கள் விகுதி வரும்போது வலிமிகும் / மிகா இடங்கள்
ஓரெழுத்துச் சொற்கள் என்றால் ஒற்று மிகும் பூக்கள், மாக்கள், ஈக்கள்
ஊர்க் குறு மாக்கள் வெண் கோடு கழாஅயின் (புறநானூறு)
ஓரெழுத்துச் சொற்கள் என்றாலும் ஐகாரக் கூட்டு ஒலிகளுக்குப் பொருந்தாது பைகள் கைகள்
ஓரெழுத்து மொழி அடையெடுத்து அமைந்தாலும் வலிமிகும். தேனீக்கள், பூங்காக்கள்
ஈரெழுத்துச் சொற்கள்.. குறிலிணை என்றால் "க்" மிகும்! (குறில் இணை முற்றுகரச்சொற்கள் முன் வலிமிகும் அணுக்கள் உடுக்கள் கருக்கள், தெரு-க்கள்
ஈரெழுத்துச் சொற்களில் முதலெழுத்து நெடில்.. என்றால் ஒற்று மிகாது ஆடுகள் ஆமைகள் வீடு-கள், மாடு-கள், ஓடு-கள்
தொடர் மொழிகளில்
அகரஈற்றுச் சொற்கள் முன் வல்லினம் மிகும் விளக்கள்
ஆகார ஈற்றுச்சொற்கள் முன் வல்லினம் மிகும் விழாக்கள் கனாக்கள்
இகர ஈற்றுச்சொற்கள் முன் வல்லினம் மிகாது செடிகள் நதிகள் கொடிகள் மாணாக்கிகள்
ஊகார ஈற்றுச்சொற்கள் முன் வல்லினம்மிகும் கொண்மூக்கள்
உகர ஈற்றுச்சொற்கள் முற்றியலுகரம் குற்றியலுகரம் என இருவகையாக வருவதால் இரண்டையும் தனித்தனியாகக் காண்போம்
குறில் இணை முற்றுகரச் சொற்கள் முன் வல்லினம் மிகும் அணுக்கள் உடுக்கள் பசுக்கள் கருக்கள், தெரு-க்கள்
ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பலஎழுத்தோ சொற்களின் இறுதியில் ‘வு’ வரும்போது வல்லினம் மிகாது ஆய்வுகள் ,நோவுகள், தீவுகள்,கதவுகள் உராய்வுகள்
1 வன்தொடர்க்குற்றியலுகரம் என்றால் க் மிகலாம்
முத்துக்கள் வித்துக்கள் எழுத்துக்கள் பழச்சத்துக்கள்
(மிகும் என்று சொல்லாமல் மிகலாம் என்று சொல்லி இருப்பதை கவனிக்கவும்)
முத்துகள் வித்துகள் எழுத்துகள் பழச்சத்துகள். எழுத்துக்கள், எழுத்துகள் என்ற இரண்டும்சரியே
வல்லின எழுத்து இரட்டிக்கும்போது மட்டுமே (வன்தொடர்க்குற்றியலுகரங்கள்) க்கள் என்று அளபெடுத்து ஒலிக்கும்
இரு”ப்பு”க்கள் எழு”த்து”க்கள் அ”ச்சு”க்கள்
எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே
இதில் இத்தலைச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின் எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று என்று இளம்பூரணர் எழுத்துக்கள் என்றே குறிப்பிடுகின்றார்
அளபிறந்து உயிர்ர்த்தலும் ஒற்றிடை நீடலும் உளவென மொழிப சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்(தொல்காப்பியம்33)
க-து: இயற்றமிழின் கண் எழுத்துக்கள் ஒரோவழி நீண்டுஇசைப்பதற்கு இசை நூல் முறைமை பற்றிப் புறநடை கூறுகின்றது. மேற்காட்டிய சான்றுகளில் எழுத்துக்கள் என்றே தொல்காப்பியர் விதியே பின் பற்றப்பட்டுள்ளது .அஃறிணைப் பன்மையில் கள் விகுதி வரலாம். அந்த அடிப்படையில் எழுத்து என்ற ஒருமைக்கு எழுத்துக்கள் என்ற பன்மை வந்தது சரியே
இதைக்கொண்டு வாழ்த்து என்பதற்கு க் மிகும் என்று சொல்லக்கூடாது. வாழ்த்து என்பது பெயர்ச்சொல் அன்று.
