போகிப் பண்டிகை
புலவர்.ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
பொன்னுல
காளியும் பாம்பும் போகி (பிங்கல நிகண்டு3902)
போகி
என்றால் அரசன், இந்திரன், ஒருபண்டிகை, இன்பம் அனுபவிப்பவன், பாம்பு, சுக்கிரன்,
நல்ல அனுபவம் உடையவன், சிவிகை சுமப்போன்.என்று கழகத்தமிழ் அகராதியில்
காணப்படுகிறது.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானெ (நன்னூல்402)இது
மொழிக்கான இலக்கணமாகக் கருதப்பட்டாலும் இதை போகிப்பண்டிகைக்கும்
எடுத்துக்கொள்ளலாம்.
போகிப் பண்டிகை,
தை மாதத்தில் தனது பயணத்தை
மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும்விதமாகக் கொண்டாடப்பட்ட விழா’ என்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. பண்டைய காலத்தில் மழையை வரவழைக்கும்
தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா இந்திரா
விழாவாகக் கொண்டாடப்பட்டது. போகம் எனும் மகிழ்ச்சிக்கு அடையாளமாக
இருந்தவன் இந்திரன். எனவே, இந்த நாள் இந்திரனைப் போற்றும் விழாவாக ‘போகி’ என்றானது. இப்படிப் போகிப்பண்டிகை ஆன்மிக,
கலாசார விழாவாக இன்றும்
தொடர்ந்துவருகிறது. போகி என்றால் ‘மகிழ்ச்சியானவன்’, ‘போகங்களை அனுபவிப்பவன்’ என்று பொருள். நல்ல விளைச்சலைக் கண்டு மகிழும் வேளாண்மை மக்கள் அதை போகம்
என்றனர். முப்போகம் விளையும் நிலம் என்பதிலிருந்து அறியலாம் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகும் தலைவாசல் விழாவே ‘போகிப் பண்டிகை’ எனப்படுகிறது.
தை நோம்பியே தமிழர் அனைவரும் கொண்டாடும்
பண்டிகையாகும். அதற்காகவே மார்கழி மாதமே ஆயத்தம் ஆகிவிடுவார்கள். வீடுகள் ஒட்டடை அடிக்கப்படும். சுற்றுப்புறங்களில் இடிந்த
பகுதிகள் சரிசெய்யப் படும். சுண்ணாம்போ வண்ணமோ பூசப்படும். ஊரில் உள்ள கோவில்களும்,பொது
மன்றங்களும் அவ்வாறே செய்யப்படும். வீதி
ஓரங்களில் முளைத்து புதர்கள் எல்லாம் சுத்தம் செய்யப்படும். குப்பை கூளங்கள்
தீவைத்துக் கொளுத்தப்படும். இந்த
நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக்
கருதப்படுகிறது. பழையவற்றையும், தேவையற்றவற்றையும் தூக்கி
எறியும் நாளாகக் கருதப்படுகிறது. இந்திரவிழா நடக்கும்போது எவ்வாறு ஊர்
புதுப்பிக்கப்பட்டதோ (காண்க சிலப்பதிகாரம், மணிமேகலை) அவ்வாறு ஊர்கள்
அழகுபடுத்தப்படும். பழமையான துயரமான
நினைவுகளை அழித்துப் போக்கும் இப்பண்டிகை "போக்கி' எனப்பட்டது.
அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது.என்றும்
சிலர் கூறுவர்.
தமிழர் மரபுப்படி மழைதரும் தெய்வம் இந்திரனுக்கு போகி என்ற ஒரு
பெயரும் உண்டு. அவனுக்கு நன்றி சொல்லும்
விதமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும்.
(சிலம்பு மணிமேகலையில் காண்க) இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் தீயில் இட்டுப் பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய
எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள
தத்துவமாகும். பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை
உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும்
விழாவாகும்
தைப்பண்டிகை நான்கு நாட்கள்
கொண்டாடப்படுகிறது. அதில் முதல் நாள் கொண்டாடப்படுவது. போகி. இது மார்கழி
மாதத்தின் கடைசி நாளன்று அதாவது
பொங்கல்
திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.
போகிப்பண்டிகைக்கு முன்பே. வீட்டு வாசல்கள் சாணத்தால் மெழுகப்படும்.
காவியும் கோபியும் கொண்டு அழகு படுத்தப்படும்.
வீ ட்டுத் தாழ்வாரங்களில் காப்புக்கட்டுவார்கள்.
அதற்காகவே கிராமங்களில் ஊர் மாதாரி இருப்பர். அவர் ஒவ்வொருவர் வீட்டைச் சுற்றிலும் வேப்பிலை, ஆவிரம்பூ, மாவிலை, பூளைப்பூ
கருந்துளசி சேர்த்து கூரையின்
மேற்பகுதியில் செருகி வைப்பர். பூசை அறையிலும் பூளைப்பூ இல்லாமல் வேப்பம் கொத்தை
வைப்பர். வண்டி வாகனங்களில் முக்கியமாகப்
பயன்படும் பொருள்கள் மீதும் வைப்பர்.
இதைக்
காப்புக்கட்டு என்பர்.
