருந்து காக்கக் கம்பளி உடைகளான மப்ளர், ஸ்வெட்டர், தலைக்குக் குல்லாய் போன்றவற்றை அணிவது அவசியம்.ஆனால் இதை யாரும் செய்வதில்லை. இம்மலையில் பயணிக்கும் போது நடைபாதையின் ஓரத்தில் வரப்பு போன்ற பகுதியில் கட்டு விரியன் பாம்புகள்   ஊர்ந்து வருவதுண்டு
. .

இந்த மலைத்தொடர்களில் ஐந்தாவது மலையான திருநீறுமலையில் சைவ மரபினர் நெற்றியில் அணியும் திருநீறு பாறைகளால் நிறைந்திருக்கிறது. அவற்றிலிருந்து பெறும் திருநீறை பக்தர்கள் புனித பிரசாதமாக எடுத்து செல்கின்றனர்.  ஐந்தாம், ஆறாம் மலைகள் ஏற்ற இறக்கம் நிரம்பியதாய், ஒன்றோடொன்று நெருக்கமாய் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு மலைகளுக்கு நடுவில் சேத்திழைக் குகை உள்ளது. இந்தக் குகையில் ஒரே நேரத்தில் 6070 பேர் வரை தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
                  
ஆறாவது மலை, கீழ் நோக்கி இறங்கக்கூடியது. இங்கே பாயக்கூடிய சுனை ஆண்டிசுனை’. இது நீலி ஆற்றில் சேர்கிறது. இங்கே குளிப்பது மறக்க முடியாத, சுகமான அனுபவம் என்கின்றனர் பக்தர்கள். ஐந்தாவது மற்றும் ஆறாவது மலைகள், வெள்ளை மணல் கொண்டவை. எனவே, இவற்றுக்கு திருநீற்றுமலைஎன்றும் பெயர் உண்டு. இந்தத் திருநீற்று மலையிலிருந்து வெள்ளை மணலை இறைவனுடைய திருநீறாகவே போற்றி வீடுகளுக்குக் கொண்டு செல்வது பக்தர்களின் வழக்கம்.
  ஆறாவது மலை. சந்தன மலை என அழைக்கின்றனர். காரணம் இதன் நிலப்பரப்பு சந்தனத்தின் நிறத்தை ஒத்திருப்பது தான். வாசனைப் புற்கள், கற்றாழை, கற்பூர வல்லி, மிளகு பலாமரம் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள், மரங்கள் அதிக அளவில் உள்ளதைக் காணலாம். பாதையின் இருபுறங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இரவில் இம்மலையில் பயணிக்கும்போது மலையின் உச்சி பகுதியில் இருப்போம். தங்கு தடையின்றி அதிக விசையுடனும் ஓசையுடனும் காற்று வீசுவதை உணரவும் கேட்கவும் முடியும். ஐந்தாவது மலையிலும் இம்மலையிலும் படிகள் ஒரே சீராக இல்லாததால் உட்கார்ந்து நகர்ந்து நகர்ந்து கீழ் நோக்கி இறங்கிச் செல்ல வேண்டும். இம்மலையின் முடிவில் ஆண்டி சுனை எனப்படும் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்தச் சுனைத் தீர்த்தம் தான் ஈசனின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது. இச்சுனைக்கு அருகில் ஈரப்பதமான பகுதிகளில் அட்டை பூச்சிகள் உள்ளன. குளிக்கும் போதும் நீர் அருந்த சுனைக்கு அருகில் செல்லும் போதும் கவனமுடன் இருக்க வேண்டிய பகுதி ஆகும். முகம் கழுவும் போது அட்டைப் பூச்சி மூக்கினுள் சென்றுவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அர்ச்சுனன் தவம் செய்த சேத்திழைக் குகை இம்மலையில் தான் உள்ளது.     ஆறாவது மலை முழுவதும் அழகான புல் தரை சமவெளி.  
                         






