தொல்காப்பியம்—செய்யுள் உறுப்புகள் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் அமர்வு 48ன் உரைச்சாரம்
தமிழ் மொழி 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்,' என மூன்று பிரிவுகளை உடையது. இவையே 'முத்தமிழ்' என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது.முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும்
தொல்காப்பியம் பொருள் அதிகாரம் வாழ்க்கைப் பாங்கினையும், அதனை வெளிப்படுத்தும் நூலின் பாங்கினையும் உணர்த்துகிறது. முதல் ஆறு இயல்கள் வாழ்க்கைப் பாங்கை உணர்த்துகின்றன. இறுதி மூன்று இயல்கள் தமிழ்நூல் நெறியை உணர்த்துகின்றன. . கருத்துகள் உவமத்தால் கூறப்படும்; செய்யுளில் கூறப்படும்; மரபுநெறியைப் பின்பற்றிக் கூறப்படும் என இம் மூன்றும் கூறுகின்றன தொல்காப்பியம் செய்யுளியல் வாழ்க்கைப் பாங்கை உணர்த்தும் செய்யுளின் இலக்கணத்தை 235 நூற்பாக்களில் விளக்குகிறது. தமிழ் இலக்கணத்திலே செய்யுள்களுக்கான இலக்கணங்களை விளக்கும் பகுதி செய்யுளியல் எனப்படுகின்றது.எல்லா இயல்களைக்காட்டிலும் அதிக நூற்பாக்களைக் கொண்டது. இதிலிருந்து செய்யுளியலின் இன்றியமையாமையை உணரலாம்.
செய்யுள் என்னும் சொல் நன்செய் வயலைக் குறிக்கும்.இதை
மருதம் சான்ற மலர்தலை விளைவயல் செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் – என்னும் பதிற்றுப்பத்து அடிகளால் அறியலாம் செய்யுள் என்னும் சொல் பயிர்செய்யும் விளைநிலத்தைக் குறிக்கும். இதில் பயிர் விளைந்து உணவுப்பொருளைத் தரும். மொழியில் வரும் செய்யுளில் வாழ்வியல் விளைந்து மக்களைப் பண்படுத்தும். உடல் உழைத்துச் செய்யப்படும் செய்யுள் வயல். மனம் உழைத்துச் செய்யப்படும் செய்யுள் தொல்காப்பியர் காட்டும் செய்யுள்..
செய்யுள், பா என்னும் சொல்லாலும் வழங்கப்படுகின்றது. தொல்காப்பியர் எழுத்து வடிவம் பெற்ற அனைத்து நூல்களையும் செய்யுள் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். . காரிகை காலம் தொட்டே செய்யுளை, யாப்பு, உரைநடை எனப் பகுத்துக் காணும் நிலை தோன்றிவிட்டது.
இளம்பூரணர் செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவதனால் இது செய்யுள் எனப்படுகின்றது. என்கிறார் செய்யுள்கள் ஓர் இலக்கண வரம்புக்கு உட்பட்டே அமையவேண்டும். உரைநடைகளைப் போல் விரும்பியவாறு விரிவாகவும், வரையறை இல்லாமலும் எழுதக்கூடிய தன்மை செய்யுள்களுக்கு இல்லாவிட்டாலும், செய்யுள்கள் ஓசை நயம் விளங்கச் செய்யப்படுகின்றன. இதனால் செய்யுள்கள் மனப்பாடம் செய்வதற்கு இலகுவானவை. எழுத்து மூல நூல்கள் பரவலாகக் கிடைப்பதற்கு அரிதாக இருந்த பழங்காலத்தில் அரிய நூல்களில் சொல்லப்பட்டவற்றைத் தேவையான போது நினைவுக்குக் கொண்டுவரவும், அவை பல தலைமுறைகள் நிலைத்து நிற்பதற்கும் மனப்பாடம் செய்வது இன்றியமையானதாக இருந்தது. இதனால் அக்காலத்து நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டன.என்கிறார்.
தொல்காப்பியர் தம் நூலில் அக்காலத்தில் பயன்படுத்திய யாப்பு முறையை ஒட்டி ஏழு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
“பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,
அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும்,
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது' என்மனார் புலவர்“
அவை. மேலும், செய்யுள் இயற்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளைத் தொல்காப்பியர் இரு தொகுதிகளாகக் கூறியுள்ளார்.
முதல் பிரிவில் காணப்படும் 26 உறுப்புகள் வருமாறு:
மாத்திரை எழுத்து இயல் அசை வகை எனாஅ
யாத்த சீரே அடி யாப்பு எனாஅ
மரபே தூக்கே தொடை வகை எனாஅ
நோக்கே பாவே அளவு இயல் எனாஅ
திணையே கைகோள் கூற்று வகை எனாஅ
கேட்போர் களனே கால வகை எனாஅ
பயனே மெய்ப்பாடு எச்ச வகை எனாஅ
முன்னம் பொருளே துறை வகை எனாஅ
மாட்டே வண்ணமொடு யாப்பு இயல் வகையின்
ஆறு தலை இட்ட அந் நால் ஐந்தும் இவை 26 உம் செய்யுளுக்கு அடிப்படையான உறுப்புகளாகும்
அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப்
பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ இவை8 உம் செய்யுளின் பொருள் புலப்பாட்டுக்கு உதவும் உறுப்புகளாகும் இந்த 34 உறுப்புகளையும்
நல் இசைப் புலவர் செய்யுள் உறுப்பு என
வல்லிதின் கூறி வகுத்து உரைத்தனரே.
1. 1 மாத்திரை, கண்ணிமைக்கும் நேரமும் கை நொடிக்கும் கால அலகு ஏற்கனவே எழுத்ததிகாரத்தில் கூறப்பட்டது
3 அசைவகை எழுத்துக்கள் இணைந்து அசையும் செய்யுள் அலகு
அவை இயலசை, உரியசை என இருவகைப்படும்.
4 யாத்த சீர்,என்றது பொருள் தருமாறு தொடர்ந்து சீரை. எனவேஅசையும் தனித்தனியே பொருள்பெறுவனவும் தனித்தனிப் பொருளின்றி சீராயவழிப் பொருள்தருவனவும் ஆகும். அசைகள் இணைந்து சீராக (ஒழுங்காக ) நடக்கும் செய்யுள் அலகு
5. அடி, என்பது அச்சீர் இரண்டும் பலவும் தொடர்ந்தும் வரும் ஒர் உறுப்பு.
6 யாப்பு என்பது அவ்வடிதொறும் பொருள் ஏற்று நிற்கும் செய்கை
7.மரபு, காலந்தொறும் இடந்தொறும் வழக்குத் திரிந்தவாறு இல்லாது வழுப்படாது செய்யும் ஒரு செய்கை அதாவதுமுன்னோர் நெறியைப் பின்பற்றுதல்
8தூக்கு,பாக்களைத் துணித்து நிறுத்தலைக்குறிக்கும்
9.தொடைவகை என்றது எழுத்து,சொல்,பொருள்களை எதிரெதிர் நிறுத்தித்தொடுக்கின்ற தொடைப்பகுதிகளை
10 நோக்கு,மாத்திரை முதலிய உறுப்புகளை உடையதாய் ஓசை முதலியவற்றால் கேட்டாரை மீட்டுந் தன்னை நோக்கச் செய்யும் செய்யுளுறுப்பு (உரையாசிரியர்கள் விளக்கம்)
11பா,என்றது மேற்கூறிய உறுப்புகளை உடையதாய் தூரத்தில் ஒருவன் சொல்லும் பொருளும் தெரியாமல் கூறியபோதும் இஃது இன்ன செய்யுள் என்று அறிவதற்கு ஏதுவாகிப் பரந்துபடச் செய்வதொர் ஓசையைக்குறிக்கும் ஆடை நெய்வோர் நூலைப் பாவாக ஓட்டுவது போல வரிசை வரிசையாகப் பாடலடிகளை இணைத்து ஓட்டிய முறைமை. அவை ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா. வஞ்சிப்பா, மருட்பா , முதலானவற்றைக்குறிக்கும்
12 அளவு-இயல் என்றது அடிவரையறையை ஆசிரியப்பா 3-1000 அடி, குறள் வெண்பா 7 சீர், பஃறொடை வெண்பா 5-12 அடி, பரிபாடல் 5-400 அடி, பிறவற்றிற்கு வரையறை இல்லை
13 திணை, அகத்திணை ஏழையும், புறத்திணைஏழையும் அறியச்செய்தல்
14 கைகோள், களவு, கற்பு என 2
15 கூற்று அகத்திணை மாந்தர்
16 கேட்போர், இன்னார்க்குக் கூறுகின்றது இதுவெனல்
17 களன், இயற்கைப்புணர்ச்சியையும் இடந்தலைப்பாடும் உணரச்செய்தலை
18 காலவகை என்றது முக்காலத்தும் நிகழும் ஒழுக்கங்களைக்கூறல்
19 பயன், அகப்பொருள் பாடல்களுக்குப் பாட்டால் விளையும் பயன்
20 மெய்ப்பாடு, பாட்டினது பொருளால் தோன்றும் நகை முதலான மெய்ப்பாடு, பாட்டின் பயன், பாட்டில் வரும் இறைச்சி முதலானவை, அகப்பொருளா புறப்பொருளா என அறிதல், அவற்றின் துறைகள் ஆகியவற்றை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று இந்த இயல் கூறுகிறது.