சில ஊர்களில் போகி அன்று நிலைப்பொங்கல்
வைக்கும் வழக்கம் இன்றும் நமது தென்மாவட்டப் பகுதிகளில் இருக்கிறது. அதாவது வீட்டுத்
தெய்வங்களை எண்ணி பொங்கலிட்டு,
மறைந்துபோன சுமங்கலிப் பெண்கள் மற்றும்
கன்னிப் பெண்களுக்குச் சேலைவைத்து வணங்கும் வழக்கம் இது பொங்கலிடுவதற்குமுன்
காப்புக்கட்டி , சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள்.
போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது., வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும்.
வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி
இல்லுறை தெய்வத்தை வணங்குவர். இதைக்
குடும்பத்தலைவி நடத்துவார்
போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள்
போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும். மேலும்
சிலர் போகி அன்று இறந்தவர்களின் நினைவாக சர்க்கரைப் பொங்கல், கருவாட்டு குழம்பு வைத்து வழிபடுவார்கள்
அன்று மாலை அரசாணிக்காய்
மொச்சைக்கொட்டை போட்டுச் சமைத்த சோற்றைப் பூசை அறையில் வைப்பார்கள். அதைச்
சங்கராந்தி என்னும் தெய்வம் வந்து உண்பதாக நம்புகிறார்கள். அந்த
உணவைக் காலையில் வயதுக்கு வராத பெண்குழந்தைக்கோ,பசுமாட்டுக்கோ தருவார்கள்.
சங்ராந்தி பற்றிய ஒருகதையும் உள்ளது. ஓராண்டு சிறைவைக்கக்கப் பட்டிருந்த
சங்கராந்தி விடுவிக்கப்பட்டு, அன்று
மட்டும் குளிக்க வைத்து அழகுபடுத்தி ஊருக்குள் சென்றுவர அனுமதிப்பார்களாம். முதல்
நாளான தை மாதம் முதல் நாள் ஏற்படக்கூடிய கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மகர சங்கராந்தியின் பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. மகர சங்கராந்தி புருஷன் வரும்
ஒவ்வொரு ஆண்டும் அவர் பெயர் அவர் ஏறிவரும் வாகனம், அணிந்து வரும் ஆடை அணிகள்,
தாங்கிவரும் ஆயுதம், சூடி வரும்மலர், குடை, விசிறி ஆகியவை எல்லாம் உண்ணும் உணவு
ஆகியவை எல்லாம் பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும். அதற்கேற்றவாறு அந்தந்த
ஆண்டுக்கான பலன்கள் சொல்லப்படுகின்றன.
முக்கியமாக விவசாயக் குடும்பங்களில் பெண்கள்
அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம்.
அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு
படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை
கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது. முன்காலத்தில்
விவசாயக் குடும்பங்களில், குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் அதிகமாக இருப்பது அவசியம்.
ஏனெனில் அவர்கள் உழைப்பு விவசாயத்திற்கு
முக்கியம். குடும்பத்தார் தவிர மற்றவர்கள் உழைப்பை கூலிக்காக அக்காலங்களில்
பயன்படுத்தியதில்லை. எனவே அதிக அளவில் ஆண்கள் உள்ள குடும்பமே நிலத்தைத் தொடர்ந்து
பராமரித்து வளர்ச்சி அடையும் என்ற நிலை இருந்தது.
அதே நேரத்தில் அதிகக் குழந்தைகள் பிறப்பதற்கு பெண்கள் பழைய ஆடைகளைத் தவிர்ப்பதும் அவசியமாக
இருந்தது. இதுதான் போகி பண்டிகைக்கு
அடிப்படை. எனவே பழையன கழிக்கும் போகிப்
பண்டிகைக்கு நமது கலாச்சாரத்தில் சுகாதார நோக்கமும், அர்த்தமும் இருந்தது
தமிழ் ஆண்டின் சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி
நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு,
ஆந்திரப் பிரதேசம்
மற்றும் தெலுங்கானா
மாநிலங்களில்
கொண்டாடப்படுகிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில்
போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அக்காலத்தில்
போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று
கண்டறிந்துள்ளனர் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை
ஆகியநூல்களில் சங்க இலக்கியங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.
இன்பம் என்பது எல்லா உயிர்கக்கும்
இன்பம் என்பது எல்லா உயிர்கக்கும்
தாமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (தொல்காப்பியம்)
இன்பமே என்னாளும் அடைதல் வேண்டின்
ஈடில்லா
இந்திரனை வேண்டிக் கேட்போம்
துன்பமதை
என்னாளும் போக்கி நாமும்
போகத்தைப்
பெற்றிடுவோம் போகி நாளில்.
கட்டுரையாளர் புலவர்.ஆ.காளியப்பன்
தலைவர்
தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
போற்றவும்/ தூற்றவும்9788552993
பெட்டிச்செய்தி
சூரியன்
அன்று மகர ராசியில் நகர்கிறது என்றும் ஒரு மகரராசிப் வருகைக்கும்
அடுத்த மகர ராசி வருகைக்கும் உள்ள
இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு என்றும் கூறப்பட்டது. அன்றைய
நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழக்கம் ஆதலால், அந்நாளை
புதுநாள் எனவும் கூறுவர். அதன்படி 2006-2011
வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு
அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த
மக்களும் தையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர். ஆகத்து
23, 2011ல் தமிழக அரசு மீண்டும் சித்திரை
ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.].
அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசைச் சேர்ந்தவர்கள்
எதிர்ப்பு தெரிவித்தனர்.
.
No comments:
Post a Comment