Saturday, 11 August 2018

தொல்காப்பியம் அகத்திணையியல் 1


                     தொல்காப்பியம்    அகத்திணையியல் 1     ஆவணி ஆகஸ்டு2018
    பைந்தமிழர் வாழ்வுதனை உரைப்பது தொல்காப்பியதின் பொருளதிகாரம். . எழுத்து ,சொல் பொருள் என்ற மூன்று அதிகாரங்களில் பொருள் அதிகாரத்தை முதலில் எடுத்துக் கொள்ள காரணம் உள்ளது. திருக்கயிலை மரபு மெய்கண்டார் வழிவழிப் பேரூராதீனம் கயிலைக் குருமணி சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகை அருள் ஆணைப்படி பொருளதிகாரம் முதலில் தொடங்கப்படுகிறது. பொருளை விளக்கதானே எழுத்தும் சொல்லும் என்கிறார். பைந்தமிழர் வாழ்வுதனை உரைப்பது தொல்காப்பியதின் பொருளதிகாரமே,என்ற காரணத்தாலும் தொல்காப்பியர் பேரவையின் நோக்கமும் அதுவே ஆதலாலும் பொருளதிகாரம்.முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
   பொருள் அதிகாரத்தில் முதலியல் அகத்திணையியல்.திணை என்றால் ஒழுக்கம், இயல்என்றால் இலக்கணம்.தொல்காப்பியர் மொழியைப் பற்றி எண்ணும் போது திணைகளை உயர்திணை அஃறிணை என்கிறார். இலக்கியங்களில் காணப்படும் பொருள்களைப் பற்றி எண்ணும் போது அகத்திணை, புறத்திணை என்னும் பெயர்களைக் கையாண்டு தமிழ் இலக்கண நெறியைத் தெளிவு படுத்தியுள்ளார். எனவே அகத்திணையியல் என்பது  இன்பமாகிய ஒழுக்கத்தினது இலக்கணம். அகத்திணையியல்   மக்களின்   அகவொழுக்கம் அல்லது  காதல்அற ஒழுக்கங்களின் பொது இலக்கணம்   கூறுகிறது.
    “நிலம்தீ நீர்வளி விசும்போடைந்தும் கலந்த மயக்கமே உலகம்”(தொல்635).இந்த
உலக உயிர்களில் மேன்பட்ட உயிரினம் மக்கள். அவர்களே ஆறறிவு உடையவர்கள் ஆறாவது அறிவு மனம்‘ஆறறிவதுவே அவற்றொடு மனனே’என்பது தொல்காப்பியம் மனம் என்பதை அகம் என்றும் கூறுவர். அகம் என்பதற்கு மனம், மார்பு, உள்ளே, ஞானம், பாவம், வீடு, நிலம், மருதம், மலை, அகக்கூத்து, அகப்பொருள், அகங்காரம், இருப்பிடம், உடல், உயிர், விண், ஆழம், ஆன்மா, ஒருமரம், துக்கம், நாள், பள்ளம், பாம்பு, தீவினை,எனப்பல பொருள்கள் உள.நாம் இங்கு அகம் என்பதற்கு மனம் வீடு, உள்ளம், இல்லம், அகப்பொருள் என்ற பொருள்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்
    பைந்தமிழ் இலக்கணத்தை  ஐந்தெனப் பிரித்தனர் ஆன்றோர். உலக மொழிகள் எல்லாம் எழுத்து,சொல் இவற்றிற்கு மட்டும் இலக்கணம் கூற, இன்றமிழ் மொழியோ பொருள் இலக்கணத்தைப் பெற்றுள்ளது. இங்கு பொருள் என்பது பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளைக் குறிக்காது, பொருள் பொதிந்த வாழ்க்கையையே பொருள் எனக் குறிக்கிறது. இங்கு பொருள் என்பதால் உலகத்துப் பொருள் எல்லாம் உணர்த்துதல் வேண்டும்.அவை எல்லாம் முதல் ,கரு உரிப்பொருள் என்ற மூன்றினுள்ளே அடங்கிவிடும். இவையே தொல்காப்பியம் உரைக்கும் பொருள். எனவே தொல்காப்பியம் கூறும் வாழ்க்கை முறைகளைக் கற்காமல் விட்டதால் தான் தரணியை ஆண்ட தமிழர் வாழ்வு தறிகெட்டுப் போயிற்று.
   தொல்காப்பியம்  மனித வாழ்வை இருவகையாக பிரிக்கிறது. ஒன்று அக வாழ்வு  அதாவது காதல் வாழ்வு. அது களவு என்றும் கற்பென்றும் இருவகைப்படும். திருக்குறளின் இன்பத்துப்பாலும் களவு, கற்பு என இரண்டு இயல்களாகவே பிரிக்கப்பட்டுள்ளது ஆணும்பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு அறிவறிந்த மக்களைப் பெற்று, விருந்தினரைப் பேணி இல்லறத்தின் பயனாகிய புகழ் பெறுதலே ஆகும்.இதனை மனதில் கொண்டே வள்ளுவரும் இல்லறவியலின் இறுதி அதிகாரமாக புகழ் என்னும் அதிகாரத்தை அமைத்தார். அதுவே அகவாழ்வு
     மற்றொன்று  உலகியல் வாழ்வு. புறம் என்பது ஆணும் பெண்ணும் புறத்தே உள்ள மற்றவர்களோடு உறவு கொள்ளும் வாழ்க்கை பற்றியது. உலகியல் வாழ்வு வீரம், செல்வம், கொடை, புகழ், கல்வி,  ஆட்சி, வணிகம், உழவு ஆகியவை பற்றியது. திருவள்ளுவர் கூறும் அறமும் பொருளும் புறப்பொருளில் அடங்கும். அதாவது அறஞ்செய்தலும் மறஞ்செய்தலும் புறப்பொருளே.



அகம் என்பது தலைவன் தலைவியர் உள்ளத்தே நிகழும் ஒழுக்கம் (திணை). அகத்தே நிகழும் உணர்வை இவ்வாறு இருந்ததெனப் புறத்தாருக்கு விளக்க முடியாது.  ஒத்த  அன்பால்  ஒருவனும்   ஒருத்தியும் கூடுகின்ற  காலத்துப்  பிறந்த  பேரின்பம்  அக்கூட்டத்தின்  பின்னர்   அவ்விருவரும் ஒருவருக்கு ஒருவர் தத்தமக்கு  விளங்கும்படி இவ்வாறு இருந்ததெனக் கூறமுடியாது. எப்பொழுதும்   உள்ளத்திலே    நுகர்ந்து இன்ப  முறுவதோர்   பொருள் என்பர். அதுவே இல்லறம். நம் குடும்ப வாழ்க்கையில் நிகழும் உள்ளத்து உணர்வுகள் வெளியார்களுக்குத் தெரியக்கூடாது  என்பதில் கவனமாகவும் இருந்தனர்.ஒருத்தரை ஒருத்தர் விரும்பிக் கூடி வாழ்வதற்கு அகம் என்றார்.உள்ளத்தால் ஒருத்தரை ஒருத்தர் விரும்பியவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது அகம் எனவே இஃது அகவாழ்க்கை எனப்பட்டது.
       எனவே அகத்தே (உள்ளத்தே,இல்லத்தே) நிகழும் ஒழுக்கத்தை அகத்திணை என்றனர். அந்த ஒழுக்கம் வாழும் இடத்திற்கும் வாழும் காலத்திற்கும ஏற்றபடியே நிகழும். எனவேதான் நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆயிற்று.
      முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
       இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.(தொ.பொ4)
அப்படிப்பட்ட அகத்திணையினுள் நிலம் சார்ந்த ஐந்து திணைகளை(குறிஞ்சிமுல்லை மருதம்,நெய்தல்,பாலை)அன்பின் ஐந்திணை என்றும் எண்ணத்தைச்(உள்ளத்தே, இல்லத்தே)சார்ந்த திணை பெருந்திணை, கைக்கிளை என்றும் இரண்டும் சேர்த்து  அகத்திணை ஏழு என்றனர்.அதனால்தான் பொருளதிகாரத்தின் முதல் நூற்பா அகத்திணைச் செய்திகள் சொல்லப்படுகின்றன. தொல்காப்பிய அகத்திணையைத்  தொடர்ந்துதமிழ் நெறி விளக்கம், வீரசோழியம், களவியல் காரிகை, நம்பியகப்பொருள்,    மாறனகப்பொருள்,  முத்துவீரியம்  போன்ற இலக்கண நூல்கள் அகத்திணைச்   செய்திகளைத் தருகின்றன.பொருளதிகாரம்கூறும் இலக்கண நெறியே தமிழுக்கேஉரியது. இஃது உலகறிய வேண்டிய பேருண்மை! அக இலக்கணம், தமிழர் அகவாழ்வு நெறி என அனைத்துப் பொருளும் தருவதை உணரலாம். திருமணத்துக்கு முன்னர் தலைவன் தலைவி ஆகியோரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் களவு வாழ்க்கை எனப்படும்.திருமணத்துக்குப் பின்னான வாழ்வின் நிகழ்வுகள் கற்பு வாழ்க்கை எனப்படும்.இதுவே அக ஒழுக்கம். இந்த அகநெறி ஒழுக்கங்களைப் பாடல்களாகப் புனைய தமிழர்கள் தெரிந்தெடுத்த முறை உயர்ந்தது-ஒன்றேயானது (unique) தெரிந்து கொண்ட உலகத்தோர் வியந்து போற்றுவது.
பூவின் மணமெனப் புனிதத் தமிழினுக்கு                                                                            ஆவி ஆகும் அகப்பொருள் இயல்பே!                  
கட்டுரை ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆகாளியப்பன்அனுப்பிய நாள்            27-05-18   திபி 2049ஆவணி ஆகஸ்ட் 2018                               

No comments:

Post a Comment