கலைஞர்க்கு கையறுநிலைப் பாடல்
உயிர்கொடுத்தப் புகழ்கொண்ட உதயசூரியனே!
இடைத்தமிழ்க் குடியில் இவ்வுலகில்
வந்துதித்து
கடைத்தமிழில் கால்பதித்துக் கலைஞன்
ஆனாய்
முதற்தமிழில் முகிழ்த்த முதல்வரே வாழி!
வடக்கில் கோட்டமும் தெற்கில் சிலையும்
வள்ளுவன் குறளுக்கு ஓவியம் வரைந்து
வள்ளுவ நாடாக்கி வைத்தவனே வாழி!
ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியப்
பூங்காவில்
சொல்லாம் செடிவளர எழுத்துவிதை ஊன்றிப்
பொருளைப் பூக்கவைத்த புண்ணியா வாழி!
காற்சிலம்பைக் கையேந்தும் கண்ணகிக்குச்
சிலைவடித்து
பூம்புகார் கண்டெடுத்து நெஞ்சுக்குநீதி
தந்து
இளங்கோவிற்கு ஏற்றம் தந்தவரே வாழி!
மந்திரி குமாரியும் மலைக்கள்ளன் திரைப்படமும்
மனோகர வசனமும் தந்து மயக்கியவா
இந்திரன் சபைக்கு எழுதச் சென்றாயோ!
பொன்னர் சங்கரும் பூமிதனில் பொலிவுறவும்
மன்னுபுகழ் ராமானுசர் வாழ்க்கை
வரலாறும்
திண்ணமாய் உம்பேரை திக்கெல்லாம்
உரைத்திடுமே!
ஆட்சித் தலைவருக்கும் அலுவலகப் பணியாளர்க்கும்
இறந்தபின் என்செய்வோம் என்று
தவித்தோர்க்கு
ஈபிஎப் முறையாலே இன்பம்தந்தவரே வாழி!
அன்னைக் கருவறையே அனைவருக்கும்
பொதுவென்றாய்
ஆண்டவன் கருவரையும் அப்படியே
ஆக்கிவைத்தாய்
இரட்டைக் குவளையை ஒழித்தவா வாழி!
மட்குடிசை வாழ்வோரை மாடிவீட்டில்
குடியேற்றி
திட்டுவோர் திட்டனைத்தும் திட்டத்தால்
வென்றெடுத்தாய்
மட்டற்ற சோகத்தால் மக்கள் கதறுகிறோம்.
பதிமூன்று முறைவென்று பாரதத்து
அரசியலில்
பதினான்கு பிரதமரை பார்த்த பகலவா!
மாண்டபின்பும் வென்றெடுத்தாய் மண்ணில் ஓரிடத்தை
முத்தமிழ் வித்தகரே முழுணர்ந்த பேரறிவே!
சித்தம் கலங்கிடவே சீர்கெட்ட தமிழ்நாட்டில்
பித்தராக்கி எங்களைப் பிரிந்து
சென்றீரே!
மெரினா கடற்கரையில் மெத்தென்ற
மணலறையில்
சரிந்ததையா உன்மேனி சந்தனப் பேழைக்குள்
எரியும் எம்மேனி எப்போது தணியுமையா?
எழுதுகோல் முறிந்ததையா இலக்கியங்கள் சரிந்ததையா
அழுத கண்ணீரை யார்வந்து துடைப்பார்கள்
தொழுதான் எமனென்று தொடர்ந்தாயோ அவன்பின்னே!.
முத்தமிழ் வித்தகரே மூதறிஞர்க்கு
மூலவனே!
கத்தும் கடற்கரையில் கண்ணுறங்கும்
திருமகனே
உத்தம புத்திரனே உனைப்பிரிந்து
வாடுகின்றோம்
திருக்குவளை முத்து வேலர் மகனா?
திராவிட முன்னேற்றக் கழகம் தானா?
திமுகவே திமுக உள்ளவரை நீயிருப்பாய்!
ஆக்கம்
தொல்காப்பியச்
செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தலைவர்
தொல்காப்பியர் பேரவை,
முத்தம்மாள்
நிலையம்,
பூலுவபட்டி(அஞ்சல்),
கோயமுத்தூர்
641101.
அலைபேசி
9788552993 / 8610684232
Email amuthankaliappan@gmail.com
No comments:
Post a Comment