Friday, 13 March 2020

அறுவகை இலக்கணம்தண்டபாணிசாமிகள்


அறுவகை இலக்கணம் 12-03-2020  பதிவு எண் 1
உலகினில் மூத்தகுடி வாழ்வை உரைக்கும்
அலகிலா நூற்கெலாம் ஆதி -- இலக்கணம்
சொல்லிய தொல்காப் பியரே இலக்கணம்  
சொல்லுவேன் ஆறாக இன்று.

கற்றோர்க்குத் தெள்ளமுதம் கற்போர்க்குக் கோடிவிழி
மற்றோர் மருள்கெடுக்கும் மாமருந்து --- கொற்ற
முருகதா சக்குரவன் மூதறிவாற் சொன்ன
இருமூன் றிலக்கண நூலே.

ஆன்றோர்களே
  சிரவை ஆதீன நிறுவுநர் திருப்பெருந்திரு இராமானந்த அடிகள் பெருமானின் குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எனும் முருகதாச அடிகளார்.இவர் எழுதிய 49000 பாடல்கள் கிடைத்துள்ளன.அவற்றுள் ஒன்றே அறுவகை இலக்கணம்.பொதுவாக இலக்கணம் ஐந்து.அந்த ஐந்தையும் கற்பதால் விளையும் புலமையின் இலக்கணத்தைச் சேர்த்து அறுவகை இலக்கணம் என்னும் நூலாகத் தந்துள்ளார். இவ்விலக்கண நூல் முன்னோர் மொழியைப் பெருக்கிக் குறுக்கி மொழிவதன்று (பாயிரம்2) இதிலுள்ள கருத்துகளைப் பழையமரபு வழிப்பட்ட இலக்கணிகள் ஏற்றுக் கொள்ளச் சற்று தயங்குதல் கூடும்.
      இந்த இலக்கணநூல் ஆழமானதாக இருந்தாலும் எளிய நடையில்  அமைந்து உள்ளது. தமிழ்க் கல்விக்கும் உண்மையான தமிழ்வளர்ச்சிக்கும் இந்நூல் பெரிதும் உதவும் என்ற எண்ணத்தில் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர அடிகள் இசைவுடன் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.அனைவரும் கற்றுணர்ந்து கருத்துகளைப் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். இறையருள் கூடின் நாளும் சந்திப்போம் நாளை வண்ணச்சரப தண்டபாணி  அடிகள் வாழ்வின் பெருமை 

                 அறுவகை இலக்கணம் 19-03-20
இலக்கணம்  எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துவகைப்படும்
இந்த ஐந்திலும் புலமை பெற்றோர் புலவர் எனப்படுவர். அந்தப் புலமை இலக்கணத்தையும் சேர்த்து அறுவகை இலக்கணம் என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதி உள்ளார். இந்த இலக்கணத்தின் மூலத்தை மட்டும் பதிவிடுகிறேன். இதன் பொருளை நன்கு உணரவேண்டுவோர் சிரவை ஆதீனம் வெளியிட்டு உள்ள அறுவகை இலக்கணம் என்ற நூலை வாங்கி பெரும் புலவர்.ப.வெ. நாகராஜன் ஐயா உரை உடன் படித்துக்கொள்க. இடையிடையே எனக்குத் தோன்றும் விளக்கமும் தர முயல்கிறேன்.
     தமிழ் மொழியின் இலக்கணம் மிகத் தொன்மையானது. தமிழில் இலக்கணம் என்றால் மொழி அமைப்பை மட்டும் குறித்தல் ஆகாது. மொழியோடு நூல்களின்  வடிவம், நுதல் பொருள்,மக்கள் வாழ்வு ஆகிய அனைத்துமே இலக்கணத்தில் ஆராயப்படும். “தமிழ் மொழியில் இலக்கணம் என்பது மொழியை மட்டும் ஆராய்வதாக அன்றி அம்மொழியினாலான இலக்கியம், அவ்விலக்கியத்தின் பொருள், வடிவம், ஆகியவற்றை எல்லாம் ஆராயும் ஒரு நெறியாக இருந்தது” என்று திரு அ.சண்முகதாஸ் அவர்கள்கூறியுள்ளார்..
எனவேதான் தொல்காப்பியர் காலத்திலேயே   எழுத்து, சொல், பொருள் என ஆராயப்பட்டது.
     தொல்காப்பியரின் செய்யுளியலுக்கு இணையாக  யாப்பு நெறி  மிகச்சிறப்பாக வளர்ந்து பாக்கள் இனங்களோடு பல்கிப் பொலிவடைந்த காலத்தில் யாப்பிலக்கணம் தனியே விரிவடைந்து தமிழ்  இலக்கணம் நான்கு கூறுகளாயிற்று.
      அகப்புறத்துறைச் செய்திகளைச் சிறுசிறு வரலாற்றுத் துணுக்களோடு சேர்த்துப் பாடும் சங்கத்தனிப் பாடல்கள் கீழ்க்கணக்கு நூல்களாகவும் காப்பியங்களாகவும் மலர்ந்தன. சமய உண்மைகளும் நீண்டகதைகளும் பாடு பொருள்களாயின. இதனால் படைப்பாளிக்கு அதிகச்சுதந்திரம் கிடைத்தது. இலக்கியத்தில் புதிய உத்திகள் தோன்றின. தொல்காப்பிய உவம இயலுக்குள் இவை அடங்கவில்லை. எனவே இவற்றை ஆராய ஓர் இயல் தேவைப்பட்டது. அப்போது ஏற்பட்ட வடமொழியின் கூட்டுறவும் துணைக்காரணமாகத் தண்டி அலங்காரம் தோன்றிற்று. தமிழில் அணி இலக்கணம் என்னும் ஐந்தாவது அதிகாரம் முகிழ்த்தது இந்த இலக்கணம் எல்லாமொழி இலக்கணங்களுக்கும் பொதுவான ஒன்று எனக்கொள்வதில் தவறில்லை.
    தமக்கெனக் கட்டுக்கோப்பான வடிவமைப்பைப் பெற்ற சிற்றிலக்கிய வகைகள் தமிழில் தோன்றிய போது பாட்டியல் நூல்களும் பிறப்பெடுத்தன. பாட்டியல் நூல்களிலும் இலக்கியம் கண்டு இலக்கணம் வகுக்காமல் சில கற்பனைகளும் கலந்து விட்டன என்பது உண்மையே. எனினும் பாட்டியலில் வடமொழிச் செல்வாக்குக் குறைவு. ஆனால், கோதுமையை இறக்குமதி செய்யும்போது பார்த்தீனியக் களையும் சேர்த்தே இறங்கி விட்டதைப் போன்றே தேவையற்ற பொருத்தவியல் என்ற ஒன்றும் அணியியலோடு சேர்ந்துவந்து பாட்டியலோடு ஒட்டிக்கொண்டது. பாட்டியலும் பொருத்தவியலும் யாப்பிலக்கணத்தின் ஒருபகுதியாகவே கருதப்படுகின்றன.
இதுவே மூன்றிலக்கணம் ஐந்திலக்கணம் ஆன வரலாறு ஆகும்.இதுவே புலமை இலக்கணமாக வளர்ந்த வரலாற்றை நாளை காண்போம் 

