Tuesday, 22 May 2018

புறநானூற்றில் பெண்கள் இயல்பு


புறநானூற்றுப் பெண்களின் இயல்புகள்
உலகப் படைப்புக்களில் உயர்ந்த படைப்பு பெண்ணே. அனைத்து உயிர்களையும் உண்டாக்குவதும் காப்பாற்றுவதும் உயிர்ப்பிப்பதும் பெண்ணே. அன்பு,  ஆதரவு, பகிர்தல்இது மூன்றுக்கும் பொருத்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண் அவளே ஆக்கலும் காத்தலுக்கான ஆதித் தொன்மத்தாய் வடிவில் உள்ளாள்  
சக்திமகத்தான ஆற்றல்  படைத்த பெண் தெய்வம் என்று இந்து மத வழிபாடு தெரிவிக்கிறது மனைவியை "மனையறத்தின் வேர்'' என்று சேக்கிழார் புகழ்ந்துள்ளார். அதனால்தான் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று வள்ளுவரும் வினவுகிறார் .
பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்துக் காரைக்காலம்மையார் போன்றவர்களையும்     சங்க காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை,                 சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது, பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது. பெண்பாற் புலவர்கள் சங்க காலத்திலேயே   கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். தலைமைப் பண்பு மிக்கவர்களாக சரித்திர சாதனை புரிந்துள்ளனர். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு,  தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு..
  இத்தகு சிறப்பினைப் பெற்ற. , சங்ககாலப் பெண் புலவர்கள் யார் என்றால் எல்லோரும் உதட்டையே பிதுக்குவார்கள். ஒளவையாரைத் தவிர வேறு யாருடைய பெயரும் நம்மில் பலருக்குத் தெரியாது.நமக்கு கிடைத்துள்ள சங்கப்பாடல்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கை 473 பேர்.அவற்றில் பெண் புலவர்களின் எண்ணிக்கை 41 ஆகும். 16 புறநூனூற்றுப் புலவர்கள் அவர்கள் 59 பாடல்களைப்பாடியுள்ளனர். இப் பெண்புலவர்களின் பாடல்கள்மூலமும் ஆண்புலவர்கள் பாடிய பாடல்கள் மூலமும் புறநானூற்றுக்காலப் பெண்கள் இயல்பு பற்றி எடுத்துக்கூற விரும்புகின்றேன். பெண்ணின் கடமையும் வீரமும்                                                     
ஒரு ஆணை பெற்றுவளர்த்து ஆளாக்குவதில் அவனது தாய்க்கு பெரும்பங்கு உண்டு
புலவர் பொன்முடியார் ஒரு தாய். அவர் சொல்கிறார்.
ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே! (312)           (1)

 