பிடித்து+கொள் –பிடித்துக்கொள் ஒற்றுமிகும் இதே போல் வாழ்த்துக்கள் ஒற்றுமிகும் என்று கூறுதல் கூடாது. வாழ்த்துக்கள் என்று எழுதுவோர் குற்றியலுகரப்புணர்ச்சியாகக் கூறுவர் இவ்விதி இரண்டு சொற்களுக்கு இடையே நடைபெறுவது.இங்கு கள் என்பது ஒரு சொல் அன்று இது விகுதி ஆகவே முன் சொன்ன விகுதி விதியை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
2. உயிர்த்தொடர் குற்றியலுகரத்தில் ஒற்று மிகாது கொலுசுகள், தராசுகள்
3. மென்தொடர் குற்றியலுகரத்தில் ஒற்று மிகாது இரும்புகள், பருந்துகள், குஞ்சுகள்
பந்துகள்(ball) ஆனால் இந்துக்கள் ,பந்துக்கள் ஒற்றுமிகும் இவை சமசுகிருதச்சொற்கள்
4.இடைத்தொடர் குற்றியலுகரத்தில் ஒற்று மிகாது மார்புகள், சால்புகள்
5 ஆய்த்தொடர் குற்றியலுகரத்தில் ஒற்று மிகாது எஃகுகள்
6.நெடிற்றொடர் குற்றியலுகரத்தில் ஒற்று மிகாது ஆடுகள் வீடுகள்
மெய்யெழுத்துக்கள் முன்
இடையின மெய்முன் ஒற்றுமிகாது நாய்கள், காய்கள் தேர்கள், கார்கள், தோல்கள் தொழில்கள், தெவ்கள் (பகை) பாழ்கள், வாள்கள்
ல்,ள் எனமுடியும் மொழிகளில் ஒற்றுமிகாது ஆனால் தனிக்குறிலைச்சார்ந்து ல்,ள் வந்தால் தனிப்புணர்ச்சி விதி பெறும் லகரங்கள் ளகரங்கள் ற்,ட் எனத்திரியும் கற்கள் முட்கள்
மெல்லினத்தில் ண், ன் வரும்போது ஒற்றுமிகாது மண்கள் மான்கள் ஆனால் ம் வரும்போது ம் ஆனது ங் எனத்திரியும் மரம்+கள்= மரங்கள்,குளங்கள்
புள் என்ற ஒருமைச்சொல்லுக்கு புட்கள் என்பது பன்மைச் சொல்லாகும். இதே போல் நாளின் பன்மை நாட்கள் என்று சொல்லுவது தவறு. நாள் என்பது வேறு நாட்கள் என்பது வேறு நாள்கள் என்பது நாளின் பன்மையைக் குறிக்கும நாட்கள் என்பது அன்று இறக்கிய கள்ளைக்குறிக்கும்
நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேரீதலே புறம்123
அன்று இறக்கிய கள்ளைக்குடித்து விட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியில் தேரைப்பரிசாக்க் கொடுத்தல் யார்க்கும் எளிது என்பது இவ்வடிகளின் பொருளாகும்.
நடத்தல்அரிது ஆகும் நெறி நாள்கள் சிலதாயர்க்கும் (கம்ப, சுந்தரகாம்டம் 547)
நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே தோள்கள் இருந்தவா காணீரோ திவ்விய பிரபந்தம் பெரியாழ்வார்
பரவாத இல்லை நாள்களும் –திருஞானசம்பந்தர்556
தமையன் எம் ஐயன்தாள்கள் காட்டி திருவாசகம்207
நாளைப்போ வேஎன்று நாள்கள்செலத் தரியாது
நீந்துவார் நெடுநாள்கள் நிறைவெம்போர்த் துறை விளைத்தார் பெரியபுராணம்1067
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ திருவெம்பாவை 8
மேற்கூறிய வரலாறுகளின் நம்முன்னோர்கள் எதை எப்படிச் சொன்னார்களோ அதை அப்படியே கூறுதல் சால்புடையதாகும் (நன்னூல் 388) மரபின் பெருமையை நமக்கு உணர்த்தவே தொல்காப்பியர் தம் நூலில் மரபு என்னும் சொல்லை 75க்கும் மேற்பட்ட இடங்களில் கையாண்டு இருப்பதோடு நூல்மரபு, மொழிமரபு விளிமரபு, மரபியல் என இயல்களுக்கும் பெயர் வைத்துள்ளார். மாற்ற அரும்சிறப்பின் மரபு இயல் கிளப்பின்
மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும் தொல்1150,1591
என விதியும் கூறியுள்ளார் பல்லோரும் தவறாகப் பயன்படுத்தும் நாட்கள் ஆட்கள் எனக்கூறாமல் நாமும் நம்முன்னோர்களைப்போலவே நாள்கள் ஆள்கள் என்றே சொல்லுவோம்
இக்காலத்தில் 'கள்' வரையறை ஏதும் இன்றி வழங்கப்படுகிறது..
அதாவது, அவை என்பது 'சபை' என்ற பொருளில் வரும் போது அதன் பன்மை 'அவைகள்' என ,
வரலாம். ஆனால், 'இவை' என்ற சொல்லோடு 'கள்' சேர்க்கக் கூடாது! ஏன்?
'இவை' என்பதே பன்மைதான். 'இது ' என்ற சொல்லின் பன்மை 'இவை'.
ஏற்கனவே பன்மையாக உள்ள சொல்லை மேலும் பனமையாக்கத் தேவை இல்லை .
எனவே 'இவைகள்' என எழுதுவதும் பேசுவதும் தவறு.
வாழ்த்துக்கள் என்பதில் உள்ள உணர்வு வாழ்த்துகள் என்று சொல்வதில் இல்லை
என்பது உண்மை. ஆனால் அகஞ்சார்ந்த உணர்வுகளைக் கூறும் சொற்களுக்கு 'கள் ' பயன்படுத்தாமல் இருப்பது நன்று .அதாவது வாழ்த்து , நன்றி , வணக்கம் ஆகியவை அகஞ் சார்ந்த செயல்கள் .அதாவது உணர்வு சார்ந்தவை. அதனால் நன்றிகள் , வாழ்த்துகள் , வணக்கங்கள் என்று கூறுதலும் எழுதுதலும் தவறுதலாகவேகருதப்படும்.
அன்புகள் என்று எழுதுவதோ சொல்லுவதோ கிடையாது.அதுபோல, நன்றி, வணக்கம், வாழ்த்து போன்ற சொற்களிலும் கள் சேர்க்காமல் எழுதுவதுதான்
சிறந்தது. பதிவு தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் புலவர் ஆ. காளியப்பன் 9788552993
No comments:
Post a Comment