            20-3-2020 புலமை இலக்கணம் தோன்றக்காரணம்
  1498 ல் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த பின்பு பல ஐரோப்பா நாட்டினர் இந்தியாவில் குடியேறத் தொடங்கினர்.அவர்களுடன் அவர்களது பண்பாடும் பழக்க வழக்கங்களும் நம்நாட்டில் கலக்கத் தொடங்கின. தமிழ்நாட்டிலும் பலப்பல மாற்றங்கள் ஏற்பட்டன.அதற்கு முன்பே இசுலாமியர்கள் நம்முடன் கலந்து இருந்தனர். சமசுகிருதம் பேச்சு மொழியாக இல்லாமல் இருந்தாலும் (எந்தக் காலத்திலும் பேச்சு மொழியாக இருந்தது இல்லை  இருக்கப்போவதும் இல்லை ஒருகாலத்தில் அதற்கு எழுத்து வடிவம் கூடக்கிடையாது அதை எழுதாக்கிளவி என்றே அழைத்தனர் வேதங்கள் யாவும் வாய்வழியாகச் சொல்லப்பட்டு  மனனம் செய்யப்பட்டது அஃது எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் இல்லாததால் மற்றவர்களால் கற்கவும் பேசாமலும் இருந்ததால்  அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று யாராலும் உணர முடியவில்லை. பின்னர் எழுத்து மொழியாக மாறியது.மேலும் அது கடவுள் சார்ந்த மொழியாக மாறியதால் மக்களும் ஏனென்று கேளாது மூடத்தனமாக ஏற்றுக்கொண்டனர். பிறர் கற்பதற்கு அந்த இனத்தார் ஒருப்படவில்லை.)அதன் சொற்கள் தமிழில் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் மேல்தட்டு மக்கள் பெருமையாக் கருதினர்.இருந்தாலும் பாமர மக்கள் அதைக்கண்டு கொள்ளவில்லை.இப்போது ஆங்கிலமும் அவ்வாறுதான் உள்ளது ஒரே வேறுபாடு பாமரரும் ஆங்கிலத்தைக் கலந்து பேசுவதையே பெருமையாக்க் கருதுவதால் அதனால் புலவர்கள் (புலமை உடையவர் தமிழாசிரியர்கள் அல்ல) தமிழ்ப்பற்றாளர்கள் தமிழைக் காக்க மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது.
          கல்வியின் பயன் வாலறிவன் நற்றாள் தொழுவதும், சிறந்தது  பயிற்றல் பிறவியின் பயன் என்பதையும் மறந்தனர். படித்தால் உழைக்காமல் உண்ணலாம்(ஆரியர்போல்) என்ற சிந்தனை ஏற்பட்டது. வயிற்றின் கொடுமையால்  கல்வியும் ஒரு தொழிலாகத் தொடங்கி விட்டது.வயிற்றின் கொடுமையால் நாழியரிசிக்கே போய் விற்கும் நிலைமை ஏற்பட்டது. இப்போது மருத்துவம் பொறியியல் படிப்புகளும் இந்த அடிப்படையில் தோன்றியவையே தொண்டு உள்ளம் போய் பணப்பேய் பிடித்து அலையவே கல்வி விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்க் கல்வி படித்தவர்கள் பாடு திண்டாட்டம் ஆனது தமிழ்ப்படித்தவர்கள்  “தடமுலை வேசையராகப் பிறக்காமல் தையலர்பால் சந்து நடக்கக் கற்காமல் சனியன் தமிழ்ப் படித்துத் தொலைத்தோமே”  என்ற ஏக்கம் ஏற்பட்டது.
   ஒரு இனத்தை அழிக்க அவர்கள் மொழியை அழித்தால் போதும் என்னும் கொள்கைப்படியும் தம் ஏவல்களை நிறைவேற்றவும் அடிமைகள் வேண்டும்                 (தன்னை SIR  என்று அழைக்க வேண்டும் என்றும் தன்னைக்கண்ட போதெல்லாம் நெற்றியில் கைவைத்து வணங்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்து அடிமை ஆக்கினான். SIR என்றால் சொல்லுங்க சாமி என்று பொருள் YES I REQUEST என்பதன் சுருக்கமே SIR) ஆங்கிலத்தைக் கற்பிக்கத் தொடங்கினர். பாமர்களுக்கும் கற்பிக்கத் தொடங்கினர். மக்களும் ஆங்கிலேயன் இல்லை என்றால் ஏழை பாளைகள் கல்வி கற்றிருக்க முடியாது, என்று பெருமை பேசிக்கொண்டதோடு அவன் பழக்க வழக்கங்களையும் சமயத்தையும் பின்பற்றினர். மொத்தத்தில் உட்கார்ந்து மலம்கழிப்பது போய் நின்றுகொண்டு மலசலம் கழிக்கக் கற்றுக் கொண்டான்.
    இந்தச் சூழ்நிலையில்தான் புலவர்கள் தேவைப்படுகின்றனர். அருள்கூர்ந்து புலவர் பட்டம் பெற்றவர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் அதுவும் இப்போது BLit.,  என்று மாறிவிட்டது இங்கு புலவர் என்போர் இலக்கண இலக்கியம் கற்ற்றிந்த தமிழ்ப் பற்றாளர்களை நினைத்துக் கொள்ளவும்.தமிழ் மொழி தழைக்க  அவர்கள்தாம் பணியாற்றமுடியும். இதைத்தான் தண்டபாணி சுவாமிகள்
“தமிழ் மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதெனின்
வெகுளியற்று இருப்போன் வெறும் புலவோனே ” என்று கோபத்துடன் கூறுகிறார்.
  இவ்வாறு உழன்று கொண்டிருந்த தமிழ்ப்புலவர்களுக்குத் தமிழின் தொன்மை, புனிதத் தன்மை,தநித்தயங்கும் ஆற்றல் ஆகியவற்றை  எடுத்துக்காட்டி புலவர்களுக்குள் இணக்கம் ஏற்பட வேண்டுமென அறிவுறுத்தி தமிழ்ப் புலவர்களைச் சமுதாயத்திற்குப் பயன்படுமாறு மடைமாற்றம் செய்தாக வேண்டிய வரலாற்று இன்றியமையாமை ஏற்பட்டுவிட்டது. காலத்தின் இக்கட்டாயம்தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் புலமை இலக்கணம் என்னும் ஆறாவது  இலக்கணம்  எழுத வேண்டியது ஆயிற்று.
     அந்த ஆறாவது இலக்கணத்தைத் தெரிந்து கொள்ளப்போகிறோம். 
                    புலமை இலக்கணம் 22-0320  புலமை என்றால் என்ன?
2 அறியும் தன்மையைப் புலமை ஆம்எனப்
பற்பல பெரியோர் பகர்ந்தனர் அன்றே                                                 இதன்பொருள் ஐம்பொறிகளின் உதவியால் ஒருவன் ஒன்றைப் பற்றித் தெளிவாக அறிந்து அடையும் அறிவே புலமை ஆகும். என்ற பல அறிஞர்கள் முன்பே கூறியுள்ளனர்.புலம் என்ற சொல் பொறிகளால் ஒருபொருளை நுகரும் தன்மையைக் குறிக்கும்.கற்பதால் மட்டும் புலமை வருவதில்லை .கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களாலும் ஒருபொருளை அறிதலே புலமை.
3.                புலமையின் வகைப்பாடுகள்
தேற்றம் தரவு மரபு செயல்வகை
எனும்நால் வகைத்தாய் இயம்புதும் புலமையை
புலமை தேற்ற இயல்பு, தவறியல்பு, மரபியல்பு, செயல்வகை இயல்பு என்று நால்வகைப்படும்மேற்கண்ட  முதல்மூன்று சூத்திரங்களும் புலமை இலக்கணத்தின் முன்னுரையாக அமைந்துள்ளன
                      4 தேற்ற இயல்பு
தேற்றம் என்பதைக் கணிதப்பாடத்தில் கேள்விப்பட்டிருக்கலாம்.தேற்றம் என்றால் தெளிவு அறி கருவிகளின் உதவியால் அறிந்த பொருளின் தன்மையை ஐயம்திரிபற இன்னதெனத் துணிந்து தெளிதலே தேற்றம் எனப்படும். இந்தத் தெளிவு கண்ணால் காணக்கூடிய பருப்பொருளாகவோ, மனத்தால் எண்ணிப்பார்க்கும் நுண்பொருளாகவோ இருக்கலாம்.புலமை என்பது இதுதான்.
இவ்வாறு தெளிவான அறிவைப்பெருவதற்குரிய வழி முறைகள் இப்பிரிவில் கூறப்படுவதால் இது தேற்ற இயல்பு எனப்பட்டது. இப்பிரிவு 31 நூற்பாக்களை உடையது.
தேற்றம் என்பது  புலவன் ஆம்ஆறு
ஆதலின் அம்முறை முதற் கூறுதுமே
 தேற்றம் என்பது ஒருவன் புலமை உடையவனாக ஆவதற்குரிய வழி ஆகும். எனவே அறிவுத் தெளிவைப் பெறுவதற்குரிய வழியை முதலில் கூறுவோம்அறிவில் மயக்கமற்ற தெளிவே புலமை எனப்படும் அதை அடைந்தவர்களையே புலவர் என்று கூறுவர்.

