முதுமொழிக்காஞ்சி..
முன்னுரை: உலகின் மூத்தமொழி;
உயர்தனிச் செம்மொழி; மூவேந்தர் மடியில் தவழ்ந்தமொழி; முச்சங்கம் வைத்து வளர்த்த
மொழி. அச்சங்க இலக்கியங்களுள்
பாட்டும் தொகையும் என்னும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களை மேற்கணக்கென்றும், சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்களைப்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் வழங்குவர்.அவை
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு என்னும் இப்பழம்பாடலில் கண்ட நூல்கள். கீழ்க்கணக்குத் தொகையால் ஒன்று வகையால் பதினெட்டு. பாடியோர் பதின்மூவர். அவர்கள் காலத்தால்,இடத்தால்,குலத்தால்,சமயத்தால் மாறுபட்டவர்கள்.
. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அறநூல் பதினொன்று, அக நூல் ஆறு, புறநூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன. அறநூல் பதினொன்றில் ஒன்று முதுமொழிக்காஞ்சி..
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு என்னும் இப்பழம்பாடலில் கண்ட நூல்கள். கீழ்க்கணக்குத் தொகையால் ஒன்று வகையால் பதினெட்டு. பாடியோர் பதின்மூவர். அவர்கள் காலத்தால்,இடத்தால்,குலத்தால்,சமயத்தால் மாறுபட்டவர்கள்.
. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அறநூல் பதினொன்று, அக நூல் ஆறு, புறநூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன. அறநூல் பதினொன்றில் ஒன்று முதுமொழிக்காஞ்சி..
இந்நீதி நூல் ஒற்றை அடியால் உலக நீதிகளை எடுத்துரைக்கின்றது, இதன் யாப்பினைக் குறள் வெண்செந்துறை என்பர்.
ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிலர் இந்நூல் இயற்றப்பட்ட காலம்
சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு
என்பர். அத்தகு நூலின் அளப்பரிய கருத்துகளை அளக்க முயல்வதே இக்கட்டுரை நோக்கம்.
பெயர்க்காரணம்: முதுமொழி (தொல். பொருள்385),முதுசொல்(தொல். பொருள். 467, 468, 480), என்பன பழமொழியைக் குறிக்கும். ஆண்டாலும் அறிவாலும் மூத்தோர் ஏனையோருக்கு உலகியல் உண்மைகளை
எடுத்துக்கூறுவது முதுசொல்அல்லது முதுமொழி எனப்படும். காஞ்சிதானே
பெருந்திணைப் புறனே (தொல்.புறத்22) என்பதால் காஞ்சி என்பது புறத்திணையை க்குறிக்கும்.
‘பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்
றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே’ என்று வீடுபேற்றிற்கு வழியாம் நிலையாமையை
உணர்த்தும் உலகியல் பட்டறிவை உணர்த்துவதே காஞ்சி என்கிறது தொல்காப்பியம். சிறந்தது
பயிற்றல் இறந்ததன் பயனே என்ற தொல்காப்பிய வழிநின்று கழிந்தோர் ஏனை
ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை ஆகும் என்று திவாகர நிகண்டில் முதுமொழிக் காஞ்சிக்கு விளக்கம் தரப்படுகிறது.
முதுமொழிக்காஞ்சியை 'மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி' என்று தொகைச் சூத்திரத்தில் சுட்டியதோடு, காஞ்சித்திணையின் ஒரு துறையாக ‘பலர்புகழ் புலவர் பன்னின தெரியும்,உலகியல் பொருள்முடி புணரக் கூறின்று’ என்று புறப்பொருள் வெண்பாமாலையால் உரைப்படுகின்றது
முதுமொழிக்காஞ்சியை 'மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி' என்று தொகைச் சூத்திரத்தில் சுட்டியதோடு, காஞ்சித்திணையின் ஒரு துறையாக ‘பலர்புகழ் புலவர் பன்னின தெரியும்,உலகியல் பொருள்முடி புணரக் கூறின்று’ என்று புறப்பொருள் வெண்பாமாலையால் உரைப்படுகின்றது
மேலும் காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணியையும் குறிக்கும்.
பல மணிகள் கோத்து அவ்வணிகலன் செய்யப்படுவதைப் போல இந்நூலும் ஒரு
நூறு பாடல்களாம் மணிகளைக் கோத்துப் பாடப்
பெற்றுள்ளது என்றும் பொருள் கொள்வர். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தொகுதியில் மிகச் சிறியது.