                     ஏழாவது மலை:
 ஏழாவது மலையின் ஆரம்பத்தில் ஒரு டீக்கடை உள்ளது. மலை உச்சியில், கடுங்குளிரில் மலை ஏறிவந்த களைப்பும் சோர்வும் உள்ள நிலையில் ரூபாய் பத்துக்கு கிடைக்கும் (1999ல்)சூடான சுவையான சுக்குக் காபி தேவாமிர்தம் போல் இருந்தது. இக்கடையை அடுத்து கோயில் நிர்வாகத்தினரால் வேய்ந்த தகரக் கொட்டகை ஒன்று உள்ளது. இதில் சுமார் 50/60 பேர் படுத்து ஓய்வெடுக்கலாம். இது இரண்டு மூன்று மாத உபயோகத்திற்காகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டதாகும். இங்கு தங்கி ஓய்வெடுத்து பின் விடியற்காலை பயணத்தைத் தொடரலாம். இங்கு தங்காமலும் செல்லலாம். இம்மலையை சுவாமிமுடி மலை என்பர். இம் மலையில் செங்குத்தான படிகள் இல்லை. ஆனால் மண் மற்றும் பாறைகள் நிறைந்த சரிவான பாதை. சில இடங்களில் கைகளை ஊன்றி ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்ல வேண்டும். பாதையின் இருபுறங்களிலும் புற்கள் மற்றும் குறிஞ்சிப்பூ செடிகள் பூத்துக் குலுங்குவதை காணலாம்.
     இம் மலை உச்சியில் தோரணக்கல் என்ற இயற்கை கோபுரவாயில் நம்மை வரவேற்கிறது. இவ்வாயிலைக் கடந்ததால் விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சன்னதி உள்ளது. இதை அடுத்து ஒரு பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள குகையில் தான் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக் குகைக் கோயிலில் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது. இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இறைவி மனோன்மணி என்ற பார்வதியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக் கோயிலை அடைந்து ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றைச் சொல்ல இயலாது. ஏழு மலைகளைச் சிரமப்பட்டு ஏறி வந்த உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி கால்வலி அனைத்தும் ஈசனைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது. எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ தரிசனம் நம் கண்களை விட்டு என்றுமே அகலாத நினைவுகளாகும்.
   இங்கு மின்சாரமோ மின் விளக்குகளோ இல்லை. எண்ணெய் தீபம் மட்டும் தான். பெட்ரோமாக்ஸ் விளக்கு உண்டு. சூரிய ஒளியில் (சோலார்) இயங்கும் மின் விளக்குகளை அமைத்துள்ளனர். எனவே இரவு எந்த நேரத்திலும் கண்குளிர தரிசிக்கலாம். வெள்ளிமலை, ரத்தினகிரி, தென்கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்பெறும் புண்ணிய ஸ்தலமாகும். ஊட்டி மலையின் உயரத்திற்கு சமமானது.  விழாக் காலங்களில் பூசாரி தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பார். மற்ற காலங்களில் அமாவாசை யன்று மட்டும் கூட்டமாக பக்தர்கள் சென்று பூசை செய்து துதித்தபின் திரும்பி வருவர். கால பூஜை போன்ற எந்த குறிப்பிட்ட பூஜையும் கிடையாது. 24 மணி நேரமும் வழிபடலாம். எப்போதும் திறந்தே இருக்கும். கதவுகளே இல்லை. கோயிலின் முன்பு சுமார் 10 அடி அகல நிலப்பரப்பு உள்ளது. அதற்கப்பால் ஆழமான பள்ளத்தாக்கு. கூட்ட நெரிசல் அதிகம் இருந்தால் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பில்லை. கூட்டம் குறைவாக இருந்தால் நிதானமாக நின்று இறைவனை கண்குளிர வேண்டலாம். ஆன்மிக அன்பர்கள் தங்கள் வாழ் நாளில் ஒருமுறையேனும் இத்தலத்திற்கு வந்து பஞ்ச லிங்கேசனாகத் திகழும் ஈசனை தொழுதுய்ய வேண்டும்.
மலையேறி வந்த களைப்பும் நாம்தானா ஏறி வந்தது என்கிற மலைப்பும் பறந்து போகும்விதமாய் அடர்ந்த வனங்களின் மடியில் உயர்ந்த மலைகளின் நடுவில் யுகம்யுகமாய் கோயில்கொண்டு இருக்கிறார் வெள்ளியங்கிரி ஈசர்.