 (மகனைப்) பெற்றுப் பேணிப் பாதுகாப்பது எனக்குக் கடமை
(அவனைச்) சான்றோனாக்குவது தந்தைக்குக் கடமை
(அவனுக்கு) நல்ல நடத்தையை அளிப்பது மன்னனுக்குக் கடமை
(அவனனுக்கு) வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லனுக்குக் கடமை
ஒளிர்கின்ற வாளால் கடும்போரிலே யானையை வெட்டி மீள்வது (என் மகனாகிய) காளைக்குக் கடமை என முடியும் (புறம் 312) புகழ் பெற்ற அந்தப்பாடல்
.ஆண்மகனைப் பெறுவதில் சங்ககாலச் சமூகத்துக்கிருந்த மகிழ்ச்சியையும் அதைவிட அவனை சான்றோன் ஆக்குதலில் இருந்த இரட்டிப்பு மகிழ்ச்சியையும் நாம் இங்கு காண்கிறோம்.சங்ககாலத்தில் சான்றோன் என்பதற்கு வீரன் என்ற பொருளே பொதுவாக இருந்தது.
பழந்தமிழ் மறத்தி ஒருத்தி நாட்டைக் காக்கத் தந்தையைப் போர்க்களத்திற்கு அனுப்பினாள்.அவன் வீரச்சாவடைந்தான்.நேற்றுக் கணவனைக் களத்திற்கு அனுப்பினாள்.அவனும் களம் பட்டான்.ஆனாலும் அவள் கலங்கவில்லை.இன்றும் போர்ப் பறை கேட்டுத் தன்மகனை-ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என ஓக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் மறத்தி ஒருத்தியின் மாண்பினைப்[சிறப்பை,பெருமையை] படம்பிடித்துக் காட்டுகிறார்.
"
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே."
[
புறநானூறு 279]
காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரேஆண்சிங்கம் போலப் போராடும் தன்மகன் பெருமையைக்கூறல்
ஒரு நாள்,மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்த பெண்பாற் புலவராகிய காவற் பெண்டு அல்லது காதற்பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் அவரின் சிறிய வீட்டின் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு,அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார்.அதற்கு,காவற் பெண்டு உன் மகன் எங்கே உள்ளான்என்று நீ என்னை கேட்கிறாய்.இதோ என் வயிற்றைப் பார்,என தன்  வயிற்றைக் காட்டி,அவனைப் பெற்ற வயிறு இது.புலி இருந்து சென்ற குகை இது.என் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது.
என் மகன்,அந்த புலி எப்படி குகையை விட்டு வெளியே போய் விட்டது.அவன் இப்ப தன் நாட்டுக்காக போர்க்களத்தில் இருப்பான்.அங்கு போய்ப் பார் என்று கூறுகிறார்.இதோ அந்த வீரத் தாயின் பாடல்)                                              (2)
     'சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
       யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
      யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
      புலி சேர்ந்து போகிய கல் அளை போல
      ஈன்ற வயிறோ இதுவே
      தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே. புறம்86                               
என் மகன் எப்படிப்பட்ட வீரன் தெரியுமா ஒருநாளில் எட்டுத்தேரினைச் செய்யும் தச்சன்  ஒருதிங்கள் முழுவதும் அரிதில் முயன்று செய்த ஒரு சக்கரத்தைப்போன்றவன்.  
களம்புகல் ஓம்புமின் தெவ்வீர் போர்எதிர்ந்து                                        எம்முளும் உளன் ஒருபொருநன் வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன்னோனே புறம்87 ஔவையார் பாடியுள்ளார்
           உண்ட மார்பை அறுத்துவிடுவேன்என்றல்                                     களத்தில் உன் மகன் புறமுதுகிட்டான் என்று சிலர் சொல்லக் கேட்ட பழந்தமிழ் மறக்குடி முதியவள் ஒருத்தி, செவியில் விழுந்த சொல்லால் சீற்றம் கொண்டாள்.புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்எனச் சூளுரைத்தாள்.கையில் வாளெடுத்தாள்.களம் நோக்கிக் கடுகினாள்.வடுப்பட்டு வீழ்ந்து கிடந்த பிணங்களை வாளாற் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்:மகனைப் பிணமாகக் கண்டாள்:அழுகை பொங்கியது.ஆயினும் சிலர் சொன்னது போல் அல்லாமல் மகன் மார்பில் விழுப்புண் பட்டு[போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்] மாண்டான் என்பது கண்டு உவகை[மகிழ்ச்சி] கொண்டாள் .அவனை ஈன்ற ஞான்றினும்[நாள்] பெரிது உவந்தனள்.இப்படிப் பழந்தமிழ் முதியவள் ஒருத்தியின் மறப் பண்பைக்[வீரத்தை] காக்கைப் பாடினியார் எடுத்துக் காட்டுகிறார் அவள் வீரத்தைக் காட்டும் பாடல்இதோ
நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலை அறுத்திடுவென் யான் எனச்சினைஇ
கொண்ட வாளொடுபசுபிணம் பெயரா
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே. புறம்278 காக்கை பாடினியார் நச்செள்ளையார்  .  .இதேபொருளில் இன்னொரு பாடலும் உள்ளது போருக்குச் சென்ற  தன் மகன் விழுப்புண்பட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டு ஒரு முதிய தாய் பெருமையால் மகிழ்ந்து கண்ணீர் வடித்தாள். பூங்கணுத்திரையார் அவளது மறமாண்பு கண்டு வியந்து எழுதிய பாடல் இது.   
  மீன்உண் கொக்கின் தூவியன்ன
வால் நரைக்கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும்பலவே. புறம் 277    
மீன் உண்ணும் கொக்கின் இறகுகளைப் போல் வெண்மையான நரைத்த கூந்தலை உடைய முதிய தாய்,                                                      (3)

