உலகப்பொது மறை
திருக்குறளே போற்றி
திருக்குறள் தந்த
திருவள்ளுவரே போற்றி
பால்மூன்றெனப் பகுத்த
பரமே போற்றி
அதிகாரம் 133 தந்த
ஆதியே போற்றி
அருங்குறள் 1330 அருளிய
பகவனே போற்றி
அறமே முதன்மை என்ற வாலறிவே போற்றி
கடவுள் வாழ்த்துத் தந்த
கருவே போற்றி
வான்சிறப்பை
வலியுறுத்திய அமிழ்தே போற்றி
நீத்தார் பெருமையை
நினைவூட்டிய நிமலா போற்றி
அறன் வலியுறுத்தலை தந்த
ஆண்டவா போற்றி
இல்வாழ்க்கையே இயற்கை
என்றஇறைவா போற்றி
வாழ்க்கைத்
துணைநலத்தை வழங்கினாய் போற்றி
மக்கட்பேற்றின் மகிழ்வை
உரைத்தாய் போற்றி
அன்புடைமை அகிலமாளும்
என்றாய் போற்றி
விருந்தோம்பலை
விளக்கிச் சொன்னாய் போற்றி
இனியவைகூறலே இன்பம்
என்றாய் போற்றி
செய்நன்றி அறிதலைச்
செப்பினாய் போற்றி
நடுவு நிலைமையே
நன்றென்றாய் போற்றி
அடக்க முடைமையே வெல்லும்
என்றாய் போற்றி
ஒழுக்கமுடைமையே
உயிரினும்மேல் என்றாய் போற்றி
பிறனில் விழையாமையே பெருமை
என்றாய் போற்றி
பொறையுடைமையைப் போற்றுக
என்றாய் போற்றி
அழுக்காறாமையை
அழுத்திக் கூறினாய் போற்றி
வெஃகாமையை விரும்பிடு
என்றாய் போற்றி
புறங்கூறாமையை
புலப்படுத்தினாய் போற்றி
பயனிலசொல்லாமை வேண்டும்
என்றாய் போற்றி
தீவினையச்சம் தேர்ந்தெடு
என்றாய் போற்றி
ஒப்புறவு அறிதல்
உயர்ந்தது என்றாய் போற்றி
ஈகையே புகழுக்குக்
காரணம் என்றாய் போற்றி
புகழே வாழ்வின்
இலக்கு என்றாய் போற்றி
அருளுடைமை
அகிலம்ஆளும் என்றாய் போற்றி
புலால் மறுத்தலே
புனிதனாக்கும் என்றாய் போற்றி
தவம் செய்வார்
பெருமைபெரிது என்றாய் போற்றி
கூடாஒழுக்கம்
கேடுதரும் என்றாய் போற்றி
கள்ளாமை(களவு)
கனவிலும்ஆகாது என்றாய் போற்றி
வாய்மையே வளம்தரும்
என்றாய் போற்றி
வெகுளாமையே வேண்டும்
என்றாய் போற்றி
இன்னாச் செய்யாமை
இனிது என்றாய் போற்றி
கொல்லாமை போற்றுக
என்றாய்போற்றி
நிலையாமையே நிலைத்தது
என்றாய் போற்றி
துறவே இறுதியில் வேண்டும்
என்றாய் போற்றி
மெய்உணர்தல் மேன்மை
என்றாய் போற்றி
அவாஅறுத்தல்
அமைதிக்குவழி என்றாய் போற்றி
ஊழ் வினை
உறுத்தியேதீரும் என்றாய் போற்றி
அறத்தினைத் தொடர்ந்து
பொருளைத்தந்தாய் போற்றி
இறைமாட்சி என்று
அரசைச்சொன்னாய் போற்றி
கல்வியைக் கண்என்றாய்
போற்றி
கல்லாமை வேண்டாம்
என்றாய் போற்றி
கேள்வியே அறிவுக்கு