கரிகால சோழனிடம் சமய முதலிகள் வெள்ளியங்கிரிச் சாரலில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும் முக்தியே கிடைக்கும்!என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. வெள்ளியங்கிரியின் எந்தவொரு மலையையோ, லிங்கத்தையோ வழிபட்டாலும், அவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பலன்களைப் பெறுவார்கள் என்று தெய்வீக நூல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சவாத்திய சத்தங்கள் மலையில் சிவபெருமானை தரிசித்து வணங்கி இந்த மலையிலேயே சிலகாலம் தங்குபவர்களுக்கு, சிவபெருமானுக்கு வாசிக்கப்படும் இசைக்கருவிகளின் ஒலிகள் மற்றும் ஓம்கார ஒலிகள் கேட்பதாக கூறுகிறார்கள் இங்கு தான் எப்போதாவது சிவனுக்கு உகந்த பஞ்ச வாத்திய சத்தம் கேட்கும் என்று கூறப்படுகிறது. இந்த பஞ்சவாத்திய சத்தங்கள் பூமிக்கு அடியில் வாசிக்கப்படுகிறது என்றும் அதன் ஒளி இந்த ஏழாவது மாலைவரை கேட்கிறது என்றும் கூறப்படுகிறது. இடி போன்ற சத்தம், காற்றில் ஓம் எனும் சத்தம் அல்லது வேறுவித ஓசை சத்தம், சங்கின் ஒளி, சிகண்டி ஒளி இப்படி ஏதோ ஒருவித சத்தம் கேட்கும் என்று கூறப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலை, இறைமையின் மகத்துவத்துக்கு மட்டுமின்றி இயற்கையின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிற மேன்மையான தலம். பற்பல சுனைகளும் சிற்றருவிகளும் உருவெடுக்கும் வெள்ளியங்கிரி மலையில் மூங்கில், தேக்கு, சோதிப் புல், சோதிக்காய், மிளகு, திப்பிலி, உதிரவேங்கை, வசுவாசி, வாடா மஞ்சள், காட்டுப்பூ, சிவப்புக் கற்றாழை, கற்பூரவல்லி, ரத்தசூரி, ஏறு சிங்கை, இறங்கு சிங்கை, சோழைக் கிழங்கு, கருங்கொடிக் கிழங்கு உள்ளிட்ட பல்வேறு அரிய தாவரங்களும் மூலிகைகளும் கிடைப்பதாக சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலை நேரத்தில் ஈசனைத் தரிசித்த பின் அம்மலையின் அழகு, சூரியோதயம், இயற்கை எழில் ஆகியவற்றை ரசிக்கலாம். இரவு நேரத்தில் ஏறி இறைவனைத் தொழுதபின் உடனே கீழே இறங்கி விட்டால் இந்த இயற்கைச் செல்வங்களை கண்டு அனுபவிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம். இம் மலையில் இருக்கும் போது கிழக்கில் சூரியன் உதிக்கும் அழகையும், சிறுவாணி நீர்த் தேக்கத்தின் எழில் தோற்றத்தையும் கேரள மலைத் தொடரின் பசுமையான அழகிய காட்சிகளை கண்டு களிக்கலாம்.





ஏறுவதை விடவும் இறங்குவது இந்த வெள்ளியங்கிரி மலையில் மிகவும் கடினமான காரியமாகும். இறங்கும் போது நிலைதவறி கீழே விழுந்துவிடாமல் இருக்கும் மலையேறும் பக்தர்கள் அனைவரும் மூங்கில் கம்பு ஒன்றை உடன் கொண்டு செல்கின்றனர்.

.
 முடிவுரை

கீழே இறங்கியவுடன் நல்ல முறையில் எந்த விதமான விபத்தும் இன்றி சென்று வந்ததற்காக ஈசனுக்கும் மனோன் மணியம்மைக்கும் நன்றி தெரிவிப்பது நமது கடமையாகும். எந்த ஒரு பிரச்சனையும் இன்றி ஒருவர் மலைக்குச் சென்று ஈசனைத் துதித்து பின் இறங்கிவிட்டால் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திகழ்கிறார் எனக் கொள்ளலாம்.