 24-3-20  வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணமே                    
புலமை இலக்கணம் கற்றுக்கொள்ள விரும்பும் மாணாக்கன் செய்ய வேண்டியன.
 நீர் வேட்கை உடையான் ஒருவன் நீரைத் தேட எவ்வளவு ஆர்வத்துடன் இருப்பானோ அவ்வாறு ஆர்வம் உள்ளவனாக இருத்தல் வேண்டும். பசியால் துடிக்கும் வறியவன் செல்வம் உடைய ஒருவனிடம் எவ்வாறு கெஞ்சி நிற்பானோ அவ்வாறு ஆசிரியர் இடத்தில் நின்று கற்றுக் கொடுக்கக் கேட்டல் வேண்டும். அதற்கு அவர் ஒப்புக்கொண்டபின் உரியநேரத்திற்கு முன்பே செல்ல வேண்டும். ஆசிரியருக்கு வணக்கம் செலுத்த வேண்டும். அவர் குணத்தினைக்  குறிப்பால் அறிந்து, அவர் உட்கார் என்ற கூறிய பின்னரே  அமர வேண்டும். குளிர் காய்பவன் எவ்வாறு தீயை நெருங்கி விடாமலும், தூரமாக விலகி விடாமலும் இருப்பானோ அதுபோல ஆசிரியரை அணுகிப்பாடம் கேட்டல் வேண்டும்.எந்தச்சூழ் நிலையிலும் ஆசானுக்குச் சினம் உண்டாகாதவாறு அவர் மனம் உவக்கும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.
அந்த நூற்பாவே ஐந்தாம் நூற்பா
புலமையின் ஆசை பொலிந்தோன் ஒருவன்
அத்தொழிற் பெரியோர்க்கு ஆட்படல்  நலமே 5

        யாரிடத்தில் புலமை இலக்கணம் கற்றல் வேண்டும்
எழுத்து முதலாக அணி ஈறாக உள்ள இலக்கணம் ஐந்தையும் முறையாகத் தெளிவுறக் கற்ற, அதேசமயம் கவிதை இயற்றும் வல்லமை உடைய புலவர்கள் இடத்திலேயே பாடம் கேட்டல் வேண்டும். ஐந்திலக்கணங்களை கற்றிருந்தாலும் படைப்பாற்றல் மிக்கவர்களே எழுத்து முதலானவற்றை தாமே கையாண்டுச் சொந்த பட்டறிவைப் பெறுகின்றனர். அவர்களே யாப்பின் இலக்கணம் தெளிவாக கற்பிக்க முடியும..அவ்வாசிரியன் இலக்கணத்தைக் கற்றிருப்பதோடு  இலக்கியங்களையும் கற்றிருத்தல் வேண்டும்.
இலக்கியத்தை படைப்பாற்றல் மிக்கவர்கள் இடத்திலும் இலக்கணத்தை படைப்பாற்றல் இல்லாத மொழி வல்லார் இடத்திலும் கற்றுக்கொள்ளமா என்றால் கூடாது. இரண்டையுமே கவிதை எழுதும் படைப்பாற்றல் மிக்கவர் இடத்திலே கற்றலே சிறப்பு இவ்வியல்பு மாணாக்கனைத் தானே நூல்களை இயற்ற வல்ல ஆசிரியனாகப் பயிற்றுவிக்க வழி கூறுகிறது. அந்நூற்பா
ஆறாம் நூற்பா
அக்காரம் முதற்கொண்டு அணிஈறா ஆகப்
பகரும் நூலும் பாவலர் முன்பில்
கற்கை நலமெனக் காண்பது கடனே
அக்காரம்--எழுத்து, பாவலர்--கவிஞர் பகரும்-- சொல்லும் 

25-3-20    வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்
   புலமை இலக்கணம் கற்போனுக்கு இறையருள் வேண்டும்    
நூற்றுக் கணக்கான இலக்கண இலக்கியங்களைப் படித்து இருந்தாலும் ஒருபங்காவது இறையருள் கூடியிருந்தல் வேண்டும். அப்போதுதான் கவிதை இயற்ற முடியும். அந்தப் பொருளில்தான் வியாசருக்கு விநாயகரும்  கம்பனுக்குக் காளிதேவியும், நக்கீரர்,சேக்கிழார், போன்றோர் நூல்களை எழுதும் போது இறைவன் அடியெடுத்துக் கொடுத்ததாகவும் கதைகள் தோன்றின.மொத்தத்தில் இறையருள் பெற்றவர்களே கவிஞர்கள் ஆகமுடியும்.அவர்களால் உண்டாக்கப்பட்ட நூல்களே உலகில் இன்றும் வழங்கி வருகின்றன.உலகாயதவாதிகள் (இறைமறுப்பாளர்) நூல்கள் இல்லாமல் போயின. நாத்திகவாதிகள் நூல்கள் எடுபடாமல் போயின.அதே சமயம் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஆத்திக வாதிகள் என்று கூறிக்கொண்டோர் நூல்களும் வழக்கொழிந்தன.எனவே ஒருவன் கவிஞன் என்றால் அவன்இறையருள் பெற்றவன் என்றே பொருள். அவனால் இயற்றப் பெற்ற நூல்களே நிலைபெறும். மற்றவர் எழுதிய நூல்கள் அவர் உள்ள காலம்வரை (அதுவும் அரசியல் பணம் வல்லமை காரணமாக) பேசப்பட்டு பின்னால் மறைந்து ஒழியும்
எனவே கடவுளின் அருளைநாடிப் பெறுதலே பலமடங்கு உதவியானது. அந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு நூலின் தொடக்கத்தில் கடவுள்  வாழ்த்து வேண்டுமெனத் தொல்காப்பியரும்  
கொடிநிலை கந்தழி வள்ளி என்றா
வடுநீங்கு சிறப்பின் முதலென மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (தொல்காப்பியம்1034 )என்று
கூறுகிறார். தெய்வப்புலவரும் கடவுள் வாழ்த்தொடு தனது நூலைத் தொடங்கினார். இப்பெரியவர்களின் கூற்றையெல்லாம் நோக்கும்போது புலமை இலக்கணம் கற்போனுக்குத் தெய்வம் துணை நின்றால் வேண்டும் என்பது புலனாகிறது. அதற்கான நூற்பா
நூலின் துணையினும் நூறுபங்கு அதிகம்
தெய்வத் துணையாம் செழுந்தமிழ்க் கவிக்கே    7
 
புலமை இலக்கணம் கற்க விரும்புவோன்  வழிபடவேண்டிய தெய்வங்கள்            
   நண்பர்களே நான் தண்டபாணி சுவாமிகள் எழுதிய இலக்கணச் சூத்திரங்களைப் (நூலினை) பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்) இதில் கூறப்பட்டுள்ளவற்றைச் செய்திகளாக ஏற்றுக் கொள்க ஆத்திக நாத்திக வாதங்கள் வேண்டாம்
  புலமை இலக்கணம் கற்க விரும்புவோன்  வழிபடவேண்டிய தெய்வங்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.
  கணபதி முருகன் கலைமகள் உமையவள்
  பரமன் பரிமுகப் பகவன் என்னும்
  அறுவகைத் தெய்வமும் அருந்தமிழ்ப் புலமைக்கு
  உரியவாம் என்று உரைத்தனர் உயர்ந்தோர்    8
 இதன்பொருள்  விநாயகன் ,செவ்வேள், கலைமகள், உணையவள் சிவபெருமான் குதிரை முகத்தோடு கூடிய யயக்கிரீவ அவதாரம் எடுத்த திருமால் ஆகிய  ஆறு தெய்வ வடிவங்களும் எளிதில் பெறுதற்கரிய தமிழ்ப்புலமையைப் பெற விரும்பும் ஒரு மாணாக்கனால்  பூசிக்கத்தக்க உருவங்கள் ஆகும். என்று பட்டறிவு மூலமாக அறிந்த பெரியோர்கள் கூறி உள்ளனர்.
இந்து மதத்தை மக்கள் வழிபடும் கடவுளரின் அடிப்படையில் ஆறு பிரிவுகளகப் பிரித்துள்ளனர்...அவைகளுக்கு மொத்தமாக  அறுசமயம் என்று பெயர்...இவைகளுக்கு தனித்தனியாக வழிபாட்டு முறைகளும்  சொல்லும் மந்திரங்களும் வேறுபடும்.அப்பிரிவுகள் (1) சைவம் (பரம சிவன்),
(2)வைணவம் ( திருமால்),
(3) கௌமாரம் (சுப்பிரமணியன், முருகன்),
(4) காணபத்தியம் (விநாயகர்),
(5)சௌரம் (சூரியன்),
(6) சாக்தம் ( சக்தி, துர்க்கை)  இதில் சௌரம் என்னும் சூரிய வழிபாட்டை நீக்கிவிட்டுக் கலைமகளைச் சேர்த்துள்ளார். காரணம் சூரியனைத் தொழுது தமிழ்ப்புலமை பெற்றதாக வரலாறு இன்மையால் அது நீக்கப்பட்டு  கலைமகள் சேர்க்கப்பட்டது. கணபதியை வழிபட்டு நம்பியாண்டார்நம்பி, ஔவையார் முதலியோரும்,முருக வழிபாட்டால் அருணகிரிநாதர்,கச்சியப்ப முனிவர் முதலியோரும், கலைமகள் கருமையால் கம்பர் ஒட்டக்கூத்தர் முதலியோரும் உமையம்மை திருவருளால் காளமேகப்புலவரும் அபிராமப்பட்டர் முதலியோரும் சிவனது அருளால் நால்வர் சேக்கிழார் முதலியோரும் திருமால் பத்தியால் ஆழ்வார்கள் ,பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் முதலியோரும் இணையற்ற தமிழ்ப்புலமை பெற்ற வரலாறுகலை  நாம் அறிவோம்.தெய்வங்களை நம்பாதவன் ஒருபோதும் புலமை பெறப்போவதில்லை