அச்சாரம் என்றாய் போற்றி
அறிவுடைமையே
ஆக்கம்தரும் என்றாய் போற்றி
குற்றங்கடிதல்
பெரியோர்குணம் என்றாய் போற்றி
பெரியாரைத்
துணைக்கோடல் வேண்டும் என்றாய் போற்றி
சிற்றினம்சேராமை
வேண்டும் என்றாய் போற்றி
தெரிந்து செயல்வகை
சிறந்தது என்றாய் போற்றி
வலிஅறிதல் நம்வல்லமை என்றாய்
போற்றி
காலம் அறிதல் கண்ணென்றாய்
என்றாய் போற்றி
இடனறிதல் ஏற்றம்தரும்
என்றாய் போற்றி
தெரிந்து தெளிதல்
தேவை என்றாய் போற்றி
தெரிந்து வினையாடல்
சிறப்பு என்றாய் போற்றி
சுற்றம்தழால் சுகம்தரும் என்றாய் போற்றி
பொச்சாவாமையை மறவாதே என்றாய்
போற்றி
செங்கோன்மை சிறக்கவழி
செப்பினாய் போற்றி
கொடுங்கோன்மை கூடாது
என்றாய் போற்றி
வெருவந்த செய்யாமை
வேண்டும் என்றாய் போற்றி
கண்ணோட்டம் ஏழைமீது வேண்டும்
என்றாய் போற்றி
ஒற்றாடல் அரசுக்கு வேண்டும்
என்றாய் போற்றி
ஊக்கமுடைமை
யாவருக்கும் வேண்டும் என்றாய் போற்றி
மடிஇன்மை மக்களுக்கு வேண்டும்
என்றாய் போற்றி
ஆள்வினையுடைமை
அனைவருக்கும் வேண்டும் என்றாய் போற்றி
இடக்கண்அழியாமை
எல்லார்க்கும் வேண்டும் என்றாய் போற்றி
அமைச்சே
ஆட்சிக்குச்சிறப்பு என்றாய் போற்றி
சொல்வன்மை
செல்வத்தின் அடித்தளம் என்றாய் போற்றி
வினைத்தூய்மை வேண்டும்
என்றாய் போற்றி
வினைத்திட்பம் வேண்டும்
என்றாய் போற்றி
வினைசெயல்வகை
வேண்டும் என்றாய் போற்றி
தூது அரசுக்கு வேண்டும்
என்றாய் போற்றி
மன்னரைச் சேர்ந்தொழுகல் மாண்பு என்றாய் போற்றி
குறிப்பறிதல்
குன்றில் அமர்த்தும் என்றாய் போற்றி
அவைஅறிதல் வேண்டும்
என்றாய் போற்றி
அவை அஞ்சாமை வேண்டும்
என்றாய் போற்றி
நாடுஉயர நலம்புரி
என்றாய் போற்றி
அரண் இல்லென்றால்
அழிவு என்றாய் போற்றி
பொருள்செயல்வகை வேண்டும்
என்றாய் போற்றி
படைமாட்சி
பலம்கூட்டும் என்றாய் போற்றி
படைச்செருக்கு வேண்டும்
என்றாய் போற்றி
நட்புநலம் பலதரும்
என்றாய் போற்றி
நட்பு ஆராய்தல் தேவை
என்றாய் போற்றி
பழமை பாராட்டல் நன்றென்றாய்
போற்றி
தீநட்பு தீமைதரும்
என்றாய் போற்றி
கூடாநட்பு கூடாதே நன்றென்றாய்
போற்றி
பேதைமை என்றும்
கூடாது என்றாய் போற்றி
புல்லறிவாண்மை
வேண்டாம் என்றாய் போற்றி
இகல் ஒருபோதும் கூடாது
என்றாய் போற்றி
பகைமாட்சி பற்றிச்
சொன்னாய் போற்றி
பகைத்திறம்தெரிதல்
வேண்டும் என்றாய் போற்றி
