26-08-19
மொழிக்கு இறுதியில் வரும்
எழுத்துகள்
நன்னூல் படி
உயிரெழுத்துக்கள் 12 உம் மெய் எழுத்துகளில் ஞ ண ந ம ன ய ர ல வ ள ழ 11
உம் குற்றியலுகரம் 1 ஆக 24 எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்
உயிரெழுத்துக்கள் 12 சான்று
ஆ ஈ, ஊ, ஏ, ஐ, ஓ இவை ஓரெழுத்து ஒருமொழிகள்
விள, பலா, கரி, தீ, கடு, பூ, சேஎ (எருது) தே,(தெய்வம்) தை,நொ, போ, கௌ
மெய்எழுத்துகள் 11 சான்று
உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வாள்,
குற்றியலுகரம் 1அஃது
இவற்றுள் சில சிறப்பு விதிகள்
உயிர்க் குறில் எழுத்துகள் ஐந்தும் அளபெடைக்குப் பின்னால் வரும்
பலாஅ, தீஇ, பூஉ, சேஎ, கைஇ, கோஒ, கௌஉ
1.எ இல் முடியும் சொல்
தமிழில் இல்லை
2.ஒ ந் உடன் மட்டும் வந்து
(நொ) மொழிக்கு ஈற்றில் வரும். பிற மெய் எழுத்துகளுடன் சேர்ந்து மொழிக்கு ஈறாகாது.
3.ஔ க், வ் உடன் மட்டும்வந்து
(கௌ, வௌ) மொழிக்கு ஈற்றில் வரும்
4. க்,ச்,ட்,த்,ப்,ற், ங் இல்
முடியும் தமிழ்ச்சொற்கள் இல்லை அப்படி முடிந்தால் அவை தமிழ்ச்சொற்கள் அல்ல. பதிவு
தொல்காப்பியச்செம்மல் புலவர்
ஆ.காளியப்பன், தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
27-08-19 நேற்றைய தொடர்ச்சி
தமிழ் எழுத்திலக்கணத்தின் உயிர் நாடி
புணரியல்.அதனால்தான். 9 இயல் கொண்ட எழுத்ததிகாரத்தில் ஆறு
இயல்களைப் புணரியலுக்காக எழுதி உள்ளார்என்றால் புணர்ச்சி இலக்கணத்தின்
இன்றியமையாமையை அறியலாம்.புணர்ச்சி இலக்கணத்தை அறியும் முன் அதில் உள்ள சில
கலைச்சொற்களுக்கு விளக்கம் அறிதல் வேண்டும்.
இரண்டு சொற்கள் சேரும்போது முதலில்
நிற்கும் சொல் நிலைமொழி(நிறுத்தசொல்) என்றும், நிற்கும் சொல்லுடன் சேர வரும் சொல்
வருமொழி(குறித்து வரு சொல்)
என்றும் அழைக்கப்படும்.
உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களை
உயிர்முதல் என்றும், உயிரெழுத்தில் முடியும் சொற்களை உயிரீறு என்றும், கூறுவர்.
அதேபோல் மெய் எழுத்தில் தொடங்கும் சொற்களை மெய்முதல் என்றும், மெய் எழுத்தில்
முடியும் சொற்களை மெய்யீறு என்றும் கூறுவர்.
புணர்ச்சியில் சொல்லும் சொல்லுமே
சேர்கின்றன.இருப்பினும் அவற்றை எழுத்துப் புணர்ச்சி, பொருள் வகைப்புணர்ச்சி
இருவகைப்படுத்துவர்
எழுத்துப் புணர்ச்சி
இயல்புப்புணர்ச்சி திரிபு(விகாரம்) என
இருவகைப்படும்
‘புணருங் காலை
மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென
ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே
(எழு.109)
அவைதாம்,
மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று
இவ்வென மொழிப
திரியுமாறே(தொல்எழுத்து110)
எழுத்துப் புணர்ச்சி இதில்
இயல்புப்புணர்ச்சி நிலைமொழியும் வருமொழியும் சேரும் போது நிலைவரு
மொழிகளில் எந்தவகையான மாற்றமும் இன்றி இயல்பாகப் புணர்ந்தால் அஃது இயல்புப்புணர்ச்சி
எனப்படும்.
சான்று வாழை+மரம்=வாழைமரம்
திரிபு(விகார)ப்புணர்ச்சி இது மூன்று
வகைப்படும்
அது மெய் பிறிதாதல்(திரிதல்)
மிகுதல்(தோன்றல்) குன்றல்(கெடுதல்)என்று மூன்று வகைப்படும்.சான்று
மெய் பிறிதாதல் மண்+குடம்= மட்குடம்
இதில் நிலைமொழி(மண்) மட் என மாறிஉள்ளது.