புலமை இலக்கணத்தை அறிய விருப்பம் உடையோர் தமிழ்ப் புலமை உடையார் நட்பைக் கைவிடக்கூடாது.
     எல்லோரும் எல்லா நூல்களையும் கற்றுக்கொள்ள முடியாது. கல்வி  கரையில என்பதை அறிவோம். சில நூல்கள் புரியாமல் போகலாம்.சில அளவில் பெரியவையாக இருக்கலாம்.அதனால் நன்னூலார் கூறுவதுபோல் “தொன்னூற்கு அஞ்சி தடுமாறு உளத்தன்”ஆக இருக்கலாம். எனவே அறிஞர்கள் பால் விருப்பம் இருப்பின் அவர் துணையால் அறிய நூற்கருத்துகளைச் சிறிது சிறிதாக  வேணும் அறிந்து கொள்ள வாய்ப்புண்டு. உண்மையான புலவர்களின் தொடர்பு இல்லாவிட்டால் செல்வத்துள் செல்வமாகவும், ஒற்கத்தின் ஊற்றாம் துணையாகவும் இருக்கக் கூடிய கேள்விச் செல்வம் தடைபட்டுவிடும். எனவே அறிவு வேட்கை உடையவர் அறனறிந்து மூத்த அறிவுடையார் தொடர்பினை விட்டு விடலாகாது. அவர்களைப் பகைத்து (வெறுப்பது) பலதீமைகளைத் தரும். இதையே வள்ளுவரும்
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை(குறள் 873) என்றும்
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும் (குறள் 892) என்கிறார். எனவே புலமை மிக்கவர்களுடன் தொடர்பினை வைத்துக் கொள்வது புலமை இலக்கணம் கற்போருக்கு மிகச்சிறந்தது. அதற்கான் நூற்பா
நூற்பகை கொள்ளினும் நுண்ணிய புலமைச்
சீரியர் தம்பகை சிறிதும் ஆகாதே   9. இங்கு பகை என்பது வெறுப்பு
உண்மைப் புலவரைச் சேர்ந்து ஒழுகுக
                     நூற்பா12
உண்மைப் புலவோர் உரைசெயும் உபாயம்
நண்ணிக் கொள்வது நலம்மிகத் தருமே

உண்மையான கல்வியும் அறிவும் வாய்க்கப் பெற்றவர்கள் ஒருமாணாக்கன் முன்னேற்றத்தைக் கருதிக் கற்றுத் தருகின்றவழி முறைகளைப் பின்பற்றுவது புலமை பெறும் நன்மையைத்தரும்.
புலமையும் சான்றாமையும் பெற்ற பெரியவர்கள் ஒருமாணாக்கனின் எழுத்தில் பிழைகளைக் கண்டால் அவற்றை எடுத்துக் காட்டுவதோடு அல்லாமல் மீண்டும் அத்தகைய பிழைகள் ஏற்படாமல் இருப்பதற்கான வழிகளைச் சொல்லித் தருவர். அப்பிழைகளைப் பெரிது படுத்தி மனச்சோர்வு அடையச் செய்யமாட்டார்கள். ஆதலால் அத்தகைய பெரியவர்களைப் போற்றி அவர்களின் அணுக்கராக இருப்தே சிறந்தது.
     செல்வம் மிகுதி, அரசியல் அதிகாரம் பதவியில் உள்ளவர் துணை,மலிவான விளம்பரம் ஆகியவற்றுள் ஒன்றிரண்டின் துணையால் புலமை வாசனையே இல்லாத சிலரும் பெரும் புலவராகக் காட்சி அளிப்பர். அத்தகைய போலிப் புலவர்களிலிருந்து முறையாகப் பயின்று,தெளிவான அறிவு பெற்றோரைப் பிரித்துக்காட்டவே உண்மைப்புலவோன் என்றார்.

சொற்களஞ்சியம் பெற தெய்வம் பற்றிய செய்திகளே சிறந்தது
தெய்வத் துதிவழித் தேறாப் புலமை
நைவும் சிறுமையும் நாணமும் தருமே 13.
இதன் பொருள்  
இறைவனின் பொருள் சேர் புகழைப் பாடுவதன் வழியாகத் தேர்ச்சி பெறாத, கவிதை புனையும் ஆற்றல், தளர்ச்சியையும்,பழியையும் அவமதிப்பையும் உண்டாக்கும்
  தெய்வ வழிபாடு எத்தனை கூறினாலும் முடிவு பெறாது ஆகவே அத்தெய்வத்தைப் பற்றிய பல வரலாறுகள் பாடுபொருளாக அமைந்து நிறையப் பாடுவதற்கு நல்ல வாய்ப்பு அளிப்பதால், அத்தெய்வத்தைப் பாடிய முன்னோர் மரபுகள் வழிகாட்டியாக அமைந்திருப்ப்பதால் தோத்திரங்கள் பாடுதல் கவிதைக் கலையைக் கையகப்படுத்தச் சிறந்த அணுகுமுறையாக உள்ளது. மேலும் தோத்திரங்களை எவரும் எளிதில் பழிக்கவும் மாட்டார்கள். இவ்வாறன்றி நிறைய விரித்துக் கூற இடம் இல்லாததும், தெளிவான நெறிமுறைகள் அமையாத ஆகிய எதையாவது ஒன்றை எடுத்துப் பாடத் தொடங்கினால் சொல் பொருள் கிடைக்காத தளர்ச்சி, ஆரம்பித்ததைச் செவ்வனே நடத்திச் சென்று முடித்தலால் ஏற்படும் சிறுமை, தோல்வியால் வரும் நாணம் ஆகியன வந்தெய்தும் எனவே தெய்வத்துதி வழித்தேற வேண்டும் என்றார்.
   மற்றொன்று இந்நூலாசிரியர் காலத்திலும் அதற்குச் சற்று முன்னதாகவும் இருந்த புலவர்களில் சிலர் குறுநில மன்னர்கள், செல்வர்கள் ஆகியோர் மீது அகத்துறை என்ற பெயரால் காமச்சுவையை மிக அதிகமாகவும், ஆபாசமாகவும் நிறைத்துக் கவிபாடி வயிறு வளர்த்து வந்தனர். பாரதியாரின்   “சின்னச்சங்கரன்கதை”யில் இவ்விழி நிலை நன்கு காட்டப்பட்டுள்ளது. அப்போக்கு ஒழுக்கத் தளர்ச்சியையும் (நைவு), சமுதாயத்தில் சிறுமையையும், சான்றோர் முன்னே நாணத்தையும் தருதல் ஒருதலை. எனவே அதனை நீக்குக என்பார் தெய்வத்துதி வழி கடைப்பிடிக்க என்றார்.
  கற்றதனாலாய பயன் வாலறிவன் நற்றாள் தொழலேயாதலின் (திருவள்ளுவரை விடப் பெரியார் யாரும்  இல்லை) இலட்சிமாகிய இறையன்பே கல்விக்குச் சாதனமாகவும் அமையவேண்டும். என்றபடி அவ்வாசிரியர் தம் ஏழாம் இலக்கணத்தில் இது பற்றியே “தெய்வப் பத்தியிற் றிளையா வொருவன் கல்வி நலம் எனில் கள்ளிப்பாலே” எனவும் அறிவுறுத்துகிறார்

இலக்கணத்தை முழுமையாகக் கற்பதற்கு முன் கவிபாடுதல் அழகல்ல
 சிந்தையின் மயக்கம் தெளியா முன்னம்
 சித்திரம் பாடில் அஃதும் தீதாய்
 மற்றைய கவிகளின் வனப்பும் குன்றும்  14
எழுத்து, சொற்புணர்ச்சி, சொற்களின் தெளிவான பொருள், பொருள்கோள் முறைகள், யாப்பின் ஓசைநயம், இலக்கியமரபு, அணிகள்  இவற்றை எல்லாம் ஐயம்திரிபறக் கற்று, தெளிவு பெறுவதற்கு முன் யகமம் திரிபு போன்ற கவிதைகளை இயற்றத் தொடங்கினால் அவை செவ்வனே அமையாததோடு இயல்பான பாடல்களையும் அழகுபட இயற்ற முடியாமல் போகும்.
     முதலில் ஆற்றொழுக்கான பாடல்களைப் பாடிப்பாடி நன்கு தேர்ச்சி பெற்ற பிறகே சித்திரக்கவிகளில் சிந்தையைச் செலுத்த வேண்டும். அங்ஙனம் செய்யாவிடில் சித்திரக் கவிகளில் வேறு வழியின்றிக் கைக்கொள்ள வேண்டிய விகாரம்,போலி, வலியப்பொருள்கோள் முதலியனவற்றை இயல்பான செய்யுளிடத்தும் புகுத்தி அதன் பொலிவை அழித்து விட நேரிடும்