உட்பகை கூடாது என்றாய்
போற்றி
பெரியாரைப் பிழையாமை வேண்டும் என்றாய் போற்றி
பெண்வழிசேரல் கூடாது என்றாய் போற்றி
வரைவின்மகளிர் உறவு கெடுதி என்றாய் போற்றி
கள்ளுண்ணாமை நலம்பலதரும் என்றாய் போற்றி
சூது செல்வம்
தொலைக்கும் என்றாய் போற்றி
மருந்து மாறுபாடு இல்லா உண்டியே என்றாய் போற்றி
குடிமையின் சிறப்பை
உரைத்தாய் போற்றி
மானம் தேவை என்றாய்
போற்றி
பெருமையின் சிறப்பை
உரைத்தாய் போற்றி
சான்றாமையே சாலச்
சிறந்தது போற்றி
பண்புடைமையே பக்குவம்
என்றாய் போற்றி
நன்றியில் செல்வம்
வேண்டாம் என்றாய் போற்றி
நாணுடைமை வேண்டும் என்றாய் போற்றி
குடிசெயல்வகை கடமையை
உரைத்தாய் போற்றி
உழவே உலகிற்கு
உயிர்மூச்சு என்றாய் போற்றி
நல்குரவு(வறுமை) நலிவுதரும் என்றாய் போற்றி
இரவு(பிச்சை) கூடாது என்றாய்
போற்றி
இரவு அச்சம் வேண்டும்
என்றாய் போற்றி
கயமையை(கீழ்மை)
கழித்திடு என்றாய் போற்றி
சொல்லிய108 உம்
மந்திரம் என்றோம் போற்றி
இன்பம் எல்லா
உயிர்க்கும் பொதுவென்றாய் போற்றி
இன்பத்தை இரண்டாய்ப்
பிரித்தாய் போற்றி
களவென்றும்
கற்பென்றும் உணர்த்தினாய் போற்றி
தகையணங் குறுத்தல்
தந்தாய் போற்றி
குறிப்பறிதல் தந்தாய்
போற்றி
புணர்ச்சி மகிழ்தல் தந்தாய்
போற்றி
நலம் புனைந்துரைத்தல்
நவின்றாய் போற்றி
காதற் சிறப்புரைத்தல்
கண்டாய் போற்றி
நாணுத்துறவு உரைத்தல்
தந்தாய் போற்றி
அலர் அறிவுறுத்தல் தந்தாய்
போற்றி
பிரிவாற்றாமை தந்தாய்
போற்றி
படர்மெலிந்திரங்கல் தந்தாய்
போற்றி
கண்விதுப்பழித்தல் தந்தாய்
போற்றி
பசப்புறுபருவரல் தந்தாய்
போற்றி
தனிப்படர்மிகுதி
தந்தாய் போற்றி
நினைந்தவர் புலம்பல்
தந்தாய் போற்றி
கனவுநிலைஉரைத்தல் தந்தாய்
போற்றி
பொழுது கண்டிரங்கல் தந்தாய்
போற்றி
உறுப்பு நலன்அழிதல் தந்தாய்
போற்றி
நெஞ்சொடு கிளத்தல் தந்தாய்
போற்றி
நிறையழிதல் தந்தாய்
போற்றி
அவர்வயின்விதும்பல் தந்தாய்
போற்றி
குறிப்பறிவித்தல் தந்தாய்
போற்றி
புணர்ச்சி விதும்பல் தந்தாய்
போற்றி
செஞ்சொடு புலத்தல் தந்தாய்
போற்றி
புலவியை எடுத்துச்
சொன்னாய் போற்றி
புலவி நுணுக்கம் தந்தாய்
போற்றி
ஊடலுவகை உணர்த்தினாய்
போற்றி
முப்பால் ஊட்டி
வளர்த்த வள்ளுவ
மாமுனியே நின்தாள் போற்றி
போற்றி
No comments:
Post a Comment