மிகுதல்(தோன்றல்) வாழை+பழம்=
வாழைப்பழம் இதில் நிலைமொழி வாழைக்கும்
பழமென்னும் வருமொழிக்கும் இடையில் ப் என்னும் ஓரெழுத்துத்தோன்றி உள்ளது. இது
மிகுதல் எனப்படும்.
குன்றல்(கெடுதல்) மரம்+வேர்= மரவேர்
இதில் .
நிலைமொழி மரம் என்பதற்கும் வேரென்னும் வருமொழிக்கும் இடையில் ம் என்னும் எழுத்து
மறைந்து வந்துள்ளது. இது குன்றல்
எனப்படும். அடுத்து பொருள் வகை அல்வழி வேற்றுமை பற்றிப்பிறகுபார்க்கலாம்.
இந்த இலக்கணப்பதிவை தங்கள் குழுவில்
பதிவிடலாமா? வேண்டாமா? எனத் தெரியப்படுத்தவும். மற்றவர்களுக்குத் தொந்தரவு
வேண்டாம்
. பதிவு தொல்காப்பியச் செம்மல் புலவர்
ஆ.காளியப்பன், தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
28-08-19
வேற்றுமை அல்வழி
வேற்றுமை
என்பது வேறுபட்டு நிற்பது. நம் இந்தியத் துணைக்கண்டம் தெற்கென்றும் வடக்கென்றும்
புவியால்,சமயத்தால் இனத்தால், மொழியால் உணவால்,பண்பாட்டால் வேறு பட்டு நின்றாலும் இந்தியர்
என்ற ஒற்றைச் சொல்லால் ஒற்றுமைப்படுகிறோம்.இருப்பினும் அவரவர் சமயத்தை,மொழியை
விட்டு ஒரே மதம் ஒரேமொழி என அமைத்துக் கொள்வது ஏற்புடையது அல்ல. எம்மதமும் சம்மதம் என்றும் எல்லா
மொழியும் கற்றுவை ஆனால் தாய் மொழிமீது பற்று வை என்றும் எண்ணிவாழ்ந்து சிறப்போம். இலக்கணத்திலும் பல
வேற்றுமைகள் உள்ளன. அவற்றை இங்கு காண்போம்.
வேற்றுமை என்றால் என்ன?
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை
விளக்கம் கந்தன் அடித்தான் அதாவது கந்தன் வேறு யாரையோ
அடித்துள்ளான் என்ற பொருளைத் தருகிறது.
கந்தன் என்ற சொல்லுடன் ‘ஐ’ என்னும் ஓர்
எழுத்தைச்சேருங்கள் கந்தன்+ ஐ= கந்தனை என ஆகும் இப்பொழுது கந்தனை அடித்தான் என்று
சொல்லுவோம். இதன் பொருள் கந்தனை வேறு யாரோ அடித்தார்கள் என்ற பொருள்படுகிறது.
இப்போது அடித்த கந்தன் அடிதின்ற கந்தன் ஆகிவிட்டான் .இதற்குக் காரணம் ‘ஐ’என்னும்
ஓரெழுத்தே.இந்த ஐ வேற்றுமை உருபு எனப்படுகிறது.இப்படிப் பெயர்ச்சொல்லின் பொருளை
வேறுபடுத்துவது வேற்றுமை.
அந்த வேற்றுமை எட்டு வகைப்படும். திசை
எட்டு. எனவே குணமும் எட்டு (எண்குணத்தான்
என்றாலும்சரி)அதனால்தான் வேற்றுமையையும் எட்டு என்றனர் போலும்.அவை
முதல் வேற்றுமை அல்லது எழுவாய்வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை அல்லது செயபடுபொருள்
வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை,
ஆறாம் வேற்றுமை,
ஏழாம் வேற்றுமை
எட்டாம்வேற்றுமை என எண்வகைப்படும்.
இரண்டு முதல் ஏழு வேற்றுமைகளுக்கு உருபுகள்
உண்டு முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும்
உருபுகள் கிடையா. எனவே அவற்றைப் புணர்ச்சியில் வேற்றுமையாக எடுத்துக் கொள்வதில்லை
வேற்றுமை உருபுகள் பலபல இருப்பினும்
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உருபை எடுத்துக் கொள்வோம்.