கொண்டு செல்ல வேண்டிய பொருள்கள்அனைவருமே வெகுசாதாரனமான அவரவரின் ஒரு செட் துணி, ஒரு வேலை சாதம், குளுகோஸ், தண்ணீர் பாட்டில், பூஜைப்பொருள் மட்டுமே பையில் வைத்திருக்கவேண்டும் . ஆனால்   சோர்வின் மிகுதியால் அந்த பாரம்கூட தாங்குவதற்கு கடினமாக தோன்றும் .மூன்றாவது மலை அதிக கடினமான பாதையாக இருக்கும் எனவே டார்ச் லைட் எடுத்துச் செல்வது மிகஅவசியம். கூடுதலாக ஒரு செட் பேட்டரி செல் வைத்திருப்பது நல்லது வெள்ளிங்கிரி மலையில் சாப்பிட வேறு எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சுனைநீர் கிடைக்கும். எனவே மலை ஏறும் போது சாப்பிட ரொட்டி ஜாம், சப்பாத்தி, பழங்கள் மற்றும் உலர் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களையும் தண்ணீரையும் எடுத்துச்செல்ல வேண்டும். எண்ணெயில் தயாரித்த உணவுப் பொருட்களைத் தவிர்தல் நலம். இல்லையெனில் மலைஏறும் போது நிறைய நீர் அருந்த வேண்டி வரும். நீர் அதிக அளவில் அருந்தினால் மலை ஏறுவது சிரமமான காரியம் ஆகிவிடும்.முதல் மலை ஏறும்போது சிலர் முடியாமல் திரும்பி விடுவர்  அட்டைபூசியை சமாளிக்கும் பொருட்டு கத்தி, மூக்கு பொடி, இரவுப்பயனத்திற்காக டார்ச் லைட் மற்றும் குளுக்கோஸ் போன்றவைகளைக்களைக் கொண்டு செல்லவேண்டும்
தவிர்கவேண்டியவை வெள்ளிங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அன்று. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் பலவீனமானவர்கள், குறைந்த, அதிக இரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கும் மேலானவர்கள் ஆகியோர் மலை ஏறுவது உயிருக்கு மிக ஆபத்தானதாகும்.10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் மலை ஏறக்கூடாது.

உடல்நலம்
    மலை ஏறும் போது உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையுடன் கலந்து வெளியேறுகிறது. மூச்சுக்குழாயும், மூச்சுப்பையும், மார்பு எலும்புகள் விரிந்து சுருங்குவதால் உடற்பிணி நீங்குகிறது. மூலிகைகளின் சாரம் மிகுந்த நீரை பருகுவதாலும் நீராடுவதாலும் உடல்நலம் சீராகுகிறது



