துன்பமது
தூசெனத் தூரமாய்ப் போகவும்
சாதுக்களின் பாதுகாவலர்
இன்பம
தெங்கும் நிலைகொண் டிருக்கவும்
மன்பதை போற்றும் கவிவளம் கொண்டவென்
இன்றமிழ் தாயே துணை.
குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவுக் கட்டுரை வன்மை
உலகியல் அறிவோடு உயர்குணம் கொண்ட
மாணிக்கம் மலையே மலர்ப்பாதம் போற்றுகின்றேன்
சிந்தனை என்றும் தீட்டிய வைரமே
உந்தன் மொழியோ மணியின் ஒலியே
அந்த ஒலியும் இரத்தினச் சுருக்கமே
பவழ வாயில் முத்துப்பல் காட்டியே
தவம்செய் மேனி குலங்கச் சிரிப்பது
அவனியில் வீழும் வெள்ளிக் காசே
தரத்தில் குறையா தங்கமே பணிகின்றேன்
கோமேதக மார்பில் கோலம்செய் வெண்ணீறும்
மனத்தகத்தான் என்னும் வெங்கலக் குரலும்
அனைவரை மயக்கும் அணிசெய் மரகதமாய்
உன்றன் உள்ளமோ எஃகின் உறுதி
தன்னளி செய்வதில் செம்பாய் நெகிழும்
நின்திருக்கரம் பட்டால் தகரமும் தங்கமே
ஒன்பான் மணியாய் ஒளிரும் திருவே
உன்னடி போற்றி உரைக்க முயல்கிறேன்
சாதுக்கள் காவலர் சண்முக அடிகளென்று
மாதொரு பாகனை மனதால் வழுத்தி
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
பலரும் பகர்ந்த பாக்களின் சொற்களை
தொடையல் ஆக்கி தொல்காப்பியச் செம்மல்
படைக்கிறேன் உமக்கு ஏற்பீர் உவந்து
தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்லோர் சாதுக்கள் ஆவார்
பொய்தீர் ஒழுக்க நெறிநின்ற அந்தணர்
மெய்ப்பொருள் தன்னை மேதினியோர் அறிய
சாற்றும் பெரியோர் சாதுக்கள் ஆவார்
சிறப்பொடு பூசனை ஈசனுக்கு நடத்துவார்
மறந்தும் பிறன்கேடு சூழாப் பெரியோர்
மண்மிசை வாழ்வதால் மாமழை பொழியுது
எண்டிசை மக்களும் ஏற்றமுற வாழ்கிறார்
அத்தகு சாதுக்கள் அருந்துயர் களைய
சித்தம் கொண்டு சிந்தனை செய்தீர்
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உண்டி முதற்றே உணவின் பிண்டமென
கண்டுணர்ந்து காத்தாய் சாதுக்கள் கூட்டத்தை
சாதுக்களின் காவலர் சண்முகா சரணம்
சரணம் சரணம் சாதுசாமி சரணம்.
தமிழும் சைவமும் தழைத்தினி தோங்கிட
தளரா துழைக்கும் தலைவா போற்றி!
இமிழ்கடல் சூழ்வையம் இன்பம் பெற்றிட
எண்ணும் சாதுக்கள் காவலா போற்றி!
உமியாய் அவர்கள் உறுதுயர் தன்னை
ஊதிட உதவும் ஊழிக்காற்றே போற்றி!
அமிழ்தாய் அருளை அள்ளிக் கொட்டிடும்!
ஆருயிர் மருந்தே போற்றி! போற்றி!
No comments:
Post a Comment