Monday, 12 November 2018

தொல்காப்பிய முத்துகள் எல்லாச்சொல்லும்



உலகத்தொல்காப்பிய மன்றத்துடன் இணைந்து தொல்காப்பியர் பேரவை
எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே(தொல்.சொல் பெயர் 640)

ஒவ்வொரு சொற்களுக்கும் தனித்தனிப் பொருள் உண்டு. ஒரே பொருள் குறித்த பல சொற்கள் இருந்தாலும் அவற்றிடையே சிறிய வேறுபாடு இருக்கும்.
எடுத்துக்காட்டு சொல்லல் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்
சொல்லல் -ஒருசெய்தியைக்கூறலல
பேசுதல்- இருவர் உரையைாடல் விவாதித்தல்
செப்பல், நீதி உலக இயல்பு பற்றிஅறிவுறுத்தல்
கூறுதல்-பலபொருளுள்ஒவ்வொன்றாககூறுபோட்டுச்சொல்லல் 
விளக்கல் –தெளிவாகக்கூறல்  ,
பகர்தல் –பகுத்துச்சொல்லல்
அறைதல் -இதுதான் என்று உறுதியாகக்கூறல்
உரைத்தல் - ஒன்றனுக்குப்பொருள்தெரியாத பொழுது அதை எடுத்துச்சொல்லல்
விளம்பல்-பலருக்கும் தனித்தனியாகச் சொல்லல்
இயம்பல்-கதைகளைக்கூறல்
கதைத்தல்- நிறையப்பேசல்   
உளறல்- பொருள் அற்ற சொற்களைக்கூறல்
முனகல் அல்லது முனுமுனுத்தல்(பிறருக்குக்கேட்க வேண்டும் ஆனால் என்னவென்று புரியக்கூடாது அப்படிப்பேசல்)
புலம்பல்(ஏதாவது இழந்த போது திரும்பத்திரும்ப தனக்குள் சொல்லிக்கொள்ளல்)
கெஞ்சல்-ஒன்றை வேண்டுமென விடாது கேட்டல்
இறைஞ்சல்- பெரியோர்களிடம் ஒன்றை வேண்டுமெனக்கேட்டல்
எனவே எல்லாச்சொற்களுக்குச் தனித்தனிப் பொருள் உண்டு என்று அறியவும்

Friday, 9 November 2018

சிவத்தொடு கலந்த சிவமே போற்றி!பேரூர் சாந்தலிங்க அடிகள்


  சிவத்தொடு கலந்த சிவமே போற்றி!  
உலகம் உய்யவே உளமிகக் கொண்டு
     ஊண்தனை ஊட்டிடும் உழவரும் அவரே!
மலரது மாட்சியாய் மாந்தர் மனமதில்
     மாசிலா ஒளியாய் ஒளிர்பவர் அவரே!
இலமென வந்த ஏழையர் தமக்கு
     இன்முகம் காட்டும் வள்ளலும் அவரே!
பலரும் போற்றிப் பரவும் தேவரும்!
     பணிமொழி பேசிடிடும் பண்பாளரும் அவரே!       1

என்னைப்போல் உள்ள எண்ணற்ற புலவரை
     எம்தமிழ் நாட்டிற்கு ஈந்த வள்ளலவர்!
அன்னார்போல் யாருளார் அருந்தமிழ் ஆசிரியர்
     உயர்பதவியும் ஊதியமும் பெற்றிட உதவியோர் !
அன்னார் தன்னால் நிமிர்ந்தோம் தமிழரென
     அவரால் தானே ஆரியர் அடங்கினர்
கன்னல் மொழியால் களிப்பினைத் தந்தவர்!
     கடைசாதி என்பாரை கருவறைக்குள் விட்டவரே !              2.

அனைத்துயிரும் வாழவே அனுதினம் உழைத்தே
     ஆவுக்கும் அறச்சாலை வைத்துக் காத்தவர்
தினைத்துணை தீங்குமே சிந்தையில் கொள்ளாத்
     திடமான எண்ணத்தால் கல்லூரி தந்தவர்!
மனிதனை மையமாய்க் கொண்டிவண் பணிசெயும்
     மாணிக்கக் குன்று மறுவிலா முழுநிலா
கனிமொழி தமிழில் கலக்கும் அயல்மொழியை
     களையாய் பறித்துக் காத்த காவலரே !.            3

அங்கம் தன்னில் லிங்கம் தரித்தே
     அருளொடு அறத்தினை அருளும் நாயகர்!
பங்கமிலா வாழ்வினைப் பாரோர் பெற்றிடப்
     பண்புகொள் சொல்லினை என்றும் பகர்ந்தவர்!
கொங்கு  நாட்டு வரலாற்றைக் கோவைகிழார்
     கொண்டு  எழுத வைத்த கொண்டலவர்!           4         

திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும்
     தீந்தமிழ் நாட்டு தெய்வமாம் முருகனும்
புரிநூல் குறுமுனி அகத்தியப் புலவனும்
     புன்மைதீர் சிந்தைகொள் தொல்காப் பியனும்
விரித்து உரைத்த சங்கத் தமிழை
     வையத்தில் வளர்க்கவே கல்லூரி வைத்ததை
அரிய செயலாய் அகிலமே போற்றுதே
     அன்பின் கொழுந்தே அடிதனைப் பணிகின்றோம்!    5.

ஆரிய மொழியின் அர்ச்சனை தன்னை
     அருந்தமிழ் மொழியில் மலர்வழி பாடாக்கி
நேரிய வழியில் குடமுழக்கு நிகழ்த்தி
     நெற்றிக்கண் ஈசனார் பாசுரம் அனைத்தும்
சீரிய தமிழர் நிகழ்வில் எல்லாம்
     செப்ப வழிகண்ட செந்தமிழ்த் தேவரவர்!
பாரிடம் எங்கும் பைந்தமிழ் வளரவே
     பணிதனைச் செய்த பைந்தமிழ்ப் பாவலர்!          6.

உலகப் பொதுமறை தன்னைப் போற்றியே
     உயர்மிகு பொழிவுகள் நிகழ்த்திய மன்னரவர்!
பலபரிசை நல்கினீர் பயிலும் மாணவர்க்கே   
     பல்சமய மாந்தரும் பாராட்டும் வேந்தவர்!
நலம்பெற நாட்டினில் நன்மாரி பெய்ய
     வேள்விகள் நிகழ்த்திய எங்கள் அரசவர்!
அலமரும் மக்களின் அல்லல் நீங்கிட
      அருளாசி தந்த எங்கள் கோவே!                  7

பிறந்தாலே முக்திதரும் பேரூர்த் திருநகரில்
     பிஞ்ஞகன் கழல்போற்றும் சாந்தையர் திருமடம்
அறச்சாலை தன்னில் அன்றாடம் நீங்காமல்
     அன்னம் பாலிப்பு அளித்திடும் அருளார்!
திறந்தே இருந்திடும் தாளறியா நெடுங்கதவம்
     திருக்கூட்ட வரவை எதிர்நோக்கி நின்றிடும்!
துறவிகள் கூடியே துதித்துப் போற்றிடும்
     துவராடைச் செல்வத்தை துதிப்பார்கள் நாளுமே!         8 

சிறப்பொடு பூசனை நடவாக் கோவிலைச்
     சீர்திருத்தித் திருக்குட நீராட்டு செய்வித்தவர்
மறந்திடச் செய்தவர் உயிர்ப்பலி தன்னை
     மாக்களைக் கொல்லல் மக்களும் தவிர்த்தனர்                
அறவே நீக்கினாய் சாதிக் கொடுமையை
     அனைத்து சமயத்தார் அண்டினர் அவரிடம்
பறவைகள் நாடிடும் பழமரம் ஆனதே
     பேரூர்த் திருமடம் அவரது அருளாலே!.            9

விண்ணகத் தேவரும் வேண்டிக் கொண்டதால்
      விரிசடைக் கடவுள் மேன்மை விளங்கிட
மண்ணகத் தேவர் சாந்தலிங்கர் உரைத்த
     நாற்பெரு நூல்களை நவிலச் சென்றவர்!
தண்டமிழ்க் குறளும் பன்னிரு திருமுறையும்
     தேவர்க்குச் செப்பவே தேடிச் சென்றவர்!
அண்டர் நாயகர் அன்பினில் கலந்து
     அவனுடன் அவனாய் ஆக்கிக் கொண்டவர்!         10

தொல்காப்பியர் பேரவைத் தொண்டன் சொல்லிய
     பாடல்கள் பத்தும் பதமலர் காணிக்கை!
இல்லவர் உள்ளவர் வேற்றுமை நீக்கி
     இன்னுரை பகர்ந்த இறைக்குக் காணிக்கை!
கல்லா ஏழையர் கற்ற அறிஞரும்
     கைதொழு தேத்தும் கடவுளின் காணிக்கை!
வில்வம் சூடிய விரிசடைக் கடவுளின்
     திருவடி கலந்த சிவமே காணிக்கை!                    11        
எங்கள் குலவிளக்கு தொல்காப்பியர் பேரவையின் மூலத்தின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து அவர்புகழ் பாட வாய்ப்பளித்த ஈரோடு தமிழ்ச்சங்க பேரவைக்கு என்நன்றியைக் காணிகைஆக்கி அமைகின்றேன். 
 திருவடி வணங்கி நிற்கும்
தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,
தலைவர் தொல்காப்பியர் பேரவை,

இயற்கையே வெல்லும்


     இயற்கையே வெல்லும்!
நீதிநூல் கற்றாலும் நிலையாமை உணர்ந்தாலும்
நீக்கார்கள் ஆசைதனைக் கிளியே!
ஆதிமுதல் இன்றுவரை ஆண்டவரும் மாண்டவரும்
    அதனுள்ளே அடக்கமடி கிளியே!
பாதிமதி சடையானை பன்னாட்டு ஞானிகளும்            
     தேடி அலைந்தாரடி கிளியே!                                  
வீதிவாழ் துறவிகளும் வேண்டுபணம் உள்ளவரும்
     விதிமுன் ஒருவரடி கிளியே!

காற்றடைத்த பையெனவே கடுவெளியார் சொன்னதையே           
    கணக்கற்றோர் சொன்னாரடி கிளியே!
ஏற்றவரும் மிஞ்சவில்லை எமனுந்தான் துஞ்சவில்லை                 பிறந்தநாள் 20-10-1943
      இயற்கையே வென்றதடி கிளியே!
போற்றுமிசை தினம்பாடி போதனைகள் மனம்கூடி
      புத்தியே தெளியாரடி கிளியே!
ஆற்றலுறு ஆசையும் அருள்பெறு  பூசையும்
      அன்றாடும் செய்வாரடி கிளியே!

சக்கரமே பெரிதென்றும் சக்திமழு பெரிதென்றும்
        சழக்கிட்டு சாவாரடி கிளியே!
முக்காலம் உணர்ந்தாலும் முன்தன்னை உணராமல்
      முழுஞானி என்பாரடி கிளியே!
அக்காலம்  வென்றவரும் இக்காலம் தோற்றிடுவார்
      முக்கால உண்மையடி கிளியே!
எக்காளம் கொண்டிங்கு ஏமாற்றித் திரிந்தாலும்
      இறுதியில் தோற்பாரடி கிளியே!
  
ஆக்கம்
  அகவைமுதிர்ந்த தமிழறிஞர் புலவர் ப.வேலவன்  
      72- சி சிறுவாணிச்சாலை
      பேரூர்(அஞ்)
      கோவை 641010   
      அலைபேசி 7200155621