தன் மகன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகமானது.   அவளுடைய கண்ணீர்த் துளிகள், வலிய மூங்கிலில் தொங்கிச் சொட்டும் மழைத் துளிகளை விட அதிகமானவை
    இம்முதியவள் பெற்ற சிறுவன் (போர்க்குரிய வயதினை அடையாதவன்)
    பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
     
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே. (310) பொன்முடியார் .                              பிள்ளைப் பருவத்தில் பாலை ஊட்டினால் குடிக்க மாட்டான்.  சினம் கொள்ளாது பொய்ச் சினம் காட்டிச் சிறிய கோலை  நான் ஓங்கிய போது அச்சம் கொண்ட மகனை எண்ணிக் கவலை கொண்டு வருந்தும் மனமே!  இப்பொழுது நெற்றியில் புள்ளிகள் கொண்ட யானைகளைக் கொன்றும் அமையாதவனான இவன், முந்தைய நாளில் போரிட்டு வீழ்ந்த வீரனின் மகன்.  மார்பில் புண்ணோடு தைத்து நிற்கும் அம்பை அறியேன் என்றவன், உறுதியுடன் போரிட்டு, குதிரையின் பிடரி மயிர் போன்ற குடுமியுடனும், சிறிய தாடியோடும் கேடயத்தின் மேல் வீழ்ந்து கிடக்கிறான்.சங்க கால மகளிர் வீரமுடைய பெண்மணிகளாகவும், விவேகம் உடையவர்களாகவும் பல இடங்களில் சித்தரிக்கப் பட்டுள்ளனர். பகற்குறி, இரவுக்குறி, தலைவனைச்சந்தித்தல், தினைப்புனம்காத்தல், என தனது எல்லைகளை மீறாதவளாக இருந்தாலும், புலியைப் புறமுதுகிட்டு ஓடச்செய்பவளாகவும், அரசனுக்குப் பெண்பாற் தூதுவராகவும், புலமை வாய்ந்தவர்களாகவும் விளங்கினர்.

சங்ககாலப் பெண்கள் கல்வியறிவும், கலைஞானமும் நிறம்பியவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அக்காலப்பெண்கள் விருந்தோம்பி இல்லறம் பேணிய விதம் தமிழ்ப் பண்பாட்டைச் சிறப்பிக்கச் செய்கிறது. சங்க காலச் சமூகத்தில் பெண்களுக்குச் சிறப்பான உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தன. மேலும் கற்புநெறி, கல்வி, வீரம், காதல்வாழ்வு, விருந்தோம்பல், இல்லறம் ஆகியவற்றில் சங்ககால மகளிர் சிறந்து விளங்கினர். தொல்காப்பியர் மகளிர்க்குரிய இன்றியமையாத பண்புகளாக பின்வருவனவற்றை எடுத்துரைக்கின்றார்.
உயிரினும் சிறந்தன்றே நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்பு சிறந்தன்று’       (தொல்.களவு.23)
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’       (தொல்.களவு.8)                                                         பெண்கல்வி                                                                                      வேத காலத்தைப் போலவே சங்க காலத்திலும் ஆண், பெண் இருபாலரும் கல்வி கற்றிருந்தனர் என்பதற்கு பெண்பாற்புலவர்களும், அவர் தம் பாடல்களுமே சான்றுகளாகும். ஒளவையார், ஆதிமந்தி, காக்கைப்பாடினியார், பாரிமகளிர், பொன்முடியார், வெள்ளிவீதியார், முள்ளியூர்பூதியார், பொத்தியார், நக்கண்ணையார், கூகைக்கோழியார், நச்சௌளையார் போன்ற 30 க்கும் மேற்பட்ட பெண்பாற்புலவர்கள் ஆணுக்குச் சமமாகக் கல்வி கற்று சமூகத்தில் உயர்நிலையில் இருந்துள்ளதை அறிகின்ற போதுபெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக சங்ககால மக்கள் இருந்துள்ளதை உணர்ந்து கொள்ள முடிகிறது. பெண்கள் கல்வியில் உயரும் போதுதான் அந்தச் சமுதாயம் வளர்ச்சி பெறுகிறது.             (4)


காக்கைப்பாடினியார்  என்ற பெண்கவிஞர் சங்க காலத்தில் மற்ற கவிகளால் மதிக்கப்பட்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் மற்றப் புலவர்களுக்குச் சமமாக அமரும் பெருமை பெற்றிருந்தார் இவர் தன்னைப் பற்றிப்பாடிய ஒரு பாட்டுக்காக சேரமன்னன் இவருக்கு ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசுகளும் பரிசாக வழங்கினராம்                                                                காதல் வாழ்வு                                                                                சங்க காலத்தில் பெண்களுக்குத் தமக்குரிய மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. அதனைக் களவுஎன்று அக்காலச் சமூகத்தார் குறிப்பிட்டனர். அவனையே திருமணம்  புரிந்து கொண்டு இல்லற வாழ்வை இயற்றுவது கற்பாகும். எனவே அக்காலச் சமூகத்தில் மகளிர்க்கு இருந்த உரிமைகளுள் தலையாய உரிமை தலைவனைத் தேர்ந்தெடுத்தலேயாகும். இதனை மகளிர்க்கு வழங்கிய சமூகம் சிறப்புடையது..            கயமாடும் மகளிர்                                              பருவப் பெண்களை மகளிர் எனல் சங்ககால வழக்கு. மகளிர் குளத்தில் நீராடுகின்றனர். குளத்தில் பூத்திருக்கும் பூவைப் பறித்து வருகின்றனர்.                                                                                                        பாவைநோன்பு                                                                                           மகளிர் பாவை செய்து அந்தப் பாவைப்பொம்மைக்குக் குளத்தில் பறித்துவந்த பூக்களை அழகாகத் தைத்துச் சூட்டி மகிழ்கின்றனர்.                                                      
மூழ்கு நீச்சல் விளையாட்டு                                                                   ஆடவருள் கல்லா இளையர் ஒளிவு மறைவு இன்றி அவர்களோடு சேர்ந்து நீந்தி விளையாடுகின்றனர். சில வேளைகளில் மகளிரோடு தழுவி விளையாடுகின்றனர். சில வேளைகளில் மரக்கிளைகளைப் பற்றிக்கொண்டு தொங்கி மகளிர்க்குத் தம் திறமையை வெளிப்படுத்துகின்றனர் அருகிலுள்ள மருத மரத்தில் ஏறித் தண்ணீரில் குதித்து மூழ்கி குளத்துறையின் அடியில் உள்ள மண்ணை எடுத்துவந்து காட்டி மகிழ்கின்றனர்
புறநானூற்றின் வழி அறியப்படும் இச்செய்தியால் தமிழ்ச் சமூகம் பெண்களைக் காக்க முற்பட்டது என்பதை நன்குணர முடிகிறது.சங்க இலக்கியத்தில் களவு, கற்பு என இரு மணங்கள் இருந்தன.   குறுந்தொகையில் அறிமுகம் இல்லாத தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் இணைந்து களவுமணம் புரிந்திருக்கிறார்கள். என்பதை,          யானும் நீயும் எவ்வழி அறிதும்                                                                                           செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’       (குறுந்.40)
என்று விளக்குகிறது. மேலும், தலைவி தலைவன் மீது கொண்டுள்ள காதல் எத்தகையது என்பதை,
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றே
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’     (குறுந்.3)என்று தலைவன் மீது தலைவி கொண்டிருக்கும் காதல் பூமியை விட அகலமானது, வானை விட உயர்ந்தது, கடலைக் காட்டிலும் ஆழமுடையது என உவமிக்கப்படுகிறது. சங்க காலத்துப் பெண்கள் காதல் வாழ்வின் போது, ஊராரின் அலர் காரணமாக உடன்போக்கு செல்ல முயன்று கற்பு வாழ்வை மேற்கொள்கின்றனர்.                                                           (5)

சமைக்கும்முறை

அக்காலப்பெண்கள் உணவு சமைக்கும்முறையை ஒருபாடல் கூறுகிறது.

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக், கிளையடு,
கடுங்கண் கேழல் உழுத பூழி,
நன்னாள் வருபதம் நோக்கிக், குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! . புறம் 168 கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்.

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான நள்ளி என்பவன் காட்டில் வாழும் பசுக்களின் பால் வழியாகப் பெற்ற நெய்யும் புகழ் வாய்ந்தது. வெண்ணெல்லைச் சோறாக்கி அதனுடன் நெய்யைக் கலந்து நெய்ச்சோறு செய்து ஏழு மண் பானைகளில் அவற்றை வைத்து அதனை காக்கைகளுக்கு படையலாகப் படைத்தாலும் அது அக்காக்கை செய்த உதவிக்குச் சிறிய நன்றியாகவே இருக்கும்
ஔவையார் குறிப்பிலிருந்து வெள்ளிவீதியார் பொருளீட்டச் சென்ற தன் கணவனுடன் தானும் சென்றார் எனத் தெரியவருகிறது              கலம் தொடாமகளிர்                                                                                       மகளிர் பூத்திருக்கும் நாட்களில் சமையல் பாத்திங்களைத் தொடமாட்டார்கள். அத்துடன் முருகனை வழிபடும்போது கோயிலுக்கு வெளியே நின்றுதான் வழிபடுவர்.கோயிலுக்கு வெளியே நிற்கும் இந்தக் கலந்தொடா மகளிரைப் போல பகைமன்னன் யானைகள் போர்க்களத்துக்கு வெளியிலேயே நின்றுவிட்டனவாம். - புறநானூறு 299                               

கணவனை இழந்த நிலையைப் பகரும் தாபதநிலைப் பாடல்கள்
பெண்கவிஞர்களின் ஆண்பெண் வாழ்வியல் நிலையில் ஆணின் இழப்புப் பற்றிப் பொதுமைப்பட அதனால் உருவாக்கப்படும் சமூகக் கட்டுகளின் இறுக்கம் மீதான எதிர்வினைகளாகவே உள்ளன. பூதப்பாண்டியன் தேவியின்பல்சான்றீரோ பல்சான்றீரேஎனத் தொடங்கும் புறப்பாடல் பன்முகச் சொல்லாடலுக்கு உரிய ஒன்று. இதன்வழி ஆண்களுக்குப் பெருமையும் வீரமும் வேண்டப்படுவன போல, பெண்களுக்கு அச்சமும் நாணமும் சிறந்தது என்று குறிப்பிடுகிறார். சங்க இலக்கியங்களில் பெண்கள் போற்றப்பட்டுள்ளனர். அவர்களின் ஒழுக்கத்துக்குச் சமூகம் துணைநின்றது. பெண்கள் சமுதாயத்தை வாழவைக்கத் தமிழ்ப் புலவர்கள் சமுதாயமும் துணை நின்றது.
அச்சம், மடம், நாணம், பயிற்பு என்பவை பெண்களின் அறங் களாகவும், வீரம், போர், வெற்றி, ஈகை, புகழ், ஒழுக்கம் இவை ஆண்களின் அறங்களாகவும் அக்கால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் கற்புஎன்ற அறம் பெண்களின் தலையாய அறமாக வற்புறுத்தப்படுகின்றது.                                                      (6)


அவைகளில் கற்பு என்ற ஒழுக்கம் சார்ந்த அறம் பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்படுவதும் நோக்கத்தக்கது. அதிலும் தலைவன், தலைவியை பிரிந்து பரத்தையருடன் செல்வதும் கூறப்படுகிறது. பிரிவு, துயரம் இவற்றை தலைவியே அடைகிறாள். தலைவனை பிரிந்து தலைவி துயர் அடைந்தாலும் தனது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் கடமையை அவள் துறந்தவள் அல்ல. அவ்வாறு ஒழுக்கம் தவறாமல் கடமையை செய்யும் மகளிரே பாட்டுடை தலைவியாக போற்றப்படுகிறாள் முடிவில், நல்லது என்று நாம் நினைத்திருந்த நாலு குணங்கள்தான் தற்போது நம் தமிழ் பெண்களிடம் இல்லாமல் போய்விட்டதே! மாறாக, வாழ்வுக்கு ஒவ்வாத, சந்தோசத்தைக் குலைக்கும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் பல நவகால (துர்க்) குணங்கள் எங்கள் பெண்கள்பால்,அவர்கள் வாழ்வில், படிப்பில், உழைப்பில், உடுப்பில், நடிப்பில் ஒட்டிக்கொண்டு விட்டதே! அவை என்ன என்றுசொல்வது.ஆண் தன்னிடம் வரம்பு மீறி உரிமை எடுத்துக் கொள்ள விடாமல் தன்னைக் காத்துக் கொள்ளும் சமயோகித சாமர்த்தியமும் பெண்ணுக்கு இருந்தது. காதல் திருமணத்தைக் கண்டிக்கும் மனப்போக்கைப் பெரியவர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை. இளம் உள்ளங்கள் காதலில் ஒருமித்திருப்பதை அறிந்து பெரியவர்கள் மகிழ்ச்சியே கொண்டார்கள். திருமணத்தையும் மனமுவந்து நடத்தி வைத்தார்கள்  
1. மூதூர் மன்னன் மகள் பெரும் செல்வம் உடையவளாக. இருக்கிறாள்(338)
2.தன்னை மணப்பவர்கள் போர்செய்து வெற்றி பெறவேண்டும் என அவள் விரும்புகிறாள்339
3.மூவேந்தர்கள் எனினும்தன்னை வணங்குபவர்க்களும் யானையைப் பொருதுவீழ்த்தும் மன்னர்களுக்கும் குடிமையும் ஆண்மையும்  உடையவர்களுக்கு மட்டுமே பெண்தருவேன் என்கிறான் பெண்ணின் தந்தை 338,340,345
4. பெரும் பொருள் கொடுத்து மணம் செய்தல்ஒருவழி போர்செய்து தந்தையின் ஊரைவென்று மணம் செய்தல் இரண்டாவதுவழி
5. பெண்கேட்டு வந்த பகைவரோடு போரிட்டு அழித்தவர் போக எஞ்சி இருப்பவர்களோடு பெண்ணிந் தந்தை சுற்றமாக இருந்து வேண்டியதைச்செய்வான்