21 எச்சம் என்றது சொல்லப்படாத ஒழிபும் தழுவிக்கொள்ளுதல்,
22 முன்னம், கூறுவோரையும் கூறக்கேட்டோரையும் குறிப்பால்எல்லாரும் கருதும்படிச்செய்தல்
23 பொருள், என்றது புலவன் தான்தோற்றிக்கொண்டு செய்வதொரு பொருண்மையை
24 துறை என்றது முதலும் கருவும் முறைபிறந்தாலும் இஃது இதன்பாற்படும் என்று ஒருதுறைப்படுத்தல் ஏதுவாக ஒருகருவி உளதாகச்செய்தல்
25 மாட்டு அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முடியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை" (தொல். பொ. 522): வாக்கியத்தை முடிக்கச் சொற்கள் விலகிக் கிடந்தாலும் நெருங்கிக் கிடந்தாலும் பொருள்பொருந்தும்படி ஏற்றுக்கோத்துச் சொல் முடிவு கொள்ளும் முறை",
26 வண்ணம், என்றது ஒருபாவின்கண் நிகழும் ஓசை விகற்பத்தைக் குறிக்கும்.
இந்த இருப்பதாறு இன்றியமையா உறுப்புகளுடன் வனப்புகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
. வனப்பு என்பது அழகு என்று பொருள்படும். பல உறுப்புகள் ஒன்று சேர்ந்தபோது உருவாகும் செய்யுள் அழகு, அது அவை எண்வகை வனப்புகள் எனப்படும். அவை
1) அம்மை
2) அழகு
3) தொன்மை
4) தோல்
5) விருந்து
6) இயைபு
7) புலன்
8) இழைபு என்பன்
இவற்றுள் அம்மை என்பது சுருங்கிய சொற்களால் அகன்றுகாட்டாது சில எழுத்துக்களால் வருதல்
அழகு என்பது உலகவழக்குச்சொற்கள் பயிலாமல் செய்யுளுக்கே உரிய சொற்களால் பொலிவு பெறச்சொல்வது.
தொன்மை என்பது உரைநடை விரவியதாய் பழமையாகிய கதைப்பொருளாகச் சொல்லப்படுவது
தோல் என்பது இழும் என்னும் ஓசையையுடைய மெல்லென்ற சொல்லானே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் விழுமிய பொருளைச் சொல்வது என்றும் ஆசிரியப்பாட்டால் ஒருகதையைச்சொன்னாலும் தோல் எனப்படும்.
விருந்து என்பது புதிதாகச் செய்யப்படும் தொடர்நிலைச் செய்யுள்களைக் குறிக்கும்.
இயைபு என்பது ஞணநமனயரலவழள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றினை ஈறாகக் கொண்டு செய்யுளைப் பொருள் தொடர்பாகச் செய்வது
புலன் என்பது சேரி மொழிகளில் கூறப்பட்டு ஆராயாமல் எளிதில் பொருள் புலப்படுமாறு கூறுதல்
இழைபு என்பது வல்லொற்று அடுத்து வல்லெழுத்துப்பயிலாமல் குறளடி முதலாக ஐந்தடி வரைநெட்டெழுத்துப்போல் ஓசைதரும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்கள் உடைய சொல்லால் தெரிந்த மொழியால் பொருள் புலப்படச்செய்வது
இவ்வாறு நாம் செய்யுள் உறுப்புகள் 34 கினையும் அறிந்தோம்.
வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்
எனத்தொல்காப்பியர் வாக்கோடு நிறைவு செய்கின்றேன்
நன்றி வணக்கம்
!
No comments:
Post a Comment