இரண்டாம் வேற்றுமை அல்லது செயபடுபொருள்
வேற்றுமை உருபு ஐ
மூன்றாம் வேற்றுமை உருபு ஆல்
(ஆல் ஆன் ஒடு ஓடு)
நான்காம் வேற்றுமை உருபு கு
ஐந்தாம் வேற்றுமை, உருபு இன்(இல்)
ஆறாம் வேற்றுமை, உருபு அது(அ)
ஏழாம் வேற்றுமை உருபு கண்(மேல்,கீழ்,அங்கு
இங்கு என இடப்பொருளில் வரும் எல்லா உருபுகளையும் கொள்க)
சான்று
வேற்றுமை உருபு மறையாமல் வந்தது வேற்றுமை உருபு மறைந்து வந்தது
2.கந்தன் பழத்தைத்(பழம்+ஐ) தின்றான் கந்தன் பழம் தின்றான்
3.கல்லால்
எறிந்தான் கல்லெறிந்தான்
4.கந்தனுக்குமகன் கந்தன் மகன்
5.ஊரின்
நீங்கினான் ஊர்நீங்கினான்
6.கந்தனது
கை கந்தன் கை
7.குன்றத்தின்கண்
கூகை குன்றக்கூகை
இப்படி வேற்றுமை உருபுகள்
வெளிப்படையாகவோ மறைந்தோ வந்தால் அதை வேற்றுமைப்புணர்ச்சி என்று சொல்லவேண்டும்.
அப்படி இன்றி வேறு எப்படி வந்தாலும் அது (வேற்றுமை அல்லாதவழி) அல்வழிப்புணர்ச்சி
எனப்படும். இவைகளைப்பற்றி தெரிந்தால் மட்டுமே சந்திப்பிழைகள் இன்றி எழுதமுடியும்.
சான்றாக தோப்பு+ கள்= தோப்புகள்,
தோப்புக்கள் எனஇருவகையாக வரும்
தோப்பு என்ற ஒருமையைப் பன்மை ஆக்க
தோப்புகள் என க் சந்தி இன்றிச்சேரும் இது அல்வழி
அதே சொல் (தோப்பு+ கள்) தோப்பில் உள்ள
கள் என்னும் மதுவைக்குறிக்கும் போது தோப்பு+ கள்= தோப்புக்கள் எனவரும் இது தோப்பின்கண்
என கண் என்னும் ஏழாம் வேற்றுமைப்பொருளில் வந்ததால் வேற்றுமைப் புணர்ச்சி
எனப்படுகிறது
படித்தவர்கள் போற்றுக அல்லது தூற்று
இல்லெனில் படிததற்கு அடையாளமாக ஏதாவது
குறி இடுங்கள் எனென்றால் விழலுக்கு இறைத்த நீராகக்கூடாது அல்லவா?
பதிவு தொல்காப்பியச் செம்மல் புலவர்
ஆ.காளியப்பன், தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
29.08.19
அல்வழி 14 உள
அவை
1.வினைத்தொகை - கொல்களிறு
2.பண்புத்தொகை - கருங்குதிரை
சாரைப்பாம்பு இருபெயரொட்டுப்பண்புத்தொகை
3.உவமைத்தொகை -மதிமுகம்
4.உம்மைத்தொகை -பொரிகடலை
5. அன்மொழித்தொகை -பொற்றொடி வந்தாள்
6.எழுவாய்த்தொடர் - கந்தன் வந்தான்(முதல்
வேற்றுமை)
7.விளித்தொடர் - முகமது வா
(எட்டாம் வேற்றுமை)
இவை இரண்டும்வேற்றுமை என்றாலும் உருபு இல்லாததால்
அல்வழி ஆயிற்று
8.பெயரெச்சத்தொடர் -- வந்த மரியாள்
9.வினையெச்சத்தொடர் - வந்து பார்த்தான்
10.தெரிநிலை வினை முற்றுத்தொடர்.-
வந்தான் சாத்தன்
11.குறிப்பு வினைமுற்றுத் தொடர் --
பெரியன் சாத்தன்
12.இடைச்சொற்றொடர் - மற்று ஒன்று
வாங்கினான்(மற்று இடைச்சொல்)
13.உரிச்சொற்றொடர் - நனிபேதை(நனிஉரிச்சொல்)
14. பாம்பு பாம்பு -- அடுக்குத்தொடர்
இனியோரே இப்பொழுது TRB தேர்வு அறிவித்து
இருப்பதால் இவை அவர்களுக்காக எழுதப்பட்டது உங்களுக்குப் பயன் இருப்பினும் இல்லாமல்
போனாலும் வேறுகுழுக்களுக்கு முன்னுரையுங்கள்.
No comments:
Post a Comment