ஆசிரியர் பாடத்தை திருத்தும் முறை
(கட்டுரை ஏடு திருத்தும் ஆசிரியர்கள் இதைப்பிந் பற்றலாம்)
 குரவன் கடைவரி கொடுக்க வாங்கி
மற்றைய மூன்று வரிகளும் பாடி
அவன்எழுத் தாணி அவற்றைத் திருத்தல்
கண்டு தேறுநன் கவிநயம் உறுமே
 கற்பிக்கும் ஆசிரியன் ஈற்றடியைக் கொடுக்க மாணாக்கன் மற்ற மூன்று அடிகளையும் நிறைவு  செய்ய வேண்டும். இவ்வாறு முற்றுப் பெற்ற பாடலை ஆசிரியன் மாணாக்கன் எதிரிலேயே திருத்த வேண்டும். இம்முறையிலேயே தேர்ச்சி பெறுபவனின் செய்யுள் குற்றமற்றதாகவும் அழகுடையதாகவும் அமையும்.
      ஆசிரியர் மாணாக்கனின் அறிவு நிலை அறிந்து ஈற்றடி தருவார். எனவே மாணாக்கன் அதனை முழுமையாக எழுத எளிதாகும். (பிறர்தரும் ஈற்றடி சமுத்தி எனப்படும்) மாணாக்கனின் பாடல்களை ஆசிரியர் திருத்தும் போது மாணாக்கனை அருகில் நிறுத்திக் கொண்டு தவறுகளை எடுத்துக்காட்டித்  திருத்துவதால் சரியான கவிமரபு சிந்தையிற் பதியும். இவ்வாறு படிப்படியாக்க் குற்றங்களைந்து குணம் மிக எழுதிப் பழகப் பழகத் தானே இனிய கவிதைகளை எளிதாகவும் விரைவாகவும் இயற்றும் திறமை உண்டாதல் உறுதி.
   இக்கால ஆசிரியர்களுக்கும் அது பொருந்தும் மாணாக்கன் நிலைக்குத் தகுந்தாற்போல் கட்டுரை,கவிதைத் தலைப்புகளைத் தருதல் வேண்டும். அம்மாணாக்கன் அவற்றை முழுமையாக எழுதிய பின் அவனை அருகில் நிறுத்திக் கொண்டு அவன் செய்துள்ள எழுத்து,சொல்,பொருள், சொற்றொடர், சந்தி, வல்லினம் மிகும் இடம் மிகா இடங்கள், மரபுப்பிழை, கொச்சைச் சொற்கள் வடசொற்கள், பிறமொழிச் சொற்கள் இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும் அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட மாணாக்கனே கட்டுரைக்க வல்லானாக விளங்குவான் 
  
பனுவல்கள் இயற்றும்முறைஅ றுவகை இலக்கணப்பாடம்
பிரபந் தத்தொகை பேசித் தேறிக்
காவியம் பாடிற் கழிவு படாதே.  20
 மாலை அந்தாதி பிள்ளைத்தமிழ் கலம்பகம் போன்ற சிற்றிலக்கிய வகைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற பின்னர் பெரிய காப்பியங்கள் இயற்றத் தொடங்கினால் அவை சுவை குன்றாமலும் குற்றமற்றும் விளங்கும் என்பது இந்நூற்பாவின் பொருள்
  சிற்றிலக்கியங்கள் யாவும் முத்தகம் எனப்படும் தனிக்கவிகளால் இயன்றவை. ஒரு பாடலின் எழுவாய், பயனிலை அதன்கண்ணே அமைந்து பொருள் முற்றுப் பெற்று விடுகிறது. மேலும், அவ்வகைப் பிரபந்தத்திற்கு என்று விதிக்கப்பட்ட மிகச் சிலவகை யாப்புகள் மட்டுமே பயின்று வருபவை (கலம்பகம் மட்டும் இதற்கு விதிவிலக்கு)
     ஆனால் காவியங்களில் பல பாடல்கள் தொடர்ந்து நடந்து ஒரு வினைமுடிபு பெறுகின்ற குளகச்செய்யுள் மிக்கு வரும். இதனால் பால்,திணை, எண்,இடம்,காலம் முதலியவற்றில் வழுக்கள் தோன்றாமலும், எச்சங்கள் உரிய முடிபுகளைச் சரியாகப் பெறுமாறும், மிகவும் கவனமாக இயற்றப் பெறுதல் வேண்டும். அத்துடன் காவியத்தில் பல சுவைகளும் விரவி வருதலால் இடத்திற்கேற்ற யாப்பு தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். மேலும், காவியங்களில் கதைமாந்தர், நிகழிடம் போன்ற இயற்பெயர்கள் அடிக்கடி வரும். இவற்றை அந்தந்த யாப்பில் திறமையுடன் இணைத்தல் வேண்டும். காவியத்தில் விரித்துக் கூறும் இடங்களில் விரித்தும்,சுருக்கிக்கூற வேண்டிய இடங்களில் சுருக்கியும் பாட வேண்டும். வருணனைப் பகுதிகளில் ஓரளவு திரிசொற்களையும், சித்திரகவிகளையும் (மிறைக்கவி) பயன்படுத்தினாலும்,கதையோட்டம் நிறைந்த இடங்களிலும்,மெய்ப்பாடு வெளியாகும் இடங்களிலும் நடை இயல்பாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும்.காவியங்களில் கவிக்கூற்றும் கதைமாந்தர் கூற்றும் விரவி வரும். அக்கூற்றில் கையாளப்படும் நடை அவர் அறிவு, தகுதிகட்கேற்ப அமைவதோடு அப்பாத்திரத்தின் மனநிலைக்கேற்பவும் அமைதல் வேண்டும். இத்துணை கட்டுப்பாடுகள் இருப்பதால்தான் சிற்றிலக்கியம் பாடிப்பழகிய பிறகே காவியம் இயற்ற வேண்டும் என்றாரே அன்றி வெறும் பாடற்றொகையை மாத்திரம் கருத்திற் கொண்டு அன்று. ஏறத்தாழ நானூறு கட்டளைக் கலித்துறைகளால் அமைந்த ஒரு கோவையைப் பாடுவதைவிட ஏறத்தாழ முந்நூறு பாடல்களைக் கொண்டதொரு காவியம் பாட அதிகமான சிந்தனையும் உழைப்பும் தேவைப்படும்.

அறிவு நூல்களை எப்பொழுது இயற்ற வேண்டும்
அறிவுநூல்கள் எனப்படுபவை இலக்கணம்,தத்துவம்,சோதிடம் ,மருத்துவம் போன்றவை
காவிய நிலைகளும் கண்டு தேறி
நூலினம் பகர்வது நுண்ணிமை யாமே 21                                                         இதன் பொருள் நல்ல காவியப் புலமை கைவந்த பிறகே, இலக்கணம் போன்ற அறிவு நூல்களை இயற்ற வேண்டும்.
   காவியம் சிற்றிலக்கியம் போன்றவற்றுள் கற்பனை இலக்கியச்சுவை முதலியவைகளுக்கு நல்ல வாய்ப்பிருப்பதால் கற்பவர்களுக்குச் சோர்வு தோன்றாதவாறு கொண்டு செல்ல முடியும். ஆனால் அறிவு நூல்களில் கற்பனைக்கோ, சொல்விளையாட்டிற்கோ,உயர்வு நவிற்சி, தற்குறிப்பு ஏற்றம் போன்ற அணிகளுக்கோ சற்றும் இடமில்லை. காவியத்தின் பொருள் உணர்ச்சியில் சற்று மயக்கம் ஏற்பட்டாலும் பெரிய இழப்பு இல்லை. ஆனால் சாத்திரங்கள் எனப்படும் அறிவு நூல்கள் மிகத் தெளிவாகவும் ஐயத்திற்குச் சற்று இடமில்லாமலும் அமையவேண்டும். நூல் நுதலிய பொருள் இவற்றில் தவறாகப் புரிந்த கொள்ளப்பட்டால் தீய விளைவுகளை உண்டாக்கும். எனவே, ஒருபுலவர் தாம் சொல்லக் கருதும் பொருளைத் தெள்ளத் தெளிவாகவும்,கற்போருக்குச் சற்றும் அலுப்புத் தோன்றாதவாறும் அறிவு வளர்ச்சியால் உண்டாகும் இன்பத்தைத் தருமாறும் கூறும் ஆற்றல்  பெற்ற பிறகே அறிவு நூல்களை இயற்றத் தலைப்பட வேண்டும்.
 ஒருசில குறிப்பிட்ட அறிவுத் துறையில் பேரறிவு பெற்றோர் படைத்த பெருமக்கள் சிலர் அத்துறையில் இயற்றிய அரிய நூல்கள் சுவையற்றனவாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் தமிழ்ப் புலமையை  வளர்த்துக் கொள்ளாததே ஆகும்.