தொல்காப்பியர் கூற்றுப்படி
நிலையாமையைக் குறித்தோ, பழமொழியைப் பெற்றோ அமையவில்லை. மாறாக
உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் கூறும் அறிவுரைக் கோவையாக அமைகிறது. முதுமொழிக்
காஞ்சித் துறை பற்றிப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் உள்ளன (18, 27, 28,
29,74).
அமைப்பு:பிரபந்த தீபிகையில் கூறியது போல்
இந்நூல் நூறு எண்ணிக்கை யுடையது. திருக்குறளைப் போலவே ஒவ்வொரு தலைப்பிலும்
முறையே பத்துப்பாடல்களைப் பெற்றுள்ளது. அவை சிறந்த பத்து, அறிவுப்பத்து,
பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லபத்து, இல்லைப்பத்து, பொய்ப் பத்து, எளியபத்து,
நல்கூர்ந்தபத்து, தண்டாப்பத்து என்னும் பத்துத்தலைப்புகளில், பத்துப் பாடல்களைக்
கொண்ட பதிகம்
பத்து கொண்டது இந்த நூல். அதாவது 100 பாடல்கள் இதில் உள்ளன. அவ்வவ் பத்தில்
பாடல்களின் இறுதியில் பயின்று வரும் ஒரே மாதிரி சொற்களைக் கொண்டே ஒவ்வொரு பத்தும்
தலைப்பினைப் பெறுகின்றன. ஒவ்வொரு பத்தும் ‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்’
என்னும் தரவு அடியோடு ஒரே மாதிரித் தொடங்குகின்றன.
வாழ்வியல் அறங்களை உரைக்கும் முதுமொழிக்காஞ்சி எளிமையான சொற்களால் உயர்வான இரு அறங்களை ஒற்றை அடியில் காட்டி, ஓர்
அறத்தைவிட மற்றது மேம்பட்டது என்ற அமைப்பில் அறங்களின் பெருமைகளை
எடுத்துக்காட்டுகின்றது. இந்நூலில் இல்லற வாழ்வு சிறக்க நன்னெறிகள்
கூறப்பட்டுள்ளன. தமக்கென வாழாமல் பிறர்க்குரிமையாக வாழ்வது என்பது மனித வாழ்வின் வெற்றியாகும்
என்று முதுமொழிக் காஞ்சி உரைக்கின்றது
ஆக்கியோன் அருமை
இதனை இயற்றிய பெரியார் மதுரைக்
கூடலூர்க் கிழார் ஆவார். கூடலூர்க் கிழார் என்ற பெயரில் இரு புலவர்கள் சங்ககாலத்தில்
இருந்துள்ளனர். ஒருவர் இவர். மற்றொருவர் புலத்துறை முற்றிய
கூடலூர் கிழார் ஆவார். பின்னவரை விட இவர் வேறானவர். கூடலூரில் இருந்துப் பின்னர் மதுரைக்கு இடம்பெயர்ந்ததன் காரணமாக இவர் மதுரைக்
கூடலூர்க் கிழார் எனப்பெயர் பெற்றுள்ளார் இவரே எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான
ஐங்குறு நூறு தொகுத்தவர். இதனைத்தொகுப்பித்தோனாகிய கோச்சேரமான் யானைக்கட்சேய்
மாந்தரஞ்சேரலிரும் பொறை இறந்தபொழுது இவர் பாடிய ‘ஆடிய அழற்குட்டத்து’ என்ற
புறநானூற்று(229)ஆம் பாடலொன்றே இவரது வானநூற் புலமையையும், நுண்கருத்தைப்
புலப்படுத்தும் மாண்புடைமையையும் விளக்குவதாகும். இச்சேரலிரும்பொறை தொண்டி
மன்னரும் கபிலரின் நண்பரும் ஆவார்.