6. பெண் கேட்டு வந்த வேந்தனால் ஊர் அழியும்  எனத்தெரிந்தும் போர் செய்யும் மறவர்களாக பெண்ணின் உறவினர்கள் இருக்கின்றனர்.போரால் மதிலும் அகழியும்  சிதைந்துபோய் உள்ளது.தமையன்மார்கள் வீரம் உள்ளவர்களாக உள்ளனர் 341,342,347,355                             முதியோர் மன்றம்                                                   வாழ்க்கையில் பிரிந்தோரைக் கூட்டிவைப்பதற்கென்றே முதியவர்கள் இருந்தனர். அவர்கள் கையில் தண்டூன்றி நடப்பவர்கள். வெள்ளைமுடியும் சிதவல் தலையும் உடையவர்கள்  சிதவல் = கறையான், கறையான் தின்றது பொன்ற வழுக்கைத் தலை நாட்டை ஆட்சி செய்ய மன்னன் இருந்தாலும் ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்தான் வேண்டும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
நாட்டின் இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொருத்தது என்ற கருத்தை இப்பாடலில் ஔவையார் கூறுகின்றார்.                                                              நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே.                                          (7)
இதன்பொருள்   நிலமே!  நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமாகவோ அல்லது மேடாகவோ, எப்படி இருந்தாலும், அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய்.  நீ வாழ்க!
சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?
பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கம். அவள் இல்லையேல் வீடும் நாடும் இயங்க முடியாது இருந்திருக்கும். அவள் இயங்கும் சக்தியாகவும் இயக்கும் சக்தியாகவும் காணப்படுகின்றாள்.  
மகாகவியும்,
பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா
என்று பெருமிதத்தோடு பாடியிருக்கிறார்.
,உச்சிதனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி             என்று பாடுகிறார்.
. சங்கப் பெண்கள் கற்புநெறி, கல்வி, வீரம், காதல், விருந்தோம்பல் ஆகிய அனைத்துப் பண்பிலும் சிறந்து விளங்கினர். நல்ல புலமை வாய்ந்தவர்களாகவும், பெண்மை நலம் மிகுந்தவர்களாகவும் விளங்கினர். மேலும், அவர்கள் ஆண்களுக்கு மேலாகப் பல உரிமைகளைப் பெற்றிருந்தனர். சங்கச் சமூகம் பெண்களைப் பேணுபவர்களாகவும் இருந்தது. இத்தகைய மகளிரைப் போற்றிய சமூகம் சிறப்புடையது.
கவிச்சுடர்.கா உமாபதி.BSc;MA.BEd;MPhil                                   
 முத்தம்மாள் நிலையம்                                                   
 பூலுவபட்டி(அஞ்)                                                           
ஆலாந்துறை-(வழி)                                                       

கோயமுத்தூர்-(மா.)-641101                                                                                                                                                                                                                                                            அலைபேசி 9942411498/710854928     



30-05-2018 கோவைவானொலியில் வாசிக்கப்பட்டது


2 comments:

  1. அருமையான பகிர்வு 👏👏👏👏

    ReplyDelete