7-4-20  புலமை இலக்கணம் அறியும் ஆசை அடங்காது

சொல்நிறம் தன்நெஞ்சு அரியத் தோன்றும்
அளவும் புலமையின்  அவாஅடங் காதே  22.
சொற்களின் நிறத்தை(தன்மை)த் தம் உள்ளம் உணரும்படியே மொழித் தெளிவு பிறக்கும் வரை  இனியும் புலமையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். என்னும் ஆவல் தீராது.
 இந்நூலாசியர் புதியன புகுத்தலாக எளிமை, அருமை நோக்கிச் சொற்களுக்கு வெண்மை, பளிங்கு, கருமை செம்மை, பொன்நிறம் என ஐவகை  நிறங்களை வகுத்து அவற்றை வெண்மை, செம்மை, கருமையில் அடக்கிக் காட்டுகிறார்.(அறுவகை இலக்கணம்-சொல்171-179 வரையான நூற்பா) சொற்களைப் பற்றிய அத்தகைய தெளிவு பிறக்கும் வரையில் புலமை வேட்கை அடங்காது என்கிறார். அடங்காது என்று   கூறப்பட்டிருந்தாலும் ஒருமாணவனுக்கு அத்தகுதியைப் பெறும் வரை கல்வி வேட்கை இருந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதே ஆசிரியர் கருத்தாகும். கல்வித்துறையில் “தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக, கற்றது எல்லாம் எற்றே இவர்க்கு நாம் என்று” என்பது விதி

8-4-20  ஏக்கம் இருத்தல் இயல்பு
எவ்விதக் கவிகளும் பாடும் இரும்திறல்
வரினும் பனுவலை மறுத்தும் தானே
எழுதாநலம் நினைத்து ஏங்கல் இயல்பு
இதன்பொருள்
     அனைத்து வகையான நூல்களையும் இயற்றுகின்ற அரிய வல்லமை ஏற்பட்டாலும், தம்மால் இயற்றப் பட்டதைத் தாமே மீண்டுமோர் முறை பரிசீலித்துத் திருத்த வேண்டிய நிலைமை தோன்றாத சிறப்பை விழைந்த, அதனைப் பெறுவதற்காக முயலல் நன்மாணாக்கர்களிண் இயல்பு ஆகும்
 இந்நூற்பாவில் கவிகள் என்றது ஆகுபெயராக பனுவலை உணர்த்திற்று, ஒருமுறை இயற்றப் பெற்ற பிறகு மீட்டும் பரிசோதிக்கப் பெற்றுச் செப்பம் பெற வேண்டிய அவசியுமே இல்லாமல் முதன்முறையிலேயே திருத்தமாக அமைந்து விடுதலே சிறப்பாகும். இந்நலத்தை நாடி ஏங்கல் இயல்பே என நூற்பா நுவலினும் வெறும் ஏக்கத்தால் பயனின்மை கருதி முயலல் என உரை காணப்பட்டது. “என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு” என்னும் மறைமொழிக் கிணங்க,”எவ்விதக் கவிகளும் பாடும்இருந்திறல்”வந்தவரும் நன்மாணாக்கர் எனப்பட்டனர்

ஏட்டில் எழுதும் முறை
பாடம் எழுதலிற் பட்டோலை வாய்ப்பினும்
தடையற ஒருவன் எழுதச் சாற்றல்
அரிதாம், அதுவரை அறிவுத் தன்மைப்
புலமை ஆம்மெனப் புகல்வது துணிவே 24.
இதன் பொருள்
 ஒரு கவிஞர் தம்படைப்பைத் தாமே வரிவடிவில் எழுதுவதை விட மற்றொருவர் எழுதும்படித் தாம் இடையீடு இல்லாமல் கூறிக்கொண்டே செல்வது மிகவும் செயற்கரிய செயலாகும்.இந்நிலையை அடையும்வரை இவர் புலமை  அறிவுத் தன்மையைச் சார்ந்தது என்று கொள்ளப்படும். பிறகு அத்தன்மை தெய்வத்தன்மை என்று கொள்ளப்படும்.

    தாமே எழுதும் போது வரிவடிவைக் கண்களாலும் பார்ப்பதால் எதுகை மோனை அடியின் முடிவு முதலியவற்றை எளிதில் அறியலாம்.தாம் சொல்லச் சொல்ல மற்றவர் எழுதும் போது ஆசிரியர் முழுப்பாடலையும் தம் நினைவிலேயே கருதி இயற்ற வேண்டும்.  இதற்கு மிக அதிகமான நினைவார்றல் தேவைப்படுவதால் இது அரியது என்பது திண்ணம்.அவ்வாற்றல் இறையருளால் தான் வாய்க்கும்.என்பது இந்நூலாசிரியர் அழுத்தமான கொள்கை. எனவேதான் கடும்பயிற்சியாலும் ஊக்கத்தாலும் உழைத்துத் தமது படைப்பைத் தாமே எழுதுவது வரையான நிலையை அறிவுத்தன்மை உடையது எனவும், பொருள் எச்சத்தால் பட்டோலை எழுதக் கூறுதல் தெய்வத்தன்மைத்து எனவும் கூறுகிறார். இதை அடுத்த நூர்பாக்களில் விரிவாகக் காண்போம்.
      ஒரு கவிஞர் சொல்லச் சொல்ல ஏட்டில் எழுதிக் கொள்வதையும் அவையில் விளக்க உரை கூறக் கூற மூலபாடத்தை மட்டும் படிப்பதையும் ”பட்டோலை பிடித்தல்” என்பர்.புதிய கவிதைகளைக் கவனம் செய்து சொல்லச் சொல்ல அவற்றைப் பிழையற  எழுதத்தக்க வல்லமை யுடைடோர் கிடைத்தலின் அருமை நோக்கி “பட்டோலை வாய்ப்பினும்”  உம்மை கொடுத்தார்
  இவ்வியல்பின்14 ஆம் நூற்பாவிலிருந்து  இதுவரையான 11 நூற்பாக்களில் ஒரு மாணவர் சிறந்த கவிஞராக மிளிர்வதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தெளிவாக வரையறுத்துக் கூறப்படன. நல்ல படைப்பாற்றல் மிக்கவரே இங்குக் கூறப்பட்டுள்ள  நுட்பங்களை எடுத்துக் காட்டியும் மாணவரின்  படைப்பாற்றலைத் திருத்திக் கொடுத்தும் அவரை உயர்த்த முடியும். இக்காரணம் பற்றியே இவ்வியலின் 6-ஆம் நூற்பா  “அக்கரம் முதற்கொண்டு அணிஈறாகப் பகரும் நூலும் பாவலர் முன்பில் கற்கை நலம் எனக்காண்பது கடனே” எனக்கூறிற்று.
 