செல்லும் மாதங்கள் நேரங்கள் பங்குனி, சித்திரை மாதங்களில் சிவஒலி எழுப்பிய வண்ணம் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மலையேறி வழிபடுவது வழக்கம். ஆண்டு முழுவதும் மலையேற வருகிற பக்தர்களும் உண்டு
இம்மலைக்கு வருடத்தில் மாசி15முதல் பங்குனி, சித்திரை, வைகாசி 15ம் தேதி வரை மட்டும் தான் பக்தர்கள் வருகின்றனர். இம் மாதங்களில் நிலவும்சீதோஷ்ண நிலை உகந்ததாக இருக்கின்றது. குறிப்பாக சித்ரா பவுர்ணமி யன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது சிறப்பாகும். பொதுவாக இரவு நேரத்தில் மலை ஏறி தரிசனம் செய்தபின் வெயில் கடுமை அதிகரிக்கும் முன் அடிவாரத்தை அடைவது நல்லது. கோடை காலத்தில் நீர்நிலைகளை நாடி பெரும்பாலான வன விலங்குகள் கீழ்ப் பகுதிக்குச் சென்றுவிடும். அச்சமயத்தில் பக்தர்கள் பயணிப்பதால் வன விலங்குகளின் தொந்தரவு ஏதும் இருக்காது. மழைக் காலங்களில் மலை ஏறுவது பாதுகாப்பானது அல்ல மாறாக ஆபத்தை விளைவிக்கும். அதிகமான பக்தர்கள் யாத்திரை செல்லும் நாட்கள் 
  1. சித்திரை மாத பௌர்ணமி தினம்.
  2. மாதாமாதம் வரும் பௌர்ணமி, பிரதோஷம் மற்றும் சிவ ராத்திரி. 
  3. செல்லும் வழி (தமிழ்நாடு) கோயம்முத்தூரில் இருந்து 30 KM தொலைவில் (பேரூர் வழியாக) பூண்டியை கடந்த 3 KM -ல் வெள்ளியங்கிரி மலை அடிவார சன்னதியை அடையலாம்.அக்கோவிலின் பிரகாரத்தின் பின்புறத்தில் இருந்து மலை பயணத்தை துவங்கலாம்.                                      
                  புனித பயணத்தின் போது ..                                              ஈசனின் புனித தலமான இம்மலையில் சுற்றுப்புற சூழலும், துப்புரவும் காக்க வேண்டியது ஆன்மிக பற்றுக் கொண்ட ஒவ்வொருவரின் தலையாய கடமை. ஆனால் அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மிகச் சிலரே. மிகமிக முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வனத்துறையினர் விழாக் காலங்களில் அனைவரின் பைகளையும் சோதனை செய்து பிளாஸ்டிக் கவர் போன்றவற்றைப் பிரித்து எடுத்த பின்பு தான் மேலே செல்ல அனுமதிக்கின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட நீர் மேலே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

மாறாக சலுகை விலையில் தண்ணீர் பாட்டில்களைத் தருகின்றனர். மற்ற நேரங்களில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. தேவையான பொருட்கள், உணவு, குடிதண்ணீர் எடுத்துச் செல்வதும் வழக்கமாக உள்ளது. பெண்கள் இங்கு மலைப்பயணம் செல்ல அனுமதி இல்லை. தை முதல் தேதியிலிருந்து வைகாசி விசாகம் வரை மலைபயணம் செய்யலாம். மலைப் பயணம் அதிகாலை வேளையில் தொடங்குவது வழக்கமாக உள்ளது.  
போதிய விழிப்புணர்வு இருந்தும் இப்படி ஈசன் குடிகொண்டுள்ள மலையை மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? புனித மலைக்கு வரும்போது புகையிலை பொருட்களான சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். புண்ணிய தலங்களுக்கு பயணிக்கும் போது பொதுவாக இறைவன் மீது உள்ள பாடல்களைப் பாடுவர். சிலர் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பர். பயணம் செய்ய நினைக்கும் பக்தர்கள் கவனத்திற்கு 
முக்கிய கவனத்திற்கு                                                            1. யாத்திரையின்போது போதை பொருட்கள் உபயோகிப்பது கடும் குற்றம். 
2.தவறான சிந்தனைசெய்கை மற்றும் வார்த்தைகளை தவிர்ப்பது உத்தமம். 
3. கவனமில்லாத பயணம் ஆபத்தை விளைவிக்கக்கூடும். 
4.கால் நகங்களை வெட்டிவிட்டு செல்வது நலம். 
5. இறை சிந்தனை ஒன்றே பக்தர்களை காத்தருளும்
. 6. காட்டில் வசிக்கும் சிறு உயிரினங்களுக்கும் துன்பம் விளைவித்தல் கூடாது.
 7. மலை பயணத்தில் காலணி அணிவது உட்சிதம் அல்ல. 
8. எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம். 
9. நீண்ட நேரம் வெளிச்சம் தரக்கூடிய லைட் மிக மிக அவசியம். 
10. காட்டை எந்தவிதத்திலும் PLASTIC குப்பைகளால் அசுத்தம் செய்யாதீர். 
11. குறைந்த இடையுள்ள பொருட்களை எடுத்து செல்லவது நலம்.
                      