முதுமொழிக்
காஞ்சியின் வாழ்வியல் சிந்தனைகள் தனி மனிதனின் குடிபிறப்பு, கல்வி, அறிவுடைமை,
நாண் உடைமை, வாய்மை, ஆளுமை, ஆராய்ச்சி, சொல்வன்மை, நோயற்ற
வாழ்வு, மூப்பு,
பிறர் துயரத்திற்கு அஞ்சல், தவம்
போன்றன முதுமொழிக்காஞ்சியால்
காட்டப்பெற்றுள்ளன
வாழ்க்கை என்பது தானும் பழிப்பில்லாமல்
வாழ்ந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்த்து, தன்
சமுதாயத்தையும் வளர்க்கும் வாழ்க்கையே சிறந்த
வாழ்க்கையாகக் கருதப்படும்.அதற்கான நெறிகள் முறைகளை இந்நூல் எடுத்தோதுகிறது
இந்நூலில் கூறும் அறக்கருத்துகளை அப்படியே அள்ளிப்பருகிடுவோம்
சிறந்த பத்து
1. ஆர்கலியுலகத்துமக்கட்
கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று
ஒழுக்கம் உடைமை
2. காதலிற் சிறந்தன்று
கண்ணஞ்சப் படுதல்
3. மேதையிற் சிறந்தன்று
கற்றது மறவாமை
4. வண்மையிற் சிறந்தன்று
வாய்மை உடைமை
5. இளமையிற் சிறந்தன்று
மெய்பிணி யின்மை
6. நலனுடை மையின் நாணுச்
சிறந்தன்று
7. குலனுடை மையின்
கற்புச் சிறந்தன்று
8. கற்றலின் கற்றாரை
வழிபடுதல் சிறந்தன்று
9. செற்றாரைச்
செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று
10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று
அறிவுப்பத்து
11. ஆர்கலி யுலகத்து
மக்கட் கெல்லாம்
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப
12. ஈரம் உடைமை ஈகையின்
அறிப
13. சேரா நல்நட்(பு)
உதவியின் அறிப
14. கற்றது உடைமை
காட்சியின் அறிப
15. ஏற்ற முடைமை
எதிர்கொளின் அறிப
16. சிற்றில் பிறந்தமை
பெருமிதத்தின் அறிப
17. குத்திரம் செய்தலின்
கள்வனாதல் அறிப
18. சொற்சோர்வு உடைமையின்
எச்சோர்வும் அறிப
19. அறிவுசோர்வு
உடைமையின் பிறிதுசோர்வும் அறிப
20. சீருடை யாண்மை
செய்கையின் அறிப
பழியாப் பத்து
21. ஆர்கலி யுலகத்து
மக்கட் கெல்லாம்
யாப்பி லோரை இயல்குணம் பழியார்
22. மீப்பி லோரை
மீக்குணம் பழியார்
23. பெருமை உடையதன் அருமை
பழியார்
24. அருமை யுடையதன்
பெருமை பழியார்
25. நிறையச் செய்யாக்
குறைவினை பழியார்
26. முறையில் அரசர்நாட்
டிருந்து பழியார்
27. செய்தக்க நற்கேளிர்
செய்யாமை பழியார்
28. அறியாத் தேசத்து
ஆசாரம் பழியார்
29. வறியோன் வள்ளியன்
அன்மை பழியார்
30. சிறியோர் ஒழுக்கம்
சிறந்தோரும் பழியார்.
துவ்வாப் பத்து
31. ஆர்கலி யுலகத்து மக்கட்
கெல்லாம்
பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது
32. கழிதறு கண்மை
பேடியின் துவ்வாது
33. நாணில் வாழ்க்கை
பசித்தலின் துவ்வாது
34. பேணில் ஈகை மாற்றலின்
துவ்வாது
35. செய்யாமை மேற்கோள்
சிதடியின் துவ்வாது
36. பொய்வே ளாண்மை
புலைமையின் துவ்வாது
37. கொண்டுகண் மாறல்
கொடுமையின் துவ்வாது
38. அறிவிலி துணைப்பாடு
தனிமையின் துவ்வாது
39. இழிவுடை மூப்புக்
கதத்தின் துவ்வாது
40. தானோர் இன்புறல்
தனிமையின் துவ்வாது.
அல்ல பத்து
41. ஆர்கலி யுலகத்து
மக்கட் கெல்லாம்
நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்
42. தார(ம்)மா ணாதது
வாழ்க்கை யன்று
43. ஈரலில் லாதது கிளைநட்
பன்று
44. சோராக் கையன் சொன்மலை
யல்லன்
45. நேரா நெஞ்சத்தோன்
நட்டோ ன் அல்லன்
46. நேராமற் கற்றது கல்வி
யன்று 47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று
48. அறத்தாற்றின் ஈயாத(து)
ஈனை யன்று
49. திறத்தாற்றின் நேர்லா
ததுநோன் பன்று
50. மறுபிறப் பறியா
ததுமூப் பன்று.