    தெய்வத் தன்மை புலமை அறுவகை இலக்கணம் 13-4-20
கால மழையெனப் புதுக்கவி கழறலும்
சொற்படி நடக்கக் காண்டலும் பிறவும்
தெய்வத் தன்மை புலமை ஆமே 25
கார் காலத்தே பெய்யும் பெருமழை போலப் புதிய செய்யுட்களை வரிவடிவத்தின் துணையின்றிக் கவனம் செய்து வாயாலே பொழிந்து தள்ளும் ஆற்றலும், வாக்குப் பலிதமும்,இம்மை மறுமைப் பயன்களை அடைதலும்(தந்னுடைய அறிவினால் மட்டுமன்றி ) இறைவன் திருவருளாலேயை கைவரப்பெறும். அதனால்  இந்நிலை தெய்வத்தன்மைபுலமை எனப்படும்.
   மடைதிறந்த வெள்ளமெனக் கவி மழைபொழிதல், வாக்குப்பலிதம் இவை தவத்தால் எய்தப்பெறும் சித்திகளாகும்.
“சித்தியொடு கல்விஉற்றோர் களைத்தெய்வப் புலமைஎன்பார்;
நத்தியவாறு இயற்றும் வலிநண்ணி னாரைதவர் என்பார்;
புத்திமலிந்து எக்கவியும் புகல்வாரைப் புலவர் என்பார்
அத்திவளைந்துஉடுத்துஇலகும் அம்புவியில் அமர்ந்தோரே” எனும் இவர் வாக்கால் அறிவுத்தன்மை, தெய்வத்தன்மை பற்றிய இக்கொள்கை நன்கு விளக்கமாகிறது

முழுப்புலமை என்பது14-4-20 
கருதிய தெய்வம் கண்முன் தோன்றி
பேசின் அல்லது பெருந்தகைப் புலமை
எய்தாது என்றிடல் இயல்பாம்ம் அன்றே 26.
தம்மால் தியானிக்கப்படுகின்ற கடவுளின் திருவடிவம் ஊனக்கண் காண எதிரே காட்சி அளித்தும்,தம் செவிப்புலன் கேட்குமாறு உரையாடியும் ஆட்கொண்டாலன்றி
முழுப்புலமை அடைந்ததாகக் கூற முடியாது. என்பது மரபு.
      எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாக ஆகுமோ அதை அறிதலே மெய்யறிவு என்பதுவும், அதுபரம் பொருளே என்பதும் இந்து சமய நெறிகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட அடிப்படைக் கருத்தாகும். “ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே;மெய்யுணர்வு இல்லாதவர்க்கு” என்றதும் இதுவே,தெய்வம் உபாசகன் முன் நிச்சயம் தோன்றும் என்பதை இவ்வாசிரியர் “தெய்வம் கண்ணெதிர் திகழாது என்னும் புன்மைத் தவத்தோர் புராணம் பலவற்று எண்ணில் பலர் கண்டிட்டதாகச் சொல்லல் முற்று  இகழ்ந்த தோடம் எய்திக் கீழ்மையர் ஆகிக் கெடுவர் அன்றே” (சத்திய வாசகம்10) “தெய்வத்தை மனத்தாலும் நேத்திரத்தாலும் கண்டு பேசத்தகும்”(சத்திய சூத்திரம்99) தெய்வம் சருவ வல்லபம் உடையது என்று ஒப்பியும் அது கண்ணாற் காணப்படாதது என்பவர் விவேக சூனி.ரே ஆவர்(சத்திய வாசகம்) எனப் பலவிடங்களில் பலவாறு கூறியுள்ளார்.
 

மெய்யறிவு உடையவர் தெய்வம் தோன்றியும் சிறுநலம் துய்த்து
மறுத்தும் நல்லார் வயிற்றுட் புகுவது
பேதமை என்பார் பெரும்புல வோரே  27
 நம் இந்த ஊனக்கண் முன் தெய்வம் தோன்றி என்னவரம் வேண்டும் என்று கேட்கும் போது, அந்தத் தெய்வத்திடம், அளவில் மிகச்சிறிய, அழியக்கூடிய உலகியல் வாழ்வுக்கான பொருள்களை வேண்டிப் பெற்று, இறந்து மறுபடியும்
இன்னுமொரு தாயின் வயிற்றில் பிறவி எடுப்பது அறியாமை ஆகும் என்று உணர்பவர்களே மெய்யறிவு உடையவர்கள் ஆவார்கள்.

“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
 மற்றீண்டு வாரா நெறி”(குறள்358)
“இன்னும் ஒருக்கால் எழுத்துஉரு ஒருவர் காட்ட உணராக் கதிபெற நாடி முயலவல் லாரே முழுப்புல மையரே (ஏழா.இலக் 310)”

 
 24 இறைவனைப் போற்றுவதே சிறந்த செல்வம்
அருள்வலிப் புலவ ராம்என விளங்கியும்
பொருளுடைச் சிலர்பால் போவது இழிவே 28
   திருவருளைப் பெற்ற புலவராக இருந்தபோதும்,பொருளை நாடிச் செல்வந்தர்களிடம் செல்வது உயர்ந்தது ஆகாது.

   திருவருளைப் பெற்று இருந்தும், வசதிக்காகவும் வயிற்றுப் பிழைப்பிற்காவும் செத்துப் பிறக்கின்ற மனிதர்களைப் புகழ்ந்து பாடி ஒரு புலவர் செல்வராக  இருப்பதை விட, இறைவனைப் போற்றிப்  பரவிக்கொண்டு இரந்துண்டு வாழ்வது ஏற்றமுடையது என்பது இப்புலவரது கொள்கையாகும் 

தமிழ்ச்சுவை அறியா தெய்வம் பேயை விடக்கீழானது
தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனில்
அஃதுணர் அலகையில் தாழ்வெனல் அறமே. 30
இதன் பொருள்: ஒரு தெய்வம் தமிழினிமையைத் துய்க்க அறியாது இருக்கிறது என்றால் அது தமிழ்ச்சுவையை உணரும் ஆற்றல் பெற்றதொரு பேயைவிடக் கீழானது என்று கூறலே நீதியாகும் 
விளக்கம்: தமிழ்ச்சுவை அறியாத தெய்வம் இருக்காது. ஒருக்கால் இருந்தால் என்பதைக்  குறிக்கவே உளதெனில் என்றார். சென்ற நூற்பாவில் தமிழறிவற்ற வேந்தனைத் தாழ்த்திக் கூறிய இவர்,இந்த நூற்பாவில் தெய்வத்திற்கே தமிழுணர்ச்சி இல்லாதிருக்குமானால் அது பேயைவிட இழிந்ததே எனக்கூறுகிறார். இதனால் இந்நூலாசிரியரின் தாய்மொழிப்பற்று குன்றில் இட்ட விளக்காய் வெளிப்படுகிறது.
     தமிழ் மொழி தன்னை நன்கு கற்றல் மனிதர்களையே தேவர்களின் தேவராகச் செய்துவிடும் என்பார் இவர். “அத்தனை யொத்துத் தவத்தோர் பலர்க்கும் அரசன் என்னும் வித்தகப் பேர்பெற்று வீறார் பொதியையில் மேயமுனி முத்தம் ஒப்பாள்அரு ளாற்செய்ததுஆம் தமிழ் மூதுலகத்து எத்தகவோரையும் தேவர்தம்  தேவர் எனச்செய்யுமேl” (தமிழ்அலங்காரம்) இவ்வாறு கூறுவதாலேயே தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் இருக்கமுடியாது எனத்தெளிவாகிறது.

          கவியின் வாக்கில் அருள் வலிமை இருக்க வேண்டும்
வண்ணப் பனுவலும் வகுக்கும் பாவலன்
சொல்லில் அருள்வலித் தோற்றம் இலையேற்
பல்வகைத் துயரால் பரதவிப் பானே
இதன் பொருள்: முழுதும் வண்ணக் கவிகளாலேயே இயலும் ஒலியலந்தாதி போன்ற அரிய நூல்களை இயற்றும் திறமை படைத்திருந்த போதிலும் ஒரு கவிஞரின் வாக்கில் அருள்வலிமை இல்லாவிட்டால் அவர் பலவாறு வருந்துவார்.
விளக்கம்: தமிழர் பொதுவாகக் கவிஞர் தம்பாடலால் பல அதிசயங்களை நிகழ்த்த முடியும் என நம்பினர். பண்டையத் தமிழ்ப் புலவர்களைப் பற்றி வழிவழிவாக வழங்கி வரும் பற்பல சரிதங்களே இதற்குச் சான்றாகும். உலகப் பெரும் காப்பியமாகிய இராமாயணத்தை இயற்றித் தந்த கல்வியிற் பெரிய கம்பரை மதிப்பதை விட பாம்பு தீண்டிய தில்லை வாழ் அந்தணச் சிறுவனை எழுப்பியதாகவும் கலைமகளை ஓர் இடைச்சியாக வந்து திமுதம் என்ற சொல்லைப் பயன்படுத்தச் செய்ததாகவும் வழங்கிய பாடல்கள் பெரிதும் போற்றப்படுகின்றன.
இறந்தவரைக் கவிபாடி எழுப்புதல்,மழை பெய்வித்தல்,அறம் பாடிச் சபித்தல்  பற்றிய செவிவழி வரலாறுகள் இந்நூலாசிரியரின் காலத்தே மிகப்பல்கி இருந்ததைப் புலவர் புராணத்தால் தெள்ளத் தெளிவாக உணரலாம்.
                இதே கருத்தை இவர் ஏழாம் இலக்கணத்தும், “வண்ணப் பாநுவல்வாயின னேனும் சொற்படி நடவும் தொழில்இலன் ஆயிற் பல்இல் பாம்பெனப் பரிதவிப்பானே  எனமீண்டும் கூறியுள்ளார்.  

 
நூற்பா:32            நாள் :20-04-20 & 21-4-20
     பாமர மக்கள் செப்பிடு வித்தையைத்தான் நம்புவர்.
சிறுகவி  ஒன்றம் சிறக்கச் செப்பான்
அலகைத் துணைகொண் டாயினும் அருமைச்
செயல்ஒன்று இயற்றில் தெய்வம்என்று அவனைப்
பற்பலர் இறைஞ்சல் பாருலகு இயல்பே 32

இதன் பொருள்: அளவாலும் முயற்சியாலும் சிறியதாக அமைந்த ஒருபாடலைக் கூடச் செப்பமாக இயற்றத் தெரியாதவனும் ஏதாவது ஒரு பேயின் துணைகொண்டு ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டிவிட்டால் இவ்வுலகில் பெரும்பான்மையராகிய மக்கள் அவனைத் தெய்வமாக்க் கருதிப் போற்றுவர்

விளக்கம்: கவிதை ஆற்றல் இல்லாமலும், தூயகடவுள் வழிபாடு இல்லாமலும் குட்டிச்சாத்தான் போன்ற பேய்களின் துணைகொண்டு எப்படியாவது செப்பிடு வித்தை செய்பவரையே பெரும்பான்மையோர்  மதிப்பர் என்பது கருத்து. இத்தகையோரை ஏழாமிலக்கணம்  “மூடர் போற்ற முத்தமிழ்ப் புலவோர் பீடிலன் என்னப் பிழைக்குஞர் பலரே” எனஇனம் காட்டுகிறது.
    இந்நூற்பாவில் பாருலகு(ஒருபொருட் பன்மொழி ) என இருசொற்கள் சேர்த்துக் கூறியதால் உயர்ந்தோரைச் சுட்டாமல் எண்ணிக்கையில் பெரும் பான்மையராகிய பாமரமக்களைக் குறித்தார்.

     வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்
                நூற்பா:33           நாள் : 21-4-20
     இலக்கியச்சுவை இல்லையெனில் எவரும் ஏற்கார்
செத்தார் உய்ப்பின் தீஞ்சுவை இல்லாப்
பாடலின் மருளாப் பான்மையர் சிலரே 33

இதன் பொருள்: ஒருபாடலைப் பாடி ஒருவன் இறந்தவரையே எழுப்பிக் காட்டினாலும் அது இலக்கிய நயம் மிக்கதாகக் இல்லாமல் இருப்பின் சற்றும் மயங்காத தன்மையை உடையவர்கள் எண்ணிக்கையில் மிகச்சிலரே ஆவார்

விளக்கம்: கவிதையின் இலக்கியத் தரத்தைச் சரியாக மதிப்பிடும் சுவைஞர்கள் சிலரே என்று இங்கு கூறியவர் ஏழாம் இலக்கணத்தில்  தகுதிவாய்ந்த கவிஞர்களின் எண்ணிக்கையும் குறைவானதே என்னும் உண்மையை, “பாவலர் புகழ்ந்தும் பாமரர்” இகழக் கண்டு வாடுறும் கவிஞர்சிற் சிலரே”  என வெளிப்படுத்தி உள்ளார்.
“செத்தவர் மீண்டு எழச்செய்யும் திறலுடைப்பாட்டு ஆனாலும்,கைத்தசுவை யினதாகில் பழிப்பாரும் சிலர் இருப்பர்; சுத்தமில்பாட்டு ஆனாலும் சொன்னபடி யேநடவில் இத்தரையில் புகழ்கின்றோர் எண்ணரும்பற் பலர்தாமே” என்றும் உரைக்கின்றார்.

                நூற்பா:34            நாள் :22-04-20 
          புலமைத் தெளிவு எப்பொழுது வரும்

வாக்குச் சுவையுடன் அருள்திறம் மன்னும்
புலமைத் தேற்றம் பொதிய மால்வரைக்
கடவுள் மாமுனிவனைக் கைதொழில் வருமே   34

இதன் பொருள்: பொதியமலையில் என்றும் விளங்குபவராகிய தெய்வத்தன்மை பொருந்திய அகத்தியரை வணங்கினால் கவிதை இனிமை, அருட்தன்மை ஆகிய இரண்டாலும் சிறந்து விளங்கும் புலமையை அடையலாம் என்றவாறு

விளக்கம்: பழைய தொல்காப்பியப் பதிப்புக்களில் காப்புச் செய்யுளாகக் கொடுக்கப் பட்டுள்ள, “சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப் பரமாசாரியன் பதங்கள் சிரமேற் கொள்ளுதும் திகழ்தரற் பொருட்டே ” என்ற பழம்பாடலையும்,இவர் தம் புலவர் புராணத்தில்”எண்ணில் பல்பவத்து இயற்றமிழ்க் குறுமுனி தம்மை நண்ணி மாதவம் முயன்றுள நாவலர் தமக்கே விண்ணில் வாழ்கலை வாணிதன் மெய்யருள் விளங்கும்; புண்ணி லாமுதற் கதியினுட் புகுதலெய் திடுமே” எனக் கூறியுள்ளதையும் இங்கு இணைத்துப்பார்க்கவும்
இத்துடன் தேற்ற இயல்பு முற்றிற்று 

           தவறியல்பு           
          நூற்பா 35                  நாள் :23-04-20 
தமிழ் மாணாக்கரிடமும், புலவர்களிடமும் இருக்கக் கூடாதன ஆகிய பண்புகளை இவ்வியல்பில் 34 நூற்பாக்கள் தெரிவிக்கின்றன.இன்னின்னவை விலக்க  வேண்டுவன என  விதித்தல் இவ்வியலின் குறிக்கோள்.
சாராது ஒழிப்பான் தவறுஇயல்பு உரைக்குதும்;
பேரா நலம்எனப் பிணக்கவொண் ணாதே 35
இதன் பொருள்:  தம்பால் எத்தகைய குற்றங்கள் அமைந்து விடக்கூடாது என அறிந்து அவற்றை நீக்கிக் கொள்வதற்காகத் தவறு இயல்பு ஆகிய இப்பகுதியைக் கூறுகிறோம். இனிக்கூறப் போகும் குற்றங்கள் ஒரு புலவரை விட்டு நீங்க வேண்டிய பண்புகள் ஆகும். இது தேவை இல்லை என என்னோடு மாறுபாடு கொள்ளாதீர்கள்
விளக்கம்:
 வெற்றிப் பாதையில் செல்வோனுக்கு நேரிய சிந்தனைதான் வேண்டும் எதிர்மறை சிந்தனை கூடாது என்பர். நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும் போது கெட்டன எவை அறிந்தால் தான் நல்லன எவை என அறிதல் முடியும். கல்லும் அரிசியும் கலந்துள்ள போது கல்லை நீக்கினால் மட்டுமே நல்லதாகிய அரிசி கிடைக்கும். நெல்லுடன் பதரும் கலந்திருப்பதுபோல் மக்களுள் பதடிகளும் கலந்திருப்பர் என்பதை  பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
          மக்கட் பதடி எனல் (குறள்196) எனத் திருவள்ளுவரும் கூறுகிறார்.எனவே தனக்கும் பிறருக்கும் கேடு விளைவிக்கக் கூடிய அல்லவையையும் அறிதல் அவசியம் ஆகிறது.”இவையிவை நலம் பயப்பன;ஆகவே கொள்ளத்தக்கன என்றுமட்டும் உரைத்தால் போதாதோ? என்னும் ஐயத்தைப் போக்குவதற்காகவே இவை தீமை எனத்தெரிந்துகொண்டால் தானே அவற்றை ஒழிக்கலாம் அவ்வாறு எவ்வெவற்றைத் தள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே இவ்வியல்பைத் தொடங்குகிறார்” இதனால் தான் திருவள்ளுவரும் 17 ஆமைகளை நமக்குக் காட்டுகிறார்.அழுக்காறாமை வெஃகாமை, பயனில சொல்லாமை,புறங்கூறாமை என்று  எதிர்மறையான தள்ளத்தக்க  கருத்துகளை எடுத்து வைக்கிறார்.
      புலவர்கள் என்றாலே தற்பெருமை, புலமைக்காய்ச்சல் என்னும் பொறாமை போன்ற சில தீய பண்புகள் இயல்பாகவே இருக்கும் என்ற ஒருநம்பிக்கை சரியாகவோ தவறாகவோ சமுதாயத்தில் நிலவி வருகிறது.இவை புலவர்களிடத்தில் இருத்தல் கூடாது என்றும் நீக்க வேண்டும் என்றும் கூறுகிறார். நன்னூலாரும் மாணாக்கர் ஆகாதார் இலக்கணத்தை கூறுகிறார்.                                                 
  




   
 



 
 

 





No comments:

Post a Comment