வெள்ளியங்கிரி மலை பற்றி மேலும் சில செய்திகள் 6 வது மலை சந்தன மலை அல்ல திருநீறு மலை என்பார்கள் .அம்மலையில்  உள்ளமண் சாம்பல் போல் வெண்மையாக இருக்கும் அதுவே அம்மலையில் கொண்டுவந்த திருநீறு எனத்தருவர். முன்னொரு கைத்தட்டிச் சுனை இருந்தது. அங்கு இருகைகளைத் தட்டினாலோ அல்லது பெரிய சத்தம் இட்டாலோ கற்களுக்கிடையிலிருந்து. நீர் வரும் (சுமார்60 ஆண்டுகளுக்கு முன்) இப்போது அதன் ஊற்றுக்கண்கள் அடைபட்டுவிட்டன. பாண்டவர்கள் வனவாசத்தின்போது  இம்மலை இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. களி உருண்டை வடிவில்  உருண்டையான கற்கள் உள்ளன.அதைப் பீமன் களி உருண்டை என்பர். அங்கு மஞ்சள் செடிபோல் ஒருவகையான செடிகள் இருந்தன. அதைச்சீதை மஞ்சள் என்பர்.அதை வீட்டிற்குப் பிடிங்கிவருவர். ஆனால் அதனை அங்குள்ள மலைவாழ் மக்கள் விற்பனை உரிமை பெற்று விற்று வருகின்றனர். ஆறாவது மலையில் ஒட்டன் சமாதி யுள்ளது அங்குதான் திருநீறு எடுப்பார்கள்.மலையில் இருந்து இறங்குபவர்கள் அங்குள்ள இலைதழைகளைப் பிடுங்கி வருவர். அதைக் குழந்தைகளுக்குத் துவளை அறைத்துப் போடுவர் .அதனால் குழந்தைகளின் பிணிகள் போகும். இதை பிணியுற்றக் கால்நடைகளுக்கும் பயன் படுத்துவர்  மேல் மலையில் தோரணவாயில் போல் இரு கற்கள் சேர்ந்திருக்கும். 50 வருடங்களுக்குமுன் அவை தொடாமல் இருந்தன பழைய வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் படங்களில் இதைக் காணலாம். இப்போது அக்கற்கள் வளர்ந்து விட்டன. அதன் வழியாக யானைகள் செல்லமுடியாது. இறுதி மலையில்தான் சுயம்பு லிங்கம் உள்ளது .பூசாரிகள் கிடையாது. அவரவரே பூசை செய்து கொள்ளலாம் ஆனால் விசேட காலங்களில் திடீர்ப் பூசாரிகள் தோன்றிவிடுவர்.ஆறாவது மலையில் பாம்பாட்டி சுனை உள்ளது. அது ஒருகாலத்தில் சிற்றாக ஓடிக்கொண்டிருந்தது. இப்போது அதுதேங்கிய நீராக உள்ளது அதனால் தான் அட்டைப்பூச்சிகள் தோன்றிவிட்டன. ஏழாவது செம்மண்ணால் ஆனதால் மழைபெய்தால் வழுக்கும் ஏறமுடியாது 1977-78 ல் வீசி பனிபுயலால் நூற்றுக் கணக்கில் மக்கள் மாண்டனர். அதுமுதல் மழை பெய்தால் மேலே யாரையும் ஏற விடுவதில்லை.மலைமீது காலணிகள் அணிந்து செல்ல அனுமதி இல்லை. மலைக்குச் சென்ற அனைவரும் திரும்பி விடுவதில்லை சிலர் காணமல். போவதுண்டு. காரணம் தடம் மாறி சென்றுவிடுவதே.5அல்லது 6 ஆண்டு ஒரு சினிமா இயக்குநர் காணாமல் போனதை அறிவோம். மாசி பங்குனி,சித்திரை,வைகாசி ஆகிய நான்கு மாதங்களே மலை ஏறுவர்.மற்றமாதங்களில் வனத்துறை அனுமதிப்பதில்லை ஆனால் ஒவ்வொரு மாத அமாவாசை பௌர்ணமி அன்று சில பக்தர்கள் மலைக்குச் சென்று வருகின்றனர்.கார்த்திகை தீபத்தின்போது ஒரு கூட்டம் மலைமீது சென்று தீபம் இட்டு வருகின்றனர்  தயாரிப்பு புலவர்.ஆ.காளியப்பன்  தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்                             9788552993  21-03-2020







No comments:

Post a Comment