இல்லைப் பத்து
51. ஆர்கலி யுலகத்து
மக்கட் கெல்லாம்
மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை
52. ஒப்புரவு அறிதலின்
தகுவரவு இல்லை
53. வாய்ப்புடை விழைச்சின்
நல்விழைச்சு இல்லை
54. வாயா விழைச்சின்
தீவிழைச்சு இல்லை
55. இயைவது கரத்தலின்
கொடுமை இல்லை
56. உணர்விலன் ஆதலின்
சாக்காடு இல்லை
57. நசையில் பெரியதோர்
நல்குரவு இல்லை
58. இசையின் பெரியதோர்
எச்ச மில்லை
59. இரத்தலின் ஊஉங்கு
இளிவரவு இல்லை
60. இரப்போர்க்கு ஈதலின்
எய்தும் சிறப்பில்லை
பொய்ப் பத்து
61. ஆர்கலி யுலகத்து
மக்கட் கெல்லாம்
பேரறவி னோன்இனிது வாழா மைபொய்
62. பெருஞ்சீர் ஒன்றன்
வெகுளியின் மைபொய்
63. கள்ளுண் போன்சோர்வு
இன்மை பொய்
64. காலம்அறி யாதோன்
கையுறல் பொய்
65. மேல்வரவு அறியாதோன் தற்காத்
தல்பொய்
66. உறுவினை காய்வோன்
உயர்வுவேண் டல்பொய்
67. சிறுமைநோ னாதோன்
பெருமைவேண் டல்பொய்
68. பெருமைநோ னாதோன்
சிறுமைவேண் டல்பொய்
69. பொருள்நசை வேட்கையோன்
முறைசெயல் பொய்
70. வாலியன் அல்லாதோன்
தவம்செய் தல்பொய்.
எளிய பத்து
71. ஆர்கலி யுலகத்து
மக்கட் கெல்லாம்
புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு)
எளிது
72. உறழ்வெய் யோருக்கு
உறுசெரு எளிது
73. ஈரம்வெய் யோர்க்கு
நசைகொடை எளிது
74. குறளைவெய் யோர்க்கு
மறைவிரி எளிது
75. துன்பம்வெய் யோர்க்கு
இன்பம் எளிது
76. இன்பம்வெய்
யோர்க்குத் துன்பம் எளிது
77. உண்டிவெய் யோர்க்குப்
உறுபிணி எளிது
78. பெண்டிர்வெய்
யோர்க்குப் படுபழி எளிது
79. பாரம்வெய் யோர்க்குப்
பாத்தூண் எளிது
80. சார்பு இலோர்க்கு
உறுகொலை எளிது
நல்கூர்ந்த பத்து
81. ஆர்கலி யுலகத்து
மக்கட் கெல்லாம்
முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந்
தன்று 82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று
83. செற்றுடன் உறவோனைச்
சேர்தல்நல் கூர்ந்தன்று
84. பிணிகிடந்தோன் பெற்ற
இன்பம்நல் கூர்ந்தன்று
85. தன்போற் றாவழிப்
புலவிநல் கூர்ந்தன்று
86. முதிர்வுடை யோன்மேனி அணிநல்
கூர்ந்தன்று
87. சொற்சொல் லாவழிச்
சொலவுநல் கூர்ந்தன்று
88. அகம்வறி யோன்நண்ணல்
நல்கூர்ந் தன்று
89. உட்(கு)இல்
வழிச்சினம் நல்கூர்ந் தன்று
90. நட்(பு)இல்
வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.
தண்டாப் பத்து
91. ஆர்கலி யுலகத்து
மக்கட் கெல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்
92. வீங்கல் வேண்டுவோன்
பல்புகழ் தண்டான்
93. கற்றல் வேண்டுவோன்
வழிபாடு தண்டான்
94. நிற்றல் வேண்டுவோன்
தவஞ்செயல் தண்டான்
95. வாழ்க்கை வேண்டுவோன்
சூழ்ச்சி தண்டான்
96. மிகுதி வேண்டுவோன்
வருத்தம் தண்டான்
97. இன்பம் வேண்டுவோன் துன்பம்
தண்டான்
98. துன்பம் வேண்டுவோன்
இன்பம் தண்டான்
99. ஏமம் வேண்டுவோன்
முறைசெயல் தண்டான்
100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்.
முடிவுரை:
முடிவுரை:
மாந்தர் துன்பமின்றி வாழ்ந்து சிறக்க வேண்டும்
என்பதே இதன் நோக்கம் இவ்வகையில் முதுமொழிக் காஞ்சி மனிதவாழ்வியலுக்கு வழிகாட்டும் நூல் என்பதில் ஐயமில்லை
இன்றைய வாழ்வின் பல சிக்கல்களுக்கு
முதுமொழிக்காஞ்சியின் அறநெறிகள் விடை காட்டுகின்றன. முதுமொழிக்காஞ்சியில் வலியுறுத்தப்பட்ட அறங்கள், வாழ்வியல் சிந்தனைகள் இற்றைக் காலத்திற்கும்
தேவைப்படுவனவாக விளங்குகின்றன. இவ்வறங்கள் எதிர்காலத்திற்கும் உரியனவாக
விளங்கும் என்பதில் ஐயமில்லை. மனித குலம் நன்முறையில் வாழ இவ்வறங்கள் நல்ல
கைவிளக்கு என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment